இந்திய அரசியலமைப்பு சட்டப்படி இந்தியாவில் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் சேர்த்தே வாக்குரிமை அளிக்கப்பட்டது. இந்திய அரசால் முன்பு இயற்றப்பட்ட பல சட்டங்கள் ஒரு சமநிலையை உருவாக்கவே பயன்பட்டன. தொழில் தகராறு சட்டம் மற்றும் பல தொழிலாளர் நலச் சட்டங்கள் தொழிலாளர்களுக்கு உரிய உரிமையை வழங்கும் அதே சமயம் முதலீடு செய்யும் தொழில் அதிபர்களையும் பாதிக்கா வண்ணம் இருக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அனைத்தும் இருந்தும் அதனை செயல்படுத்தும் அரசு நிர்வாகம் பாரபட்சமாக செயல்படுவது ஏன் என்று பலரும் யோசிப்பதில்லை.

இன்றைய அரசியலில் நிலவும் அவலம்  

இன்று ‘நான் ஒரு அரசியல்வாதி’ என்று ஒருவர் அறிமுகப்படுத்தினால் அவரைக் குறித்து ஒருவித பயமோ, வெறுப்போதான் பெரும்பான்மையோருக்கு ஏற்படுகிறது. இது ஏன்? சுதந்திரப் போரட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி அனைத்துமே பங்கு பெற்று கடுமையாகப் போராடினர். அவர்களில் பலர் தங்களின் இன்னுயிரை நாட்டின் சுதந்திரத்திற்காக சமர்பித்தனர் அவர்கள் அனைவரும் மக்கள் நலம் பெற்று நல்வாழ்வு வாழவே தங்களின் பொன்னான நேரத்தை, இன்னுயிரை, தாங்கள் பெற்றிருக்க வேண்டிய நல்ல வாழ்க்கையை தியாகம் செய்தனர். பணம் படைத்தவர்களில் சிலர் கூட தங்கள் ஒட்டுமொத்த செல்வத்தையும் இழந்து முரட்டுக் கதராடை உடுத்தி போராடி சிறை சென்று எண்ணில் அடங்காத துன்பத்தில் வாடியதன் விளைவு தான், இன்று நம்மை நாமே ஆளக்கூடிய சுதந்திரம் நமக்குக் கிடைதுள்ளது. 

இந்த சுதந்திரத்தில் காங்கிரஸ் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றும் பிற அமைப்புகளின் பல தலைவர்களும் ஏட்டில் எழுதவியலாத பல துன்பங்களை அனுபவித்தனர் என்பது மறுக்கவொண்ணாதது. ஜவகர்லால் நேரு தலைமையில் அமைந்த அரசு தங்களுக்கு விமோசனம் தரும் என்று நம்பினார்கள் நமது இந்திய மக்கள். அதைப்போலவே அப்போது இருந்த அரசியல் தலைவர்கள் அப்பழுக்கில்லாமல் மக்களை மையப்படுத்தியே திட்டங்களைத் தீட்டினர். பல தொழிற்சாலைகளை கொண்டு வந்தனர். லாபம் அதிகம் ஈட்டாத சில தொழில்களை அரசே எடுத்தும், ஆரம்பித்தும் நடத்தியது. ஆனால் இன்று எது போன்ற சூழ்நிலை நிலவுகிறது என்றால் சாதாரண ஏழைகளுக்கு இங்கு எந்தவிதமான அடிப்படை உரிமைகளும் வழங்காமல் மறுக்கப்படுகிறது. 

காங்கிரஸ் அரசோ, பி.ஜே.பி. அரசோ, கம்யூனிஸ்ட் அரசோ அல்லது பிற எந்த அரசாக இருந்தாலும், வேறு எந்த மாநிலக் கட்சிகளாக இருந்தாலும் இதுவரை எந்த ஆட்சி அதிகாரத்தையே நுகராத சிறிய கட்சியாக இருந்தாலும் ஏழை, அடித்தட்டு மக்களுக்கு நலன் பேணும் எந்தவிதமான அறிவியல் பூர்வமான திட்டங்களையோ, பொது மக்களின் அன்றாட அத்தியாவசியமான கல்வி விசயத்திலோ, மருத்துவ வசதிகளையோ, சிறப்பான போக்குவரத்து வசதிகளையோ விளம்பரம் தேட வேண்டும் என்ற நோக்கத்தில் அல்லாமல் உண்மையான சமூக அக்கறையோடு செய்து தருவதில்லை. எதிர்க்கட்சிகளும் எந்தவிதமான ஆக்கபூர்வமான போராட்டங்களையும் நடத்தாமல் நாங்களும் இருக்கிறோம் என்பதிற்காக சில அடையாளப்பூர்வமான போராட்டங்களை நடத்துகிறதே தவிர எந்த விதமான ஆக்கப்பூர்வமான வெகு ஜனங்களுக்கு உபயோகமான எந்தவித போராட்டங்களையும் முன்னெடுத்து செய்வதில்லை என்பதே நிதர்சன உண்மை ஆகும்.

 போபாலில் நடந்த பேரவலம்

 உதாரணமாக போபாலில் அந்த நிறுவனத்தின் அஜாக்கிரதையின் காரணமாக ஒரு மிகப்பெரிய விபத்து நடைபெற்றது. அதற்குள் நாம் செல்லாவிட்டாலும், அதற்கு பின்பு நடைபெற்றது என்ன? ஜப்பானிலே குண்டு போட்டதை கண்டிக்காத நாடுகளே இல்லை எனலாம். அந்த அளவிற்கு அது இன்றுவரை ஹிரோஷிமா தினமாக அனுசரிக்கபடுகிறது. நமது சொந்த நாட்டிலே, சொந்த மக்களை, தங்களின் அதீத லாப வெறிக்காக ஒரு நிறுவனம் செய்த பிழையால் பல்லாயிரக்கனக்கான உயிர்கள் எந்த விதமான நியாமான காரணமும் இல்லாமல் பலி கொடுக்கபட்டது. குறைந்த பட்சம் அந்த தவறுக்கு தண்டனை பெற்றாவது கொடுக்க வேண்டாமா நமது இந்திய அரசு? அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கும், அதைப் பார்க்கும் மக்களுக்கும் எவ்வாறு இந்த இந்திய அரசின் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வரும்?

தமிழகத்தில் உள்ள துயர நிலை 

அது மட்டுமா இன்று தேசத்திலே எங்கு திரும்பினாலும் விண்ணை முட்டும் விலைவாசி, மக்கள் நகரங்களில் வாழவே முடியாத அளவிற்கு அதிகபடியான வீட்டு வாடகை உயர்வு, இங்கு மின்சார விநியோகமே இல்லாவிட்டாலும் கூட அதிகபடியான மின் கட்டண உயர்வு, அறிவிக்கபடாத பேருந்துக் கட்டண உயர்வு, ஏழை மாணவர்கள் கல்வியே பெற முடியாத அளவிற்கு கல்விக் கட்டண உயர்வு, மருத்துவமனைக்கு போனாலே திரும்பி வர முடியுமா என்று தெரியாத அளவிற்கு ஆகாயத்தில் நிற்கும் மருத்துவக் கட்டணங்கள். இன்று வேலைக்கு அலுவலகம் நுழையும் வரை நாம் வேலையில் இருக்கிறோமா என்பது நிச்சயமில்லை, அந்த வேலையும் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத அளவிற்கு கொடுமையானது என்பது இன்னொரு பக்கமுள்ள உண்மையே. 

எதிர் கட்சிகளின் அறிக்கை அரசியல் 

இவ்வாறு ஏழை மக்கள் பல வழிகளிலும் எண்ணிலடங்காத வேதனையோடு வாணலியில் வறுபடும் புழுவைப் போல துடிக்கின்றனர். நடு இரவில் மின்சாரம் இல்லாமல் தூக்கம் இழந்து அவதியுறுகின்றனர். இந்த சாதாரண அடித்தட்டு மக்கள் தாங்கள் படும், மற்றும் படப்போகும் துன்பங்களுக்காக, தங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை பேச யாராவது, எந்த அரசியல் கட்சியாவது முன்வராதா என்று ஏங்கித் தவிக்கின்றனர்.

தாங்கள் படும் பிரச்னைகளின் ஒரு பகுதியளவிற்காகவாவது பேசும் எதிர்க்கட்சிகளை ஆதரித்து அவர்களை பூரண விருப்பத்தோடு ஆட்சியில் அமர வைக்கின்றனர். ஆனால் திரும்பவும் முதலில் இருந்தே வரலாறு திரும்புகிறது. எந்த எதிர்க்கட்சி இவர்களுக்காக குரல் கொடுத்ததோ அதே கட்சியானது ஆளும் கட்சியான பின்பு அதற்கு முந்தைய ஆட்சியாளர்களின் தவறையே செய்கிறது. மீண்டும் ஒருமுறை வரலாறு திரும்புகிறது. பல ஜாதிக்கட்சிகளும் அந்த ஜாதியிலேயே உள்ள ஏழைகளின் எண்ணிப் பார்க்கவியலாத துன்பகளுக்கு எதிராக போராட முன் வருவதில்லை. இவற்றிக்கு எல்லாம் தீர்வுதான் என்ன? 63வது சுதந்திர தினம் கொண்டாடினாலும், அந்த சுதந்திரமானது அனைவருக்கும் கிடைத்து உள்ளதா என்றால் அது ஒரு மிகப் பெரிய கேள்விக்குறியாகத்தான் இன்று எழுந்து நிற்கிறது.

அரசியல் ஒரு தொழில் ஆகிப்போன அவலம் 

இன்றைய அரசியல் என்பதே முதலீடு செய்து அதில் லாபம் ஈட்டும் லாபகரமான தொழிலாக உருமாறிவிட்டது. எம்.பி. பதவியும், எம்.எல்.ஏ. பதவியும் இன்று பணம் உள்ளவர்களுக்கு விலை பேசி விற்கப்படுகிறது. இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் எந்த நாட்டிலும் நடக்காத அளவிற்கு மிகப்பெரிய ஊழல் நடந்தது இப்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது இந்தியாவிற்கு உலக அளவில் மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தும் தேச அவமானம் ஆகும். அண்மையில் கிரிக்கெட் போட்டிகளில் நடந்த பேரமும், முறைகேடுகளும் சந்தி சிரித்தது. தியாகி பகத் சிங் போன்றவர்கள் கண்ட சுதந்திர இந்தியா இது போன்ற நிகழ்வுகளை அனுமதிப்பது என்பது நமது தேச சுதந்திரத்திற்காக பாடுபட்ட உயிர்கொடுத்த அனைவரையும் அவமதிப்பதாகும். 

மெசியா வருவாரா, மீட்சி தருவாரா 

இன்று பெருக்கெடுத்து ஓடும் நுகர்வுக் கலாச்சாரம் நம் அனைவரையும் அதில் தள்ளி நாம் அதில் இழுத்துச் செல்லப்பட்டு கொண்டு இருக்கிறோம். சாதாரண மக்களின் பிள்ளைகள் நல்ல கல்வியைப் பெற முடியாமல் போதையிலும், வேலையில்லாத சூழ்நிலையிலும், போதைக்கு அடிமையாகியும் அவர்களுக்குள்ளே வெறிவாதம் தூண்டப்பட்டு வன்முறை அமைப்புகளின் கைப்பாவைகளாகி, அதிலும் ஹிந்து வெறிவாத அமைப்புகளிடம் சிக்கி தாங்களும் அழிவதோடு, தங்களைச் சேர்ந்த இனமக்களையும் அளிக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். 

காஷ்மீர் மாநிலத்திலே எந்த பெரிய கட்சியும் இந்திய அரசை எதிர்த்துப் போராடாத காரணத்தால் மக்களே ராணுவத்திற்கு எதிராக கல் எறிவது போன்ற செயல்கள் மூலம் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டி உள்ளது. அந்த அளவிற்கு ஏழை மக்களுக்காகப் போராடும் அரசியல் கட்சிகளுக்கு பஞ்சம் உள்ளது. இதற்கெல்லாம் தீர்வு தான் என்ன? பகத் சிங், நேதாஜி போன்றவர்கள் கற்றுக்கொடுத்த போராட்ட வழிமுறைகள் எல்லாம் என்ன ஆயிற்று? ஏழை மக்கள் நாதி அற்று போய் விட்டார்களா? இன்று அவர்கள் சொன்னதற்கு நேர் எதிரானதாகவே அல்லவா நாம் செய்து கொண்டு இருக்கிறோம். அதன் விளைவே லஞ்சமும், ஊழலும் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

இன்று ஏழைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் குரல் கொடுத்து அவர்களை மையப்படுத்தி கட்சி அமைத்து ஆடம்பரம் தவிர்த்து உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்று உறுதி கொடுக்கக் கூடியவர்கள் யார் இருக்கிறார்கள்? இன்றைய ஏழை இந்திய மக்கள் தங்களுக்காக அரசியல் நடத்த ஒரு மேசியாவை நோக்கி காத்துக் கிடக்கிறார்கள். அந்த மெசியா வருவாரா இவர்களுக்கு விமோசனம் தருவாரா?

 எந்த மெசியாவும் விண்ணில் இருந்து வர மாட்டார். ஏழை மக்கள் தாங்கள் படும் துன்பத்திற்கு யார் காரணம் என்று புரிந்து கொண்டு, யார் எதிரி என்று தெரிந்து கொண்டு, எந்த வகையான போராட்டம் தங்களுக்கு ஏற்றது என்று ஆராய்ந்து, தெளிவான குறிக்கோளுடன் போராடினால் தவிர அவர்கள் படும் துன்பத்திற்கு இந்த 63வது சுதந்திர தினம் அதுவும் ஒரு நாளே தவிர நமக்கான நாளாக அது இருக்காது. நம்மிடம் இழப்பதற்கு அடிமைச்சங்கிலி தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆனால் நாம் பெறுவதற்கு பொன்னுலகமே இருக்கிறது என்பதை நினைவில் நிறுத்துவோம். போராடுவோம். வெற்றியடைவோம். 

- கதிரேசன்.கு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

செல்பேசி : 9843464246

Comments

6 comments

6
ramesh prasath
இன்றய அரசியல் சூழ்நிலையில் கம்யுனிச அரசியல் என்று சொல்பவர்கள் கூட சமூகத்தில் ஒரு நாளைக்கு ஒரு வேலை உணவு உண்பவர்களை மையமாக கொண்டு அரசியல் செய்வதில்லை. நாளைக்கு எந்த கூட்டனியில் சேர்ந்தால் அதிக இடங்களை பெற முடியும் என்று தான் கவலை படுகிறார்களே தவிர உழைக்கும் மக்களுக்குகான அரசியல் செய்வதில்லை என்பது தான் உண்மை
kumar
இந்த அரசானது 10 சதவிகித மக்களுக்காக தான் இருக்கிறதே தவிர ஒட்டு மொத்த மக்களுக்கான அரசாக இது இருப்பதில்லை . அந்த 90 சதவிகித மக்களுக்குள்ளே பல பிரிவினைகளை அதாவது நீ வேறு மதம் , நீ வேறு சாதி , நீ வேறு மொழி என்று பல பிரிவினைகளை இந்த அரசானது துண்டி விடுகிறது அது புரியாமல் இங்கு அது புரியும் வரை ஏழைகளுக்கு எந்த தீர்வும் கிடக்க போவதில்லை
நாங்கள் இருக்கிறோம்
ஏழைகளின் பக்கம் இன்று அறியப்படும் பெரும் அரசியல் வாதிகள் இல்லை என்பது உண்மை தான் ஆனால் பலரும் அறியாமல் தங்கள் இன்னுயிரை பலி கொடுக்கும் பலார் இன்றும் இருக்க தான் செய்கின்றனர்
ayal maanila tholilaali
இன்று சென்னையில் மட்டும் 2 லட்சம் பேர் அயல் மாநில தொழிலாளர்களாக ,அடிமைகளாக இருக்கின்றனர் இது போன்ற அடிமைத்தனம் வெளிப்படுத்த வேண்டும்
தமிழன்
தமிழனுக்கே வேலை இல்லை அப்படி என்றால் எங்கிருந்து அயல் மாநிலத்தவனுக்கு வேலை கிடைக்கும்
தமிழ்வேந்தன்
என்னதான் ஏழையாக இருந்தாலும் அவர்கள் தங்களது கஷ்டங்களை தாங்களே புரிந்து கொள்வதில்லை என்பது தான் உண்மை ஆகும்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.