2008 ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பெரிய  வங்கிகள் அனைத்தும் திவாலாக ஆகும் நிலையில் இருந்த போது, வங்கிகள்  அனைத்தும் அமெரிக்க அரசாங்கத்திடம் உதவியை தேடியது. அதற்கு அமெரிக்கா எங்கிலும் எதிர்ப்பு அலை பரவியது. மக்களின் பணத்தை கொண்டு வங்கிகளை காப்பதா என்று பத்திரிக்கை எல்லாம் எழுதி தள்ளியது. ஆனால் தற்போது அமெரிக்க பெரிய வங்கிகள் எல்லாம் முன்பை விட பெரிய அளவில், டிரில்லியன் கணக்கில் Bail Out பெற்று கொண்டு உள்ளது.இம்முறை மறைமுகமாக!. இந்த Bail Out , பழைய Bail Out ஐ விட அதிக மதிப்புள்ளது. அது அமெரிக்க மக்களுக்கு மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்த வல்லன. ஆனால் அதற்கு எதிர்ப்பு குரலே சிறிதளவும் இல்லை.(ஏற்கனவே AIG Bail out  என்ற பெயரில் பெரும் பணம் அமெரிக்க மற்றும் அய்ரோப்பிய வங்கிகளுக்கு மறைமுகமாக கொடுக்க பட்டது கவனிக்க தக்கது.)

2008ம் ஆண்டு அமெரிக்க அரசிடம் இருந்து வங்கிகள் பணம் பெற்ற போது அவர்களது Subprime கடன்களின் risk அப்படியே இருந்தது. பண புழக்கத்தின் தேவைக்காக(Liquidity Crisis) மட்டும் கடன் பெற்றனர்.ஆனால் இம்முறை கமுக்கமாக தங்களது riskயும் பொருளாதார வீழ்ச்சியால் வந்த ரியல் எஸ்டேட் நட்டத்தையும் அப்படியே Federal Reserve(Fed) கைக்கு மாற்றி விட்டு, மிக பெரிய அளவில் Fedஇடமிருந்து பணத்தை வாங்கி குவிக்கிறார்கள்.கேட்க ஆச்சிரியமாய் உள்ளதா? இதன் பின்னனியை பற்றி பார்ப்போம்.

இதை படிப்பவர்கள் முதலில் புறிந்து கொள்ள வேண்டியது Fed பற்றிய செய்தி. Fed என்பது அமெரிக்க மத்திய வங்கி போன்ற அமைப்பு. ஆனால்  உண்மையில் அமெரிக்க அரசின் முழு கட்டுபாட்டில் உள்ள அமெரிக்க மத்திய வங்கி அல்ல.  இது தனியார் மற்றும் ஓரளவு மட்டுமே அரசு கட்டுபாட்டில் உள்ள தனியார் அமைப்பு.இதன் தலைவர் பதவி மட்டும் அமெரிக்க அரசால் தேர்ந்தெடுக்க படுவார். அமெரிக்க அரசுக்கு இந்த நிறுவனத்தை முழுமையாக கட்டு படுத்தும் அதிகாரம் இல்லை. ஆனால் அமெரிக்க பொருளாதாரத்தையும் அதன் மூலம் உலக பொருளாதாரத்தையும் கட்டுபடுத்தும் அதிகாரம் இந்த அமைப்புக்கு உண்டு!

2008ல் வங்கிகள் கடன் வாங்கிய போது அமெரிக்க அரசு தன் கையில் இருந்த பணத்தை கொடுக்கவில்லை. Federal Reserve இடம் கடன் பத்திரத்தை கொடுத்து பணத்தை பெற்று வங்கிகளுக்கு கொடுத்தது. பெரும்பான்மை பணத்தை கூட முதலீட்டாளர்கள் அல்லது வெளிநாடுகளிடமிருந்து கடனாக பெறவில்லை. Federal Reserve உழைத்து சம்பாதித்த பணத்தையும் கொடுக்கவில்லை. பணத்தை எந்த அடிப்படையும் இல்லாமல் அச்சடித்து தான் கொடுத்து உள்ளது.(இது பற்றி பிறிதொரு பதிவில் விளக்கமாக எழுதுகிறேன்)

வங்கிகள் இது பற்றி யோசிக்க ஆரம்பித்தது. எதற்காக அமெரிக்க அரசிடம் போய் கைகட்டி நின்று பணம் வாங்க வேண்டும். எப்படியும் அரசும் Fed இடமிருந்து தான கடைசியில் பணம் வாங்க போகிறது. நேரிடையாகவே தானே Fed இடமிருந்து பணம் வாங்கி விட்டால் என்ன என்று நினைக்க ஆரம்பித்தது.Federal Reserve என்பது அமெரிக்காவின் பெரிய வங்கிகளின் மறைமுக கட்டுபாட்டில் உள்ளது என்பது ஊறறிந்த ரகசியம்.

தற்போது அறிவித்துள்ள Quantitative Easing-2 முறைப்படி ,வங்கிகளின் கடன் பத்திரங்களை  FED நேரிடையாகவே வங்கிகளிடமிருந்து வாங்க ஆரம்பித்துள்ளது. இதனால் வங்கிகளுக்கு ஏற்படும் ஆதாயம் பற்றியும் இது எவ்வாறு முந்தய Bail Outகளிடமிருந்து வேறுபட்டது என்றும் பார்ப்போம்.

1.முந்தய Bail outல் தங்களிடமிருந்த Subprime Mortgageகளின் ரிஸ்க் வங்கிகளிடமே இருந்தது. ஆனால் இந்த பெயில் அவுட்டின் மூலம் வங்கிகள் தங்களிடம் இருக்கும் நட்டத்தை கொடுக்கும் பத்திரங்களை FED இடம் விற்று விடும். அதன் மூலம் மிக அதிக அளவு பணம் வங்கிகளுக்கு கிடைக்கும்.

2.நட்டத்தை கொடுக்கும் பத்திரங்களை தங்களது லாப - நட்ட கணக்கிலிருந்து Fed கணக்கிற்கு மாற்றி விடுவதால் வங்கிகள் நட்டத்தை குறைத்து நல்ல  லாபம் காண்பிக்க முடியும். எப்படியும் Fed Balance Sheet ஐ யாரும் தணிக்கை செய்ய முடியாது. எனவே Fed ன் தற்போதைய நட்டம் பற்றி யாருமே கண்டு கொள்ள போவது இல்லை.

3.வங்கிகளும் நட்டமில்லாமல் தங்களது பத்திரங்களை Fedஇடம் விற்று விடும். உதாரணமாக அமெரிக்க மார்க்கெட் ஏறுமுகத்தில் இருந்த போது ஒரு  ரியல் எஸ்டேட் பத்திரத்தின் மதிப்பு $10000 க்கு வங்கி வாங்கியுள்ளது என்று வைத்து கொள்வோம். அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியின் பின் அதன் மதிப்பு $5000 ஆக குறைந்து விட்டது என்றால் அந்த பத்திரத்தின் மார்கெட் மதிப்பு $5000 தான் இருக்கும். ஆனால் இடம் அந்த பத்திரத்தை $10000க்கோ அல்லது அதை விட அதிகமாகவோ Fed இடம்  விற்க வாய்ப்பு உள்ளது.

4.இதன் மூலம் கிடைக்கும் பணத்தை சிறு மற்றும் நடுத்தர கம்பெனிகளுக்கு கடனாக கொடுக்கும் என்று எதிர் பார்ப்போடு இந்த பிரிவர்த்தனை நடக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு வங்கிகளின் செயல்பாட்டை பார்த்தால் இந்த பணத்தின் பெருமளவு Speculative Trading மற்றும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பங்கு சந்தையில் செயற்கையான ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தி லாபத்தை சம்பாதிக்கவே பயன் பட போகிறது என்பது தெரிய வரும்.

5.இதில் முக்கிய அம்சம் Fed எந்த வங்கியிடமிருந்து எவ்வளவு டாலருக்கு பத்திரங்களை வாங்கியது என்று வெளியில் சொல்ல அவசியம் இல்லை. எனவே 2008 ந் போது எவ்வளவு பணம் எந்த வங்கிக்கு சென்றது என்று மக்களுக்கு தெரிந்ததால் மக்களிடம் அந்த வங்கிகளின் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள உதவியது. அது மட்டுமல்ல, fed எந்த வங்கிக்கு உதவ வேண்டும் எதற்கு உதவ வேண்டாம் என்று முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது. எனவே மிக பெரிய வங்கிகள் தங்களது influence கொண்டு Fed இடமிருந்து உதவியை பெற்று கொள்ளவும் சிறு வங்கிகளை அழித்து, பெரிய வங்கிகள் முழுங்கி கொள்ளவும் இது வழி வகுக்கும்.

6.இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக பொது மக்களுக்கு எதுவுமே தெரியாமல், அவர்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லாமல் கமுக்கமாய் பணத்தை கறக்கும் வேலையையும் வங்கிகள் முடித்து கொண்டனர்.

இது ஒரு நூதன் Bail Out தானே?

--

Pin It