15.3.2011 செவ்வாய் கிழமை மாலை 6 மணிக்கு திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அரிசி கடை வீதியில், ஊத்துக்குளி அருந்ததியர் மக்கள் பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பாக, இரயில் தண்டவாளத்தில் கல் வைத்ததாக பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட தோழர்கள் காந்தி, பரமேஸ்வரன் ஆகியோர் மீது போடப்பட்டுள்ள தேசிய பாதுகாப்புச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியத்திற்குட்பட்ட அருந்ததியர் பகுதிகளில் காவல்துறை நடத்திய அத்துமீறலை கண்டித்தும், கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. ஒடுக்கப்பட்ட விடுதலை முன்னணி கனல் தலைமை ஏற்றார். சமத்துவ முன்னணி பொதுச் செயலாளர் கார்க்கி, தமிழர் விடுதலை இயக்கம் ஒருங்கிணைப்பாளர் வெண் மணி, புரட்சிகர விடுதலை முன்னணி வள்ளுவராசன், ஆதித் தமிழர் விடுதலை முன்னணி மாநில அமைப்பாளர் கோவை இரவிக்குமார், மனித நேய மக்கள் கட்சி மாநில செயலாளர் கோவை செய்யது, கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர். தோழர்கள் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

 

அருந்ததியர் பகுதிகளில் அத்துமீறலை நடத்திய காவல்துறையினரை பணி இடை நீக்கம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஊத்துக்குளி அருந்ததியர் மக்கள் பாதுகாப்பு கூட்டி யக்கம் சார்பாக, அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக, முதற்கட்டமாக இரயில் நிறுத்தப் போராட்டமும், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களும் நடத்தப்படும் என கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்துள்ளார்.

 

காவல் துறையினர் அத்துமீறி நடந்து கொண்ட அருந்ததியினர் பகுதியான ஊத்துக்குளி அருகே உள்ள அனைப் பாளையம் கிராமத்திற்கு கழகத் தவைலர் 9.2.2011 அன்று காலை 9 மணிக்கு நேரடி யாக சென்று, பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரித்தார். உடன் திருப்பூர் மாவட்ட தலைவர் துரைசாமி, திருப்பூர் முகில்ராசு, பல்லடம் விசயன், கிளாகுளம் செந்தில் உட்பட பல தோழர்கள் சென்றனர். அன்று பிற்பகல் 2 மணிக்கு கோவை மத்திய சிறைக்குச் சென்று கைது செய்யப்பட்ட தோழர்களான காந்தி, பரமேஸ்வரன் ஆகியோரை கழகத் தலைவர் சந்தித்தார். தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் ந. பன்னீர்செல்வம், கழக வழக்கறிஞர் மது சூதனன் ஆகியோரும் சென்றிருந்தனர்.

 

மதுரை உயர்நீதிமன்றத்தில் தமிழுக்காக போராடிய வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா 12.2.2011 சனிக் கிழமை மாலை 7 மணிக்கு, மதுரை, செல்லூர் 60 அடி சாலை யில், உயர்நீதிமன்றத்தில் தமிழுக்காக போராடிய வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா மற்றும் தமிழ்ப் புத்தாண்டு விழா பொதுக் கூட்டம், மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பாக நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் மு. தமிழ்பித்தன் தலைமை யேற்றார். மாவட்டத் தலைவர் அ.பெரிய சாமி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி. விடுதலை சேகர் வரவேற்றுப் பேசினார். வழக்கறிஞர் பெரியார் வேந்தன், தமிழ்மொழியின் பெருமைகள் பற்றிப் பேசினார். வழக்கறிஞர் கு.ஞ. பகத் சிங் தாய்மொழியின் அவசியம் பற்றியும், நீதிமன்றத்தில் தமிழில் பேசினால்தான், வாதிகளாலும், பிரதிவாதிகளாலும், நீதிபதிகளுக்கு முழுமையாக தெளிவு படுத்த முடியும் என்பதை பற்றியும் பேசினார்.

 

தூத்துக்குடி பால் பிரபாகரன், பெரியார் திருக்குறள் மாநாடு நடத்தியது. பெயருக்கு முன்னால் தலைப்பெழுத்தை பெரியார் தமிழில் போடச் சென்னது, புலவர் குழந்தை, இராவண காவியம் எழுதியது, பெரியார் இயக்கம், கோவில் கருவறையில் தமிழ் மொழி வேண்டும் என போராடுவது, தாய்மொழியின் அவசியம் கருதி பெரியார் இயக்கங்கள் தாய்த் தமிழ் பள்ளிகள் நடத்துவது போன்றவற்றை எடுத்துக் கூறினார். உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாடும் உரிமைகேட்டு போராடிய வழக்கறிஞர்கள் கு.ஞ. பகத்சிங், பா. ஸ்டாலின், ராசேந்திரன், பெரியார் வேந்தன் ஆகியோருக்கு சிறப்புச் செய்து, பாராட்டி,  கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். இறுதியாக தோழர் வெண்மணி நன்றி கூறினார்.

Pin It