நாங்கள் மா.பெ.பொ.க.வினர் 8.8.1976-இல் புதிய அமைப்பை உண்டாக்கினோம். அப்போதே தந்தை பெரியார் வாழ்க்கையில், முதன்மையானதான வகுப்புவாரி விகிதாசார உரிமையை வென்றெடுப்பது என முடிவு செய்தோம்.
பெரியார் வரலாற்றில், இந்திய அரசு அமைப்புச் சட்டத்தை முதல் தடவையாகத் திருத்தம் செய்தது பிற்படுத்தப்பட்டோர் கல்வி உரிமையைக் காப்பாற்றுவதற்காகத்தான். அதன் விளைவாகத்தான் 15(4) என்கிற விதி அரசமைப்புச் சட்டத்தில் 1951-இல் சேர்க்கப்பட்டது.
எதற்காக அந்த விதி செய்யப்பட்டது? தொழிற் கல்வி பெறுவதற்கு - உயர் கல்வி பெறுவதற்கு ஓமந்தூரார் வழி செய்தார். அது செல்லாது என்று உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் சொன்னதனால்தான் அதைப் புறங்காண வழி கிடைத்தது.
அதேபோல், மய்ய அரசில் கல்வியிலும் வேலையிலும் சமூகத்திலும் பின்தங்கிய இந்துக்கள், இசுலாமியர், கிறித்தவர், பவுத்தர், சமணர், சீக்கியர் ஆகியோர் - மற்ற அரசுக் கல்வியிலும் மய்ய அரசு வேலையிலும் விகிதாசார இடஒதுக்கீடு பெற வேண்டும் என்பதற்காக நாங்கள் 1978 முதல் இன்றும் முயற்சிக்கிறோம்.
முதலாவது பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் குழுவை 1953-இல் காகா கலேல்கர் தலைமையில் நேரு அமைத்தார். காகா கலேல்கர் பார்ப்பனர்; நேர்மையானவர். பிற்படுத்தப்பட்டோர் லீக் மாநாட்டை 1944-இல் கான்பூரில் நடத்திய சிவ்தயாள் சிங் கவுராசியா என்கிற பிற்படுத்தப்பட்டத் தலைவரும் அப்போதே பெரியாரை அந்த மாநட்டுக்கு அழைத்தார். சிவ் தயாள் சிங் சவுராசியாவும் காகா கலேல்கர் குழுவில் உறுப்பினராக இருந்தார்.
1955-இல் பிரதமர் பண்டித நேருவிடம் காகா கலேல்கர் அறிக்கையை அளிப்பதற்காக, நேருவின் இல்லத்திற்கு காகா கலோல்கர், சிவ்தயாள் சிங் சவுராசியா இருவரும் சென்றனர்; குழுவின் அறிக்கையை நேருவிடம் கொடுத்தனர். நேரு அதைப் புரட்டிப் பார்த்துக் கொண்டே, “ஏழைப் பார்ப்பனர் வகுப்பு சேர்க்கப்பட வழி செய்திருக்கிறீர்களா?” என்று நேரு கேட்டார். “இல்லை. அவர்கள் இந்த இலக்கணத்துக்கு ஒத்துவரமாட்டார்கள்” என்று கலேல்கர் நேருவிடம் சொன்னார். “நீங்கள் முழுவதும் பாழ்படுத்திவிட்டீர்கள்” என்று கூறிக்கொண்டு, அந்த அறிக்கையைச் சினத்தோடு தரையில் வீசினார்.
அத்துடன் பிரதமர் நேரு அவர்கள், சில ஆண்டுகள் கழித்து, 1961இல், மத்திய அமைச்சரவையைக் கூட்டி, “பிற்படுத்தப்பட்டோருக்கு மய்ய அரசுக் கல்வியிலும் வேலையிலும் இடஒதுக்கீடு அளிப்பது இல்லை” என்று முடிவு செய்தார்.
அடுத்து, மாகாண முதலமைச்சர்களுக்கு (Demi official Letter) கமுக்கம் மடல்போக்கி பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கல்வியிலோ இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது. படிக்கப் பண உதவி செய்யலாம்” என்று எழுதினார். பண்டித நேரு, பச்சை எதிரி – பிற்படுத்தப்பட்டோருக்கு.
7.5.1978-இல் முதல் முதலாக நானும் சீர்காழி மா. முத்துச்சாமியும் தோழர் இராம் அவதேஷ் சிங் அவர்களுடன் முசாபர் நகரில் நடைபெற்ற உத்தரப்பிரதேச பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அந்த மாநாட்டுக்குச் சிவ்தயாள் சிங் சவுராசியா தலைமை தாங்கினார். அவர்தான் நேருவின் இந்த நடப்பை மாநாடு முடிந்தவுடன் அங்கே மேற்கண்ட விவரங்களை என்னிடம் கூறினார்.
நாங்கள், வாழப்பாடி கூ. இராமமூர்த்தி (நாடாளு மன்ற உறுப்பினர்), வே. ஆனைமுத்து, ம. இராசு, சீர்காழி மா.முத்துச்சாமி நால்வரும் அன்றைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டியை 8.5.1978-இல் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேரில் சந்தித்தோம். அவர் பொறுமையாக எங்கள் வேண்டுகோளைக் கேட்டு விட்டு, உடனே, “நான் பழைய தில்லியில் ஆங்கிலத்தில் பேசினேன். எல்லா மக்களும் ‘இந்தியில் பேசு! இந்தியில் பேசு’ எனக் கூச்சலிட்டனர். ‘நீங்கள் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடத்துங்கள். நான் வந்து தொடக்கி வைக்கிறேன்’ என்று கூறித் திசைதிருப்பினார்.” ஏனெனில், அவர் ரெட்டி - மேல்சாதிக்காரர்.
24.6.1978-இல் சென்னையில் முதலாவது இட ஒதுக்கீடு மாநாட்டை நடத்தினோம். அதில் எல்லா மாநிலங்களில் இருந்தும் பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தலைவர்கள் பங்குபெற்றார்கள். அதன் விளைவாக நானும் பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் இராம் அவதேஷ் சிங் அவர்களும் கேரளா, கர்நாடகா முதலான அண்டை மாநிலங்களுக்குச் சென்றோம்.
அதனையடுத்து தமிழ்நாட்டிலிருந்து வே. ஆனைமுத்து தலைமையில் நால்வர் ஒரு குழுவாகப் பீகாருக்குப் பயணம் சென்றோம். தந்தை பெரியார் நூற்றாண்டை ஒட்டி, 17.9.1978 முதல் 18.10.1978 முடிய 32 நாள்கள் பீகார் மாநிலத்தில் வே. ஆனைமுத்து, சீர்காழி மா. முத்துச்சாமி, திருச்சி து.மா.பெரியசாமி, வேலூர் நா.ப.செந்தமிழ்க்கோ, நால்வரும் இராம் அவதேஷ் சிங்கு டன் இடஒதுக்கீடு பற்றிப் பரப்புரை செய்தோம்.
1978 அக்டோபர் 25, 26-இல் எங்களுக்கு எதிராகப் பரப்புரை செய்யப் பிரதமர் மொரார்ஜி தேசாய் பீகாருக்குப் பயணம் வந்தார். கல்லையும் செருப்பையும் மக்கள் அவரை நோக்கி வீசினர். அவர் எங்குமே பேசமுடி யாமல் தில்லிக்குத் திரும்பிப் போனார். அதில் கற்ற பாடம்தான், 20.12.1978-இல் நாடாளுமன்றத்தில், “இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் குழு அமைப்போம்” என்ற அறிவிப்பதில் முடிந்தது.
பீகாரில் நடைபெற்ற போராட்டத்தில் மக்கள் பத்தாயிரம் பேர் சிறைபுகுந்தனர். 01.01.1979-இல் பிந்தேசு வரிபிரசாத் யாதவ் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் குழு அமைக்கப்பட்டது. மண்டல் அவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பிற்படுத்தப்பட்டவர்களின் வாழ்நிலையை ஆய்வு செய்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை 31.12.1980இல் அளித்தார்.
இந்திரா காந்தி காலத்தில், “26.1.1982-இல் குடியரசு நாள்; அதற்குள் மண்டல் குழு அறிக்கையை நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை என்றால், மா.பெ.பொ.க. வினர் 26.1.1982-இல் துக்க நாளாக அனுசரித்து, அவரவர் வீட்டில் கருப்புக் கொடி ஏற்றுவோம்” என்று நான் கட்சிச் சார்பில் பிரதமர் இந்திரா காந்திக்குக் கடிதம் எழுதினேன். அவர் தந்திரமாக, “இடஒதுக்கீடு செய்தி உள்துறை அமைச்சர் கியானி ஜெயில்சிங் கவனிக் கிறார். அவருக்கு நேரே எழுதுங்கள்” என்று எனக்கு மடல் எழுதினார்.
நான் உள்துறை அமைச்சர் அவர்களுக்கு நேரே எழுதினேன். அவர், “25.1.1982 மாலை தில்லியில் என்னை அலுவலகத்தில் சந்தியுங்கள்” என்று பொறுப்போடு எழுதினார். நான் 25.01.1982 காலையில் தில்லிக்குப் போனேன்.
நான், ஜெய்ப்பால் சிங் கஷ்யாப், எம்.பி., தில்லி மா.பெ.பொ.க. செயலாளர் ச.தமிழரசு, சாலை இளந்திரையன் ஆகியோர் சரியான நேரத்தில் உள்துறை அமைச்சகத்திற்குப் போனோம். ஜெயில் சிங் அவர்கள் எங்களுடன் மனம் விட்டுப் பேசினார். “விதி 16(4)இல் வரும் Backward Class of Citizens என்பதற்கு என்ன பொருள் என்பதை நான் இன்றைக்குத்தான் புரிந்துகொண்டேன்” என்று என்னிடம் வெளிப்படையாகச் சொன்னார். அது எனக்கு வயிற்றில் பால்வார்த்தது போல் ஆனது.
தில்லியில், நாங்கள் 2016 வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தினோம். 3.3.1982இல் இரண்டாவது கூட்டத்திற்குக், காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருமே வரவில்லை. அதுபற்றி, ஜெயில்சிங் அவர்களிடம் 4.3.1982-இல் முறையிட்டேன். அவர் “என்ன வேண்டும்? சொல்லுங்கள்” என்று கேட்டார். நான் “இப்போதே, இன்றைக்கே நாடாளுமன்றத்தில் மண்டல் குழு அறிக்கையை வெளியிட்டு அதன் பரிந்துரைப்படி பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவியுங்கள்” என்று சொன்னேன். அதன்படி அவர், 4.3.1982 அன்று மாலை 4.30 மணிக்கு மக்களவையில் “அரசு மண்டல் பரிந்துரையை சாதி அடிப்படையில் நடை முறைப்படுத்தும்” என்று அறிவித்தார்.
இதை அறிந்த பிரதமர் இந்திரா காந்தி, 4.3.1982 அன்றே மேலவையில் “அரசு மண்டல் பரிந்துரையை அமுல் செய்யும்; ஆனால் பொருளாதார அடிப்படையில் ஒன்றிய அரசில் இடஒதுக்கீடு வழங்கப்படும்” என அறிவித்தார்.
ஆனால் நாங்கள் இடைவிடாமல் முயற்சித்ததனால் வி.பி. சிங் அவர்களால் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு 13.8.1990 அன்று அமுலுக்கு வந்தது. அவர் வேலையில் மட்டும் இடஒதுக்கீடு அளித்தார்; கல்வியில் இடஒதுக்கீடு அளிக்கவில்லை. அர்ஜூன் சிங் கல்வி அமைச்சராக இருந்த போது 2005-இல் கல்வியில் இடஒதுக்கீடு அளித்து சட்டம் இயற்றப்பட்டது. நான் 2017 முதல் தில்லிக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டேன். இனி, தில்லிக்குப் போக வாய்ப்பு இல்லை.
கட்சி பாராமல், உள்சாதி பாராமல், தலைமை யார் என்று பாராமல் - வகுப்புவாரியாக விகிதாசார இடஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்து அனைத்திந்திய அளவில் போராட வேண்டும். ஏன்?
மண்டல் அறிக்கை தெளிவானது.
இந்துக்களில் கல்வியிலும் சமூகத்திலும் பிற்படுத்தப் பட்டோர் 52 விழுக்காடு.
இந்துக்கள் அல்லாதவர்களில் கல்வியிலும் சமூகத் திலும் பிற்படுத்தப்பட்டோர் 52 விழுக்காடு.
மொத்தத்தில் இந்து, மற்ற மதத்துக்காரர்கள் எல்லாம் சேர்த்து 3740 வகுப்புகள். வாஜ்பாயி காலத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்ட வகுப்புகளின் எண்ணிக்கை 600. ஆக மொத்தம் 4340 வகுப்புகள். இது மொத்த மக்கள் தொகையில் 57 விழுக்காடு.
பட்டியல் வகுப்பினருக்கு 1970 முதல் 15 விழுக்காடு அளிக்கப்பட்டது. பட்டியல் பழங்குடியினருக்கு 1970-இல் 7.5 விழுக்காடு அளிக்கப்பட்டது. பட்டியல் வகுப்பினர், 2011-இல் கணக்குப்படி 16.6 விழுக்காடாக உள்ளனர். பட்டியல் பழங்குடியினர் 2011 கணக்குப்படி 8.6 விழுக்காடாக உள்ளனர்.
இடஒதுக்கீட்டிற்குள் வராத மேல் சாதியினரில் பொருளாதாரத்தில் நலிந்தவருக்கு இந்திய அளவில் இடஒதுக்கீடு 10 விழுக்காடு. இது எந்தக் கணக்கிலும் எடுக்கப்படவில்லை.
அப்படியானால் வகுப்புவாரி விகிதாசாரம் என்பது பின்வருமாறு வழங்கப்பட வேண்டும். அதற்கேற்ப விதிகள் 15(4), 16(4), 29(2), 338(10) ஆகிய விதிகள் திருத்தப்பட்டு பின்வரு மாறு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி எல்லோ ரும் போராட வேண்டும்.
பின்கண்டதே விகிதாசாரம் ஆகும்.
கல்வியிலும் சமூகத்திலும் பிற்படுத்தப்பட்டோர் 57%
பட்டியல் வகுப்பினர் 17%
பட்டியல் பழங்குடியினர் 9%
மேல் சாதியினர் 17%
------
100%
------
இருக்கின்ற மொத்த இடங்களில் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இந்திய அளவிலும் மாநில அளவிலும் அந்தந்த வகுப்புக்கு எண்ணிக்கைக்கு ஏற்ப அடைந்து தீருவதே நம் வாழ்நாள் குறிக்கோள் என்பதாக இருக்க வேண்டும். இது என் அவா; எங்கள் அவா. எல்லோரும் இதைக் குறிக்கோளாக ஏற்றுக்கொள்ளும்படி பணிவன்புடன் வேண்டுகிறேன்.
நான் 1990-இல் எச்சரித்தேன்.
“ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்குப் போதிய விழிப்புணர்வு ஊட்ட இதுவரை நாம் தவறிவிட்டோம். இனியும் நாம் தவறினால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறியாமையையும், ஒடுக்கப்பட்ட வகுப்புத் தலைவர்களின் அடிமைப் புத்தியையும் பயன்படுத்திக் கொண்டு, மொத்த இடஒதுக்கீடு அளவைப் பற்றிக் குறிப்பிடாமலே, முற்பட்ட வகுப்புகளிலுள்ள ஏழைகளுக்கு இடஒதுக்கீடு செய்யலாம் என்று பாரதிய சனதா அரசோ, காங்கிரசு அரசோ அரசமைப்புச் சட்டத்தின் விதிகளைத் திருத்தி விட முடியும். எச்சரிக்கை! எச்சரிக்கை! அது நடந்து விட்டது.”
(வே. ஆனைமுத்துவின் கருத்துக் கருவூலம் - விகிதாசார வகுப்புவாரி இடப்பங்கீடு நூல், பக்கம் 216, 217)
- வே. ஆனைமுத்து