சென்னை உயர்நீதிமன்றம், மதுரைக் கிளையில் பி. நவீன்குமார் என்பவர் 22.04.2024 அன்று தொடுத்த வழக்கினை எட்டு நாட்களில் விசாரணையை நிறைவு செய்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், 30.4.2024 அன்று தீர்ப்பை ஒத்தி வைத்து, 17.05.2024 அன்று அறிவித்தார்.
அவ்வழக்கு என்னவெனில், கரூர் மாவட்டத்தில் உள்ள நெரூரில் 110 ஆண்டுகளுக்குமுன் இறந்துவிட்ட சதாசிவ பிரம்மேந்திரர் என்பவரின் நினைவு நாளில் ‘சோற்றுக்கொடை’ வழங்குவது வழக்கம். அப்படி வழங்கப்படும் உணவை உண்டவர்களின் எச்சில் வாழை இலைகள் மீது புரள்வதால் நல்லவை நடக்கும் என மூடநம்பிக்கையாளர்கள் அந்த எச்சில் இலைகள் மீது புரள்வதும் வழக்கமாயிருந்தது. இவ்வழக்கம் மனித மாண்புகளை இழிவுபடுத்துவதாக உள்ளது என, அதனைத் தடைசெய்திடக் கோரி 2015இல் தலித் பாண்டியன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
மேற்சொன்ன வழக்கை விசாரித்து, அந்த வழக்கம் மனித வாழ்வின் மேன்மையை-கண்ணியத்தை இழிவு படுத்தும் செயல் என நீதிபதி எஸ். மணிகுமார் 27.04.2015 அன்று தடைசெய்துத் தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பின் காரணமாக நெரூரில் நடக்க இருந்த பிரம்மேந்திரரின் 101ஆம் நினைவு நாளில் எச்சில் இலைகளில் புரளும் நிகழ்வு நிறுத்தப்பட்டது. அப்போது முதல் 9 ஆண்டுகளாக எச்சிலைகளில் உருள்வது கைவிடப்பட்டது.கர்நாடக அரசு மற்றும் சிலர் எதிர் ஆதிவாசிப் பழங் குடியினர் பாதுகாப்புப் பேரவை (ஆதிவாசி புதகட்டு ஹிதரக்ஷன் வேதிகெ) வழக்கில் நெரூரில் போலவே தட்சிணக் கருநாடக மாவட்டத்தில் குக்கே சுப்பிரமணியர் கோவிலில் ஒரு சாரார் உண்ட எச்சில் இலைகள் மீது புரளும் வழக்கத்திற்கு உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் ஆயம் 12.12.2014 அன்று தடை ஆணை பிறப்பித்ததை நீதிபதி எஸ். மணிகுமார் வழங்கியத் தீர்ப்புரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பு
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் 17.05.2024 அன்று தீர்ப்புரையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். மணிகுமார் 27.04.2015இல் அளித்தத் தீர்ப்பு செல்லாது; எச்சில் இலைகளின் மீது புரள்வது அவர்களின் நம்பிக்கை மற்றும் தனி மனிதர் அடிப்படை உரிமை. எனவே பி. நவீன்குமார் கோரியபடி நெரூரில் எச்சிலைகளின் மீது புரளலாம் என இவ்வாண்டு பிரம்மந்திரர் நினைவு நாளுக்கு முந்திய நாள் தீர்ப்பு வழங்கினார். மேலும் தட்சிண கர்நாடகா குக்கே நிகழ்ச்சியை நெரூர் நிகழ்ச்சியுடன் ஒப்பிட முடியாது என்றும் 12.12.2014இல் குக்கே வழக்கில் உச்சநீதிமன்றம் தடை ஆணைதான் வழங்கியுள்ளது; நிலுவையில் உள்ள அவ்வழக்கில் இறுதித் தீர்ப்பு இன்னமும் வழங்கப்படவில்லை என்றும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், அவரது தீர்ப்பில் கூறியுள்ளார்.
தீர்ப்புக்கு எதிரான விமர்சனம்
பி. நவீன்குமார் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் எதிர் தரப்பு வாதுரைக்கு வாய்ப்பே அளிக்கவில்லை. இந்த வழக்கை விசாரித்து தீர்ப்புரைப்பதில், வழக்கிழந்த மூடநம்பிக்கை நடைமுறையை மீட்டெடுப்பதில் ஆர்வமும் வேகமும் காட்டப்பட்டுள்ளது.
பிறர் உண்ட எச்சில் இலைகள் மீது புரள்வது மானுட நாகரிக வாழ்வின் மேன்மையையும், மாண்பையும், கண்ணியத்தையும் சீரழிக்கின்ற செயல்.
அரசமைப்புச் சட்டம் பிரிவு 15ஏ(எச்)இல் கூறப்பட்டுள்ள வாறு குடிமக்களின் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல் என்பதற்கு எதிரானது.
அதே நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி வழங்கியத் தீர்ப்பை வேறு ஒரு நீதிபதி (ஜி.ஆர். சுவாமிநாதன்) செல்லாதென அறிவிப்பது நீதித்துறையின் நெறிமுறைதானா?
உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் (நீதிபதி மதன் பி. லோகுர் மற்றும் நீதிபதி ஆர். பானுமதி) ஆயம் அளித்துள்ளது தடை ஆணை -இறுதித் தீர்ப்பன்று என்பதனால் அதனை ஏற்காதது சரியா?
9 ஆண்டுகளாக நடைபெறாத ஒரு சனாதன வழக்கத்தை மீட்டெடுத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் நெறிமுறை களைவிட, நீதியைவிட மத உணர்ச்சியே மேலோங்கி நிற்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகின்றதல்லவா?
மனிதமாண்புகளையும்கண்ணியத்தையும் காக்கவேண்டும் எனும் முற்போக்காளர்கள் கண்டிக்க வேண்டிய தீர்ப்பல்லவா இது?
கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போகப் போராடுவோம்! நீதியை நிலைநாட்டுவோம்!
- நா.மதனகவி