நேற்று (ஏப்.1) சென்னையில் ஒரு செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி. தேசிய தேர்தல் கண்காணிப்பகம் என்பது உள்ளிட்ட சில என்ஜிஓ-க்கள் சேர்ந்து நடத்தினார்கள். தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் களம் காணும் வேட்பாளர்களில் யார் யார் மீதெல்லாம் கிரிமினல் வழக்குகள் இன்னும் தீர்க்கப்படாமல்  உள்ளன என்ற பட்டியலை வெளியிட்டார்கள். யார் யாருக்கு எவ்வளவு சொத்து என்ற விவரத்தையும் வெளியிட்டார்கள். இந்தத் தகவல்களையெல்லாம் தாங்கள் துப்பறிந்து கண்டுபிடிக்கவில்லை, வேட்பாளர்கள் தாக்கல் செய்திருந்து வாக்குமூலப் பத்திரங்களிலிருந்தே எடுத்ததாகத் தெரிவித்தார்கள். தங்களுக்கு அரசியல் சார்பு இல்லை என்றார்கள். எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும், யாரை நிராகரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பது தங்கள் நோக்கம் அல்ல என்றும் கூறினார்கள். ஆனால் கிரிமினல்களுக்கு வாக்களிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்வதே தங்கள் நோக்கம் என்றும் கூறினார்கள்.

ஒரு செய்தியாளராக நான் அவர்களிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டேன்:

1) தங்களுடைய வாக்குமூலப் பத்திரத்தில் இந்த விவரங்களை மறைக்காமல் தெரிவித்திருக்கிறார்கள் என்றால் அது பாராட்டத்தக்கதுதானே?

2) கிரிமினல் வழக்கு போடப்பட்டிருக்கிறது, அதில் இன்னும் தீர்ப்பளிக்கப்படாமல் இருக்கிறது என்பதாலேயே ஒருவர் கிரிமினல் பேர்வழியாகிவிடுவாரா?

3) எதிர்க்கட்சியினர், குறிப்பாக இடதுசாரி கட்சிகளின் தொழிற்சங்கத் தலைவர்கள் மக்களுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் போராட்டங்களில் ஈடுபடுகிறபோது ஆளுங்கட்சிக்கும் பெரிய முதலாளிகளுக்கும் ஆதரவான காவல்துறையினர் அந்தத் தலைவர்கள் மீது கொலை, கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட கிரிமினல் வழக்குகளைப் பதிவு செய்வது வழக்கமானதுதானே? அதைவைத்து இவர்களை கிரிமினல்கள் என்று சித்தரிப்பது சரியா?

4) யாருக்கு வாக்களிக்க வேண்டும், யாரை நிராகரிக்க வேண்டும் என்று கூறுவது நோக்கமல்ல என்று கூறிவிட்டு, கிரிமினல்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுப்பதே நோக்கம் என்றும் அறிவித்துவிட்டு, இவர்கள் எல்லோரும் கிரிமினல் ஆட்கள் என்று பட்டியல் வெளியிட்டால், இவர்களுக்கெல்லாம் வாக்களிக்காதீர்கள் என்று அறிவுரை கூறுவதாகத்தானே அர்த்தம்?

- இந்தக் கேள்விகளைக் கேட்டதும் மேற்படி என்ஜிஓ தலைவர்களில் ஒருவர் மகா டென்ஷனாகி உரத்த குரலில் உரையாற்றத் தொடங்கிவிட்டார். அவர் சொன்னதன் சாரம்:

1) மக்களுக்கு சேவையாற்றுவதே தங்கள் நோக்கம் என்று இந்த வேட்பாளர்கள் கூறுகிறார்கள். அரசியல் அதிகாரத்துக்கு வருவதன் மூலமாகத்தான் சேவையாற்ற முடியுமா?

2) குற்றமற்றவர்கள் என்றால், நீதிமன்றத்தில் அதை நிரூபித்துவிட்டு, அப்புறம் தேர்தலில் போட்டியிட வேண்டியதுதானே?

- இவர்களிடம் நாம் கேட்கக் கூடியது:

1) எதற்காக டென்ஷனாக வேண்டும்?

2) மக்களுக்கு சேவை செய்வதில் அரசியல் ஒரு தலையாய களம் இல்லையா?

3) நமது நீதித்துறையின் புகழ்பெற்ற இழுவைத் திறன் பின்னணியில், கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரும் தங்களை குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் நிரூபித்த பின்னர்தான் தேர்தல் களத்திற்கு வரவேண்டும் என்றால், அவர்களால் ஒருபோதும் தேர்தலில் போட்டியிட முடியாமல் போய்விடும் என்பதுதானே உண்மை? இது அவர்களது ஜனநாயக உரிமையைத் தள்ளுபடி செய்வதாகாதா?

4) ஒரு வேட்பாளர் மக்கள் நலனுக்கு எதிரானவர் என்று குறிப்பான தகவல்களுடன், கடந்தகால செய்திகளுடன், திட்டவட்டமாக அறிவித்து அவரைத் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று தெளிவான ஆலோசனை கூறாமல் இப்படி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவது மக்களைக் குழப்புகிற வேலையல்லவா?

5) அரசியல் அடிப்படையில், கொள்கை அடிப்படையில், உடனடி சூழல் அடிப்படையில், தொலைநோக்கின் அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சிக்கு அல்லது அரசியல் அணிக்கு வாக்களிக்குமாறு கோருவதுதானே ஆரோக்கியமான அரசியல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்? அதை விடுத்து இப்படி தனி மனிதர்கள் அடிப்படையில் அணுகுவது ஒட்டுமொத்த அரசியல் பக்குவ வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிற கைங்கர்யமாகிவிடாதா?

6) இதெல்லாம் நடைமுறைக்கு உதவாத வெறும் மிடில் கிளாஸ் மன உளைச்சலன்றி வேறென்ன?

Pin It