2005 தொடங்கி தொடர்ந்து இது நாள்வரை பல்வேறு போராட்டங்களும், விழிப்புணர்வு பேரணிகளும் எழுச்சிமிகு பொதுக் கூட்டங்களும் பாலாற்றைக் காப்பதற்கென நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நிகழ்வுகளிலும் பல படிப்பினைகள் கிடைத்தன. பரவலாகப் பல இயக்கங்கள் ஒன்றிணைந்து இப்போது செயல்படுகின்றன.

2014 (மீண்டும்) பிரிக்கப்பட்ட சீமாந்திராவின் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்ட சந்திரபாபு பாலாற்றில் அணை கட்டப்படும் என்று கூறினார். அதற்குத் திமுக தலைவர் கருணாநிதி ஓர் அறிக்கை கொடுக்க, தமிழக முதல்வர் ஜெயலலிதா கருணாநிதிக்கு எதிராக ஓர் அறிக்கை கொடுத்துப் பாலாற்றைக் காக்கத் தொடர்ந்து குரல் கொடுப்பதாகவும் 1892 ஒப்பந்தம்படி பாலாற்றின் உரிமைக்காக நீதிமன்றத்தில் உரிமை கோரப் போவதாகவும் கூறினார்.

1892 ஆம் ஆண்டு ஒப்பந்தமும் 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தமும் காவிரிக்காக போடப்பட்டதாகும். அதன் 14வது பிரிவில் உள்ள (எ) அட்டவணையில் உள்ள 15 ஆறுகளில் பாலாறும் ஒன்று. ஒப்பந்தத்தின்படி துணை ஆறுகளில் அணை கட்ட தொடர்புடைய (மாநில) அரசுகளைக் கோர வேண்டும் என்பதே விதி. ஒப்பந்தத்தில் உள்ள முதன்மையான காவிரிச் சிக்கலை தீர்க்கவே திண்டாடும்போது வலுவற்ற ஓர் ஒப்பந்தப் பிரிவை வைத்துக் கொண்டு இன்றும் பாலாற்றைக் காக்க முடியும் என்று கூறுவது சரியான நடவடிக்கை ஆகாது. மேலும் பாலாற்றுச் சிக்கல் குறித்து மற்ற இயக்கங்கள் ஏதும் வாய் திறக்கவோ இயக்கங்கள் ஏதும் மேற்கொள்ளவில்லை. தமிழகத்தின் சிக்கலாக இது பார்க்கப்படாமல் இருக்கிறது.

பாலாற்றுச் சிக்கலுக்கு நடுவர் தீர்ப்பாயம்

6.6.2014 ஆம் நாள் காஞ்சிபுரத்தில் 5 மாவட்ட உழவர்கள் பாலாறு கூட்டு இயக்கத்தில் கலந்து கொண்ட கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது. அருங்குன்றம் தேவராசன் முன்னிலை வகிக்க சமுனா தியாகராசன், வழக்குரைஞர் ச.ந.ச. மார்த்தாண்டன், பசுமைத் தாயகம் ஏ.சி. வெங்கடேசன், வாணியம்பாடி முல்லை, இரா. பத்மநாபன், அ.பத்மநாபன், தமிழினியன், குணசீலன், வேளாண் மாணவி செந்தாமரை உள்ளிட்டு 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாலாற்றுச் சிக்கலுக்காக நடுவர் தீர்ப்பாயம் அமைக்கக் கோரியும் 5 மாவட்டம் தழுவி பாலாற்றுச் சிக்கலை மக்களுக்கு விளக்க 100 கூட்டங்கள் நடத்துவது பாலாற்றில் தோல் கழிவு ஆலைக் கழிவுகள் விடுவதைத் தடுப்பதுடன் வெளிநாட்டி லிருந்து தோல் கொண்டு வந்து தூய்மைப்படுத்து வதைத் தடை செய்வது பழையபடி இயற்கை முறையில் தோல் பதனிடுதல் செய்ய ஊக்குவிப்பது பாலாற்றில் சீமாந்திரம் அணைக் கட்டுவதை எதிர்ப்ப துடன் இந்திய அரசு பாலாறு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடக் கோருவது, மழை தரும் காடுகளைப் பாலாற்று படுகை முழுவதும் வளர்ப்பது, தமிழக மணல் கொள்ளையை உடனே நிறுத்துவதுடன் பாலாறு செய்யாற்றில் தடுப்பணைகள் கட்டுவது உள்ளிட்டுப் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

பலரும் கவனம் செலுத்தும் முதன்மை சிக்கலாகப் பாலாற்றுச் சிக்கல் இன்று வளர்ந்து வருகிறது. அதற்காக நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டி யுள்ளது.

அண்டை மாநிலங்களில் மக்களின் பக்கம் அரசு நின்று ஆற்றைக் காக்கவும் இந்திய அரசை எதிர்த்து சட்டவிரோதமாக தமிழக ஆற்று நீர் உரிமையை மறுத்தும் வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் ஆற்றைக் காக்க உயிரைப் பணயம் வைத்துப் போராட வேண்டிய அவல நிலை உள்ளது.

நம் முன்னோர் கூறிய நீரின்றி அமையாது உலகு என்ற அறிவியல் உண்மையை நாம் இன்று வேறு வகையில் பார்க்க வேண்டியுள்ளது. இந்திய அரசு சட்டப்படி ஆற்று நீரைப் பெற்றுத் தராதபோது இருக்கின்ற நீர் ஆதாரத்தைக் காத்து உரிமை பெற வேண்டிய தமிழக அரசு மணற் கொள்ளையர் களுக்குத் துணை போக நின்று நீர் நிலைகளை அழித்து வரும் நாளில் தமிழர்களே! நீர் நிலைகளைக் காக்கத் தவறும் தமிழர்களே! நீர் இன்றி அமையாது உலகு என இடித்துரைப்பது போல் அக்கூற்று உள்ளது.

வாருங்கள் தமிழர்களே! பாலாற்றைக் காப்போம்! எதிர்காலத் தலைமுறை வாழ...

Pin It