டிரம்ப், அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பதற்கு சீனாதான் காரணம் என்று குற்றம் சாட்டி சீனப் பொருள்களுக்கான காப்பு வரியை அதிகரித்தார். ஆனால், இது அமெரிக்காவுக்கோ டாலருக்கோ மட்டுமே உள்ள பிரத்யேகப் பிரச்சினை இல்லை, அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பிற்கு காரணம், அமெரிக்க உற்பத்தியில் ஏற்பட்ட சரிவோ அல்லது சீனா நாணயத்தை மதிப்பிழக்க செய்வதோ மட்டும் அல்ல.
ஒரே நேரத்தில் ஒரு நாட்டின் நாணயம் உலகப் பணமாகவும் இருக்கும் போது அந்நாணயத்திற்கான தேவை சர்வதேச அளவில் அதிகரிப்பதால் அந்நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை நாளடைவில் அதிகமாகும் போக்கு ஏற்படுகிறது. ஆகவே, அது டாலராக இருந்தாலும், யூரோவாக இருந்தாலும், வர்த்தகப் பற்றாக்குறையை அதிகப்படுத்தவே செய்யும்.
வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்காக உலகப் பணத்துக்கான (டாலருக்கான) தேவையைப் பூர்த்தி செய்யா விடில் அது உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும், டாலருக்கான சர்வதேசத் தேவையைப் பூர்த்தி செய்யும் விதத்தில் டாலரின் வழங்கலை அதிகரித்துக் கொண்டே இருந்தால், டாலரின் மதிப்பும், அதன் மீதான நம்பகத் தன்மையும் குறைந்து தங்கம் மற்றும் பிற நாணயங்களுக்கு மாறும் போக்கு ஏற்படும்.
இவ்வாறு ஒரு நாணயம் ஒரே நேரத்தில் உள்நாட்டு நோக்கங்களுக்காகவும், சர்வதேச நோக்கங்களுக்காகவும் செயல்படும் போது பொருளாதார முரண்பாடுகள் ஏற்படுகின்றன என்று ராபர்ட் டிரிஃபின் என்ற பொருளாதார அறிஞர் இப்பிரச்சினையை விளக்கியுள்ளார். இது குறித்த அவரது கருத்துக்கள் டிரிஃபின் பிரச்சினை (Triffin’s dilemma) என்றே அழைக்கப்படுகின்றன. இப்பிரச்சினையினால் அமெரிக்க டாலரை உலகப் பணமாக்கும் பிரட்டன்வுட்ஸ் ஒப்பந்தம் நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாது என்றும் டிரிஃபின் தெரிவித்ததுடன், நாடுகடந்த நாணய அமைப்பை ஏற்படுத்த வேண்டும் எனவும் முன்மொழிந்துள்ளார்.
இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம், பிரிட்டனின் ஸ்டெர்லிங் உலகப் பணமாக இருக்கும் போதும் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்திருக்குமல்லவா? அப்பொழுது பிரிட்டன் எப்படி அந்தப் பிரச்சினையைச் சமாளித்தது? பிரிட்டிஷ் நாணயம் உலகப் பணமாக இருந்த போது பிரிட்டனின் வர்த்தகப் பற்றாக்குறையால், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்தது என்ற போதும் அதை மூலதனக் கணக்கு உபரி மூலம் சமன் செய்யப்பட்டது.
இந்தியா போன்ற காலனி நாடுகளிடம் சுரண்டப்பட்ட செல்வத்தை மற்ற நாடுகளுக்கு மூலதனமாக ஏற்றுமதி செய்து சரிசெய்யப்பட்டது. அப்பொழுது பகிரங்கமாக அடித்த கொள்ளைகளை இப்பொழுது அடிக்க முடியாது, பிரிட்டனைப் போல் அமெரிக்காவுக்கு நேரடியாகக் காலனிகள் இல்லை, மறைமுகமான காலனிகளே உள்ளன. எனவே உலகப் பணம் என்ற தகுநிலையில் நீடிக்கும் வரை அமெரிக்கா அதிக வர்த்தகப் பற்றாக்குறையுடனே இருக்கும்.
உள்நாட்டு உற்பத்தியைப் பழைய அளவிற்குப் பெருக்காத வரை, தற்போதைய நிலையில் உலகத் தகுநிலையை இழந்தாலும், அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை மேலும் மேலும் அதிகரிக்கவே செய்யும். பெட்ரோ டாலர் மறுசுழற்சி என்பதும் வெளிநாடுகளிலிருந்து கடன் பெறுவதன் மூலம் வர்த்தகப் பற்றாக்குறையை சரிசெய்வதற்கான, மூலதனக் கணக்கு உபரியை பெறுவதற்கான ஒரு வழிமுறையேயாகும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் புதிய பொருளாதார அமைப்பை ஏற்படுத்துவதற்கான பிரெட்டன்வுட்ஸ் மாநாட்டில் பிரிட்டன் தரப்பில் பொருளாதார அறிஞர் ஜான் மொனட் கீன்ஸ் சர்வதேசப் பரிவர்த்தனைகளுக்கு 'பேங்கர்' என்ற உலகளாவிய இருப்பு நாணயத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று முன்மொழிந்தார்.
பொருளாதார மேலாதிக்கத்தை பிரிட்டன் முற்றிலும் இழக்காதவாறும், அமெரிக்காவின் கை முற்றிலும் ஓங்காதவாறும் ஒரு சமநிலை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது அவரது திட்டம். அமெரிக்கா சார்பிலான திட்டத்தை அமெரிக்கக் கருவூலச் செயலாளர் டெக்ஸ்டர் வொய்ட் முன்வைத்தார்.
சர்வதேச வர்த்தகத்தில் உபரியைக் கொண்டிருந்தது அமெரிக்கா. பேங்கர் திட்டம் எந்த நாடும் வர்த்தக உபரியுடன் தொடர்ந்து நீடிப்பதை மட்டுப்படுத்தும் வகையில் அமைந்ததாலும், அது செயல்படுத்தப்பட்டால் அமெரிக்கா பொருளாதார மேலாதிக்கத்தை அடைய இயலாது என்பதாலும் .அமெரிக்கா தரப்பில் பேங்கர் முன்மொழிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு டாலரை உலகப் பணமாக்கி வெற்றியை தனதாக்கிக் கொண்டது அமெரிக்கா.
பேங்கர் திட்டம்: பேங்கர் திட்டத்தின் படி அனைத்து சர்வதேசப் பரிவர்த்தனைகளும் சர்வதேசத் தீர்வு ஒன்றியம் மூலம் நடத்த வேண்டும். தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட அலகான பேங்கரை மட்டுமே சர்வதேசப் பரிவர்த்தனைக்காக உபயோகிக்க வேண்டும். பேங்கர் ஒரு சர்வதேச நாணயம் அல்ல.
சர்வதேசப் பரிவர்த்தனைகளின் சுற்றோட்டத்தைக் கண்காணிக்கப் பயன்படும் ஒரு கணக்கீட்டு அலகு. தங்கத்தைக் கொண்டு பேங்கரை வாங்க முடியும், ஆனால் பேங்கரைக் கொண்டு தங்கத்தை வாங்க முடியாது. தனிநபர்கள் பேங்கரைச் சேமிக்கவோ அதில் வர்த்தகம் செய்யவோ கூடாது. ஒரு உறுப்பு நாடு ஏற்றுமதி செய்யும் போது அதன் சர்வதேசக் கணக்கில் பேங்கர் வரவு வைக்கப்படும், அந்நாடு இறக்குமதி செய்யும் போது அதன் கணக்கிலிருந்து பேங்கர் கழிக்கப்படும் அல்லது கடனாகப் பதிவு செய்யப்படும். அதற்கான வட்டியை அந்த நாடு கட்ட வேண்டும்.
இந்த அமைப்பில் ஒரு நாடு கூடுதலான வர்த்தக உபரியை நெடுங்காலம் வைத்திருக்க முடியாது, அதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு நாடு தன் கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டிய பேங்கரின் அளவிற்கும் வரம்புகள் விதிக்கப்படும், உலக வர்த்தகத்தில் ஒவ்வொரு நாடும் கொண்டுள்ள பங்கின் அடிப்படையில் அதன் வரம்புகள் நிர்ணயிக்கப்படும். ஏற்றுமதியை விட அதிகமான இறக்குமதியைக் கொண்டிருக்குமானால் அது கூடுதலாகப் பெற வேண்டிய பேங்கர் கடனுக்கு வட்டி செலுத்த வேண்டும், அது போல் இறக்குமதியை விட அதிகமான ஏற்றுமதியுடன் கணக்கில் உபரி பேங்கரை வைத்திருக்கும் நாடுகளும் அதற்கு வட்டி / கட்டணம் செலுத்த வேண்டும்.
அதிகப்படியான உபரி அல்லது பற்றாக்குறை உருவாவதைத் தடுத்து வர்த்தகச் சமநிலையை ஊக்குவிப்பதற்கான அமைப்பு முறையாக அது கருதப்பட்டது. வர்த்தக உபரி கொண்ட நாடுகளின் நாணயத்தின் மதிப்பு ஏற்றம் பெறும், அதனால் ஏற்றுமதிக்காகப் போட்டியிடும் திறன் குறையும், அதே போல் வர்த்தகப் பற்றாக்குறை கொண்ட நாடுகளின் நாணயம் மதிப்பிழப்பதால், ஏற்றுமதிக்கான போட்டித் திறனை அதிகரித்து ஏற்றுமதியை ஊக்குவிக்கும், இதனால் வர்த்தக சமநிலை நிலைநிறுத்தப்படும் என்ற அடிப்படையில் அமைந்தது. (இவ்வமைப்பின் குறைபாடுகள் குறித்து இந்தத் தொடரின் அடுத்த பகுதியில் காண்போம்).
எந்த ஒரு நாட்டின் நாணயமும் உலகப் பணமாகச் செயல்படுவதைத் தவிர்க்கும் விதமாகவும், மேலாதிக்கத்தைப் பெறாதவாறும் உருவாக்கப்பட்டதால் அமெரிக்காவின் திட்டத்தைக் காட்டிலும் பேங்கர் திட்டம் ஜனநாயகத் தன்மையுடையதாய் இருந்தது அதன் சிறப்பம்சமாகும். அதனால்தான் அது ஏற்றுக்கொள்ளப்படவும் இல்லை.
கீன்ஸின் பேங்கர் முன்மொழிவுக்கு அடிப்படையான சர்வதேசத் தீர்வு ஒன்றியம் என்ற கருத்தாக்கம் அவருடன் இருந்த ஷூமேக்கர் என்ற பொருளாதாரவியலாளரின் “பலதரப்புத் தீர்வு” என்ற ஆய்வுக் கட்டுரையின் அடிப்படையிலே அமைந்தது. ஆனால் கீன்ஸின் அறிக்கையில் ஷூமேக்கரின் பெயர் குறிப்பிடப்பட்டதாகத் தெரியவில்லை.
1943ஆம் ஆண்டு வசந்த காலத்தில் எகனாமிகா ஏட்டில் ஷூமேக்கரின் "பலதரப்புத் தீர்வு" என்ற ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்ட போது, அது கீன்ஸுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதாகவும் அதன் தனி வெளியீட்டிற்கு ஏற்பாடு செய்வதற்குப் பதிலாக, அதில் உள்ளதை அப்படியே கீன்ஸ் தனது சர்வதேசத் தீர்வு ஒன்றியத்திற்கான திட்டத்தில் இணைத்துள்ளதாகவும் ஷூமேக்கருக்கான இரங்கல் கூற்றில் அவரது நண்பர் லியோபோல்ட் கோர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டனின் மேலாதிக்கம் நீடித்து ஸ்டெர்லிங் உலகப் பணமாக தொடர்ந்திருந்தால், கீன்ஸ் இப்படிப்பட்ட முன்னெடுப்பைச் செய்திருப்பாரா என்பது கேள்விக்குறிதான், கீனிசர்கள் கோபித்துக் கொள்ளக் கூடும். ஸ்டெர்லிங் உலகப் பணமாக இருக்கும் போது நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஏற்படும் சூழல் இருந்ததுதானே, அப்பொழுது காலனிகளிடம் கொள்ளையடிக்க உடந்தையாக இருந்து விட்டு, தன் நாட்டு நாணயம் உலகப் பணம் என்ற தகுநிலையை இழந்த பின் இத்திட்டத்தை முன்வைப்பது, பாரபட்சமான அணுகுமுறையாகும். தனக்கென்றால் ஒரு நீதி, பிறருக்கென்றால் மற்றொரு நீதி என்பது போல்தான் உள்ளது.
சிறப்பு வரைவு உரிமைகள் (XDR):
சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) 1969ஆம் ஆண்டில் ஒரு கூடுதல் சர்வதேசச் செலவாணியாக சிறப்பு வரைவு உரிமைகளை (எஸ்.டி.ஆர்) வெளியிட்டது. சிறப்பு வரைவு உரிமைகள் பேங்கரைப் போன்ற ஒரு சர்வதேசக் கணக்கீட்டு அலகாகும்.
தங்கம், டாலருக்குக் கூடுதலாக சர்வதேசப் பணப் புழக்கத்தை அதிகரிப்பதற்காக உலகளாவிய ஒரு துணைச் சர்வதேசச் செலவாணியாக அது உருவாக்கப்பட்டது. முதலில் தங்கத்துடன் இணைக்கப்பட்ட சிறப்பு வரைவு உரிமையின் மதிப்பு தற்போது ஒரு குறிப்பிட்ட விகிதாசாரத்தில் அமைந்த அமெரிக்க டாலர், யூரோ, ஜப்பானிய யென், பிரிட்டிஷ் பவுண்டு மற்றும் சீன ரென்மின்பி ஆகிய ஐந்து நாணயங்களின் தொகுப்பால் தீர்மானிக்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்களாக உள்ள நாடுகளுக்குச் சிறப்பு வரைவு உரிமைகள் ஒதுக்கப்படுகின்றன. உறுப்பு நாடுகளுக்கான சிறப்பு வரைவு உரிமைகளின் ஒதுக்கீடுகள் உலகப் பொருளாதாரத்தில் அவை கொண்டுள்ள ஒப்பீட்டுப் பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டவை.
உறுப்பு நாடுகள் அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் முடிவுகளைத் தீர்மானிப்பதில் உறுப்பு நாடுகள் சமமான வாக்குரிமைகளைக் கொண்டிருக்கவில்லை. உறுப்பு நாட்டின் வாக்குரிமையின் மதிப்பும் அவை செலுத்தும் கட்டணத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறப்பு வரைவு உரிமைகளின் ஒதுக்கீடுகளில் மாற்றம் தேவையா என்று மறுமதிப்பீடு செய்யப்படும்.
அமெரிக்கா 17.46% வாக்குப் பங்கைப் பெற்று வீட்டோ உரிமையுடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 32% வாக்குப் பங்குகளை கொண்டுள்ளன. அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் மொத்த வாக்கு மதிப்பு 58%. இந்தியாவின் வாக்குப் பங்கு 2.76%, ஜப்பானின் வாக்குப் பங்கு 6.48%, சீனாவின் வாக்குப் பங்கு 6.41%. ஜனநாயகமற்ற சர்வதேச நாணய நிதியத்தில் ஒரு சீர்திருத்தத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால் 85% அறுதிப் பெரும்பான்மை பெற வேண்டும் என்பதால் அது மேற்கத்திய நாடுகளின் ஆதிக்க அமைப்பாகவே செயல்பட்டு வருகிறது. வளரும் நாடுகளுக்கான பிரதிநிதித்துவம் இல்லை என்பதால் இவ்வமைப்பின் மூலம் ஜனநாயக ரீதியான முடிவுகளை எடுப்பது சாத்தியமில்லை.
ஒரு உறுப்பு நாடு தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவிற்குத் தன் கணக்கில் சிறப்பு வரைவு உரிமைகள் இருப்பில் வைத்திருக்குமானால் அந்நாடு வட்டி செலுத்த வேண்டியதில்லை. இருப்பின் அளவு ஒதுக்கீட்டை விடக் குறைந்தால் அந்நாடு வட்டி செலுத்த வேண்டும், மாறாக இருப்பின் அளவு ஒதுக்கீட்டை விட அதிகரித்தால் சர்வதேச நாணய நிதியம் வட்டி செலுத்தும். ஒரு உறுப்பு நாடு அதற்கு ஒதுக்கப்பட்டதை விட இரு மடங்கு மட்டுமே சிறப்பு வரைவு உரிமைகளைக் கடனாகப் பெற முடியும்.
சர்வதேச நாணய நிதியத்தின் சிறப்பு வரைவு உரிமைகளை டாலரின் இடத்தில் இருப்பு நாணயமாக்க வேண்டும் என்ற சீர்திருத்தமும் உருவாக்கப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்தில் 8ஆவது திருத்தப்பட்ட சட்டமானது சிறப்பு வரைவு உரிமைகளை சர்வதேச நாணய அமைப்பின் முதன்மை இருப்பு நாணயமாக உருவாக்க வேண்டும் என்கிறது.
டாலரிலிருந்து சிறப்பு வரைவு உரிமைகளுக்கான மாற்றத்தை சுமுகமாக ஏற்படுத்த உறுப்பு நாடுகள் மாற்றீட்டுக் கணக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டமும் தலைமைப் பொருளாதார அறிஞர் ஜேக்கியுஸ் பொலக் அவர்களால் பரிந்துரைக்கப்பட்டது. சர்வதேச நாணய நிதியமே சர்வதேசப் பண உருவாக்கத்தையும் பரிவர்த்தனையையும் நிர்வகிக்கும் அமைப்பாக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
அத்திட்டத்தின்படி மாற்றீட்டுக் கணக்கு சர்வதேச நாணய நிதியத்தால் நிர்வகிக்கப்படும். மாற்றீட்டுக் கணக்கில் உறுப்பு நாடுகளிடமிருந்து டாலரில் அல்லது பிற அந்நிய செலவாணிகளில் வைப்புத் தொகை ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கு நிகரான சிறப்பு வரைவு உரிமைகள் வரவு வைக்கப்படும். நாடுகள் டாலரை விட்டுப் பெருமளவில் வெளியேறினால் டாலரின் மதிப்பு கடுமையாக பாதிக்கப்படும்.
டாலரிலிருந்து மாறும் போது நாணயப் பரிமாற்ற மதிப்பில் ஏற்படும் வீழ்ச்சியையும் அழுத்தங்களையும் தவிர்ப்பதற்காகவும், டாலரின் சமநிலையைக் காப்பதற்காகவுமே இத்தகைய திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் திடீர் மாற்றத்தினால் ஏற்படும் நெருக்கடிகள் தவிர்க்கப்பட்டு சீராகச் செயல்படும் சர்வதேச நாணய அமைப்பு ஒழுங்குமுறை உருவாக்கப்படும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.
பொலக்கின் மாற்றீட்டுக் கணக்குப் பரிந்துரை பரவலான ஆதரவு பெற்றிருந்த போதும், அமெரிக்கா தன் மேலாதிக்கத்தைக் கைவிட விரும்பாததாலும், இத்திட்டத்தின் நிதிச் சேவை, மாற்றீட்டுச் செலவினால் அமெரிக்காவுக்கு இழப்பு ஏற்படும் எனக் கருதி அந்நாடு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததாலும் இத்திட்டம் பின்னுக்கு தள்ளப்பட்டது.
நிதி நெருக்கடியை அடுத்து, 2009 மார்ச்சில் சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்தம் என்ற தலைப்பில் ஆற்றிய உரையில், சீன மக்கள் வங்கியின் ஆளுநர் ஜோ சியாச்சுவான், அமெரிக்க டாலரின் இருப்பு நாணயத் தகுநிலையே உலகளாவிய சேமிப்புகளிலும், முதலீடுகளிலும் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி நெருக்கடிக்கு வழிவகுத்த காரணியாக இருந்தது என வெளிப்படையாகக் குறிப்பிட்டார். பேங்கர் திட்டத்தை அவர் பரிந்துரைத்தார்.
நிதி நெருக்கடிக்குத் தீர்வாக சர்வதேச நாணய நிதியம் சிறப்பு வரைவு உரிமைகளை உலகளாவிய இருப்பு நாணயமாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். ஜி-20 நாடுகளின் கூட்டு சந்திப்பிலும் இது குறித்து விவாதிக்கப்பட்டது. சர்வதேச நாணயச் சீர்திருத்தம் குறித்த ஒரு முன்வரைவை 2008இல் பொருளாதார நிபுணர்கள் கிரீன்வால்ட், புரூஸ், ஜோசப் ஸ்டிகிலிட்ஸ் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
2009 மார்ச்சில், அமெரிக்கக் கருவூலத்தின் செயலாளர், திமோதி கீத்னர், சர்வதேச நாணய நிதியத்தின் உலகளாவிய நாணயத்தை நோக்கி நகர்வதற்கான யோசனையைத் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்வதாகக் குறிப்பிட்டு அங்குள்ளவர்களை வியப்பில் ஆழ்த்தினார். 2010இல் பீட்டர் பி கென்னென் என்ற பொருளாதார அறிஞர் மாற்றீட்டுக் கணக்கு திட்டம் குறித்து மேற்கொண்ட ஆய்வில் டாலரிலிருந்து, படிப்படியாக மாறுவதற்கு 2, 3 மாற்றீட்டு சுற்றுகள் தேவைப்படலாம், பத்தாண்டுகளில் அதை செய்யமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான செலவு ஒருவேளை அதிகமானாலும் கூட பகிர்வு முறையின் மூலமோ, இதற்கான ஆண்டுக் கட்டணம் வசூலிப்பதன் மூலமோ செலவை பெரிதும் குறைக்க முடியும். டாலரிலிருந்து திடீரென மாறுவது அதனைக் கணிசமாக மதிப்பிழக்கச் செய்யும் என்பதால், ஜோ சியாச்சுவான் அவர்களின் ஆலோசனையைக் கருத்தில் கொண்டு மாற்றீட்டுக் கணக்குத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 2010இல் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை ஒன்றிலும் சிறப்பு வரைவு உரிமைகளை இருப்பு நாணயமாக்க வேண்டும் அல்லது பேங்கர் போன்ற தேசங்கடந்த நாணயத்தை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது வளரும் நாடுகள் தம் நாணயப் பரிவர்த்தனை மதிப்பைப் பாதுகாக்க அதிகளவில் அந்நியச் செலவாணி இருப்புகளை, குறிப்பாக டாலர் இருப்புகளை வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இது தேவையில்லாத கூடுதல் நிதிச் சுமையாக அந்நாடுகளை அழுத்துகிறது. டாலருக்கெதிரான நாணயங்களின் மதிப்பு இழப்பால் பெற்ற கடனிலிருந்து மீள முடியாதவாறு கடன் சுமையும் அதிகரிக்கிறது.
பேங்கர் போன்ற ஒரு நாடுகடந்த நாணயத்தை உலகப் பணமாக்கினால் இப்பிரச்சினைகளைக் குறைக்க முடியும். டாலரை வெளியிடுவதால் பெறும் இலாபம் முழுவதும் அமெரிக்காவிற்கே செல்கிறது. நாடுகடந்த நாணயம் உருவானால் அதன் பலனை அனைத்து நாடுகளும் பகிர்ந்து கொள்ள முடியும்.
ஆனால் ஜனநாயகமற்ற சர்வதேச நாணய நிதிய அமைப்பின் மூலமே அப்படிப்பட்ட மாற்றத்தைக் கொண்டுவர முடியுமா? நாடுகளிடையே சமமான வாக்குரிமை இல்லாத போது எந்த மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்றாலும் 85% ஒப்புதல் பெற வேண்டும் என்ற விதிமுறை சமூகநீதி அடிப்படையிலான முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதற்கான கருவியாகவே செயல்படுகிறது.
சர்வதேச நாணய நிதியம் உருவாகி 76 ஆண்டுகள் ஆகி விட்டன. நிதிப் பற்றாக்குறை ஏற்படும் நாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியம் டாலரில்தான் கடன் வழங்குகிறது. கடனுக்கான நிபந்தனைகளாக நவீன தாராளமய சிக்கன நடவடிக்கைகளை அந்நாடுகளின் மீது திணித்து மீளாக் கடனிலைக்குத் தள்ளுகிறது. நவீன தாராளமய ஒடுக்குமுறை அமைப்பாக உலக நாடுகளிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்ததிலும், வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை சீரழித்ததிலும் முதன்மைப் பங்காளராகச் செயல்பட்டு வரும் சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் நல்மாற்றம் ஏற்படும் என நம்பி ஏமாந்து போகலாகுமா?
2010இல் சிறப்பு வரைவு உரிமைகளின் ஒதுக்கீடுகளை அதிகரிப்பதற்கான ஒப்புதல் பெறப்பட்ட போதும், அமெரிக்க காங்கிரஸில் 5 ஆண்டுகள் கழித்து 2015இலே தான் அதற்கான ஒப்புதல் கிடைத்தது. எனும் போது டாலருக்கு மாற்றாக வேறு நாணயத்தை உருவாக்குவதற்கு, அமெரிக்கா நல்லெண்ண அடிப்படையில் ஒப்புதல் அளிக்கும் என முட்டாள்தனமாகக் காத்திருக்க முடியுமா? 2020 ஏப்ரலில் கோவிட்-19 பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடுகளுக்கு நிவாரணங்கள் அளிக்கும் விதமாக வழக்கத்திற்கு மாறாக சர்வதேச நாணய நிதியமே 50,000 கோடி டாலர் மதிப்பிற்கு சிறப்பு வரைவு உரிமைகளை அதிகப்படுத்த வேண்டும் என்ற முன்மொழிவை ஏற்ற போதும், பரவலான ஆதரவு இருந்த போதும், அமெரிக்கா தன் வீட்டோ உரிமையால் அத்திட்டத்தைச் செயல்படுத்த விடாமல் தடுத்ததும் அதை இந்தியாவும் ஆதரித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கோவிட்-19க்கு பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மீண்டும் ஒரு பிரட்டன்வுட்ஸ் தருணத்தைச் சந்திப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான அமைப்பு மாற்றம் குறித்தோ, குறைந்தபட்சம் அமைப்பில் ஏற்படுத்த வேண்டிய சீர்திருத்தம் குறித்தோ அவர் எதுவும் கூறவில்லை.
சீனா அமெரிக்காவைக் காட்டிலும் பொருளாதார வல்லமை பெற்றுள்ளதாக சர்வதேச நாணய நிதியமே குறிப்பிட்டுள்ளது. அதனால் சீனா தனக்கான வாக்குரிமையை அதிகப்படுத்தவும் தலைமையை பெய்ஜிங்கிற்கு மாற்றவும் கோருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அதைச் செயல்படுத்தவும் 85% ஒப்புதல் பெற வேண்டும், அமெரிக்கக் காங்கிரஸிலும் ஒப்புதல் பெறவேண்டும்.
இந்த மாற்றத்தை உடனடியாக வர விடாமல் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் ஆகிய நாடுகள் தடுக்கலாம் அல்லது தள்ளிப் போடலாம். சீனா ஒரு மாற்றுத் திட்டத்தையும் முன்னெடுக்கலாம். 2018இல் வெளியான உலகப் பொருளாதாரம் குறித்த ஜெனிவா அறிக்கையில் இது குறித்த சாத்தியப்பாடு முன்னோக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை சீனாவே உலக அளவில் பொருளாதாரத் தலைமையை ஏற்றுக் கொண்டாலும் --- அது பிரிட்டன், அமெரிக்காவின் வழியில் செல்லாது என்றே வைத்துக் கொண்டாலும் கூட --- அதன் சர்வதேசப் பொறுப்பை எந்த அளவிற்கு ஜனநாயகப் பூர்வமாக செயல்படுத்தும் என்பதும் கேள்விக்குறியாகத்தான் உள்ளது. ஏனென்றால், உலகையே அரவணைக்க நீளும் நேயக் கரங்களுடைய சின்னஞ்சிறு கியூபாவின் அளவிற்கு, மாபெரும் சீனாவின் சர்வதேசியவாதம் பரந்து விரியக் காணவில்லையே!
(தொடரும்)
- சமந்தா