பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே வாழும் வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும்? ‘அதன் பாதை எது? பயணம் எது?’ என்று ஆராய்கிற முயற்சியில் எல்லோரும் ஈடுபடுவதில்லை.  ஒரு சிலரே ஈடுபடுகின்றனர்.  அவர்களுள் ஒருவரே மஞ்சரி.  அந்த இளம் போலீஸ் அதிகாரியின் வாழ்க் கையை நாவலாகப் படைத்திருக்கிறார் ஆ.சந்திர போஸ்.  அதன் பெயர் பிரபஞ்ச கானமாகும்.

ஊரை ஏமாற்றிப் பிழைப்பதும், உலகை ஏமாற்றிப் புகழ் சேர்ப்பதுமான ஒரு பெரியவாழ்வோடு தங்களைச் சம்பந்தப்படுத்திக் கொள்கிறது மனித மனம்.  சாதி மதம், ஏழை பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வுகள் அடங்கிய எண்ணக் கூறுகளைப் பற்றி யெல்லாம் கவலைப்படுவதற்கு எவருக்கும் நேர மில்லை என்றாலும் கூட மனச்சாட்சியின் நெருடல் என்ற அளவில் மனிதன் தன்னை வித்தியாசப் படுத்திப் பார்ப்பது சிலரது வாழ்வில் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.  மஞ்சரியும் அப்படிப் பட்டவள்தான்.

வாழ்வின் சராசரித் தன்மைகளால் மஞ்சரியைத் தீண்ட முடியவில்லை.  ஆனால் மனிதர்களின் சராசரித்தனமான வாழ்வை அவள் தீண்டிவிட்டாள்.  அவர்களது நம்பிக்கையின் மீதெல்லாம் அவளுக்கு வெறுப்பில்லை.  தனது சிந்தனையெல்லாம் சத்தி யத்தின் உள்ளடக்கமாக இருக்க வேண்டும் என்று யாரொருவன் சிந்திக்கத் தொடங்குகிறானோ - அவன் சமூக அநீதிகளை எதிர்க்கத் துணிந்து விட்டான் என்றே பொருள்.  அத்தகைய ஒரு மானிடவியல் போராட்டத்தையே தொடங்கி வழிநடத்துகிறாள் மஞ்சரி...என்று ஆசிரியர் தன் கதைத் தலைவியை முன்னுரையில் அறிமுகப் படுத்துகிறார்.

போலீஸ் துறையில் அவள் டி.எஸ்.பி. பெண் அதிகாரி என்ற முறையில் நிமிர்ந்து நின்று வழி காட்டுகிறாள்.  அரசாங்க வேலை என்பதற்காக ஆணவம் கொள்ளவில்லை.  ரவுடிகளாகவும், கேடி களாகவும் இருந்தாலும் அவர்களையும் சகமனிதர் களாகப் பார்க்கும் மனப்பக்குவம் அவளுக்கு இருந்தது.  நேசம் குறையாத அதிகாரியாகவும், எந்த நிர்ப்பந்தத்தையும் எதிர்கொள்ளும் அதிகாரி யாகவும் இருக்கிறாள்.

காவல் துறைக்கே உரிய இலஞ்ச லாவண்ணியங் களோடு கைகோத்துக் கொள்ளாமல் ஒதுங்கி நிற்கிறாள்.  காத்தவராயன் என்ற ரவுடியின் கதையை என் கவுண்டரில் முடிக்க வேண்டும் என்று எஸ்.பி. கூறிய போது, மறுத்து தன் கருத்தைத் துணிவுடன் கூறுகிறாள்.

அப்போது என்னதான் செய்யலாம்கிறீங்க?” என்று எஸ்.பி. கேள்வி எழுப்பியபோது, “என்ன செய்யலாம்னு சட்டம் சொல்லுதோ அதைத்தான் செய்யலாம்.  அதைத் தாண்டி செய்யிறது நம்ம வேலையில்லை.  ஒரு எம்பி மேலே பன்னிரண்டு கிரிமினல் கேஸ் இருக்கு.  ஒரு மந்திரி மேல கொலைக் குற்றச்சாட்டு இருக்கு.  பார்லிமெண்ட் மெம்பர் நாற்பத்து ரெண்டு பேர் மேல போலீஸ் குஐசு இருக்கு...  இதெல்லாம் சமூகத்துக்கு ஒரு கேள்வி இல்லையா?...” என்று அவள் கேட்ட போது எஸ்.பி. பிரமித்துப் போகிறார்.

பஞ்சாப்பில் ஆபரேஷன் ப்ளூஸ்டார் நடக்காவிட்டால் காலிஸ்தானைக் கிள்ளி எறிவது சாத்தியம்னு நினைக்கிறீங்களா?”

ஆகப் பெரிய சோவியத் யூனியனுக்கே ஓர் எதிர் விளைவு வந்திருக்கே சார்? இன்னைக்கு சாத்தியம்னு நினைக்கிறதெல்லாம் நாளை அசாத்தியமா போயிடும்.  ஏன் டார்ஜிலிங்கில ஹெய்ஸிங்க உட்கார வச்சுரலியா? கொஞ்சம் பொறுத்திருந்தா வீரப்பன் கூட கைகட்டி வந்து ஸ்டேஷன் கதவைத் தட்டியிருப்பான்.  ஒரு செயல் மூலம் அதன் தொடர் செயல் வராமல் தடுக்கணும்.  அப்படி இல்லேன்னா அந்தச் செயலைச் செய்யக் கூடாது...

அவர்களின் இந்தப் பேச்சு அதிகாரபூர்வ மற்றதாக இருந்தாலும், பல அதிகார மையங்களின் செயல்களை அசைத்துப் பார்க்கும் பேச்சாக இருந்தது.  இரண்டு பேருமே அப்படித்தான் அதை எடுத்துக்கொண்டார்கள்.

கடத்தல்காரர்களின் பிடியிலிருந்த பிரபல நடிகனை மீட்டுவர காட்டுக்குச் செல்ல மற்றவர்கள் தயங்கிய போது, அவள் துணிவோடு சென்று வெற்றியுடன் திரும்பினாள்; முதலமைச்சரையே வியப்பில் ஆழ்த்தி, தன் கட்சி அரசியலுக்கு வர வேண்டும் என்று அவர் அழைத்தபோதும் பணி வோடு மறுத்து விடுகிறாள்.

எனக்கு அரசியல் உண்டுய்யா.  ஆனால் இந்த சமூகத்துல நிலவுற அரசியல் எனக்கு உடன் பாடானது இல்லை.  நான் சுயேச்சையா சிந்திக்கிறது.  எந்த வட்டத்துக்குள்ளேயும் மாட்டிக்க எனக்கு விருப்பமில்லைங்கையா...என்று மஞ்சரி சொன்ன பணிவும், அவளது பேச்சின் தெளிவும் முதல்வருக்குப் பிடித்துவிட்டது.

அவளுக்கென ஒரு குடும்பம் இல்லையா? இருக்கிறது.  ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்த அப்பா, காலமாகிப் பல ஆண்டுகளாகி விட்டன.  அப்போது அவள் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தாள்.  அண்ணனுக்கு விவசாயம், ஓரளவு வசதி.  அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றிய தோடு அவளது உயர் கல்வியையும், இந்த வேலை யையும் பெற உதவினார்.

எப்படியிருந்தாலும் அவள் ஒரு பெண்; அவளுக் கொரு துணை வேண்டும் என்பது குடும்பத்தினரின் வற்புறுத்தல்.  பெற்றவளின் மரணம் வரை அவளது ஆசை நிறைவேறவில்லை.  யாரோ ஒருவனுக்குக் கழுத்தை நீட்டி அடங்கிப் போவதும், பிள்ளை களைப் பெற்று லாபநட்டக் கணக்குகளுக்குள் ஆட்பட்டுப் போவதுமான வாழ்க்கையே உலகியலாக இருந்துவிட்டுப் போகட்டும், தனக்கு வேண்டாம் என நினைத்தார்.

அவளது அலுவலகத்தில் எழுத்தராகப் பணி யாற்றும் சத்யனோடு நட்பு கொள்ளுகிறாள். அவள் வாழ்வில் அவனைப் போன்ற மனிதனைச் சந்தித்ததில்லை.  ஒரு பெண்ணோடு ஓர் ஆணுக் கிருக்கும் நட்பின் உயர்வை அவள் சத்யனிடமிருந்தே அறிந்துகொண்டாள்.  அவனையே திருமணம் செய்துகொள்ளும்படி அண்ணன் கூறிய போதும் ஏற்றுக்கொள்ளவில்லை.  தன்னுடன் கல்லூரியில் பயின்ற ரங்கராசன் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பியபோதும் மறுத்து விடுகிறாள்.

தன் மனதில் பூத்த மலராய் மலர்ந்து மணம் பரப்பி நிற்கும் சத்யனை ஒரு தோழனாய், குருவாய், துணைவனாய் ஏற்றுக்கொள்ளவே அவள் விரும்பினாள்.  காதல் என்பதாகக் கொச்சைப் படுத்த அவள் விரும்பவில்லை.

இந்தக் காதலுக்கும் நமக்கும் ரொம்ப தொடு வான தூரமா இருக்கே... அதுல எல்லா சந்தோஷமும் இருக்குங்கிறாங்க. அது சாதி மதம், ஏற்ற இறக்கம் எல்லாத்தையும் தாண்டியதுங்கிறாங்க. அது நமக்கு வரமாட்டேங்குதே சத்யன் சார்...என்று அவள் கேட்ட போது, அவன் கூறுகிறான்:

ரசனை உள்ள யாருக்கும் காதல் வரும் மேடம். எனக்குக் காதல் உண்டு.  ஆனால் யாரையும் காதலிக்கலே. உங்கள் மனதில் காதல் மென்மை இல்லைன்னு யார் சொன்னது? இருக்கு. உங்களுக்குத் தெரியும். அது ஏதோ நமது தகுதிக்கு ஒரு சிறுமையான எல்லையைப் போன்று ஒதுக்கித் தள்ளீர்றோம்.  ஒரு ஆணும், பெண்ணும் கைகோக்கலைன்னா காதல் இல்லையா?....” என்று மஞ்சரியின் மனதுக்குச் செக்வைக்கிறான்.

இருபத்து எட்டே வயதுதான்.  அறிவும், ஆத்ம பலமும், சமூக ஞானமும், இலக்கின் மெய்த் தன்மையும் கற்றுணர்ந்த மேதை அவள். அழகும், வசீகரமும் கொண்ட மங்கை அவள். முகத்தில் புன்னகையும், பார்வையில் கருணையும், உயிர்ப்பு மாக நின்ற தேவதை அவள் என்று ஆசிரியர் கூறுகிறார்.

அந்த தேவதைக்கும் ஓர் எதிர்பாராத முடிவு - மகாத்மா காந்தியின் கொலையிலிருந்து மஞ்சரியின் கொலை வரையிலும் சொல்லிக் கொள்ளாமல் தான் நிகழ்ந்திருக்கிறது. ஒரு மனிதனுக்கு மரணம் எந்த நேரத்தில் நேரும் என்பது தெரியாது. ஆனால் அவளைப் பொருத்தவரை தன் உயிருக்கு அச் சுறுத்தல் இருப்பது தெரியும்.

பெண் என்பவள் கோழையல்ல. பெண் என்பவள் கண்ணகி. பெண் என்பவள் இந்திரா காந்திஎன்ற பதிலையே அவள் தேங்காய் உடைத்தது போல உடைப்பவள்.  எந்த விநாடியிலும் மரணம் வரும். வரட்டுமே! வாழ்க்கையைப் புரிஞ்சுகிட்ட ஒருத்திக்கு வாழ்க்கையை வாழ்ந்துவிட்ட ஒருத்திக்கு மரணத்தால் என்ன இடையூறு செய்ய முடியும்? அதிகபட்சம் மரணம்தானே...என்று அவள் தன்னம்பிக்கையோடு கேள்வி கேட்கும் போது எதிரில் உள்ளவர்கள் சிலிர்த்து வாயடைத்துப் போக நேரும்.

இது பற்றி ஆசிரியர், “மஞ்சரியைக் கயவர்கள் துப்பாக்கியால் சுட்டு சாய்த்துவிட்டார்கள்.  சத்யனைப் போல் நானும் துடிதுடித்துப் போனேன்.  அவளை இழந்த சத்யன், அன்பின் ஊற்றுக்கண் கணநேரத்தில் வற்றி - தன்னை வெறுமையாக்கி விட்டதாகக் கருதியதே போல் - எனக்கும்கூட அந்தச் சோகம் கப்பிய உணர்வுகள் என்னைச் சுற்றிச்சுற்றி வருகிறது...என்று எழுதுகிறார்.

எழுத்தாளர் ஆ.சந்திரபோஸ் ஆற்றொழுக்கான நடையால் நாவலை சோர்வின்றி எடுத்துச் செல்கிறார்.  ஒரு பாத்திரப் படைப்பை இலட்சியப் பாத்திர மாக்கி இறுதிவரை ஓடச் செய்துள்ளார்.  அவர் கருத்துகளைப் பாத்திரங்களின் மூலம் பேசச் செய்துள்ளார்.

பம்பாய் தாஜ் ஓட்டல் தாக்குதல், பஞ்சாப் பொற்கோயிலில் பிந்திரன்வாலே தலைமையிலான பயங்கரவாதிகளை எதிர்த்து இராணுவத்தின் வேட்டை ஆகிய நிகழ்வுகளையெல்லாம் மஞ்சரி காவலர்களுக்கு வகுப்பு எடுக்கும் சாக்கில் ஆசிரியர் எடுத்துக் கூறியுள்ளார்.  நவீன பூலான் தேவியைப் போன்ற காட்டுராணி ரம்பாதேவி ஒரு நடிகரைக் கடத்தியதும், அதனை மஞ்சரி மீட்டு வருவதும், சந்தனக்காட்டு வீரப்பன் கடத்திய நடிகர் ராஜ் குமார் நிகழ்ச்சியை நினைவுக்குக் கொண்டு வருகிறது.

சத்யனைக் கம்யூனிஸ்ட் மைன்டட்என்று கூறும் இவர், அந்தப் பாத்திரத்துக்கு அழுத்தம் ஏதும் கொடுக்கவில்லை; மஞ்சரி கூப்பிடும் போதெல்லாம் வந்து போகிறார்.  காட்டுராணி குழுவினரைத் தீவிரவாதியாகக் காட்டுகிறார்.  மூச்சுக்கு முப்பது முறை காரல் மார்க்ஸை ரெபர் செய்வார்கள் என்கிறார்.

சமூகப் புரட்சி ஆயுதத்துடனும் வரும்; ஆயுதம் இல்லாமலும் வரும்.  எங்களால் கண்டிக்கப்படு பவர்களும் உண்டு; தண்டிக்கப்படுபவர்களும் உண்டு. போலீஸ், அரசாங்கமும் எங்கள் எதிரிகள்.  எந்த அரசாங்கமும் எங்கள் எதிரிகள்.  எந்த அரசாங்கம் ஆகட்டும் எங்கள் வர்க்க விரோதி களே! வாருங்கள் தோழர்களே, உங்களுக்காக நாங்கள்...என்ற அவர்களது துண்டு பிரசுரத்தின் வாசகத்தையும் எடுத்துக் காட்டுகிறார்.

தீவிரவாதங்கள் தோன்றுவதற்கு அரசும், அதன் எடுபிடிகளான காவல்துறையும் செய்யும் சட்டத்துக்குப் புறம்பான செயல்பாடுகளே காரணங் களாகும்.  சாதி மத வேறுபாடுகளும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் இதற்குத் தூபம் போடு கின்றன.  தீவிரவாதிகளாக யாரும் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்.

புரட்சி வேறு; கலகம் வேறு; கலவரம் வேறு; இவற்றுக்குள்ளே மயிரிழை வேறுபாடுகளை அறிந்து கொள்ளாமல் கலவரக்காரர்களையெல்லாம் இடது சாரித் தீவிரவாதிகளாகச் சித்திரிப்பது குழப்பத்தை உண்டாக்கும்; இடதுசாரி தீவிரவாதிகள் மாவோ யிஸ்டுகளாக இருந்தாலும், நக்சலைட்டுகளாக இருந்தாலும் அவர்களது வழிமுறை தவறாகவே இருக்கலாம்; ஆனால் அவர்களின் தியாகத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது அல்லவா!

இவ்வாறு இவற்றையெல்லாம் சிந்திக்க இடம் தருகிறது இந்த நாவல்.  சூதாட்டம் மிக்க இந்தச் சமூக அமைப்பில் இதுதான் தனது பாதை என்று வரையறுத்து வாழ்ந்து காட்டுவதே ஒரு பெரிய போராட்டம்தான்என்கிறார், நூலாசிரியர் அ.சந்திர போஸ்.  உண்மைதான்.  இவர் போட்டிருப்பது புதிய பாதையில்லையென்றாலும், புறப்பட்டிருப்பது போராட்டப் பயணம்தான்.  இந்தப் போராட்டம் முடியவில்லை; முடியாது; பிரபஞ்ச கானத்துக்கு முடிவேது?

பிரபஞ்ச கானம்

ஆசிரியர் : ஆ.சந்திரபோஸ்

வெளியீடு : ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

விலை : ரூ.150.00

Pin It