modi 350 copyஇனக்கொலைக்கு நீதி கிட்டும் வரை...

இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோதி இலங்கை செல்ல இருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

உள்நாட்டுப் போரில் நிகழ்ந்த இனக்கொலை, போர்க்குற்றங்கள், மானிட விரோதக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்துத் தற்சார்பான பன்னாட்டு விசாரணையா, இலங்கை அரசே நடத்துவதாகச் சொல்லும் உள்நாட்டு விசாரணையா எனும் விவாதத்தின் பின்னணியில் மோதியின் இலங்கைப் பயணத்துக்குத் திட்டமிடப்படுகிறது.

இனக்கொலைக்கு நீதி கிடைக்க விடாமல் மறுப்பதில் இராசபட்சே அரசுக்கும் சிறிசேனா அரசுக்கும் வேறுபாடில்லை. ஐநா மனித உரிமை மன்றத்தின் புலனாய்வுக்கு ஒத்துழைப்பு வழங்காமலே புலனாய்வு அறிக்கையைப் பிற்போடுமாறு இலங்கை கேட்டதும் அதற்கு மனித உரிமை மன்ற ஆணையர் இணங்கியதும் கண்டிக்கத்தக்கன.

இதில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? என்பதை இந்தியத் தலைமை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.

இலங்கையில் தொடர்ச்சியாக நடந்து வரும் இனக்கொலை குறித்து வடக்கு மாகாண சபை இயற்றியுள்ள ஒருமனதான தீர்மானத்தை இந்தியா ஏற்கிறதா இல்லையா என்பதையும் இந்தியத் தலைமை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.

வடக்கு மாகாண முதல்வர் மாண்புமிகு விக்னேஸ்வரன் கூறியிருப்பது போல் உண்மைகளைக் கண்டறியச் சொல்வது இனவாதம் ஆகாது. இந்நிலையில் உண்மைகளை விசாரித்தறிவதற்கே முட்டுக்கட்டை போடும் சிறிலங்கா அரசுக்கு முட்டுக் கொடுக்கத்தான் மோதியின் இலங்கைப் பயணம் உதவும்.

மோதி இலங்கை செல்லத்தான் வேண்டுமென்றால் முதலில் ஐநா மனித உரிமை மன்றப் புலனாய்வு அறிக்கையைத் திட்டமிட்டபடி வருகிற மார்ச்சு 25ஆம் நாள் வெளியிடுமாறு கேட்கட்டும். பன்னாட்டுப் புலனாய்வுக்கு ஒத்துழைப்பு வழங்கட்டும். வடக்கு மாகாண சபைத் தீர்மானத்தை அறிந்தேற்று இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரட்டும். இப்படி எதுவும் செய்யாமல் மோதி இலங்கை செல்வதென்றால் அதனால் தமிழர்களுக்கு எவ்வித நன்மையும் விளையாது. உறுதியாகத் தீமைதான் விளையும்.

உலகத் தமிழர்களின் ஒருமித்த எண்ணப்படியும், ஈழத் தமிழர்க்கு நீதி கிடைக்கச் செய்வதற்காகத் தமிழகச் சட்டப் பேரவை இயற்றியுள்ள தீர்மானங்களின் படியும், தமிழீழ மக்களுக்கு நீதியும் அரசியல் தீர்வும் கிட்டும் வரை இலங்கையைப் புறக்கணிப்போம் என்ற முழக்கத்தில் உறுதியாக இருக்கும் படி தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோதி இலங்கை செல்லக் கூடாது, கூடவே கூடாது!

Pin It