கனகசுப்புத் தோட்டத்தில்
 கால்பதித்த கவிஞர்கள்
புனைந்துவைத்தார் பொற்குடங்கள்
 புதுச்சேரி மண்ணெடுத்து!

பகுத்தறிவுப் பாட்டெழுதப்
 பாவேந்தர் தொடங்கியபின்
முகத்திலுள்ள கண்களுக்கு
 முழுப் பொருளும் வரக்கண்டோம்!

களிமண் பறக்காது
 கைகால்கள் முளைக்காது
விழிப்பாக வாழ்க என்றார்
 விதைநெல்லாய் அவர்நின்றார்!

கருத்து முதல்வைத்துக்  
 கற்பனையைக் கடைபரப்பித்
திருத்தும் கவிதைகளைச்
 செய்யப் பயிற்சிதந்தார்!

தீட்டுகிற தீந்தமிழைத்
 தீப்பந்தம் ஆக்குகிற
பாட்டெழுதக் கற்றதெல்லாம்
 பாவேந்தர் பின்நடந்து!

இருட்டறையில் இருந்து வந்த
 இவ்வுலகை ஒளிக்கழைத்தார்
மருட்டுகிற புயல்எதிர்த்தார்
 வாழ்க என வணங்கிடுவோம்!

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.