நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆர்வமாக வாக்களித்துள்ளனர். மக்களில் ஒருவர்களான திரையுலகத்தினரும் வாக்களித்துள்ளனர்.

பிரபல நடிகர்கள் கமல், அஜீத் உள்ளிட்ட பலரும், நடிகையரில் பலரும் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்துள்ள நிலையில், தனது அம்மா மற்றும் பாட்டி சகிதமாக வாக்களிக்க வந்த நடிகை திரிஷா, வரிசையில் நிற்காமல் விறுவிறுவென நேராக வாக்குச் சாவடியில் நுழைய முற்பட்டுள்ளார்.

இதைக்கண்ட வரிசையில் நின்ற வாக்காளர் ஒருவர் திரிஷாவை நோக்கி, வரிசையில் வருமாறு கூற அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் திரிஷா. இறுதியில் காவலர்கள் வந்து திரிஷாவை வரிசையில் நிற்க செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பத்திரிகை ஒன்றில் அவர் கூறியதாவது:

“ஓட்டுப்பதிவின்போது என்னை, கியூவில் நின்று ஓட்டுப்போடும்படி சொன்னது தப்பு அல்ல. ஆனால், அந்த வாக்காளர் சொன்ன முறை சரியல்ல. நான் ஓட்டுப்போட சென்றபோது கியூவில் நின்று ஓட்டுப் போடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தால் அப்படியே செய்திருப்பேன். அவர் என்னிடம் முரட்டுத்தனமாக பேசினார். அதனால் நானும் அதேபோல் பேச வேண்டி இருந்தது.

என்னிடம் மென்மையாக பேசுபவர்களிடம் நானும் மென்மையாக பேசுவேன். முரட்டுத்தனமாக பேசினால், நானும் பேசுவேன். அந்த வாக்குச்சாவடியில் இதுதான் நடந்தது...'' என்று கூறியுள்ளார்.

மூத்த குடிமக்கள் உள்ளிட்ட சிலர் நீங்கலாக வேறு எவராக இருந்தாலும் வரிசையில் வந்துதான் வாக்களிக்க வேண்டும் என்று இவருக்கு தெரியாதா?

அப்படியே தெரியாவிட்டாலும் இவர் சார்ந்த துறையின் இவரை விட சீனியர் கலைஞர்களே வரிசையில் நின்று வக்களிப்பதைக் கண்டபின்னும், அதை கண்டு கொள்ளாமல் நேரடியாக தனது வீட்டிற்குள் நுழைவது போன்று வாக்கு சாவடிக்குள் நுழைய முற்படுவதும், தடுத்தவரோடும், காவல்துறையோடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், கடும் வார்த்தைகளை பயன்படுத்தி பொது இடத்தில் மல்லுக்கு நிற்பதும் நியாயமா?

அது சரி! நடிகைக்கு கோயில் கட்டியவனும், உடல் மண்ணுக்கு; உயிர் ......வுக்கு என்று சொன்னவனும் தமிழன்தானே! கூத்தாடிகளின் ஆட்டத்தை ரசிக்க திரையரங்கு வாசலில் காத்துக் கிடந்ததைப்போல, வாக்குச்சாவடியிலும் காத்துக் கிடப்பதுதான் அவனது தலைவிதி எனக் கருதியிருப்பாரோ திரிஷா?

Pin It