மனித உரிமைப் போராளி பினாயக் சென்னுக்கு சத்திஷ்கர் மாநிலத்தில் இராயப்பூர் அமர்வு நீதிமன்றம் வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ராய்ப்பூர் அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி பி.பீ.வர்மா, மருத்துவர் பினாயக் சென், நக்ஸலைட் கொள்கைவாதி நாராயண் சன்யால், கொல்கட்டாவைச் சேர்ந்த தொழிலதிபர் பியூஸ் குகா ஆகியோர் இந்திய தண்டனை சட்டப் பிரிவு 124 (தேசத் துரோகம்), 120பி (சதி செய்தல்) ஆகிய குற்றங்களைச் செய்ததாக உறுதிப்படுத்திய நீதிபதி வர்மா, அவர்கள் மூன்று பேருக்கும் வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
இந்திய தண்டனைச் சட்டம் மட்டுமின்றி, இவர்கள் மூவரும் சட்டீஸ்கர் மாநில பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து அதற்கான ரூ.1000 அபராதமும், 2 ஆண்டு காவலும் விதித்துள்ளார். நாராயணன் சன்யால் கொடுத்த கடிதத்தை மாவோயிஸ்டுகளுக்கு கொண்டு சென்றார் என்ற குற்றம் சாற்றி 2007 ஆம் ஆண்டு மே மாதம் சட்டீஸ்கர் காவல் துறை பினாயக் சென்னை கைது செய்து சிறையில் அடைத்தது.
இரண்டு ஆண்டுக் கால சட்டப் போராட்டத்திற்கு பிறகு உச்ச நீதிமன்றம் அவரை பிணையில் விடுதலை செய்தது. பிணையில் விடுதலையான பினாயக் சென், தற்போது தனது மனைவியுடன் வேலூரில்தான் வசித்து வந்தார்.
மக்கள் சமூக உரிமைக் கழகத்தின் (பியுசிஎல்) அமைப்பில் உள்ள பினாயக் சென், சட்டீஸ்கரில் பழங்குடியின மக்களிடையே சென்று மருத்துவப் பணி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் அறிந்த இந்த மருத்துவர் இந்த வகையில் ஒரு பொய்யான குற்றத்தில் கைது செய்யப்பட்டு சிறை வாசம் அனுபவிப்பதைக் கண்டு நாடு முழுவதும் கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதற்கெல்லாம் அசையாத, இந்திய அரசும், அதை வழி நடத்தும் சிதம்பரம் போன்ற வக்கிர புத்திக்காரர்களும் வெட்கப்படும்படியில் சர்வதேச அமைப்புகள் வன்மையாகக் கண்டித்து இந்தியா ஒரு ஜனநாயக நாடே அல்ல நடப்பது மக்கள் ஆட்சியே அல்ல என்று கண்டனம் தெரிவித்தன. இருபத்தி இரண்டு நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர்கள், பல உலகப் புகழ் பெற்ற மருத்துவர்கள் இந்திய அரசை காறித் துப்பி, போலியான நீதித் துறையை கேவலப்படுத்தி கண்டனம் செய்து ஒரு கடிதம் அனுப்பினர். எதற்கும் அசராத சிதம்பரம், இதெல்லாம் இந்திய சட்டப்படி நடைபெறுகிறது என்று சொல்லி வந்தார்.
“பினாயக் சென்'' ஆதாரங்களை பரிசோதிக்காமலேயே தண்டிக்கப்பட்டுள்ளார் என்று டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது அருந்ததிராய் இப்படி நீதிமன்றத்தையும், இந்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரத்தையும் கண்டித்து பேசினார். மேலும் அவர் பேசுகையில் அஞ்சத்தக்க ஏதோ சம்பவிக்கப் போகிறது என்பதன் அறிகுறிதான் பினாயக் சென்னிற்கு வழங்கப்பட்ட தண்டனை. எவரையும் குற்றவாளியாக்கும் வகையில் இந்தியாவின் பல சட்டங்களும் குறைபாடுடையதாக காணப்படுகின்றன.
சென், ப்யூஸ்குஹா, நாராயண் சன்யால் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களும் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றுக்கொன்று முரணானது என்று அருந்ததிராய் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் சென் அனுபவித்த சிறைவாசமும், சித்திரவதைகளும் அவருடைய வாழ்வையும், பணியையும் சிதைத்து விட்டன.
“சென்னின் மீது தேசத் துரோக குற்றத்தை சுமத்தினால் என் மீதும் அந்த குற்றத்தைச் சுமத்தலாம் என சுவாமி அக்னிவேஷ்.''
பினாயக் சென் ஆத்மார்த்தமாக பணியாற்றும் நபராவார் என பாராட்டிய அக்னிவேஷ், அவரை உலுக்கச் செய்வதுதான் பினாயக் சென்னிற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு என்றும் தெரிவித்தார்.
பினாயக் சென்னிற்கு நக்ஸலைட்டுகளுடன் தொடர்பிருக்கிறது என்பதற்கு அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தை வாசித்தால் எவரும் சிரித்து விடுவர். சிறையில் மாவோயிஸ்டுகளைச் சந்தித்தார் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. ஆனால், சென் சிகிச்சை அளிப்பதற்காகத் தான் அவரைச் சந்தித்தார் என அக்னிவேஷ் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு சேவகம் புரிபவர்கள் ஆபத்தில் இருக்கின்றார்கள் என்பதை இந்த தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது. இதற்கெதிராக போராட வேண்டிய நேரம் வந்து விட்டது.
மாவோயிஸ்டுகளின் சித்தாந்த குருவாகக் கூறப்படும் சன்யாலை பினாயக் சென் போலீஸ் அதிகாரிகளின் மேற்பார்வையில்தான் சந்தித்துள்ளார். அவ்வாறெனில் அங்கு வைத்து எவ்வாறு ரகசிய கூட்டம் நடத்த இயலும்? என முன்னாள் நீதிபதி சச்சார் கேள்வி எழுப்பினார்.
இன்று சென், நாளை சமூக சேவகர்களுக்கெதிராகவும் இத்தயை வழக்கு பதிவுச் செய்யப்படலாம். அரசுக்கெதிராக எவரும் குரல் எழுப்பினால் அவர்களை இதே குற்றத்தை சுமத்தி சிறையிலடைக்கலாம். இதனை அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு சச்சார் தெரிவித்தார். இ.பொ.க.வின் செயலர் து.ராசா இந்தத் தண்டனை குறித்து பேசும்போது உள்துறை மந்திரி ப.சிதம்பரம் எனக்கு பினாயக் சென் வழக்கில் தனிக் கவனம் செலுத்துவதாக வாக்குறுதி அளித்தார்.
ஆனால் அனைத்து வகையான சனநாயக சக்திகளை குறி வைத்து தாக்கி வருகின்றன. இப்பின்னணியில் பினாயக் சென் விடுதலை முன்நிறுத்தி சனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டும் என்று கூறினார்.
இந்திய அரசு கொண்டு வரும் அடக்குமுறைச் சட்டங்கள் மக்கள் உரிமைப் போராளிகள், தேசிய இனப் போராளிகள், மற்றும் மாவோவிய இயக்கத்தின் மீது தொடர்ந்து ஒடுக்கி வருகின்றன.
தடா சட்டத்தில் இராசீவ் கொலை வழக்கில் 20 ஆண்டுகள் கழித்தும் நளினிக்கும் பேரறிவாளனுக்கும் நீதியும் கருணையும் மறுக்கப்பட்டே நீள்கிறது. அவர்களின் துயரம், இந்தியப் பார்ப்பனியப் பேரரசின் கொலை வெறியின் நீட்சி இன்று அப்சல் குருவின் மரண தண்டனை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, பழங்குடி மக்களுக்கு, நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு, நீதியும் நியாயத்தையும் அனைவருக்கும் கிடைக்கப் போராடிய “பினாயக் சென் விடுதலைக்கு'' நாம் ஒன்று திரள்வோம், நீதி பெறுவோம்.