1

காலத்தின் கலைவடிவம்

தமிழில் நாடகம் என்றொரு கலைவடிவம் இருப்பதை எழுத்தாளர்கள் மறந்துவிட்டார்களோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. மிக அரிதாக ஆங்காங்கே நடக்கும் நவீன நாடக முயற்சிகள் தான் ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூவாய் இனித்துக் கொண்டிருக்கிறது.

கதை, கவிதை என்று பல வடிவங்களிலும் சோதனைகள் மேற்கொண்டிருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் இலக்கிய ஆளுமைகள் ஏன் நாடகத்தை மட்டும் தவிர்த்து விடுகிறார்கள் என்று யோசித்தால் நாடக முயற்சிகளுக்கு வாய்ப்பில்லை என்பதே ஒரு முக்கியமான காரணமாகப் படுகிறது. தொடர்ந்து ஒத்திகை பார்க்கவோ மீண்டும் மீண்டும் நிகழ்த்தவோ இங்கு யாருக்குமே நேரம் ஒதுக்க முடியாது. காலத்திற்கு ஒவ்வாத எதுவும் அழிந்துவிடுமென்ற இயற்கை விதிகள் நாடகத்திற்கும் பொருந்தக் கூடியதுதான். அதற்காக நவீன தொழில் நுட்பங்களையும் கையாளுகிறோம் என்று நாடகத்தின் நடுநடுவே புரொஜக்டரில் படம் காட்டும் அரைவேக்காட்டுத்தனங்களை விட்டொழித்து, நாடகத்தின் நோக்கத்தையும் காலத்திற்கேற்ப மீட்டுருவாக்கும் வழிவகைகளையும் கண்டடைய வேண்டும்.

யாப்பின் துணைக்கொண்டு மனதில் இருத்தப்பட்ட செய்யுள்கள் வரிவடிவாகி கவிதையெனப் பரிணமித்து நூல் வடிவம் கண்டுவிட்டன. இப்படிகாவியங்கள், நாவல்களாய்... சொல்கதைகள், சிறுகதைகளாய்... நாடகங்கள், திரைப்படங்களாய்... பாடல்கள், ஒலிநாடாக்களாய், குறுந்தகடுகளாய்...

ஆனால் அதே வேளையில் புத்தகங்களும், திரைப்படச் சுருள்களும் விற்பனைப் பண்டங்களையொத்த முறையிலேயே உருவாகி, விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

கலைஞனுக்கும், படைப்புக்குமான உறவு மிகத் துரிதமாக துண்டிக்கப்பட்டு அதன் விற்பனை உரிமை வேறொருவரைச் சென்றடைகிறது. நிகழ்த்துக் கலைகள் மட்டும் தான் ஒருபோதும் உற்பத்திப் பண்டமாக உருமாற்றம் கொள்வதில்லை. நுழைவுச்சீட்டு வாங்கி திரைப்படம் பார்ப்பதற்கும், நாடகம் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசங்களைக் கவனித்தால் தெரியும்.

திரைப்படம் ஒரு மாற்றமில்லாத பிரதி. ஆனால் நாடகமோ ஒவ்வொரு நிகழ்விலும் புதுப்புதுப் பரிணாமங்களை கண்டடைகிறது.

படப்பிடிப்புத் தரமும் அதற்கும் முன்பும் பின்புமான தயாரிப்புகளும் ஒரு பணியிடத்தின் தன்மைகளையேக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தமக்கிடப்பட்ட பணியினைச் செய்து முடித்ததும் ஒதுங்கிக் கொள்கிறார்கள். ஒன்றிணைக்கப்பட்ட உழைப்பு பண்டமாக மாறுகிறது. ஆனால் நாடகமோ, சமூகமாக சேர்ந்தியங்கும் மனித இயல்புகளால் வடிவமைக்கப்பட்ட கூட்டுழைப்பின் வடிவம்.

ஒவ்வொரு மனிதனையும் தனித்தனி அலகுகளாக்கிக் கொண்டிருக்கும் உலக மயத்தின் முன்பாக, அவனைப் பிறரோடு சேர்ந்தியங்கச் செய்யும் யாதொரு கலையையும் சிரமேற்கொண்டு செழிப்புறச் செய்ய வேண்டியது சமூக அக்கறை கொண்ட எழுத்தாளனின் தவிர்க்க இயலாத கடமை.

நாடக நடிகர்கள் திரைப்படத்தை நோக்கி நகர்வது போல எழுத்தாளர்களும் திரைப்பட உலகினுள் நுழைவதற்கு மிதமிஞ்சிய ஆர்வம் காட்டுகிறார்கள்.

எழுதப்படும் நாடகப் பிரதிகள் நிகழ்த்துவதற்கு மட்டுமின்றி தனித்து வாசிக்கும் தன்மையையும் கொண்டிருக்கின்றன.நாடகப்பிரதி மட்டுமே தனித்ததொரு இலக்கிய வடிவாகக் கருதப்படுகிறது. எனவே எழுத்தாளர்கள் முதலில் வாசிப்பதற்கான பிரதிகளையாவது உருவாக்குவதற்கு முன்வர வேண்டும். திரைப்படங்களுக்குக் கதை, வசனம், பாடல் எழுத வேண்டுமேன்ற உள்ளார்ந்த அரிப்புகளை நீக்கிக் கொள்ளவும் அல்லது அதற்கான பயிற்சிகளைப் பெறவும் நாடகம் எழுதுவது நல்லதொரு உபாயமாக இருக்கும்.

2

"கலைவணிகத்திலிருந்து அரசியல் வணிகத்திற்கு..."

ஒரு நடிகன் அரசியலுக்கு வரலாமா என்பது மடத்தனமான கேள்வியாகவே எனக்குத் தோன்றுகிறது. ஜனநாயகம் பின்பற்றப்படுவதாகச் சொல்லப்படும் ஒரு நாட்டில் வாக்களிப்பதற்குத் தகுதியுள்ள ஒருவனுக்கு வாக்குகள் கேட்கவும் தகுதியுண்டு என்பதே இயற்கை நீதியாக இருக்கமுடியும். பிரச்சனை அதுவல்ல. இந்த நடிகன் என்கிற வார்த்தைக்கு அவ்வாறு குறிப்பிடப்படுபவர்கள் பொருத்தமானவர்களா?

இன்றைய சூழலில் நடிகன் என்பதை நடிப்புக் கலைஞன், தொழில்முறை நடிகன் என்று இரண்டாகப் பகுத்துப்பார்த்தே பொருள்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு கலைஞன் என்றவகையில் நடிகன் எப்போதுமே சமூகத்தோடு அதன்மீதான அக்கறையோடு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உறவாடிக்கொண்டிருப்பவன். இந்தத் தெளிவான வேறுபாடுகளை மனதில்கொண்டே நடிகர்கள் அவசர அவசரமாக அரசியல் தலைவர்களாக மாறிக்கொண்டிருக்கும் காட்சிகளை நாம் அணுகவேண்டும்.

உலக வரலாற்றில் அரசியலுக்கும் கலை இலக்கியத்திற்குமான உறவு ஒன்றிலிருந்து பிறிதொன்றைப் பிரித்தறிய இயலாத அளவிற்குப் பின்னிப் பிணைந்திருக்கிறது. அரசியல் கோட்பாடுகளுக்கான மூலவிதைகள் கலை இலக்கியவாதிகளிடமிருந்தே கண்டெடுக்கப்பட்டன. அல்லது உருவான அரசியல் இயக்கங்களும் அதன் கொள்கைகளும் கலைப்படைப்புகளால் செழுமையும் வலுவும் பெற்றிருக்கின்றன.

இப்போதுள்ள கலைவடிவங்களில் திரைப்படமும் மிக முக்கியமான தவிர்க்க இயலாத ஒன்றாகப் பரிணமித்திருக்கிறது. எழுத்து, இசை, ஓவியத்தைவிடவும் அவை எல்லாவற்றையும் தன்வயப்படுத்திக்கொள்ளும் இந்த நவீன தொழில்நுட்ப வடிவம் வலிமையானது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

மிகப்பெரிய எண்ணிக்கையிலான பார்வையாளர்களை எளிதில் சென்றடையும் இந்தத் திரைப்படக்கலை அதன் வணிக நோக்கங்களுக்காக சில நாயகப் பிம்பங்களை அடிக்கடி கட்டமைத்துக்கொள்கிறது. பிரபலமாகும் எந்தவொரு கலை இலக்கிய வடிவத்தையும் வணிகத்திற்குரிய சரக்காக உருமாற்றம் செய்யவதுதானே முதலாளித்துவத்தின் வழக்கம்.

இவ்வாறு திரைப்படம் தன் கலைத்தன்மையை முற்றிலுமாக இழந்து வணிகத்தையே இலக்காகக் கொண்ட கேளிக்கைத் தொழிலாக மாறி நிற்கிறது. இன்னொருபக்கம், அரசியலோடு மிக நெருக்கமாக உறவு கொண்டாடிவந்த வணிகம் அதன் அத்தனை சாராம்சங்களையும் அரசியலுக்குள் இடம் பெயரச்செய்து அதையுமொரு வணிகவகையாக வசப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இப்போது மிகத்தெளிவாக ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். திரைப்படத்துறையில் நடந்துகொண்டிருப்பது கலைவணிகம். அரசியலில் நடந்துகொண்டிருப்பது அப்பட்டமான வணிகம். எனவேதான் ரசிகர்மன்றங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் குறைந்தபட்ச வித்தியாசங்கள்கூட இல்லாமல் போய்விட்டது.

ஒரு தேர்ந்த வணிகன் தான் தேர்ந்தெடுத்து நடத்திவருகிற வாணிபவகையொன்றின் எதிர்காலம் உறுதியாக இல்லாதபட்சத்தில் அதில் கிடைத்த லாபத்தைப் பிறிதொரு தொழிலில்தான் முதலீடு செய்வான்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.