ஏப்ரல் 13 இல் நடக்க இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல் தமிழக மக்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது. தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தத்தம் அணிகளைப் பலப்படுத்திக் கொண்டு தேர்தல் களத்தில் மோதிக் கொண்டுள்ளன. ஆட்சி அமைப்பதற்காக இவர்கள் படும் பாடு கொஞ்சமல்ல. எப்படியாவது முதல்வராக வேண்டும் என்ற பதவி வெறி கருணாநிதிக்கும், செயலலிதாவுக்கும் உச்சத்திற்கே ஏறிவிட்டது. இவர்கள் மாறிமாறி எந்தளவுக்குக் கேவலப்படுத்த முடியுமோ அந்தளவுக்கு வாஞ்சையோடு வசைபாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த வெட்கக் கேட்டைக் கேட்பதுதான் தமிழக மக்களின் வேலையா?

தரம் தாழ்ந்த தனிநபர் விமர்சனங்கள், இருவரின் ஆட்சியில் நடந்த ஊழல் பட்டியல்கள், ஆதிக்க வெறி இப்படி மாறிமாறி மக்கள் மன்றத்தில் தங்களைத் தோலுரித்துக் காட்டிக் கொண்ட போதிலும் எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் நானே முதல்வர் என்று முழங்கிக் கொண்டு வீதிக்கு வர இவர்களாலும் முடிகிறது. நம் மக்களும் உணர்ச்சியற்று வரவேற் கின்றனர். என்ன செய்வது? ஓட்டுப் போடுவது நமது பிறப்புரிமை! என்று சொல்லிவிட்டார்களே!

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும், நாடாளு மன்றத் தேர்தலிலும் ஊழலை ஒழிப்பதற்காகவே அவதாரம் எடுத்த விசயகாந்த், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஊழல்வாதிகள். தமிழகத்தை மாறிமாறி 40 ஆண்டுகாலமாகக் கொள்ளையடித்துக் கொண்டிருக் கின்றனர். எனக்கொரு வாய்ப்பு கொடுங்கள். நான் உங்களுடன்தான் கூட்டணி வைத்துள்ளேன் என்று மக்களிடம் மன்றாடிய விசயகாந்த் இன்று செயலலிதாவுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்.

சி.பி.எம்., சி.பி.ஐ. போன்ற பொதுவுடைமைப் புரட்சிகள் புரட்சித் தலைவியோடு சேர்ந்து புரட்சி செய்தால் போதும் என்ற முடிவுக்கு வந்து விட்டனர் போலும். அ.தி.மு.க.வின் கொள்கைப் பரப்பாளர் களாக வலம் வந்து கொண்டுள்ளனர்.

காங்கிரசு, பா.ம.க., வி.சி.க. போன்ற கட்சிகள் கலைஞரை 6ஆவது முறை முதல்வராக்குவதே எங்களின் இலட்சியம் என்று முழங்கிக் கொண்டுள்ளனர். என்னதான் செயலலிதாவும், கருணாநிதியும் ஊழல் ராணி, ஊழல் இராசாவாக இருந்தாலும் ஒவ்வொரு தேர்தலின் போதும் அணி மாறும் கூட்டணிக் கட்சிகள்.

தற்போது கூட்டணி தலைமையைப் புகழ்வதும், எதிரணியை ஏசுவதும், கூட்டணி மாறும்போது ஏசிய தலைமையை வானுயர புகழ்பாடுவதும் கடந்த கூட்டணியில் புகழ்ந்தவரை இப்போது ஏசுவதும் வாடிக்கையாக வைத்துள்ளனர். ஓ.. இதுதான் கூட்டணி தர்மமோ?

கடந்த தேர்தல்களைவிட இந்தத் தேர்தலில் சில உண்மைகளை வெளிப்படையாக ஒத்துக் கொண்டுள் ளனர். எங்கள் கூட்டணி கொள்கைக் கூட்டணி என்று இப்போது யாரும் சொல்வதில்லை. சீட்டுக்கும் நோட்டுக்கும் தான் எங்கள் கூட்டணி என்று வெளிப்படையாகவே பேரம் பேசத் தொடங்கி விட்டனர்.

கொள்கையைப் பேசித் தான் கொள்ளை யடிக்க வேண்டும் என்ற நிலை இப்போதில்லை. ஒவ்வொரு ஓட்டும் மதிப்பு மிக்க சந்தைப் பொருளாக மாறி விட்டது. ஓட்டுக்கு விலை உண்டு. அதுவும் நல்ல விலை உண்டு. ஓட்டு சந்தைப் பொருளாக மாறிய பிறகு இனிக் கொள்கைக்கு என்ன வேலை? ஓட்டு சதவீதத்தில் இருந்தால் சீட்டு, எண்ணிக்கையில் இருந்தால் நோட்டு.

இதை விட வெட்கக் கேடு அவர்கள் வெளி யிட்டுள்ள தேர்தல் அறிக்கை. மாறி மாறி இலவச அறிவிப்புகள்.

முதலாளிகள் தங்களிடம் உள்ள சந்தைப் பொருளை விற்பனை செய்ய ஒரு வணிக, தந்திரமாகக் கொண்டு வரப்பட்டதுதான் இலவசங்கள். இப்படி வணிகப் போட்டிகளுக்காக உருவாக்கப்பட்ட இலவசங்களை இப்போது தேர்தல் போட்டிக்கான இலவசங்களாகவும் மாற்றி விட்டனர். வளர்ந்து வரும் கார்ப்பரேட் முதலாளித்துவத்துடன் எந்தளவு இந்தத் தேர்தல் நெருங்கியிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டை ஆள ஆசைப்படுகிற இவர்களுக்கு இந்த நாட்டைப் பற்றியும், நாட்டின் பொருளாதாரம், இன்றைய மக்களின் வாழ்வாதாரம், எதிர்கால மக்களின் வாழ்க்கைத் தரம் குறிப்பாக மக்களுக்குத் தேவையான மருத்துவம், கல்வி, உணவு போன்ற அடிப்படைத் தேவைகள் குறித்துத் தொலை நோக்குப் போர்வை யாருக்காவது இருக்கிறதா?

நமது தேசத்தின் தொழில் ஆதாரமான உழவு, நெசவு, மீன் பிடிப்பு, சிறு சில்லறை வணிகம், தொழில் உற்பத்தி போன்ற தொழில் துறைகளை வளப்படுத்த குறைந்தபட்சத் திட்டம் = செயல்திட்டம் ஏதாவது முன் வைத்துள்ளனரா? எல்லாவற்றையும் மாறிமாறிப் பன்னாட்டு முதலாளிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு, இலவசம் என்ற பெயரில் மக்களுக்கு வாய்க்கரிசி போடுகின்றனர்.

இதைவிடக் கொடுமை அவர்கள் பேசும் மாநில உரிமை எல்லாவற்றையும் விட வேடிக்கையானது. நாங்கள் கச்சத் தீவை மீட்போம், தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவோம், தமிழகத்தின் ஆற்று நீர் உரிமைக்குப் போராடுவோம் என்று வாக்குறுதி வழங்குகின்றனர். இரு தரப்பினரும் ஒவ்வொரு தேர்தலின் போதும் தவறாமல் இதைச் சொல்லிவிடுகின்றனர். ஆனால் அவர்கள் ஒருபோதும் நமது உரிமையை மீட்டுக் கொடுக்கவில்லை. மீனவனின் சாவைத் தடுத்து நிறுத்தவில்லை.

என்ன செய்வது? இவர்கள் தான் நமது தேசத்தை ஆளப் போகிறார்கள். இதில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி. நீங்கள் சனநாயகக் கடமையாற்ற மிகச் சிறந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது. மறக்காமல் வாக்களியுங்கள். இப்படி ஒரு குரல் உங்களை ஓயாமல் தொல்லை செய்து கொண்டுள்ளது.

சனநாயகக் கடமையாற்றக் காத்திருக்கும் உங்கள் ஓட்டு யாருக்கு?

நேற்றைய கொள்ளையருக்கா?

இன்றைய கொள்ளையருக்கா?

இல்லை நாளைய கொள்ளையருக்கா?

Pin It