வீரிய ரக நெல் ரகங்கள் மூலம் மக்களுக்கு நோய்களை வாரி வழங்கிவிட்டு, மரபணு மாற்று ரகங்கள் மூலம் மக்களின் பசிப்பிணி அகற்ற வேளாண் பல்கலைக்கழகங்கள் அயராது உழைத்துவரும் நிலையில் (!), இந்த மண்ணின் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதற்கான முயற்சியில் விவசாயிகள் இறங்கியுள்ளனர். தமிழ்நாட்டின் விவசாயிகள் தன்னெழுச்சியாகவும், கேரள மாநில விவசாயிகள் அம்மாநில அரசின் உதவியுடனும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் வழிகாட்டுதலில் செயல்படும் திருத்துறைப்பூண்டி கிரியேட் அமைப்பு சார்பில் மே 22ம் தேதி திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் கிராமத்தில் “நெல் திருவிழா“ நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரம் விவசாயிகள் திரண்டு வந்திருந்தனர்.

கிராம வழக்கப்படி விதை நெல்லுக்கு வழிபாட்டு மரியாதை செய்யப்பட்டு நிகழ்ச்சி தொடங்கியது. “நமது நெல்லைக் காப்போம்“ என்ற இயக்கத்தை தொடங்கியவர்களில் ஒருவரான கேரள மாநிலத்தின் தணல் அமைப்பின் நிர்வாகி உஷா கருத்தரங்கை தொடங்கி வைத்தார். “அன்று நமது முன்னோர்கள் பாரம்பரியமாக சில நெல் வகைகளை நமது தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப தேர்ந்தெடுத்து தந்தார்கள். அது மழை, வெள்ளம், வெயிலுக்கு ஏற்ப நல்ல மகசூலை தந்தது. நாமும் நோயின்றி வாழ்ந்தோம். கேரளாவில் அரசின் உதவியுடன் இந்த பாரம்பரிய நெல் ரகங்களை தணல் அமைப்பு பாதுகாத்து வருகிறது. தமிழ்நாட்டில் கிரியேட் அமைப்பு சுமார் 40க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து வருகிறது. இத்தகைய முயற்சிகள் மூலமே பன்னாட்டு வணிக நிறுவனங்களிடம் நம் விவசாயிகள் அடிமையாகாமல் தடுக்கமுடியும்.“ என்று அவர் குறிப்பிட்டார்.

சென்னை புதுக்கல்லூரியின் பேராசிரியர் முகமது சுல்தான் இஸ்மாயில் பேசிய போது, “இயற்கையிலேயே நம்மிடம் உள்ள பூச்சி விரட்டிகளை, ஆடுகள் என்ற இயற்கை பேராசிரியர்கள்தான் அடையாளம் காட்டுகின்றன. ஆடுகள் சாப்பிடாத இலையே சிறந்த பூச்சி விரட்டி. இயற்கையின் படைப்பில் ஏராளமான ரகசியங்கள் உள்ளன. அந்த ரகசியங்கள் மரபணுவுக்குள் பாதுகாக்கப்படுகின்றன. பல நூறாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு இயற்கையின் போக்கில் மாற்றியமைக்கப்படும் இந்த மரபணுக்களை, அவசர கதியில் அறிவியல் கூடங்களில் மாற்றியமைப்பதால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை யாரும் கணிக்க முடியாது. மரபணு மாற்று விதைகளை எதிர்ப்போம்“ என்றார்.

அன்று மாலை “இயற்கை விவசாயத்தை காப்போம். ரசாயன உரத்தையும், மான்சாண்டோ விதைகளையும் ஒழிப்போம்!“ என்ற முழக்கங்களுடன் விவசாயிகளின் பேரணியும், அதைத் தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இதில் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் பேசியபோது, “இந்தியாவின் பாரம்பரிய விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி பிறந்தநாள் அன்று நாடாளுமன்றம் முன் மண் கொட்டும் போராட்டம் நடத்தப்படும். ஒவ்வொரு விவசாயியும் நமது வயல்களில் இருந்து ஒரு கிலோ மண்ணை எடுத்துச் சென்று நாடாளுமன்றம் முன் கொட்டி, இந்திய பாரம்பரிய விவசாயம் காணாமல் போய், மண் மலடாகிவிட்டது என்று தெரிவிப்போம். பாரம்பரிய விவசாயத்தை காக்க வலியுறுத்துவோம்.

இந்திய விவசாயிகளை ஏமாற்றும் வித்தையை இனியும் அனுமதிக்கக்கூடாது. மான்சாண்டோ விதைகளை வரும் காலங்களில் விற்பனை செய்தால், அதை பறிமுதல் செய்து கொளுத்தும் போராட்டத்தை - விடுதலைப் போராட்டத்தில் அந்நிய துணிகளை எரித்தது போல - மான்சாண்டோ விதைகளை எரிக்கும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபடுவார்கள். விவசாயிகள் ஓரணியில் திரண்டு இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு நோய் நாடாத, நஞ்சு இல்லாத உணவை மக்களுக்கு வழங்க ஒரே நோக்கத்தில் செயல்படுவோம்“ என்று வலியுறுத்தினார்.

அந்நிய விதைகள் மூலமாகவும், இந்திய விதைச்சட்டம் மூலமாகவும் விவசாயிகளின் கையிலிருந்து விதைகளை பறிக்கும் நோக்கத்துடன் அரசு அமைப்புகளும், பன்னாட்டு - தனியார் நிறுவனங்களும் தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்கும் வகையில் தமிழக, கேரள விவசாயிகள் செயல்படுவது எதிர்காலம் குறித்த நம்பிக்கையை தருவதாக இருந்தது. 

Pin It