தமிழ்நாட்டில் ஒன்பது நடுவண் சிறைகளும் எத்தனையோ கிளைச் சிறைகளும் உள்ளன. இந்தச் சிறைகளில் இருப்போர் அங்கு சட்டப்படி அனுப்பப்பட்டு சட்டப்படி அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் என்பதோடு அவர்களுக்கென்று சிறைச் சட்டப்படி உரிமைகளும் உண்டு.

தமிழ்நாட்டில் 112 இலங்கைத் தமிழ் அகதி முகாம்கள் உள்ளன. இவை தவிர சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் இரண்டு வதைமுகாம்களும் உள்ளன. எந்தச் சட்டப்படி இந்த அகதி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன? எந்தச் சட்டப்படி இந்த முகாம்களில் இருப்பவர்கள் நடத்தப்படுகிறார்கள்? அகதிகள் சட்டப்படி என்று விடை சொல்லத் தோன்றும். ஆனால் இந்திய நாட்டில் அகதிகளுக்கென்று ஒரு சட்டமே இல்லை என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி.

eelam womanஇந்தியாவின் அரசமைப்புச் சட்டம் உட்பட எந்தச் சட்டத்திலும் அகதி (refugee) என்ற சொல்லே கிடையாது. ஈழத்தமிழ் அகதிகள் மட்டுமல்லர், திபெத்திய அகதிகள், பர்மிய அகதிகள், சக்மா அகதிகள்... இவர்களோடு உள்நாட்டு அகதிகளும் நாட்டின் பல பகுதிகளிலும் வதியழிகிற இந்த நாட்டில் அகதிகளுக்கென்று ஒரு சட்டமே இல்லை என்பது எவ்வளவு கொடிய முரண்பாடு!

அயல்நாட்டு அகதிகளை விரும்பியோ விரும்பாமலோ உள்வாங்குவதோடு ஒவ்வொரு நாளும் பொருளியல் வளர்ச்சியின் பெயரால் சொந்த நாட்டு மக்களையும் அகதிகளாக்கிக் கொண்டிருக்கிற இந்திய அரசு உலக அளவிலான அகதிச் சட்டங்களுக்கும் கட்டுப்படுவதில்லை. ஏனென்றால் 1951ஆம் ஆண்டின் ஜெனிவா ஒப்பந்தத்திலோ 1967ஆம் ஆண்டின் வகைமுறை உடன்படிக்கையிலோ இந்தியா இதுவரை ஒப்பமிடவில்லை. இவற்றில் ஒப்பமிடுமாறு மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்திய போதிலும் இந்தியா செவிசாய்ப்பதாக இல்லை. ஆனால் அகதிகளுக்கான ஐநா உயர் ஆணையத்தின் செயற்குழுவில் உறுப்பினராகப் பதவி வகிப்பது பற்றி இந்திய அரசுக்கு வெட்கமில்லை. அகதிகளை இந்திய வல்லாதிக்கம் தன் புவிசார் அரசியல் சதுரங்கத்தில் வெறும் பகடைக் காய்களாகவே நகர்த்தவும் வெட்டுக் கொடுக்கவும் செய்கிறது என்பதே மெய்.

மனித உரிமைகளுக்கும் மனித கண்ணியத்துக்கும் புறம்பான இந்த அணுகுமுறை இந்தியா ஒப்பமிட்டுள்ள 1948ஆம் ஆண்டின் உலகளாவிய மனித உரிமைச் சாற்றுரை உள்ளிட்ட பன்னாட்டு உடன்படிக்கைகளை மீறுவதாகும் என்பதை இந்திய உச்ச நீதிமன்றமே சுட்டிக்காட்டியுள்ளது. மனித உரிமைகளின் கண்ணோட்டத்தில் அகதிகளை இந்தியக் குடிமக்களுக்கு நிகராக நடத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்றக் கட்டளையையும் இந்திய அரசோ மாநில அரசாங்கங்களோ மதிக்கவில்லை.

அகதிகளின் உரிமைகள் தொடர்பாக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என். பகவதி தலைமையிலான குழுவினர் ஆக்கித் தந்த முன்மாதிரிச் சட்டமும் அரசுக்கோப்பில் ஒட்டடை படிந்து கிடக்கிறது. 2006இல் இந்திய அரசின் சட்டத்துறை முதன்முதலாக உருவாக்கிய சட்ட முன்வடிவும் வடிவாய் முடங்கிக் கிடக்கிறது. அந்தச் சட்ட முன்வடிவும் கூட அகதிகளின் அரசியல் உரிமைகளைப் பற்றி மூச்சும் விடவில்லை.

இந்திய அரசு எல்லா அகதிகளையும் பிச்சைக்காரர்களாக நடத்துகிறது என்றால், ஈழத்தமிழ் அகதிகளைக் குற்றவாளிகளாகவே நடத்துகிறது. சிறப்பு முகாம்கள் மட்டுமல்ல, இயல்பான முகாம்களே கூட கியூ பிரிவுக் காவல்துறையின் கட்டுப்பாட்டில்தான் வைக்கப்பட்டுள்ளன. சொந்த நாட்டில் சிங்கள ஆமிக்காரனுக்கு அஞ்சி இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்கள் இந்த நாட்டில் கியூ பிரிவுக்கு அஞ்சிக் கிடக்கும் அவலத்தை என்னென்பது?

தமிழீழ அகதிகளைத் தமிழ் நாட்டிலேயே அயலாராகக் கொண்டு அயல்நாட்டார் சட்டத்தின்படி நடத்துவது தமிழர்களாகிய நம் தன்மானத்துக்கும் இனமானத்துக்கும் விடப்பட்ட அறைகூவல் என்பதை உணர வேண்டும்.

அகதியின் முதல் உரிமை திருப்பி அனுப்பப்படாமல் இருக்கும் உரிமைதான். இறுதி உரிமை தானாகத் திரும்பிச் செல்லும் சூழலைத் தோற்றுவிப்பதற்காக சனநாயக முறையில் போராடும் உரிமைதான். இந்த இரு உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையில் வேறென்ன கொடுத்தும், கொடுப்பதாகச் சொல்லியும் என்ன பயன்? அதிமுக தன் தேர்தல் அறிக்கையில் ஓசித் திட்டங்களை ஈழத் தமிழ் அகதிகளுக்கும் விரிவுபடுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளது. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளால் அகதிகள் நலன் என்று இந்த எல்லைக்கு மேல் சிந்திக்க முடியவில்லை என்று பொருள்.

நம்மைப் பொறுத்த வரை ஈழத் தமிழ் ஏதிலியர்க்காகப் போராடுவது மட்டுமன்று, அவர்களையே திரட்டிப் போராடச் செய்வதும் நம் இனக் கடமை எனக் கருதுகிறோம். ஈழ அகதிகளின் உரிமைகளுக்காக மட்டுமல்லாமல், ஈழ மீட்புக்காகவும் ஓர் அரசியல் ஆற்றலாக புலம்பெயர் தமிழர்களைப் போராளித் தமிழர்களாக அணி திரட்டுவோம்.

Pin It