இந்தியாவின் புதிய கட்டியங்காரனாக வந்திருக்கிற நரேந்திர மோடி அறிவித்திருக்கும் இரண்டு பெரும் அறிவிப்புகள் இந்தியாவில் உள்ள தேசிய இனங்களை வாரிச் சுருட்டி விழுங்கும் கயவாளித்தனம் கொண்டவை.

modiமுதலாவது "இந்தியாவில் உருவாக்குங்கள்' என்பதும், மற்றது "தூய்மையான இந்தியா' என்பதுமாகும்.

இந்த இரண்டு முழுக்கங்களுக்கான செயல்களும் எந்த அளவு "மோசடித்'தனமானவை, மக்களை ஏமாற்றுபவை, பன்னாட்டு நிறுவனக் கொள்ளைக்கு வழியமைத்து வலுசேர்ப்பவை என்பதே அறியப்பட வேண்டியவை.

முதலில் "இந்தியாவில் உருவாக்குங்கள்' என்பது குறித்துப் பார்ப்போம்!

நெருக்கடி நிலை (என்ற எமர்சன்சி) காலத்தில் ஆட்சி செய்த இந்திரா காந்தி 20 வகை(அம்ச)த் திட்டம் ஒன்றை அறிவித்தார். அதில் "பீ இந்தியன் பை இந்தியன்' என்பதும் ஒன்று.

"இந்தியனாய் இரு, இந்தியப் பொருளையே வாங்கு' என்பதான அந்த முழக்கத்தின்படி வாங்கப்பட வேண்டிய இந்தியப் பொருள் என்றால் அவை எவை என்று அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி எந்த ஆட்சியாளர்களாலும் விளக்கப்படுத்த முடியவில்லை.

இன்றைக்கு இந்தியாவிற்குள் உருவாக்கப்படுகிற பொருள்கள் எல்லாமும் பன்னாட்டு நிறுவனங்களால் உருவாக்கப்படுபவையாகவே உள்ளன.

காலையில் எழுந்து குடிக்கிற தேநீர் முதல் இரவு படுக்கிற போது ஏற்றி வைக்கப்படும் கொசுச் சுருள் வரை அனைத்துப் பொருள்களும் வெளிநாட்டுக் கூட்டுடன் உருவாக்கப்படும் பொருள்களே.

அன்றைக்கு ஆங்கிலேயத் துணிமணிகளை உடுத்தாமல் அவற்றைக் கொளுத்தியவர்கள் விடுதலைப் போராட்ட வீரர்களாக மதிக்கப்பட்டனர்.

ஆங்கிலேயனின் வணிகக் கப்பலில் சரக்கேற்றாமல் தனியாகக் கப்பல் வணிகம் செய்ய முனைந்த வ.உ.சி. கப்பல் ஓட்டிய தமிழனாகப் புகழப்படுகிறார்.

ஆனால் இன்றைய நிலை என்ன? அமெரிக்கக் கொடி போட்ட கைக்குட்டையை நெற்றியில் சுற்றிக் கொண்டு அரைகுறை ஆங்கிலத்தில் பிதற்றியபடி சூத்தாமட்டை பிதுங்கி வெளியே தெரிய முழுக்கால் சட்டையும் அதற்குத் தகவில்லாமல் சிறியதாய் இறுக்கமாய் மேல்சட்டையும் அணிந்து கொண்டு பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை செய்வதோ அல்லது வேலை தேடி அலைவதோதான் தமிழ் இளவட்டங்களின் அடிமைத்தன வாழ்வியலாகக் கிடக்கிறது.

வெளிநாட்டுக்காரர்கள் இங்கு வந்து நம்முடைய கனிம வளங்களை, தொழில் வளங்களையெல்லாம் பறித்துக் கொண்டு செல்வதைப் பற்றியோ உழவும் தொழில்களும், வணிகமும் நம் உழைப்பும், வாழ்வும், பறிபோவதைப் பற்றியோ மேற்படி இளைஞர்கள் கவலைப்படுவதில்லை. அவர்கள் கவலைப்படுகிற அளவிற்கு அவர்கள் இல்லாதபடி அவர்களுடைய சிந்தனை மழுங்கடிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடம் இருக்கிற இந்தியப் பற்று என்பது இந்தியா மட்டைப் பந்து (கிரிக்கெட்) ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்கிற அளவு மட்டத்தோடு நின்று விடுகிறபடியே இந்திய அரசால் சொல்லித்தரப்பட்டிருக்கிறது. எனவே, அவர்களின் அறியாமைக்கும், அடிமைத்தனத்திற்கும் காரணமே இந்திய அரசுதான்.

அவர்களிடம் தமிழ் உணர்வும், தமிழ்ப் பண்பும், தமிழ் நாட்டுக் காப்புணர்வும் இல்லாமல் சிதைக்கப்பட்டு ஆங்கில, சமசுக்கிருத, இந்தி மொழி எனும் அடிமை உணர்வும், இந்திய வல்லரசியப் பண்பு எனும் கலப்புணர்வும், குமுகப் பொறுப்பற்ற தன்மையும் உருவாகியிருப்பதற்குக் காரணமும் இந்திய அதிகார வெறி அரசுதான். பல்வேறு தேசிய மொழிகளைச் சிதைப்பதற்கும் பல்வேறு தேசிய இனப் பண்புகளைச் சிதைப்பதற்குமே இந்திய அரசு அதிகாரத்தை இந்திய ஆட்சியாளர்கள் பயன்படுத்துகின்றனர்.

அதிகாரப் போக்கில் அவர்கள் இந்தியாவைப் பிணைத்துக் கட்டி வைத்திருப்பது யாருக்காக? பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கும் கொழுப்பதற்குமே அல்லாமல் வேறில்லை. இந்நிலையில் அந்த நிறுவனங்களிடம் தரகுத் தொகை வாங்கிக் கொண்டு தங்கள் அதிகாரத்திற்குட்பட்ட மக்களைக் காவு கொடுக்கும் கயவாளிகள் என்று அவர்களைச் சொல்லாமல் வேறெப்படிச் சொல்லுவது?

போபாலில் நச்சுக் காற்றை உமிழ்ந்த அமெரிக்காவின் யூனியன் கார்பைடு நிறுவனத்திடம் இழப்பீட்டுத் தொகையைப் பெற இந்திய அரசு வக்கற்று இருக்கிறது என்பது மட்டுமன்று, மூன்று ஆண்டு தண்டனை கொடுக்கப்பட்ட பின் அமெரிக்காவுக்குத் தப்பி ஓடி விட்ட அந்த யூனியன் கார்பைடு நிர்வாக இயக்குநரைப் பிடித்து வருவதற்கான துணிவும் இந்திய அரசாங்கத்திற்கு இல்லை.

அதுபோல், இந்தியாவுக்குள் அடிமைப்பட்டுக் கிடக்கும் பல தேசங்களின் சுற்றுச் சூழலைக் கெடுத்தும், தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக நடத்துவதுமான பன்னாட்டு நிறுவனத் தொழில் முதலைகளுக்குத் தேவையான அனைத்து ஏந்துகளையுமே செய்து தரப் போகிறதாம் மோடியின் இந்திய அரசு. அதைத்தான் "மேக் இன் இந்தியா' எனும் பெயரில் கட்டியங்காரனாய் அறிவிக்கிறார் மோடி.

ரிலையன்சு அம்பானி, டாடாவின் சைரசு மிஸ்டிரி, விப்ரோ அசிம் பிரேம்ச்சி, ஆதித்ய பிர்லா உள்ளிட்டு ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட முற்றாளுமை (ஏகபோக) முதலைகளை அழைத்து மோடி கொடுத்திருக்கிற உறுதிமொழியைக் கவனிக்க வேண்டும்.

"கடந்த சில ஆண்டுகளாகச் சிபிஐ விசாரணை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொழில் அதிபர்கள் பலரிடையே அச்சம் எழுந்துள்ளது. அதனால் அவர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். அவர்களின் அச்சத்தை அகற்றவும் நம்பிக்கையை வளர்க்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்'' என்கிறார் மோடி.

ஆக, தொழிலதிபர்கள் மீது எவ்வகை நடவடிக்கை யும் எடுக்கக் கூடாது என்பதே அவரின் கருத்து.

ஒருவரின் சொந்த நிலத்திலேயே ஆகட்டும் அந்நிலத்திற்கு அடியில் கிடைக்கும் புதையல் அரசாங்கத்திற்கே சொந்தம் எனக் கூறுகிறது இந்திய அரசியல் சட்டம். ஆனால் நிலத்திற்குக் கீழிருந்து கன்னெய் (பெட்ரோல்), நிலக்கரி எனக் கனிம வளங்களை மானாவாரியாக எடுத்துக் குவித்துக் கொண்டு கொள்ளையடிக்கின்றன அம்பானி கும்பல்களும், பிறவும்.

இந்தியாவின் ஒட்டுமொத்த கன்னெய் விலையை அவர்களே தீர்மானிக்கிறபடி அவர்களிடமே அனைத்து உரிமைகளையும் கொடுத்து விட்டது இந்திய அரசு.

அரசிடம் அவர்கள் காட்டுகிற கணக்கு ஒன்றாகவும் தோண்டி எடுக்கப்படுகிற கனிம வளங்களின் அளவு வேறொன்றாகவும் இருக்கிறது.

அவ்வகையிலெல்லாம் அவர்கள் என்ன கேடு செய்தாலும் அவர்கள் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்காது என்கிறார் மோடி.

யார் அப்பன் வீட்டுச் சொத்து? யார் கொள்ளையடிப்பது?

"இந்த நாடு உங்களுடையது, நீங்கள் யாரும் வெளியேற வேண்டாம்.'

என்று தொழில் முதலைகளைப் பார்த்துக் கூறுகிறார் மோடி.

ஆக இந்த நாடும் சொத்தும் அவர்களுடை யவையாகத் தாரை வார்த்துக் கொடுப்பதற்கு மோடி யார்?

இதே பேச்சையே அடுத்த சில நாள்களில் அமெரிக்கா சென்ற மோடி அங்குள்ள அமெரிக்கத் தொழிலதிபர்கள் விருந்திலும் பேசியிருக்கிறார். அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள் அச்சப்படாமல் இந்தியா வரலாம் என்று அழைத்திருக்கிறார். உங்களுக்கு என்னென்ன ஏந்துகள் தேவையோ அவற்றையெல்லாம் நாங்கள் செய்து தருகிறோம் என்று கூறியிருக்கிறார். உங்கள் மீது எவ்வகை நெருக்கடியும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறோம் என்று உறுதியளித்திருக்கிறார். எனவே எல்லாரும் இந்தியா வந்து தொழில் தொடங்குங்கள். "இந்தியாவில் உருவாக்குங்கள்'. இந்தியாவில் உள்ள கனிம வளங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு போங்கள், இந்தியாவில் உள்ள எண்ணற்ற பல்வேறு மொழியினத் தொழிலாளர்களின் உழைப்புகளைச் சூறையாடிச் செல்லுங்கள்... யாரும் எதையும் கேட்டுக் கொள்ள மாட்டோம்!'' என்கிறார் மோ(ச)டி (மசுத்தான்).

எங்களின் மொழியை அழிப்பதில் உங்களுக்கு எப்படிக் கவலை இருக்காதோ பொறுப்பிருக்காதோ, அப்படியேதான் மோடியே! எங்களின் நிலம், உழைப்பு, கனிம வளங்கள், வாழ்க்கை இவையெல்லாம் சூறையாடப்படுகிற போதும் உங்களுக்குக் கவலையிருக்க முடியாது.

இந்தியாவின் சொத்துகள் இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களுக்கும் சொந்தமானவை. அவற்றை விலை பேசவோ, பிறர் சூறையாட வழியமைத்துத் தரவோ உங்களுக்கு உரிமை இல்லை.

இந்தியாவில் தேசிய இனங்களின் சொத்துகளைச் சூறையாடி உழைப்பை விழுங்கப் புதிது புதிதாகத் திட்டமிடும் கயவாளிகள்தாம் நீங்களெல்லாம் என்று உங்களை நாங்கள் அடையாளம் காட்டுகிறோம்.

"எங்களின் உழைப்பை, வளத்தை, வாழ்க்கையைச் சூறையாடும் கயவாளிகளே! கூட்டுக் கயவாளிகளே! எங்கள் நிலங்களை விட்டு வெளியேறுங்கள்; இல்லையென்றால் உங்களையெல்லாம் வெளி யேற்றும் நாள் தொலைவில் இல்லை என்று எச்சரிக்கிறோம்'' என்று எச்சரிக்கை செய்ய வேண்டிய வகையில் தேசிய இனங்கள் எழுச்சி கொள்ள வேண்டுவதே இன்றைய முதன்மையான பணி.

அவ்வகையிலேயே மோடியின் "இந்தியாவில் உருவாக்குங்கள்' எனும் பன்னாட்டுத் தொழில் முதலாளிகளின் கொள்ளைக்கானத் திட்டத்தை நாம் முறியடிக்க முடியும்.

அடுத்து, மோடி அறிவித்திருக்கிற மற்றொரு திட்டத்தையும் பார்ப்போம். மோடி அறிவித்திருக்கிற இன்னொரு திட்டம்... "தூய்மையான இந்தியா' வுக்குரிய திட்டம்.

அக்தோபர் 2 காந்தி பிறந்த நாளன்று "தூய்மையான இந்தியா' என்கிற திட்டத்தை அறிவித்திருக்கிறார் மோடி. சேரிப் பகுதிகள் தூய்மையற்று இருக்கின்றன என்றும் அதனால் புதுதில்லியில் உள்ள "வால்மீகி பசுதி' என்கிற சேரிப் பகுதியில் தூய்மைத் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறாராம்.

மொத்தம் 2 இலக்கம் கோடி உருவா மதிப்பீட்டில் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு வரை செயல்படுத்தும் நோக்கத்தில் தூய்மையான இந்தியா திட்டம் தீட்டப்பட்டிருக்கிறதாம்.

கிழமைக்கு இரண்டு மணி நேரம் இத்தூய்மைப் பணியில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்கிறார் மோடி.

அதற்காக அவர் அமைத்த குழுவில் ரிலையன்சு அம்பானி, நடிகர் கமலகாசன், விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டுப் பத்துப் பேர் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கழிவுகள் கலந்து ஓடிக் கொண்டிருக்கிற கங்கையைப் போல் வைதீக அழுக்கு குமுகத்தில் அப்பிக் கிடப்பதையோ, கௌரவக் கொலைகள், குமுகப் புறக்கணிப்புகள் என்று சாதி அழுக்காய் குமுகங்கள் அப்பிக் கிடப்பதையோ, வல்லரசியங் களின் பாலியல் வக்கிர மதுக் குடிப்பு வெறி என அழுக்காய் மக்கள் குமுகம் அப்பி நொதித்துக் கொண்டிருப்பதையோ வெல்லாம் தூய்மை செய்கிற திட்டமாக மோடியின் திட்டத்தை யாரும் கருதிவிடக் கூடாது.

அந்த அழுக்குகளில்தாம் மோடி மட்டுமல்லர், இந்தியாவே உயிர்த்துக் கொண்டுள்ளது.

அந்த அழுக்குகளை நீக்கம் செய்ய வேண்டுமான நோக்கமிருப்பவர்களால்தாம் புழுத்து நாறிக் கொண்டிருக்கிற இந்திய வைதீக வல்லரசியக் கழிவுகளின் நாற்றத்தை உணர்ந்திட முடியும்; அவற்றைப் பொறுத்திட இயலாது.

ஆனால், இந்தியப் பார்ப்பனிய ஆண்டை வெறிகளுக்கும், வல்லரசிய ஆதிக்க வெறியர்களுக்கும் கொழுப்பெடுத்த அந்த ஆதிக்க நாற்றங்கள் இனிமையானவை. எனவே அவர்கள் அவற்றை நீக்கிட வேண்டும்; தூய்மைப்படுத்திட வேண்டும் என எண்ணுவதோ திட்டமிடப்போவதோ இல்லை.

அதேபோல் கப்பல் கப்பலாக அமெரிக்க, ஐரோப்பிய மருத்துவ மற்றும் மின் பொருள் கழிவுகள் நம்முடைய வங்கக் கடலிலும், குமரிக் கடலிலும் வந்து கொட்டப்படுவதையெல்லாம் அவர்கள் கண்டு கொள்வதில்லை. அக்கழிவுகள் கொட்டப்படுவதால் கடல்வாழ் உயிரினங்கள் அழிவதும், பல நோய்கள் கடலோடி மக்களுக்கு உருவாவதும் அறியப்பட்டும் அவற்றைத் தடுத்து நிறுத்தி அக்கடலைத் தூய்மையாகக் காக்க வேண்டும் எனும் திட்டம் ஏதும் மோடியிடம் உண்டா என்றால் இல்லை.

மேலும், பன்னாட்டு நிறுவனத் தொழிலகங்கள் வெளியிடும் வேதியல் கழிவுகள் நிலத்தடியில் கொட்டப்படுவதும், வேதியல் புகை நம் காற்று மண்டலத்தை மாசுபடுத்தி நுரையீரல் நோய்களை உருவாக்குவதுமான நிலையில் அக்கழிவுகளை வெளியேற்றிடும் தொழிலகங்களைத் தடை செய்து நாட்டைத் தூய்மைப்படுத்திட வேண்டும் என மோடி கூறிடவில்லை.

இவையெல்லாம் இல்லாமல் பொதுப்பட சாலைகளின் ஓரங்களில் கிடக்கிற குப்பைகளை, கழிவு நீரைத் தூய்மை செய்வதற்குத்தான் இந்தத் திட்டமாம்.

அதற்குத்தான் இரண்டு இலக்கம் கோடிப் பணமாம். தூய்மைப்படுத்துவது போன்று படம் காட்டி அதை விளம்பரப்படுத்திக் கொள்ளும் இந்த மோடிகளின் ஏய்ப்புகளையும் கயவாளித்தனங் களையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களாலும், இந்திய பார்ப்பனிய வைதீக, சாதிய நிறுவனங்களாலும் வெளியிடப்பட்டு நொதித்துக் கொண்டிருக்கும் குப்பைக் கூளங்களை அழித்துத் தூய்மைப்படுத்த வேண்டும் எனும் கருத்தை மறைப்பதற்காகத்தான் மோடியின் இந்தத் தூய்மை இந்தியா எனும் ஏய்ப்புத் திட்டம்.

ஆக, மோடி எனும் இந்தியக் கட்டியங்காரர் அறிவித் திடும் இந்தியாவில் உருவாக்குங்கள், தூய்மையான இந்தியா எனும்படியான திட்டங்கள் எல்லாம் இந்தியாவில் உள்ள தேசங்களை விழுங் கிடும் இந்தியக் கயவாளித் திட்டமே அல்லாமல் வேறல்ல.

அத்திட்டங்களை அம்பலப்படுத்துவதோடு நில்லாமல் மோடியின் முகத்திரையை மட்டுமன்று இந்தியாவின் முகத்திரையையும் கிழித்தெறிவதன் மூலம் மட்டுமே தமிழகத்தின் மீது படிந்திருக்கும் அழுக்குகளைத் தூய்மைப்படுத்த முடியும். தமிழ்த் தேசத்தை தன்னிறைவு தேசமாக உருவாக்கிடவும் முடியும்.

Pin It