2014 அக்டோபர் 5 ஆம் நாள் திருச்சியில் நடைபெற்ற சாதிமறுப்புத் திருமணத்தில் பெண்கள் மீதான வன்கொடுமைத் தடுப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகில் உள்ள பூதிப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியை விமலாதேவி, திலீப் குமாரைக் காதலித்துச் சாதி மறுப்புப் பதிவுத் திருமணம் செய்து கொண்டார். இவ் இணையர் இணைந்து வாழ்ந்து வந்த சூழ்நிலையில், காவல் துறையின் உதவியோடு விமலாதேவியைத் திலிப்குமாரிடமிருந்து பிரித்து வந்து, அவரது பெற்றோர் எரித்துக் கொன்று விட்டனர். இந்தக் கௌரவப் படுகொலையைத் தற்கொலை என்று மூடி மறைக்க முயல்வதை இம்மாநாடு வன்மை யாகக் கண்டிப்பதோடு இவ்வழக்கை இந்தியப் புலனாய்வுத் துறை கொண்டு உசாவ வேண்டும் எனவும் இம்மாநாடு வேண்டுகிறது. மேலும் சாதிமறுப்புக் காதல் திருமணத்தில் இதைப் போன்ற கௌரவக் கொலைகள் என்ற பெயரில் நிகழ்த்தப் படும் சாதிவெறிப் படுகொலைகளைத் தடுத்திட சனநாயகக் கட்சிகள் முன்வரவேண்டும் என்று இம்மாநாடு கோருகிறது.

2. சாதி மறுப்புத் திருமண இணையர்களைப் பாதுகாக் கச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என உச்சநீதி மன்றம், இந்தியச் சட்ட ஆணையம் மற்றும் இந்திய மகளிர் ஆணையம் ஆகியன பரிந்துரை செய்துள்ள தைக் கருத்தில் கொண்டு தேவையான சட்டத்தினை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இயற்ற வேண்டும்.

3. சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக் குத் தனி ஆணையம் அமைத்து, அவர்களுடைய குழந்தைகளுக்குச் சிறப்பு ஒதுக்கீடு வழங்க வேண் டும். மேலும் அக்குழந்தைகளுக்குத் தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தரமான இலவசக் கல்வியை அரசே வழங்க வேண்டும்.

4. சாதி மறுப்புத் திருமணம் புரிந்தோரின் குழந்தை களை ஏதாவது ஒரு சாதியில் தள்ளி இழிவுபடுத் தாமல், "சாதியற்றவர்' என அவர்களைப் பதிவு செய்ய வேண்டும்.

5. சாதி மறுப்புத் திருமணம் புரிந்தோர், சமூக அங்கீகாரம் பெறும் வகையில் அவர்களை "நாட்டின் சிறப்புரிமை பெற்ற குடிமக்கள்' என்று அறிவித்து, அரசு சிறப்பிக்க வேண்டும். இதனை ஊடகங்கள் மூலமாகவும், அரசுச் செலவில் பரப்புரை செய்ய வேண்டும்.

6. சாதி மறுப்புத் திருமணம் புரிந்த ஏழைகளுக்குப் பொருளாதாரப் பாதுகாப்புக் கருதி இலவசமாக ஒரு வீடும், சிற்×ர்ப் பகுதியில் 3 ஏக்கர் நிலமும் வழங்க வேண்டும்.

7. திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக ஏற்பிசைவு செய்வதோடு, அவர்களுக்குரிய சமூக அங்கீகாரமும், சட்டப் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என இம்மாநாடு வேண்டுகிறது.

8. சாதி, மத, ஆணாதிக்கப் பிற்போக்குச் சக்திகள், பண்பாடு என்ற பெயரில் பெண்கள் மீது தொடுக்கும் கருத்தாதிக்கத்தை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தகைய சீர்குலைவுச் சக்திகளை இனங்கண்டு, அவர்களைச் சனநாயக சக்திகள் புறக்கணிக்க வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

9. தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுப்பதையும், திருவண்ணா மலை வேடியப்பன் கவுந்தியப்பன் மலையில் இரும்புத் தாது எடுப்பதையும், கூடங்குளம், கல்பாக்கம் ஆகிய பகுதிகளில் புதிய அணு உலைத் திட்டங்களைச் செயல்படுத்துவதையும் தேனியில் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை முன்னெடுப் பதையும் கைவிடுமாறு இந்திய, தமிழக அரசுகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

10. கல்வி, வேளாண்மை, நீர்வளம் மற்றும் கனிம வளம் ஆகியவை மக்களுக்குச் சொந்தமானவை என்னும் சனநாயக நடைமுறையை மாற்றி, அவற்றைப் பெரு முதலாளிகளுக்குத் தாரை வார்க்கும் பாரதீய சனதா அரசை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

11. பாரதீய சனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் இந்தி மற்றும் சமசுகிருத மொழிகளைத் திணிப்பதையும், ஆசிரியர் நாள் விழாவை "குரு உத்சவ்' என மாற்றியமைத்ததையும், இந்தியாவை "இந்துசுதான்' என அழைக்க வேண்டும் என ஆர்.எசு.எசு. வலியுறுத்துவதையும் இம் மாநாடு முழுமையாக எதிர்ப்பதோடு, வர்ணாசிரம பழமைவாதக் கண்ணோட்டத்தோடு இந்நாட்டைப் பிற்போக்குப் பாதையில் திருப்ப முனைவதையும் இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

12. தமிழீழ மக்களை இனப்படுகொலை புரிந்த இராசபக்சேவுக்கு எதிராக ஆதாரங்களைத் திரட்ட இந்தியா வரவிருந்த ஐ.நா. வல்லுநர் குழுவிற்கு அனுமதி மறுத்து, சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவளிக்கும் மோடி அரசை இம் மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

13. இந்துத்துவமும் சாதியமும் வேகமாகப் பரவி வரும் இன்றைய சூழலில், சாதி மத பேதம் கடந்து சமத்துவத் தமிழச் சமுதாயம் படைக்க முன்வருமாறு தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்கம் அறைகூவி அழைக்கிறது.

 

Pin It