மனநோயாளியான அவனுடைய மாமா:

 தஞ்சை தமிமுன் அன்சாரி என்ற அப்பாவியை பிடித்து வந்து ஒரு பெரிய பாகிஸ்தான் உளவாளி எனக் காட்டினார்கள் உளவுத்துறையினர். இது மூலம் தமிழகத்து முஸ்லிம்களும் பழிக்கப்பட வேண்டியவர்கள் என்றொரு பிரம்மையை மக்கள் மத்தியில் பதிய வைத்திட முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால் அ.மார்க்ஸ் அவர்கள் தலைமையில் சென்ற உண்மை அறியும் குழு தான் செய்த ஆய்வின் மூலம் உளவுத்துறையின் பொய்யையும் புரட்டையும் அம்பலப் படுத்தியுள்ளது.

 திக்குமுக்காடிபோன உளவுத்துறை சாட்சியங்களையும் தடயங்களையும் உருவாக்கிட தலைப்பட்டன.  தமிமுன் அன்சாரி குடும்பத்தை தொடர்ந்து தொந்தரவு செய்து அவர்களுக்கு சொந்தமான கார்-ஐ கைப்பற்றி இருக்கின்றார்கள். அதை திருப்பி தந்திடாமல் காலந் தாழ்த்தி வருகின்றார்கள். இதற்காக ஒரு பெரும் போரையே நடத்தி முடித்து விட்டார்கள் வழக்கறிஞர் கென்னடி அவர்கள்.

 இங்கே வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே பாகிஸ்தானின் இலங்கை தூதரை பாகிஸ்தான் மாற்றி இருக்கின்றது என்றொரு காரணத்தைக் காட்டி வழக்கை மேலும் சிக்கலாக்கினர்.

 வழக்கை சிக்கலாக்கினார்கள் என்றால் அன்சாரிக்கு பெயில் கிடைக்காமல் செய்து விட்டார்கள். எனினும் வழக்கறிஞர் கென்னடி வழக்கறிஞர் கம்ரூத்தீன் ஆகியோர் தொடர்ந்து பிணை(பெயில்)க்காக வாதாடி வந்தார்கள். 

 குற்றப்பத்திரிகையை 90 நாட்களுக்குள் தாக்கல் செய்திட இயலாது என்பது தான் உண்மை நிலை. ஆகவே அன்சாரிக்குப் பிணை கிடைப்பது என்பது சட்டப்படி தவிர்க்க இயலாத ஒன்று.

NSA : 

அதனால் வேறு வழியின்றி என்.எஸ்.ஏ என்ற தேசிய பாதுகாப்பு சட்டத்தை பாய்ச்சி இருக்கின்றார்கள். தேசிய பாதுகாப்புச் சட்டத்தை பாய்ச்சிட மேற்கொண்ட முயற்சிகளை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் போடுவதற்கென அரசு நிர்ணயித்துள்ள பணத்தை பெற முடியாது. ஆகவே என்.எஸ்.ஏ என்ற தேசிய பாதுகாப்பு சட்டத்தை பாய்ச்சி இருக்கின்றார்கள்.

 முந்தைய அண்ணா திமுக ஆட்சியின் போதும் இப்படித்தான் நெல்லிக்குப்பத்தில் இரண்டு அப்பாவிகளைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தார்கள் எந்த காரணமுமில்லாமல். அதன் பின் சுமார் எட்டு ஆண்டுகளுக்குப்பின் தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்கள்.

 ஆகவே அதிமுக ஆட்சியில் தேசிய பாதுகாப்பு சட்டம் என்பது “75” வழக்குக்கு ஒப்பானது. ஆனால் அன்சாரி விவகாரத்தில் அதற்கான மீளாய்வுக்கு Review Committee உடனேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

மார்க்ஸ்:

இந்த மீளாய்வு கமிட்டியில் அ.மார்க்ஸ் அவர்கள் தனது அறிக்கையிலுள்ள அனைத்தையும் ஒருங்கிணைத்து வாதாடி இருக்கின்றார். இதனை 28 12 2012 தி ஹிந்து பத்திரிகையும் வெளியிட்டிருந்தது. அ.மார்க்ஸ் தனது வாதத்தில்: 

கைது எங்கே வைத்து: அன்சாரி திருச்சி விமான நிலையத்தில் வைத்து காவல் துறையினரைக் கண்டவுடன் பயந்து ஓடிவிட்டதாகவும் ஒரு மரக்கடையின் பக்கத்தில் வைத்து கைது செய்ததாகவும கூறியுள்ளார்கள். இது ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய்.

 விமான நிலையத்தில் அன்சாரி விமானத்தில் ஏறும் அனுமதி சீட்டையும் போர்டிங் பாஸ் வரைக்கும் வாங்கிய பின்னர் தான் கைது செய்யப்பட்டார் என்ற உண்மை காவல்துறையினர் மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டுகள் அனைத்தையும் உறுதிபடுத்திட போதுமானது என்பதை தெளிவுப்படுத்தினார்.

லேப்டாப்: கைது செய்யப்பட்ட பின் அன்சாரியை சித்ரவதை செய்து அவனுடைய மனைவிக்கு போன் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். அந்த போனில் ரவி என்றொருவர் வீட்டுக்கு வருவார். அவரிடம் தனது லேப்டாப்-ஐ கொடுக்க வேண்டும் எனவும் சொல்லிடச் சொன்னார்கள்.

 இந்த ரவி என்பவர் வேறு யாருமல்ல. காவல்துறையைச் சார்ந்தவர் தான் என்பதையும் தெளிவுபடுத்தினார்கள் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள்.  இப்படி தன் வாதங்களை முன்வைத்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அவன் மீது பாய்ச்சியது தவறு. அதனை விலக்கிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

 விடுதலை

தேசிய பாதுகாப்பு சட்டம் விலக்கப்படுமேயானால் உடனேயே அன்சாரி பிணையில் வந்து விடுவார். காரணம் அவருக்கு திருச்சி நீதி மன்றம் ஏற்கனவே பிணை வழங்கியுள்ளது. இது ஒரு நாடெங்கும் உளவுத்துறையால் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு பாய்ச்சப்படும் பொய் வழக்குகளில் ஒன்று என்றால் தேசிய பாதுகாப்பு சட்டம் அப்படியே நீடிக்கும். அந்த நிலையில் நாட்டில் பொய் வழக்குகளால் பொசுங்கி போன குடும்பங்களுள் ஒன்றாக அன்சாரியின் குடும்பமும் ஆக்கப்பட்டுவிடும்.

 இதில் சமர்பிக்கப்பட்டுள்ள உண்மைகளை இந்த மீளாய்வுக் கமிட்டி யதார்த்தமாக பார்த்தால் அன்சாரியின் குடும்பம் காப்பாற்றப்படலாம்.

 மனநோயாளி: அன்சாரியை சிறைக்கு பார்க்க செல்லும் போதெல்லாம் அவருடைய மாமாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்கள். அதே போல் அடிக்கடி வீட்டுக்கு சென்றும் தொல்லைகளை கொடுத்துள்ளார்கள். காரை கொடு, வண்டியை கொடு என்றெல்லாம் பல அழுத்தங்கள். இவற்றால் அவனுடைய மாமா மனநோயாளியாகிவிட்டார். ஆகவே முதல் சேதாரம் நடந்தேறி விட்டது.

 நீதி சிறுபான்மையினருக்கில்லை. அவர்கள் நீதியின் பெயரால் கொடுமையையே சந்திப்பார்கள் என்று மீண்டுமொரு முறை உண்மைப்படுத்தப்படுகின்றது

எம் ஜி எம்

Pin It