வைகறைப் பொழுது, எழுஞாயிறின் மின்னொளி இருட்டுக்கு மெல்ல வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தது. இரவாடிகளின் ஓசை அடங்கி பகலாடிகளின் பரபரப்புத் துவங்கிய நேரம். எங்கள் ஜீப், கிர் சரணாலயத்தின் மேற்குப் புறக் காட்டுப் பாதை ஒன்றில் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. இடது புறத்தில் காய்ந்து நின்று சிறு வேலமரத்தில் (?) என்ற ஒரு வகை தேன்சிட்டு துருதுருவென அசைந்தது. அதை பைனாகுலரில் தரிசித்து நின்றோம்.

Lion கருநீல நிற உருவத்தில் நீண்டு வளைந்த அலகும், இறக்கைகளின் மேல் நுனியில் மின்னலடிக்கும் சிவப்புப் புள்ளியும் தெளிந்த அடையாளங்கள் அப்படித்தான் தெரிகிறது. இப்பறவை வகை தீபகற்ப இந்தியாவுக்கே உரியதென்று, மங்கிய ஒளியில் அதை கூர்ந்து நோக்கியவாறு நின்று கொண்டிருக்க ‘சிங் சிங்' என்ற வழிகாட்டியின் ஆண் குரல் எங்களை திடுக்கிடச் செய்தது. திரும்பிப் பார்த்த போது எதிரே ஒரு ஆண் சிங்கம் மெல்ல நடந்து போய்க் கொண்டிருக்கிறது. திகைத்துப் போனோம். தானாகவே எங்கள் கைகள் குலுக்கிக் கொண்டன. ஆம்.அதுவே அரிய ஆசிய சிங்கம்...

வீரம் அல்லது அச்சம் என்ற மூடநம்பிக்கை அடிப்படையில் இந்தியக் கலை, கலாச்சாரத்தில் சிங்கத்திற்கும் இடமுண்டு. தமிழகத்தின் தொல் இலக்கிய காலத்தினர் அறியாத சிங்கத்திற்கு அரிமாவென யார் பெயர் சூட்டினர்? ஹரி என்ற பெயர்ச்சொல் வேரில் உருவான இது சமய இலக்கியக் காலத்தில் உருவாகியிருக்கக் கூடும்.

இலக்கியப் புனைவாக காடுகளின் அரசன் என சிங்கம் வர்ணிக்கப்பட்டாலும் இந்தியக் காட்டில் புலிதான் உண்மையான அரசனாகும் என்பது அறிவியல் பூர்வமான முடிவு. இருப்பினும் வேங்கைகள் இல்லாத ஆப்பிரிக்கக் காடுகளில் சிங்கமே அரசனாக்கப்படுகிறது.

சிங் என்ற குஜராத்திச் சொல் சிங்கம் என்று தமிழாக்கப்பட்டது. இதேபோல இந்தியில் சிங்கத்தையும், புலியையும் ஷேர் என்றே குறிப்பிடுகின்றனர். இந்த வழியில் உருதுவும் ஷேர்கான் என மனிதர்களை அழைக்கிறது. சீக்கியர்களின் "சிங்' அடைமொழியாக சுர்ஜித் சிங் முதல் இக்பால் சிங், ஏன் சிறுமலை சிங் என்ற நரிக்குறவர் வரை ஒரே குழப்பம் தான்.

இந்திய அரசின் இலட்சினை மூன்று சிங்கங்களுடன் பெருமையாக காட்சி அளிக்கிறது. இனம் குறிப்பிடப்படாத பொதுவான இச்சிங்கம் 1970 களில் புலியை தேசிய விலங்காக அறிவிக்கப்படும் வரை பெருமையுடன் அப்பதவியிலிருந்தது. தென் குஜராத் மாநிலத்தின் கத்தியவார் மாவட்டத்திலுள்ள கிர் சரணாலயமே ஆசிய சிங்கங்களின் தற்போதைய ஒரே வாழிடம். ஆப்பிரிக்காவின் பெரிய அடர்ந்த பிடரி முடிச்சிங்கத்தைப் போலின்றி சிறிய பிடரி மயிர்களோடு அடிவயிற்று மடிப்பையும் ஆசிய சிங்கம் கொண்டிருக்கும். இது மட்டுமல்ல. வாழி வேறுபாடுகளும் வெகுவாக மாறுகிறது.

சுமார் 6000 வருடங்களுக்கு முன் வடமேற்கிலிருந்து இந்திய பகுதிக்குள் நுழைந்த சிங்கங்கள் இன்றைய உத்தரப்பிரதேசம் வரை கடந்த 100 ஆண்டுகட்கு முன்பு வரை பரவி வாழ்ந்திருந்தன. காடழிப்பும், வேட்டையும் ஆசிய சிங்கங்களை குஜராத் ஜுனாகத் மாவட்டத்திற்குள் ஒடுக்கிப்போட்டன. பண்டைக் காலத்தில் கிரீஸ், ஈராக், ஈரான், அரேபியா, ஆப்கானிஸ்தான் பிரதேசங்களில் வாழ்ந்த ஆசிய சிங்கங்கள் இப்போது எல்லா இடங்களிலும் அழிக்கப்பட்டுவிட்டன. இந்தியச் சிங்கங்களின் வாழ்விடத்தினுள் ஆங்காங்கே வாழும் ஒரு வகை தனித்த கிராமத்தார்களான மால்தாரிகளே இந்த கம்பீரமான ஊனுண்ணிகளின் வாழிடச் சீர்கேடுகளுக்கு கர்த்தாக்களாகும். ஒட்டுப் பொறுக்கும் அரசியல் இதைப் பாகுபடுத்திச் சீராக்கிட முன் வருவதே இல்லை. மாறாக இயற்கையுடன் இயைந்து வாழ்பவர்களாக அவர்களைப் போற்றுவது பெரும் முரண்பாடாகும்.

ஒருவேளை கொள்ளை நோயாலும் திடீரென முற்றாக இந்த இனமே பூண்டற்றுப் போகக் கூடிய நிலையில், முன்பு வாழ்ந்த இடமான சந்திரப் பிரபா(உ.பி), குனோ (ம.பி) தேசியப் பூங்காக்களுக்கு சில குடும்பத்தை இடமாற்றம் செய்யலாம் என்ற ஆராய்ச்சியாளர்களின் பரிந்துரையை மோடி அரசு நிராகரித்தது. காரணம் சிங்கம் குஜராத் மாநிலத்தின் தனியுடைமையாம். சர்வ அதிகாரம் கொண்ட மத்திய அரசு இப்பிரச்சினையில் கள்ள மௌனம் காக்கிறது.

காட்டரசன் என்று நம்மால் சிங்கம் அழைக்கப்பட்டதற்கு ஆங்கிலமும், ஆங்கிலப் பண்பாடும் தான் காரணம். இதைப் போலவே ஆரியப் பண்பாட்டில் தான் நரசிம்ம அவதாரப் புனைவுகளும், புராணங்களும் துவக்கத்தில் இவ்வவதாரத்தின் சிங்கத்தலை ஆசிய சிங்கமாகவே இருந்திருக்கக்கூடும். ஆனால் காலம் மாற மாற வெகுசன ஊடகங்களின் விளைவால் நரசிம்மத்தின் தலை ஆப்பிரிக்கச் சிங்கங்கமாக மாற்றப்பட்டுள்ளது அரசியல் புரிய ஓவியர்களால்.

ஆசிய சிங்கம் புலியைப் போல பெரியது அல்ல. மேலும் வேங்கை போல அடர்ந்து, செழித்த பெருங்காடுகளில் வாழாமல் முட்புதர், குறுமரங்கள் வெயில் தகிக்கும் திறந்தவெளி, வறண்ட காடுகளில் வாழ்வதையே சிங்கம் விரும்புகிறது. வடமேற்கு இந்தியா முழுவதும் இது போன்ற காடுகளிலெல்லாம் காணப்பட்ட ஆசிய சிங்கங்கள் 1845 இல் முற்றிலும் அழிக்கப்பட்டு விடும். நிலையிலிருந்த போது சரியான நேரத்தில் ஜுனாகத் நவாப் என்ற அப்பகுதியின் குறு நில முஸ்லிம் மன்னர் தகுந்த நடவடிக்கை எடுத்துப் பேணிக் காப்பாற்றியது வரலாற்றுப் புகழ் பெற்றதொரு நடவடிக்கை. ஆனால் 1911ல் நவாப் காலமானதைத் தொடர்ந்து வேட்டை மீண்டும் விறுவிறுப்பாகத் தொடங்கியது. இதன் விளைவு இரண்டே வருடங்களில் வெறும் 20 சிங்கங்களே திரிந்து கொண்டிருந்தன.

எப்படியோ சாசன்கிர் காட்டில் தப்பிப் பிழைத்து வாழ்ந்த அந்த சில சிங்கங்களின் எண்ணிக்கை 1974 இல் தான் சட்டத்தின் முழுப்பாதுகாப்பில் 180 ஆக அதிகரித்தது. இவை மேலும் 205 ஆக 1979இல் பெருகியது. இன்று அவை சுமார் 350 அளவுக்கு இருந்தாலும் இந்த எண்ணிக்கையும் அழியும் ஆபத்தான நிலை தான் என காட்டுயிரியலாளர் தெரிவிக்கின்றனர். எல்லாப்புறமும் மனிதத் தலையீடு கொண்ட கிர் சரணாலயம் ஏறத்தாழ 1280 ச.கி.மீட்டர் பரப்பளவேயுள்ள சிறு பகுதியாகும். மனிதப் பெருக்கம், கால்நடைப் பெருக்கம், வேளாண் விரிவாக்கம், சாலைகள், இரயில் பாதைகள் இன்னும் முன்னேற்றம் என்ற வகையில் தொழிற்சாலை மாசுபாடுகள் யாவும் எதிர்காலத்தில் அரிய ஆசியச் சிங்கங்களைக் காப்பாற்ற இயலுமா என்ற கேள்வியை உரத்து எழுப்பியுள்ளன.

ஒரு நாட்டின் மெய்யான புகழும், பெருமையும் உயிரினங்களின் நல்வாழ்விலேயே அடங்கியுள்ளன. இந்த வகையில் அரிய பூனையான கடைசி ஆசிய சிங்கங்களின் குரல்வளை குஜராத் மக்களின் கைகளில் தான் உள்ளது. இது புரியாது ஆதிக்க அரசியல் பொருளாதாரச் சக்தியாக மாறவே திட்டமிடும் அவர்களின் சிந்தனையைப் பொறுத்ததே சிங்கத்தின் உயிர் வாழ்க்கை. இது எல்லா மாநில மக்களுக்கும், எல்லா விலங்குகளுக்கும் பொருந்தும் தான்.

ஒரு 100 அடி இடைவெளியில் அந்த மஞ்சள் பழுப்பு நிறப் பெரும் பூனை சிறிது தூரம் நடந்த பின் படுத்துக் கொண்டது. 5, 6 நிமிடம், மீண்டும் எழுந்து நடக்க... சுமார் 15 நிமிடம் தன்னைப் பின் தொடர பொறுமையாக அனுமதித்து எங்களை, சிங்கநடை திடீரென காட்டுப் பாதையின் குறுக்கே ஒட்டமாகி ஒரு பெரிய துமிக்கி (தெண்டு) மரத்தடியில் எழுந்து நின்று தனது நகங்களை பிராண்டி அரிப்பைப் போக்கிக் கொண்டு, அதனடியில் கால்களுக்கிடையே தலை தாழ்ந்து படுத்துக் கொள்ள நாங்கள் படம் பிடித்தோம்.

காமிராக்கள் மின்னலாக ஒளியைப் பளிச்சிட்டன. சிங்கம் மெல்ல தலையை உயர்த்தி எங்களைப் பார்க்க நாங்கள் மேலும் மேலும் சுட்டோம் காமிராவால். சட்டென தலையைத் திருப்பி, எங்கள் இடது புறமுள்ள உயர்ந்ததொரு மேட்டைக் கவனித்ததும் எழுந்து ஓடத் துவங்கியது. நாங்களிருந்த வண்டிப் பாதையின் குறுக்கே ஓடிப்போய் அந்த மேட்டின் மேலேறியது. எங்கள் தலைகள் ஒன்று போல் திரும்பின. அந்த மேட்டின் மீது இரண்டு பெண் அரிமாக்கள் எதையோ அப்பால் பார்த்துக் கொண்டிருந்தன. ஒரு சில நிமிடங்களில் பெண் சிங்கங்கள் அந்தப்பக்கம் மெல்ல இறங்க, அவற்றைத் தொடர்ந்து நமது இளம் ஆண் அரிமாவும் இறங்க எங்கள் பார்வையிலிருந்து எல்லாம் மறைந்தன.

தமிழில் - ஆதி.
நன்றி : தி ஹிந்து
Pin It