tamizhenthi_350பண்டைநாள் தொட்டே வஞ்சப்
        பார்ப்பனர் சதியை ஆய்ந்து
கண்டவர்; பவுத்த வாழ்வைக்
        கொண்டவர்; கொள்கை வேழம்!
தொண்டாலே பொழுத ளந்த
        தூயவர்; தமிழின் நேயர்!
பண்டிதர் அயோத்தி தாசர்
        பாட்டன்நம் இனத்தார்க் கெல்லாம்!

முதன்முதல் தமிழன் என்ற
          அடையாளம் தந்த முன்னோன்;
இதழ்களில் "தமிழன்' ஏடு
         ஈட்டிய மாண்பை இன்னோர்
இதழ் இங்குப் பெற்ற துண்டா?
        இவர்போலும் மேதை உண்டா?
பதர்களே ஆட்டம் போடும்;
        பண்டிதர் அறிவின் உச்சம்!

இலக்கியக் கடலில் மூழ்கி
        முத்துக்கள் எடுத்தார்; மாண்பு
துலக்கிடும் குறள்நூ லுக்குத்
        தூயநல் உரையும் தந்தார்
பலப்பல வழிபு குந்து
       பழந்தமிழ் நூல்கள் மேன்மை
விளக்கியே புதிய ஆய்வின்
       விளக்காக இவரே நின்றார்!

இடஒதுக் கீட்டுத் தந்தை
        இவர்எனில் மிகையேஇல்லை
மடைகளை உடைத்துப் பாயும்
        வெள்ளமாய்ப் பவுத்த மார்க்கம்
நடைபோட, சாக்கிய சங்கம்
        நலம்பெற நாட்டம் கொண்டார்
படமாக அல்ல வாழ்வின்
       பாடமாய் இவரைக் கொள்வோம்!

Pin It