முள்ளிவாய்க்காலில் ஈழ மக்களின் தேசிய விடுதலை ஆயுதப் போராட்டம் மாபெரும் இனப்படுகொலையுடன் மௌனிக்கச் செய்யப்பட்ட பின்னர், இலங்கை அரசு ஆதரவாளர்களின் கை ஓங்கி இருக்கிறது. இவர்கள் பெரும்பாலும் தங்களை இலங்கை அரசின் ஆதரவாளர்கள் என்று வெளிப்படுத்தி செயல்படுவதில்லை. இலக்கியம், நவீனத்துவம், தலித்தியம், பௌத்தம் போன்ற தங்களுக்குத் தோதான ஏதோ ஒன்றில் ஒளிந்து கொண்டு இலங்கை அரசை ஆதரிக்கிறார்கள். வன்னி மக்கள் மீது கொடூரமான போர் கட்டவிழ்த்து விடப்பட்ட போது அந்தப் போருக்கு எதிராகவோ அங்கு கொன்று குவிக்கப்படும் மக்களுக்கு எதிராகவோ ஒரு வார்த்தை கூடப் பேசாத இவர்கள், வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவு இனப்படுகொலை நடத்திய குற்றவாளிகளைத் தண்டிக்கக் கோரும் நிலையில் இவர்களோ இனப்படுகொலைக்கு புலிகளே காரணம் என்று செய்தி பரப்புகிறார்கள்.

இப்போது மட்டுமல்ல எப்போதுமே இவர்கள் ஈழ விடுதலைக்கோ, ஈழ மக்களுக்கோ எதிரானவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ரத்தச் சகதியில் மிதந்து கொண்டிருக்க, முருகபூபதி என்பவர் தன் இலக்கிய அரிப்பை சொரிந்து கொள்ள கொழும்பில் நடத்துவதுதான் சர்வதேச எழுத்தாளர் மாநாடு. இது ஈழத் தமிழ சர்வதேச எழுத்தாளர் மாநாடு அல்ல இலங்கையைப் பூர்வீகமாகக் கொள்ளாத இந்தியா, மலேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் வாழுகிற தமிழ் எழுத்தாளார்களையும் ஒருங்கிணைத்து கொழும்புவுக்கு அழைத்து நடத்தப்படுகிற மாநாடாம்.

தமிழகத்தில், புகலிடத்தில் உள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க உடனே இந்த மாநாட்டின் ஆதரவாளர்கள் தமிழகத்தில் உள்ள ஈழ விடுதலை ஆதரவாளர்களை பெரியண்ணன்கள் என்று தாக்கி எழுதத் துவங்கினர். அவர்கள் சொன்னது இதுதான் "தமிழக பெரியண்ணன்கள் எங்கள் மக்களை பலியாக்குகிறார்கள். அத்துமீறி எங்கள் பிரச்சனையில் தலையிட இவர்கள் யார்?". (மலையாளிகள் தமிழர்களை பாண்டி என்று இழிவு செய்வது போல இவர்களும் தமிழக மக்களை அவர்களின் ஏழ்மையை நக்கல் தொனியோடு எள்ளி நகையாடத் தயங்கவும் இல்லை.) ரயாகரன், தேசம் நெட் போன்ற இணையதளங்கள் பெரியண்ணன் என்ற குற்றச்சாட்டை துவக்கி வைக்க ஷோபாசக்தி, த.அகிலன், மயூரன் போன்றோர் இதைப் பெரும் கொண்டாட்டமாக வெளியிட்டார்கள். ஒரு பக்கம் தமிழக மக்களுக்கும், ஈழ விடுதலை ஆதர்வாளர்களுக்கும் ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட மக்களுக்குமிடையிலான மோதலை உருவாக்குவதுதான் இவர்களின் நோக்கமே. ஆனால் இன்றைக்கு தமிழக மக்களையும் ஈழ விடுதலை ஆதர்வாளர்களையும் பெரியண்ணன்கள் என்று எவர் எல்லாம் சொல்கிறார்களோ அவர்கள்தான் பெரியண்ணன் பூமியில் புத்தகம் வெளியிட்டார்கள். பெரியண்ணன் பூமியில் உள்ள ஊடகங்களின் பேட்டி, சிறுகதை, கட்டுரை வருவதில் ஆர்வம் காட்டினார்கள். வருடத்திற்கொரு முறை இங்குள்ள ஊடகங்களில் பேட்டி வருவதற்கு ஏங்கி, அதை நண்பர்கள் மூலம் சாதித்து, தங்களை ஹீரோக்களாகக் காட்டிக் கொண்டவர்களுக்கு இப்போது பெரியண்ணன்களாக தெரிவது ஏன்? 

இன்று பெரியண்ணன்கள் என்று தமிழக மக்கள், ஈழ ஆதரவாளர்கள் மீது விஷம் கக்கும் ஷோபாசக்தி, இலங்கை அரசு ஆதரவு என்.ஜீ.ஓ. SLDF-ன் ராகவன் ஆகியோர் மாநாட்டை வரவேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். SLDF அமைப்பிற்கும் தனக்கும் எவ்வித தொடர்புகளுமில்லை என்று சொல்லும் ஷோபாசக்தி அவரோடு சேர்ந்து எழுத்தாளர் மாநாட்டை ஆதரித்து அறிக்கை மட்டும் வெளியிடுவாராம். சரி கிடக்கட்டும் அந்த அறிக்கையில்,

// இன்று இலங்கையில் ஊடகச் சுதந்திரம் அரசால் கடுமையாக அச்சுறுத்தலிற்கு உள்ளாகியிருக்கும் நிலையில் இவ்வாறான ஒரு மாநாடு தேவையா என எழுப்பப்படும் எதிர்ப்புகளையும் நாம் நிராகரிக்கிறோம். இந்த அச்சுறுத்தல் சூழலுக்குள்ளும் அதை எதிர்கொண்டு மாநாடு நடத்தப்படுவதையும் குழு நிலை மோதல்களிற்கு அப்பால் அரசியல் உண்மைகளைப் பேசுவதற்கு மாநாட்டில் தடையில்லை என அறிவித்திருக்கும் மாநாட்டு அமைப்பாளர்களின் நிலைப்பாட்டையும் வரவேற்கிறோம். // என்கிறது ஆக வன்னி மக்களின் இனப்படுகொலை பற்றி யாராவாது பேசினால் அது குழு நிலை மோதலாக்கப்படும் என்பதை வெளிப்படையாகவே அறிவிக்கிறார் ஷோபாசக்தி. எப்படி இங்குள்ளவர்களை புலி ஆதர‌வாளர்கள் என்று முத்திரை குத்துகிறாரோ அப்படி இனக்கொலை பற்றி பேசுகிறவர்களுக்கும் புலி முத்திரை. ஆக முருகபூபதி அரசியல் பேச அனுமதித்திருப்பதாகவும் அதைத் தான் வரவேற்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடுகிறார். ஆனால் சில தினங்களுக்கு முன்பு அகிலன், மயூரன் போன்ற இலங்கை அரசின் ஆதரவாளர்கள் தங்களது இணையதளத்தில் வெளியிட்ட முருகபூபதியின் நேர்காணலில் அவர் இப்படிச் சொல்கிறார்.

// 17. இந்த ஆய்வரங்கங்களில் பேசப்படுகின்ற விசயங்களிற்கு தணிக்கை இருக்கிறதா?

நிச்சயமாகத் தணிக்கை இருக்கிறது அதாவது எந்த அரசியல் விடயங்களும் அதற்குள் வரக்கூடாது//

ஆக ஒடுக்கப்பட்டுள்ள மக்கள் தங்களின் உரிமைகளைப் பேச அனுமதி மறுக்கிற ஒரு மாநாட்டை அரசு ஆதரவு மாநாடு என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது? இன்றைய சூழலில் இலங்கை அதன் உச்சக்கட்ட பாசிச வலையமைப்பைக் கொண்டிருக்கிறது. இராணுவ நிழலில் வாழும் தமிழ் மக்கள் எதையும் எதிர்க்கவோ, தங்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் நிலையிலோ இல்லை. ஒரு வேளை இலங்கை அரசின் ஆதரவாளர்கள் இனப்படுகொலை ஆதரவு மாநாடு ஒன்றை நடத்தினால் கூட தமிழ் மக்கள் அதற்கு எதிராகப் பேசும் வலுவற்றவர்களாக உள்ளனர். இலங்கையில் அரசுக்கு எதிராகப் போராடுவதே சிங்களர்கள் தான், தமிழ் மக்கள் அல்ல எனும்போது, சர்வதேச எழுத்தாளர்கள் மாநாடு என்னும் தோற்றத்தில் முருகபூபதி நடத்தும் மாநாட்டை தமிழ் மக்கள் எப்படி எதிர்ப்பார்கள்? மக்கள் முடமாக்கப்பட்டு, உருவாகியுள்ள எதிர்ப்பற்ற நிலையையே தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டுள்ள இலங்கை அரசு ஆதரவாளர்கள் இப்போது மாநாட்டுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அரசியல் பேச முடியாத‌, தமிழ் மக்களின் சிவில் உரிமைகளைக் கூட பேச முடியாத, ஒரு மாநாட்டை கொழும்பில் நடத்தும்போதே அது தன்னியல்பில் அரசு சார்பானதாகவோ, அரசால் எதிர்ப்பதற்கு ஏதுமற்ற ஒன்றாக மாறிவிடுகிற நிலையில் சர்வதேச எழுத்தாளர் மாநாடு என்ற அளவுகோலின் படி தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்களும் புகலிடத்தில் உள்ள எழுத்தாளர்களும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.

இவர்களோ இலங்கையில் எழுத்தாளர் மாநாடு நடத்துவது எமது பிறப்புரிமை என்கிறார்கள். அது உங்களின் பிறப்புரிமை இல்லை என்று யார் சொன்னார்கள்? எழுத்தாளர் மாநாடு மட்டுமல்ல இனக்கொலை ஆதரவு மாநாடு நடத்துவது கூட உங்களின் பிறப்புரிமைதான். ஆனால் அதை இலங்கை எழுத்தாளர் மாநாடு என்றோ, சர்வதேச இலங்கை எழுத்தாளர் மாநாடு என்றோ நடத்துங்கள். அதை விட்டுவிட்டு ஏதோ ஒட்டு மொத்த உலகத் தமிழ் எழுத்தாளர்களும் இந்த மாநாட்டை ஆதரிக்கிறார்கள் என்ற தோற்றத்தை உருவாக்கி, முருகபூபதியின் அரிப்புக்கு நாங்கள் நகம் வளர்த்துக் கொடுக்க முடியாது.

இந்த மாநாட்டை நிராகரிப்பது தொடர்பாக விடுபட்ட பல எழுத்தாளர்களும் தங்களின் மன அவதியை வெளிப்படுத்துகிறார்கள். முரண்பாடுகள் இருப்பினும் இலங்கை அரசு பயங்கரவாத எதிர்ப்பு என்னும் புள்ளியில் நாம் கைகோர்த்திருக்கிறோம் உறுதியாக. வன்னி மக்கள் தங்களின் வாழ்க்கைக்காக போராடும் நிலையில், இந்த 'கலை கலைக்காகவே' என்னும் மக்கள் விரோத எழுத்தாளர் மாநாடு அவசியமற்ற ஒன்று. இதை எதிர்த்துக் கேட்கும் நிலையில் ஈழ மக்கள் மட்டுமல்ல இந்த மாநாட்டை விரும்பாத ஈழத் தமிழ் எழுத்தாளர்களும் இல்லை.

இலங்கை அரசுக்கு எதிர்ப்பு என்கிற வகையில் ஒரு திரட்சியாக உருவாகும் சாத்தியம் கொண்ட புகலிடச் சூழலும் குழம்பிப் போயுள்ள நிலையில் தமிழகம் மட்டுமே காத்திரமான எதிர்ப்பை இலங்கை அரசுக்கு தெரிவித்து வருகிறது. ஆக மொத்தம் இருக்கிற ஒரே எதிர்ப்பலையை இல்லாமல் ஆக்குவதும் குழப்பம் விளைவிப்பதும்தான் இந்த இலங்கை அரசு ஆதரவாளர்களின் நோக்கம். பெரும்பலான ஈழ மக்களும், புலம்பெயர்ந்த ஈழ மக்களும் தமிழக ஈழ விடுதலை ஆதரவாளர்களை ஆதரிக்கும் நிலையில், எண்ணிக்கையில் வெகு சிலராக உள்ள இந்த இலங்கை அரசு ஆதரவுச் சக்திகளிடம் நாம் ஏமாறாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் இவர்கள் எப்போதும் வெளிப்படையாகப் பேசி வருவதில்லை. தலித், சிறுபான்மை ஆதரவு, விளிம்பு, மையம் என்று பேசி எதிர்ப்பியக்கங்களை நசுக்குவதுதான் இவர்களின் வேலை. எச்சரிக்கை!!

Pin It