தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் தலைவர்களும், செயல்வீரர்களும் சென்னை, கொல்கத்தா மற்றும் பிற விமான நிலையங்கள் தனியார்மயப்படுத்தப்படுவதற்கு எதிராக ஏர்போர்ட் அதாரிடி ஆப் இந்தியாவின் (ஏஏஐ) தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்று வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற தொழிலாளர்களுடைய ஆர்பாட்டத்தில் பங்கேற்று தோழர் பாஸ்கர் உரையாற்றினார்.

அவர் தன்னுடைய உரையில், நாடெங்கிலும் உள்ள 123 பெரிய மற்றும் சிறிய விமான நிலையங்களை இயக்குவதன் மூலம், ஏர்போர்ட் அதாரிடி ஆப் இந்தியாவின் தொழிலாளர்கள் விமான துறையில் உள்ள மிகவும் முக்கியமான பணிகளைச் செய்து வருகிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டினார். அதனுடைய எல்லா சொத்துக்களும், சேவைகளும் நமது நாட்டு மக்களுடையவையாகும். பல்லாண்டு உழைப்பின் மூலம் தொழிலாளர்கள் உருவாக்கியிருக்கும் பெரும் செல்வங்களை விழுங்கி ஏப்பமிட முதலாளிகள் விரும்புகிறார்கள். இந்தச் செல்வங்களையும், சொத்துக்களையும், சேவைகளையும் உருவாக்கி இயக்கி வந்திருக்கின்ற தொழிலாளர்களால் இவற்றை மேற்கொண்டு நவீனமயமாக்கவும், இயக்கவும், மேலாண்மை செய்யவும் முடியுமெனவும், அதற்குத் தேவையான திறமை அவர்களிடம் இருக்கிறதெனவும் தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் கருதுகிறது. நவீனமயப்படுத்துகிறோம் என்ற பெயரில் இலாபவெறி கொண்ட முதலாளிகள் உள்ளே நுழைவதற்கு எவ்விதத் தேவையும் இல்லை. ரூ 40,000 கோடி பொறுமானமுள்ள பொதுத்துறை சொத்துக்களை தனியாருக்கு இவ்வாண்டில் விற்பதற்காக இலக்கை மத்திய அரசு தீர்மானித்துள்ளது. நெய்வேலி லிக்னைட் கார்பரேசன், ஏர்போர்ட் அதாரிடி ஆகிய தொழிலாளர்களுடைய தீவிர எதிர்ப்பின் காரணமாக இந்த தேச விரோத முயற்சி நிறைவேறாமல் தடைபட்டு நிற்கிறது.

ஏற்கெனவே தனியார்மயப்படுத்தப்பட்ட விமான நிலையங்கள் மூலம் பயணம் செய்யும் மக்களிடம் பல்வேறு கட்டணங்களின் பெயரில் அதிக பணம் கொள்ளையடிக்கப்படுவதே, இந்த முயற்சியின் சமூக விரோத, தேச விரோதத் தன்மையை உறுதிப்படுத்துகிறது. உங்களுடைய போராட்டமானது, தொழிலாளர்களுடைய நலன்களைப் பாதுகாப்பதற்காக மட்டுமில்லை. அது தேசத்தின் சொத்துக்களையும், இந்திய மக்களுடைய நலன்களையும் பாதுகாப்பதற்கான ஒரு வீரமிக்க போராட்டமாகும். உங்களுடைய இந்த நியாயமான போராட்டத்தில் இந்தியாவின் முழு தொழிலாளி வர்க்கமும் உங்களோடு உடன் நிற்கிறது, என்றார் அவர்.

தில்லி, மும்பை, பெங்களூரு, ஐதிராபாத் விமான நிலையங்கள் தனியார்மயப்படுத்தப்பட்ட போது தொழிலாளர்களுடைய நலன்களும், வாழ்வாதாரமும் பாதுக்காக்கப்படுமென்ற வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நம்ப வேண்டாமென அவர் தொழிலாளர்களை எச்சரித்தார். மேற்கொண்டு எந்த விமான நிலையத்தையும் தனியாரிடம் கொடுக்க மாட்டோமென 2009-இல் அரசாங்கம் ஒப்புக் கொண்டதையும் அவர் நினைவூட்டினார்.

இன்றுள்ள அரசியல் அமைப்பிலும், வழிமுறையிலும் தேசிய சொத்துக்களை தனியார்மயப்படுத்துவது போன்ற முடிவுகளை பாராளுமன்றத்திற்கும் மக்களுக்கும் தெரியாமல் நிறைவேற்ற முடியும் என்பதை தோழர் பாஸ்கர் சுட்டிக்காட்டினார். எல்லா முக்கிய முடிவுகளும் பெரிய முதலாளி வர்க்கத்தால் தீர்மானிக்கப்பட்டு, அவர்களுடைய நலன்களைப் பாதுகாப்பதற்காக அதிகாரத்தில் இருக்கும் கட்சிகளால்  நடைமுறைப்படுத்தப்படுகின்றன. எனவே இந்த நாட்டினுடைய செல்வத்தை உருவாக்குகின்ற நம்முடைய கைகளில் தீர்மானிக்கின்ற அதிகாரம் வருவதை உறுதி செய்ய நாம் இந்த அரசியல் வழிமுறையை மாற்ற வேண்டியது அவசியமில்லையா என்று வினவினார் அவர்.

தனியார்மயப்படுத்துவதை தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் ஒரு கொள்கை அடிப்படையில் விட்டுக்கொடுக்காமல் உறுதியாக எதிர்த்து வந்திருப்பதைக் குறிப்பிட்டார். நாங்கள் மாடர்ன் புட்ஸ் இன்டஸ்டிரீஸ் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளும், சேவைகளும் தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்து உறுதியாகப் போராடி வந்திருக்கிறோம். தனியார் மயத்தை எதிர்த்த தொழிலாளர்கள் மற்றும் அமைப்புக்களுடைய போராட்டங்களை நாங்கள் எப்போதுமே ஆதரித்து வந்துள்ளோம். நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தின் தொழிலாளர்கள் தங்களுடைய வீரமான ஒன்றுபட்டப் போராட்டத்தின் மூலம் அதன் தனியார்மயத்தைத் தடுத்து நிறுத்தியிருப்பது போல தனியார்மயத்தை எதிர்த்த ஏர்போர்ட் அதாரிடி ஆப் இந்தியா தொழிலாளர்களின் போராட்டமும் வெற்றி பெறும்.

Pin It