மிக வேகமாகக் கணினி மயமாகி வரும் இன்றைய உலகிலும் மனிதரின் உள்ளளியையும் உணர்வுகளையும் தகவமைத்து ஆற்றுப்படுத்தும் வல்லமை அச்சிடப்பட்ட புத்தகங்களிடமே இருக்கிறது. எழுத்தாளரின் பார்வை,ஞானம் மற்றும் அனுபவம் என்னும் பெருநதிகளின் சங்கமத்தில் பொங்கி எழும் புத்தகங்களின் இடத்தை வேறு எந்த ஊடகத்தாலும் மாற்றுச்செய்ய முடியாது. வேறு ஊடகங்களுக்கு வேறு விதமான அவசியமும் முக்கியத்துவமும் இருக்கிறது என்பது வேறு.

வலைத்தளங்களில் பொத்தானைத்தட்டினால் அறைநிறைய வந்து கொட்டும் தகவல் பெருவெள்ளம் எல்லோருக்கும் பொதுவாகக் கொட்டி வைக்கப்பட்டதுதான்.ஆனால் புத்தகம் அப்படியானதல்ல.குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் குறிப்பிட்டபகுதி வாசகர்களுக்காக அவர்களை அவர்களின் மனப்போக்கை நன்கறிந்த ஒரு எழுத்தாளனால் எழுதப்படுவது.வலைத்தளங்கள் எழுத்தாளனுக்கு உதவியாக இருக்கும் நிச்சயமாக.

எப்படி கண்ணோடு பேசும் வகுப்பறைகளுக்கு டெலிகான்பரன்ஸ் வகுப்புக்கள் ஈடாக முடியாதோ அப்படியே அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு வலைப்புத்தகங்களும் ஈடாக முடியாது.லட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டாலும் என்னுடைய புத்தகத்தை என்னால் அடையாளம் காண முடியும் என்கிற மனநிலை புத்தகங்களுடனான உறவில் முக்கிய இடம் வகிக்கிறது.

காட்சி ஊடகங்களும் மின்னணு ஊடகங்களும் ஏகபோகமாகிவிட்ட ஒரு சூழலில், பன்னாட்டு மூலதனங்களின் தயாரிப்புகளை வாங்கும் நுகர்வோராக மக்களை மடைமாற்றமும் மனமாற்றமும் செய்திடும் பணியைத் தம் பிரதானக் கடமையாகக் கொண்டுள்ள இவ்வூடகங்களை எதிர்கொள்ள உழைப்பாளி மக்களுக்கும் சமூக அக்கறை மிக்கோருக்கும் எல்லோரையும் விட முக்கியமாக ஒடுக்கப்பட்ட மக்களின் பலமிக்க ஆயுதமாக சொல்லப்போனால் எஞ்சியுள்ள ஒரே ஆயுதமாக இருப்பது புத்தகமே.

காலங்களை இணைக்கும் பாலமாக ,மனங்களை நெருங்கச்செய்யும் ஈர்ப்பு மையமாகத் திகழும் புத்தகங்கள் வெவ்வேறு காலம் மற்றும் நிலப்பரப்புகளின் பண்பாட்டு அசைவுகளை பண்பாட்டு விழுமியங்களை தலைமுறைகள் தாண்டி எடுத்துச்செல்கின்றன.ஆகவே வாசிப்பு என்பது வெறும் தகவல் அறியும் பயிற்சியாகவோ முயற்சியாகவோ அல்லாமல் அதுவே ஓர் உன்னதமான பண்பாட்டு நடவடிக்கையாக அரசியல் செயல்பாடாக மாறி நிற்கிறது. ஆனால் இந்த மிக முக்கியமான பண்பாட்டு இயக்கத்தில் வந்து சேராத சேரும் வாய்ப்பு மறுக்கப்பட்ட எண்ணற்ற கோடி மக்கள் இப்புவிப்பரப்பெங்கும் வாழ்கிறார்கள் என்பது இன்றைய நம் காலத்தின் சோகங்களில் ஒன்றாகும். அறைகுறைப்படிப்பாளிகளுக்கான தனித்த புத்தககத் தயாரிப்புகளும் வாசிப்பு இயக்கங்களும் கட்டி எழுப்பப்பட வேண்டும்.அவ்வப்போது வாசித்துக் கொண்டிருப்போரை அன்றாடம் வாசிக்கும் பண்பாட்டுக்குள் கொண்டுவந்து சேர்க்க வேண்டும். இவ்வாசிப்புப் பழக்கத்தை ஒரு பண்பாடாக மாற்றம் செய்ய மாபெரும் இயக்கத்தை உருவாக்கி வளர்த்தெடுக்க வேண்டும்.

அத்தகைய முயற்சிகளுக்கு ஓர் உந்துவிசையாக அமைபவை புத்தகக் கண்காட்சிகள். யாரோ நடத்த நாம் அவற்றில் வெறும் பார்வையாளர்தாமே என்பதான மனநிலையில் இப்போதேனும் ஒரு மாற்றம் ஏற்பட்டாக வேண்டும்.ஒரு வர்க்கத்தில் பிறப்பதாலேயே ஒருவர் அவ்வர்க்க உணர்வைப்பெற்று விடுவதில்லை. ஊட்டி வளர்க்கப்படும் வர்க்க உணர்வே பின்னர் பற்றி எரிவதாக மாறும். அதுபோல வாசிக்கத்தெரியும் என்பதாலேயே ஒருவர் வாசிப்புப் பழக்கத்துக்கும் வாசிப்புப் பண்பாட்டுக்கும் வந்துவிட மாட்டார். வாசிப்பின் அரசியல் முக்கியத்துவத்தை உணர்ந்த எந்த ஒரு சமூகமும் இயக்கமும் தன் உறுப்பு மனிதர்களிடம் அவ்வுணர்வை வளர்த்தெடுக்க எல்லாவித முயற்சிகளையும் செய்தே தீரும். புத்தகக் கண்காட்சிகளை அத்தகைய முயற்சிகளுக்குத் தூண்டுதலாக மாற்றிட எவ்விதம் பயன்படுத்தலாம் என முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.

Pin It