அக்டோபர் மாதம் வெளியான சமூக விழிப்புணர்வு இதழில் அருந்ததிராயின் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு ‘காஷ்மீருக்கும் மக்களுக்கும் விடுதலை’ என்ற பெயரில் வெளி வந்திருந்தது. அது கண்டு ஜெயமோகனுக்கு பொறுக்கவில்லை. ஆத்திரம் தலைக்கேற விமர்சனம் என்று நச்சுகளை கக்கியிருக்கிறார். சமூக விழிப்புணர்வு பற்றியும் அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார். அதுபற்றி இதழின் வழக்கறிஞர்கள் கவனித்துக் கொள்வார்கள். ஜெயமோகனின் இதர அவதூறுகளை இங்கு விவாதிப்போம்.

நவீன இலக்கிய முகத்தோடு வர்ணாசிரம இந்துத்துவத்தை ஓட்டைப் படகில் கரையேற்ற வந்திருப்பவரே ஜெயமோகன். ஆர். எஸ். எஸ். ஸின் ஆக்டோபஸ் கைகளில் ஜெயமோகனும் ஒன்று. அவர் எழுதிய நாவல்கள் வாசகர்கள் படிப்பதற்கு முன்னரே அது உலகத் தரத்திலானவை என்று அவரே சொல்லி அதற்கொரு பீடம் கட்டிக் கொள்வார். இந்துத்துவாவிற்கு இது ஒரு சோதனைக்காலம்; எனவே, ஜெயமோகனுக்கும் இது ஒரு சோதனைக் காலம். பொறுத்துப் பார்த்தும் இந்துத்துவப் பருப்பு வேகவில்லை. பண்டாரி ஜெயமோகனுடைய பொறுமையும் காலாவதியாகிவிட்டது. இப்போது நேரடியான இந்துத்துவப் பெருச்சாளியாகவே கட்டுச் சோற்றுக்குள் புகுந்துவிட்டார். இனி எப்படி உண்பது?

அருந்ததிராயின் மீது ஜெயமோகனுக்கு என்ன காய்ச்சல்? ஜெயமோகனின் உள்மனப் போராட்டத்தைக் கண்டுபிடித்தால்தான் அதுபற்றிச் சொல்ல முடியும். காஷ்மீர்ப் பிரச்சனையை அருந்ததிராய் தன் கையிலெடுத்ததும், ஜெயமோகனுக்கு பற்றிக் கொண்டு வந்துவிட்டது. உடனே முஸ்லீம்கள் மீதும், இஸ்லாத்தின் மீதும் விழுந்து பிராண்ட ஆரம்பித்துவிட்டார். திருமண வீட்டில் தீவிரவாதிகள் இருப்பதாக இராணுவம் செய்து கொள்கின்ற ‘கற்பனை’க்கே பத்து காஷ்மீரிகள் பலியாக வேண்டும். நான்கு காஷ்மீர் இளைஞர்கள் பேசிச் சிரித்துக் கொண்டு வந்தாலே தீவிரவாதிகளாகி விடுவார்கள். அடுத்த நிமிசத்தில் அந்த இளைஞர்கள் ‘‘காணாமல் போய்’’விடுவார்கள். நள்ளிரவில் சிறுநீர் கழிக்க வெளியே வருகின்ற சிறுவனை, நேரடியாகவே சொர்க்கப்புரிக்கு அனுப்பி வைக்கும் இராணுவம். காஷ்மீரத்தின் துயரங்கள் பல லட்சம் கோடிகள்.

இந்துத்துவக் கைக்கூலி ஜெயமோகனுக்கு இங்கேயெல்லாம் இலக்கியம் பீறிடாது. மேலும் இதுபோன்ற கனத்த துயரங்களை, அவலக் குரல்களைப் பதிவு செய்து இலக்கியத்தை மாசுபடுத்தி விடக்கூடாது என்பதும் இந்துத்துவக் கட்டளை. அழகியலும் கலையும் ரணகளத்துடன் சம்பந்தப்பட முடியாததுதானே! கற்சிலையாக குமரி அம்மன் கற்பாறையிலே காத்திருந்தால் அதல்லவோ பெரும் சோகம் அவருக்கு! ரத்த நாளமும் இதயத்துடிப்பும் கொண்ட துயரங்கள் அவருக்கு இந்துத்வக் கொண்டாட்டங்களாகவே ஏற்கப்படலாம். தலையணை தண்டியிலான நவீன இலக்கியங்கள், கொஞ்சூண்டு கவிதைகள், பெரும் விமர்சனப் பரப்புகள், எண்ணற்றப் படைப்பாளிகளுடனான உறவாடல்கள் என்று பெரும் நீரோட்டமாகவே ஓடிப் பாய்ந்த ஜெயமோகன் விகாசமான கடலில் சங்கமம் ஆகவில்லை; ஒரு சாக்கடைக்குள்ளேயே சுகவாழ்வு வாழும் கொசுவாகத்தான் முடிந்து போயிருக்கிறார்.

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவ முகாமிற்குள்ளேயே ஒரு துண்டு நிலப் பகுதியாக காஷ்மீரம் சுருட்டி வைக்கப்பட்டிருக்கிறதே, அது ஏன்? ஜெயமோகனின் ஆன்மீக ஒளியில் காஷ்மீரின் கருப்பு ஆகாயம் தெரியாமல் போன மர்மம் என்ன? ஆர். எஸ். எஸ். கட்டிய சேணங்களோடு ஜெயமோகனின் கண்களுக்கு வேறு என்னதான் தெரியப் போகிறது? அமர்நாத் போராட்டக்காரர்கள் காஷ்மீரிகளின் மீது பொருளாதாரத் தடைகளை மேற்கொண்டிருந்த போது அந்த உற்சாகப் பொழுதுகளில் ஜெயமோகன் ஒரு காஷ்மீர பண்டிட்டாகவே களிப்படைந்திருக்கிறார். அவருடைய இலக்கிய மேதாவிலாசம் ஒரு இனத்தின் துயரவெளியைக் கண்டடைய உதவலையே! அந்தப் பொருளாதார முற்றுகையை அமர்நாத் போராட்டக்காரர்களின் வடிவாய் நின்று நடத்தியவை பா. ஜ. க. வும் காங்கிரசும் இராணுவமும் ஊடகங்களும்தானே? ஜெயமோகனே, உன்னால் இதை மறுக்க முடியுமா?

அருந்ததிராயின் வரலாற்றுணர்வைக் கொச்சைப்படுத்தும் ஜெயமோகனின் வரலாற்றுணர்வு கால்வீசம் கூடத் தேறவில்லை. அதைத்தான் ‘எனது இந்தியா’ என்ற கட்டுரை தெளிவுப்படுத்துகிறது. காஷ்மீரிகள், அடிப்படை உரிமைகள் கூட இல்லாத ஒரு சர்வாதிகார அமைப்பின் கீழே சென்றுவிடத்தான் ஆசைப்படுகிறார்கள் என்பது ஜெயமோகனின் கண்டுபிடிப்பு. சரி, அது எப்படிப்பட்ட சர்வாதிகாரம்? தாலிபானிய அரசு சர்வாதிகாரமாம். அங்கே போனால் சிக்கிச் சின்னபின்னமாகிவிடுவோம் என்று தெரிந்தும் ஓர் இனம் முழுதுமே இப்படி ஒரு கூட்டுத் தற்கொலை முயற்சிக்குப் போகுமா?

இவர்கள் ஏன் தாலிபானிய மாடல் இஸ்லாமிய அரசு என்ற ஒற்றைபடித்தான அரசை காஷ்மீரிகளின் மீது திணிக்க விரும்புகிறார்கள்? உலக முஸ்லிம்கள் அனைவரையும் தலிபான் தீவிரவாதிகளாக்கி மேற்கத்திய ஊடகங்களும், யூத ஊடகங்களும் அமெரிக்க ஏகாதிபத்தியமும், உள்ளூர் இந்துத்துவப் பயங்கரவாதிகளும் வெறுப்பைக் கக்கி நச்சு மனப்பான்மையை உலகம் முழுதும் விதைத்து வைத்திருக்கிறார்கள். எனவே, தாலிபானிய ஆடுகளம்தான் ‘பெஸ்ட்’. அந்தக் களத்தில் நின்றால்தான் மொத்தக் காஷ்மீரிகளையுமே இராணுவ உபகரணங்களைக் கொண்டு பந்தாட முடியும். அமெரிக்க ஏகாதிபத்திய பூட்ஸ் கால்களில் ஒட்டிக் கிடப்பதையும் பிய்த்துத் தின்னும்; அரேபிய இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சியை முன் வைத்து ஜெயமோகன் பேசாத காரணம் இதுதான். எஜமானர்களைத் திருப்திபடுத்த வேண்டிய செஞ்சோற்றுக் கடன் ஜெயமோகனுக்கு மட்டும் இல்லாமல் போகுமா என்ன?

ஒருவேளை, காஷ்மீரிகளின் புத்தி வீச்சே அவ்வளவுதான் என்று ஜெயமோகனுக்கு ஒரு கண்டுபிடிப்பு இருக்குமானால், சீரழிந்து போவதில்தான் காஷ்மீரிகளின் நாட்டம் உள்ளது என்று ஜெயமோகனுக்குத் தோன்றுமானால், காஷ்மீரிகளை வசைபாடி வழியனுப்ப வேண்டாமோ ஜெயமோகன்? நாங்கள் தனியாக இயங்குவோம் என்று சொன்னால் ஜெயமோகன் வாழ்த்துப் பாமாலை எழுதிவிடுவாரா? காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமையில் ஜெயமோகனின் இந்துத்துவக் குண்டாந்தடிக்கு எந்த வேலையுமில்லை. அத்வானிகளுக்காகவும், மோடிகளுக்காகவும், தொகாடியாக்களுக்காகவும் வாழப் பிறந்தவர்கள் அல்ல காஷ்மீரிகள்! பின் நவீனத்துவக் வேடத்தில் அப்பட்டமாக இப்படி ஒரு மனுதர்மத்தை ஜெயமோகன் வெளிப்படுத்துகிறார்.

வேண்டுமானால் ஜெயமோகன் ஒரு காரியம் செய்யட்டும்! காஷ்மீரைப் பற்றிய தன் குழப்பங்களுக்கு அவருடைய ஆஸ்தான புத்தக விநியோகிப்பாளர் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் பீடத்தைச் சரணடையட்டும்! ‘‘இந்தியா தன் வருவாயில் பெரும்பகுதியைச் செலவிட்டுப் போராடிக் கொண்டிருக்கும் அந்த ஜெயமோகனின் படபடப்பிற்கு மகாலிங்கம் ஒரு மருந்தொன்றை வைத்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னால் தன்னுடைய ‘ஓம்சக்தி’ மாத இதழில் காஷ்மீரைப் பற்றி அவர் என்ன எழுதியிருக்கிறார் என்று ஜெயமோகன் கையைக் கட்டிக் கொண்டு பாடம் கேட்கட்டும்! அந்தப் பணிவுக்கே இன்னும் 500 தலையணை அளவு புத்தகங்களை விற்று அல்லது அன்பளிப்பு செய்து ஜெயமோகனுக்கு காசு பண்ணிக் கொடுப்பார் பொள்ளாச்சி மகாலிங்கம்.

‘இஸ்லாம் எந்த பிற தேசத்துக்குள்ளும் அடங்காது என்ற அடிப்படை உண்மையில் இருந்து பிறக்கிறதாம் காஷ்மீரின் யதார்த்தம்’. பாகிஸ்தானுடன் காஷ்மீரை இணைத்திட பாகிஸ்தானின் ஊரமைப்புகளின் துணையுடன் முல்லாக்கள் படிப்படியாகத் திட்டமிட்டு பாகிஸ்தானுக்குள் காஷ்மீரைச் சொருகிவிட இழுத்துக் கொண்டு போகிறார்கள்! அவருடைய வரலாற்றறிவைச் சோதித்துப் பார்க்க நமக்கு இன்னொரு வாய்ப்பையும் தந்திருக்கிறார் ஜெயமோகன்!

அதைக் கொண்டும் ஜெயமோகனை சில கேள்விகள் கேட்போம். 1947 ஆகஸ்ட் 14ல் ஒரு நாடு இந்தியாவின் அண்டையிலே உருவானது. நாடு ஒன்றென்றாலும் பகுதிகள் இரண்டு. மேற்கு பாகிஸ்தானென்றும், கிழக்கு பாகிஸ்தானென்றும்! ஜெயமோகா, இன்றைய உலக வரைபடத்தில் கிழக்கு பாகிஸ்தானை அதே பெயரில் உன் வாசகனுக்கு அடையாளம் காட்ட முடியுமா? கமண்டலங்களோடும் சூலாயுதங்களோடும் காவியுடையணிந்து வருகின்ற உன் வாசகப் பண்டாரங்களுக்கு கிழக்கு பாகிஸ்தானென்று எதைச் சொல்வாய்? பாகிஸ்தானுக்குள்ளேயே பஞ்சாபிகளின் மேலாண்மையை மூட்டி மோதிக் கொள்கிற சிந்துக்களையும் எல்லைப்புற மாகாணத்தவரையும் பழங் குடிகளையும் ஜெயமோகன் பூகோள அறிவு கண்டடைய வில்லையா!

துருக்கிக்கும் இராக்கிற்கும் இடையிலே புகுந்து கொண்டு இரு நாடுகளுக்கும் தீரா இடும்பைத் தரும் குர்திஷ்கள் பற்றித் ஜெயமோகனுக்கு தகவல்கள் இல்லையா? மதங்களை இனமும் மொழியும் துவசம்சம் செய்யும் காலம் இது! ‘உருது பேசாத முஸ்லிமா’ என்று தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு தமிழ் முஸ்லிமை நோக்கியும் கேள்விகள் வீசப்பட்டு விட்டன. மதமும் மதவறமும் மதக் கொள்கைகளும் கேள்விக்குள்ளான காலத்திலே, ஜெயமோகன் மதவாதியாக அலைகிறார். அவருடைய இலக்கிய ஞானத்தைக் கொண்டு எப்போதோ கண்டடைந்திருக்க வேண்டிய உண்மைகளை இனியேனும் துரத்தி பிடிக்க வேண்டும்! பதில் தர வேண்டும்! அதை விட்டு விட்டு முட்டாள் வாசகன் என்று சந்து பொந்துகளில் ஒளிந்து கொள்ளக் கூடாது. வங்கதேச அகதிகள் போடோ மக்களுடன் கிளர்ந்தெழுந்த தருணத்தில் பாகிஸ்தானியக் கொடிகளை ஏற்றிவிட்டதாக ஒரு புதுக்கரடி விடுகிறார் ஜெயமோகன்! இது ஆர். எஸ். எஸ். மனோபக்குவமேதான்!

ஒரு இந்தியனிடம் பாகிஸ்தான் அளவுக்கு வங்கதேசத்தை வெறுப்பேற்றி விட முடியாது. அதனால்தான் வங்கதேசத்தவனும் பாக். கொடியை ஏற்றினான் என்கிறார் ஜெயமோகன், இதெல்லாம் என்ன சித்து விளையாட்டு? ஆர். எஸ். ஸின் மதவாதத்தைப் பின்தொடரும் நிழலோ? இஸ்லாம் பிற தேசிய கற்பிதங்களை ஏற்காது என்கிற உங்களின் கூற்றோடு நானும் ஒத்துப் போகின்றேன். இந்துத்துவத்தின் சாதியக் கட்டுமானத்தை இஸ்லாம் ஏற்க வேண்டும் என்கிறீர்கள்; உடன்கட்டையை ஏற்கவேண்டும் என்கிறீர்கள்; முப்பத்து முக்கோடி தேவர்களையும் ஏற்க வேண்டும் என்கிறீர்கள்; உருவ வழிபாடுகளும், பூஜை புனஸ்காரங்களும் ஜாதீய வெறியாட்டங்களும், கோத்ரா பிளவுகளும் ஏற்கப்பட வேண்டும் என்றுமா சொல்கிறீர்கள்? எங்களுக்கும் இஸ்லாம் மீது விமர்சனம் உள்ளது. ஆனால் அது உன்னைப் போன்றதல்ல. அப்படியானால்தான் இஸ்லாம் எதற்கு? தெருக்கூட்டும் சாத்திரங்களோடும் பீக்கரண்டிகளோடும் தலைச் சுமையாய் மலவாளிகளோடும் வாழ்ந்துவிடலாமே! உன்னுடைய ஊமைச் செந்நாயின் கதையில் அவன் ஏன் துரையின் கையைப் பிடித்து உயிர் வாழ விரும்பாமல், தற்கொலையைத் தேர்ந்தெடுத்தான் என்று நீயே அறியவில்லையா?

பிற தேசியங்களுடன் ஒத்துப் போக அதற்கு கற்பிப்பது அவசியம் என்று கூறி வாத்தியாராக உருவெடுக்கிறார் ஜெயமோகன். கையிலே இந்துத்துவப் பிரம்பு! தனி தேசியமாகத் தன்னை உணர்ந்து உள்ளிருந்து பிளக்கவே இஸ்லாம் முயலும் என்று தடுக்கித் திரிகிறவர்கள்தான் தங்களைப் பல்லாயிரம் சாதிகளாகவும் பல்லாயிரம் கோத்திரங்களாகவும் உள்ளிருந்து பிளந்தபடியே இருக்கும் ஒரு தேசியத்தை மெச்சிக் கொண்டிருக்கிறீர்கள். எந்தக் கோத்திரத்திலிருந்து எந்த ஜாதியிலிருந்து கொண்டு உங்களிடம் பாடம் பெற வேண்டும்? ஊஞ்சணைகள், உத்தப்புரங்கள், கயர்லாஞ்சிகள், திண்ணியங்கள் என்கிற குஷ்ட நாயோடு வாழ்ந்தபடி பிறத்தியான் புண்ணுக்கு வைத்தியம் பார்க்கின்ற வேலையெல்லாம் எதற்கு?

அப்படியே உச்சநீதிமன்றம் வரைக்கும் ஒரு நடை நடந்து போய், அப்சல் குருவின் மீதான தூக்கு தண்டனை குற்றச்சாட்டுகளின் நிரூபணத்தின் பேரிலா, துகிலுரிந்து கிடக்கும் தேசிய மனசாட்சியின் பேரிலா என்று பார்த்துவிட்டு வந்து கதைக்கலாமே! கோவையில் 19 முஸ்லீம்கள் படுகொலை, மும்பை கலவரங்கள், பாபர் மசூதி தகர்ப்புகள், குஜராத் பயங்கரவாதங்கள், கந்தர்மால் பயங்கரங்கள் என எல்லா வழக்குகளிலும் ஜெயமோகனின் மனசாட்சிக்கு எந்த வேலையும் இல்லை. அப்சல்குரு வழக்கு ‘‘உண்டாக்கப்பட்ட விதம்’’ பற்றி பேச வந்துவிட்டார்! ஒரு காலத்தில் அப்துல் ஹமீது என்ற மனுஷ்ய புத்திரனை நொண்டி நாய் என்று விமர்சித்து விட்டு இன்று கட்டுரை எழுதவும், பதிப்பகத்தில் புத்தகம் போடவும் அதே மனுஷ்ய புத்திரனின் காலில் விழுந்து கிடக்கும் ஜெயமோகன் பிழைப்புக்காக யாருடனும் எந்த உறவுக்கும் தயாராக இருப்பார். விளம்பரத்திற்காக எந்த அளவுக்கும் கீழே இறங்கத் தயாராக இருப்பார். இன்றைய விளம்பரத்திற்கு அவருக்கு கிடைத்த ஆடுகளம் இந்திய தேசியம்.

Pin It