உண்ணும் உணவுக்கும்
உடுக்கும் உடைக்குமே
எண்ணி எண்ணியே
ஏங்கிய நெஞ்சொடும்
கடுத்த வயிறொடும்
காந்திய கண்ணொடும்
படுத்துக் கிடந்து
பகற்கனாக் காணும்
பாட்டாளி உலகம்
பலகோடி இருக்கையில்
ஆட்டமும் பாட்டமும்
ஆரவாரங்களும்
கொண்ட கலைகளும்
கூத்தும் தேவையா?
மண்டும் இந்நிலைதான்
பாரத மாண்பா?
எடுத்த எடுப்பில்
உலகம் என்கிறாய்!
உடுத்த உடையிலும்
ஊர்மெச்சும் பேச்சிலும்
மக்களை ஏய்க்கும்
மதவிழாக் களிலும்
ஒக்க பாரத
ஒற்றுமை என்கிறாய்!
கலகம் என்கிறாய்,
கருத்துகள் சொன்னால்!
உலகை ஏமாற்ற
ஒருமைப் பாடென்கிறாய்!
பாரதப் பெருமையே
பகற் கொள்ளை என்றால்
ஊரதிரும் புரட்சி
ஒன்று தேவையே!

Pin It