பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் தமிழ்ச்சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் நூல் பண்பாடு குறித்த தெளிவையும் தமிழ்ப்பண்பாட்டின் வரலாறு மற்றும் கண்டுபிடிப்புகளையும் முன்வைக்கிறது. பேராசிரியரின் உரையை வாசிக்கும்போது தமிழும் பேராசிரியரும் வேறு வேறு அல்ல, என்பதை உணர்கிறேன்.

பண்பாடு என்பது ஊடகங்களின் மீது மக்கள் கொள்கின்ற விருப்பு வெறுப்பு என்பதாகும். ஆனால் தமிழர்களுக்கு அது சீவாதாரமான சொல். பண்பாடு என்ற சொல் தமிழில் புழக்கத்திற்கு வருவதற்கு முன் தமிழர்களுக்கு அனைத்திந்திய மட்டத்தில் தனித்துவம், தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு கூறு, பாரம்பரிய தமிழ்ச் சமூக ஒழுங்கமைப்பு பற்றிய விமர்சனமும் மீளமைப்பும் ஆகியவைகளின் தொகுப்பாக தமிழ்ப்பண்பாடு என்ற தொடர் விளக்குகிறது.
 
சங்க இலக்கியங்கள் அன்றைய தமிழர் பண்பாட்டு அம்சங்களை பதிவு செய்து,   தமிழ்ப்பண்பாட்டிற்கான உந்துதலை ஏற்படுத்தியுள்ளது. சங்க காலத்திலிருந்து தமிழ் தனது இலக்கிய வெளிப்பாட்டிற்கு சமஸ்கிருத இலக்கிய மரபை உதாரணமாக கொண்டிருக்கவில்லை. இதுதான் ஆரியமேலாண்மைத்தனத்தை எதிர்கொள்ளும் சக்தியை தமிழர்களுக்கு வழங்கியுள்ளது. தமிழ் மதச்சார்பற்ற மொழியாக பரிணமித்ததால் சகல மதத்தினரையும் கவர்ந்துள்ளது.
 
தமிழகத்திற்கு வந்து தங்கிய முஸ்லிம் வணிகர்களை தமிழ்-முஸ்லிம் என்றே அழைக்கப்பட்டனர். இஸ்லாம் தமிழகத்திற்குள் நுழையாதிருந்தால் இந்துமதத்தின் சாதியமைப்பு இன்னும் கெட்டிதட்டி போயிருக்கும். இஸ்லாம் சாதியமைப்பை கேள்விக்குள்ளாக்கியதோடு பாதிக்கப்படுகின்ற தலித்துகளுக்கு வடிகாலாகவும் அமைந்திருக்கிறது.
 
கிருஸ்துவ பாதிரிமார்கள் தங்கள் மதத்தை பரப்புவதற்காக தமிழ் கற்றுக்கொண்டனர். அவர்கள்தான் சங்க இலக்கியத்தில் உள்ள உலகப் பொதுமையை வெளி உலகிற்கு புரியவைத்தனர். ஜி.யு.போப்  சங்க இலக்கியத்தை கிரேக்க இலக்கியத்தோடு ஒப்பிட்டுள்ளார். கார்டுவெல் என்ற அறிஞர் தமிழ் உள்பட தென்னகத்து மொழிகளை ஆராய்ந்து, வடமொழியோடு ஒப்பிட்டுள்ளார். முடிவில் தென்னகத்து மொழிகள் தனித்த வகை என்றும் இந்தோ ஐரோப்பியத் தொடர்பற்றவை என்பதைபதிவு செய்தார். வடமொழிகள் இந்தோ ஐரோப்பியத் தொடர்புள்ளவை.
 
இந்துமதத்திற்குள் இருந்த உயர்சாதிக்குத்தான் கல்வி கற்க உரிமையுண்டு, என்ற கட்டுப்பாட்டை ஆங்லக் கல்விமுறை தகர்த்தெறிந்த்து. கல்வி யார்வேண்டுமானாலும் கற்கலாம் என்றது. பாரம்பரிய பழக்கவழக்கங்கள் கேள்விக்குள்ளானது. மேலும் மேலை நாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற மானூடவாதம், தமிழ்ப்பண்பாடு சம்பந்தமான புரிதலை விரிவுபடுத்தியது. தமிழின் சர்வதேசியத் தன்மையை அறியும் பொருட்டு, தமிழ்ப் பண்பாடாக கண்டுகொண்டவை; தமிழ் இலக்கியத்திலுள்ள சர்வதேசியப் பொதுமை, சனநாயகப் பண்பு, மானுடப் பண்பு ஆகியனவையாகும்.
 
ஆங்கிலேய ஆட்சியாளர்களின் நிர்வாக வசதிக்காக கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா ஆகியவைகளின் பகுதிகளை இணைத்து சென்னை மாகாணம் எனப்பட்டது. இதை இந்தியாவின் பிற மாநிலத்தைப் போல் பாவித்தனர். தமிழர்களின் தனித்த அடையாளங்கள் மீது விழிப்புணர்வு ஏற்பட்டது. திராவிட மொழிகளில் தமிழ் முதன்மையானது; வட மொழிகள் வெளியிலிருந்து வந்தவை; தமிழ்தான் இந்திய மண்ணின் பரம்பரிய மொழி என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட எதிர்வாதத்தால் தமிழர் பண்பாட்டின் அடிப்படை மனிதாயதப் பண்பும், சமத்துவமும் வெளிக்கொணரப்பட்டன. என்று  தமிழப்பண்பாட்டின் வரலாற்றையும், மேற்குலகத் தொடர்பால் சந்தித்த சவால்களையும் பேராசிரியர் காலப்பின்னணியுடன் கேள்வியும் பதிலுமாக நம்மோடு உரையாடுகிறார்.
 
உண்மையில் 'பண்பாடு என்பது பெறுமானங்களும் கருத்துகளும் ஆகும்' என்ற பேராசிரியரின் ஆய்விலிருந்து... இலங்கையில் தமிழர்கள் சந்தித்த சவால்களாலும்  சிந்திய இரத்தத்தாலும் விளைந்த பண்பாட்டை அறியலாம்.
 
ஆங்கிலேயர்கள் சென்னை மாகாணத்தைப் போல் இலங்கையின் அனைத்துப் பகுதிகளையும் இணைத்து ஆட்சி புரிந்தனர். சுதந்திரத்திற்கு பின் அரசு சிங்களர்மயமானது. தமிழர்கள் இரண்டாம்தர குடிமக்களாக்கப்பட்டனர். தொடர்ச்சியான நெருக்கடிக்கு உள்ளான தமிழர்கள் விடுதலை கருத்தாக்கத்தால் உந்தப்பட்டனர். விடுதலைக் கருத்து ஏற்படுத்திய தாக்கம் இயக்கங்களாக உருக்கொண்டன.தமிழ் இனம் ஒடுக்குமுறைக்கு உள்ளானது. இனப்படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக்கப்பட்டனர். வலி நிவாரணமாக விடுதலைக்கருத்து, தமிழர்களின் உணர்வானது. புதிய நம்பிக்கையால் விடுதலையின் வாசனையை நுகர்ந்தனர். அதன் திசையில் பயணமானார்கள். கடின மேடுகளால் சோர்வடைந்தனர். பாதைகள் குழப்பமானது. ஆளுக்கொரு திசைகளில் பிரிந்தனர். விடுதலை தாகத்தோடு கடைசிவரை இயங்கியவர்களின் மூச்சு, இராணுவத்தின் இராசயன குண்டுகளால் நிறுத்தப்பட்டது. உடல்கள் சிதைக்கப்பட்டன கொடூரமாக... எஞ்சியவர்கள் முள்வேலிக்குள் அடைக்கப் பட்டுள்ளனர்.
 
இலங்கை தமிழர்களின் இக்கசப்பான உண்மைகளினூடே... வெளிப்பட்ட விடுதலை உணர்வு, ஒட்டுமொத்த தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாகி இருக்கிறது. இவ்விடுதலை உணர்வை சமூக கலாச்சார பொருளாதார விடுதலைக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; என்ற புரிதலை  தமிழ்ச் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் நூல் ஏற்படுத்துகிறது. 
 
இன்றைய  தேவையை உணர்ந்து திருத்திய பதிப்பாக நியூ செஞ்சுரி நிறுவனத்தார் கொண்டுவந்துள்ளனர்.   இந்நூல் தமிழ்ச் சமூகத்திற்கும் தமிழ்பண்பாட்டு ஊழியர்களுக்கும் கிடைத்த கொடை. பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியை வணங்குகிறேன்; தமிழ்தாய்க்கு இணையாக போற்றுகிறேன். 

- தங்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It