திருப்பூர் மாநகராட்சி அதையட்டி உள்ள நல்லூர் நகராட்சி, அருகில் உள்ள ஊராட்சிகளிலுமாக சுமார் 8 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

மதுரை, திண்டுக்கல், தேனி, நெல்லை, ராமநாதபுரம் தஞ்சை, புதுக்கோட்டை மக்களும் மற்றும் ஒரிசா, பீகார், மேற்குவங்கம், ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த மக்களும் பனியன் மற்றும் கட்டடத் தொழிலில் பணிபுரிய வந்து தங்கி உள்ளனர். காதர்பேட்டை போன்ற பனியன் வியாபாரம் உள்ள பகுதியில் நைஜீரிய மக்கள் சுமார் 500 பேர் நிரந்தரமாகத் தங்கியுள்ளனர்.

இப்படிப்பட்ட புதிய சூழ்நிலையில் மக்களின் பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்குப் போதுமான நிலைகள் இல்லை என்றே கூறவேண்டும்.

30க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இரண்டொரு பூங்கா மட்டுமே உள்ளது. மாநகராட்சிப் பகுதியில் 3 சிறிய நூல்நிலையங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், திருப்பூர் தமிழ்ச்சங்கம், வெற்றித் தமிழர் பேரவை, கம்பன் கழகம், திருப்பூர் கலை இலக்கியப் பேரவை, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், கலைஇலக்கிய வட்டம், பதியம் இலக்கியத்தளம் நொய்யல் இலக்கிய மன்றம், ஷண்முகானந்தா சங்கீத சபை ஆகிய அமைப்புகள் அவ்வப்போதும், சில அமைப்புகள் தொடர்ந்தும் நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. திருப்பூர் தமிழ்ச்சங்கம் ஆண்டுக்கு ஒரு முறை சிறந்த படைப்பாளர்களுக்கு பரிசு வழங்கி கவுரவிப்பது குறிப்பிடத் தகுந்ததாகும். கலை இலக்கிய வட்டம், பதியம் இலக்கிய வட்டம் அடிக்கடி இலக்கிய அமர்வுகள் நடத்துகின்றன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கலை இரவு, இலக்கிய அமர்வு, குறும்படங்கள் திரையிடல் போன்ற இயக்கங்களை தொடர்ந்து நடத்துகின்றன. முற்போக்கு வாசகர் வட்டம் என்ற அமைப்பு புத்தகம் பற்றிய அறிமுகம் - விவாதம் என நான்கு ஆண்டுகளில் 36 முறை நடத்தியுள்ளது.

இருப்பினும், திருப்பூரில் தமிழ்நாட்டிலேயே அதிகமான குடிப்பழக்கம், தற்கொலையில் முதலிடம், சுற்றுப்புறச்சூழல் மோசமாகி வருதல் போன்ற கவலையளிக்கும் பண்பாட்டு சவால்களை எதிர்கொள்ள அனைத்து இலக்கிய அமைப்புகளும் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.

 

Pin It