பா.ஜ.க. அரசு பதவி ஏற்றதிலிருந்தே, தொடர்ச்சியாகத் தனிநபர் சுதந்திரமும், கருத்துரிமையும் நெருக்குதலுக்கு உள்ளாகிக் கொண்டே இருக்கிறது. இது இந்திய நாட்டின் சனநாயகத் தன்மையைக் கொஞ்ச கொஞ்சமாக உருக்குலைத்து வருகிறது.

தங்கள் மதவாதத்துக்கும், ஊழல்களுக்கும், கார்ப்பரேட் சலுகைகளுக்கும், ஏகபோக ஆதிக்கத்திற்கும் எதிராக இருக்கும் எல்லாக் குரல்களையும் ஒடுக்கிவிட, அவர்கள் கையிலெடுத்த மிக நவீன, மோசமான ஒரு ஆயுதம்தான் பெகாசஸ் எனும் மென்பொருள். இத்தாலியின் NSO நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்ட உளவுச் செயலி அது. இதுவரை அது தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் கூட பா.ஜ.க. அரசு அந்தச் செயலியை வாங்கவில்லை என்றோ, அதைச் சனநாயகச் செயல்பாட்டாளர்களுக்கு எதிராக செயல்படுத்தவில்லை என்றோ தன்னிலை விளக்கம் அளிக்கவில்லை.

மேலும் தற்போது இரண்டாம் உலகப் போரைப் போல மோசமான அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி பாலஸ்தீன மக்களின் மீது போர் தொடுத்து வரும் இஸ்ரேலின் முதல் தாக்குதல் நாளன்றே ஓடிப்போய் ஆதரவு தெரிவித்தார் நரேந்திர மோடி. நாட்டின் வெளியுறவுக் கொள்கை வேறாக இருந்தும், இந்திய நாட்டின் பிரதமராக அல்லாமல், தனக்கும் இஸ்ரேலுக்கும் இருக்கும் நெருங்கிய அணுக்கமான உறவை மேலும் உறுதிப் படுத்திடவே அவ்வாறு தன்ஆதரவைச் செய்திருக்கிறார் எனத் தெரிகிறது.

அது மட்டுமல்லாமல், சென்ற வாரம், அரபு நாடுகளில் பணியில் இருந்த முன்னாள் இந்திய கப்பற்படை அதிகாரிகளை இஸ்ரேலுக்கு உளவு பார்க்கத் தூண்டியதாக அரபு நாடுகளால் தூக்குத் தண்டனை வழங்கப் பட்டிருக்கிறார்கள். பெகாசஸ் உளவுச் செயலியைத் தனக்குக் கிடைக்கச் செய்தமைக்கான நன்றிக் கடனாக இந்த உளவு வேலை பார்க்கப்பட்டதா என்ற விவரங்கள், தீர்ப்பின் விவரங்கள் வந்த பிறகே தெரிய வரும்.

கடந்த 2019 முதல், முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட மனித உரிமைப் போராளிகள், தங்களுக்கு எதிர்க் கருத்துகள் கொண்ட அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் அலைபேசிகள், கணினிகள், ‘வேவு’ பார்க்கப்படுவதாக, ஆளும் பா.ஜ.க. அரசின் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதற்குப் பல்வேறு ஆதாரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் மத்தியப் புலனாய்வு முகமையின் தலைவர் அலோக் வெர்மா, சிறையிலேயே நிறுவனக் கொலை செய்யப்பட்ட பாதிரியார் ஸ்டேன் சாமி, ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவரும், தற்போதும் சிறையிலிருக்கும் மாணவர் உமர் காலித், 6 ஆண்டுகள் துன்புறுத்தலுக்குப் பின் விடுவிக்கப்பட்டிருக்கும் டீஸ்டா செடல்வாத் இப்படி எண்ணற்ற செயல்பாட்டாளர்கள் இந்த இரகசியச் செயலியால் உளவு பார்க்கப்பட்டு, இயல்பான அவர்களின் கருத்துகளுக்காக, மோசமான சித்தரிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

ஆப்பிள் நிறுவனம் தங்கள் அலைபேசிக் கருவியில் அத்துமீறி சட்டவிரோதமாக பெகாசஸ் உளவுச் செயலியை நுழைத்ததற்காக NSO நிறுவனத்தின் மீது இரண்டு வாரங்களுக்கு முன்பு வழக்குத் தொடுத்துள்ளது. அத்தோடு இணைய குற்றவியல் வழக்கறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் இந்தச் சிக்கலை சரியாக வழக்குத் தொடுக்கவும், ஆய்வு செய்யவும் 10 மில்லியன் டாலர்களை ஒதுக்குவதாகவும் அறிவித்துள்ளது. தங்கள் வாடிக்கையாளர்களின் நம்பகத் தன்மையைக் காப்பாற்ற ஆப்பிள் நிறுவனம் இந்த உளவுச் செயலிக்கு எதிராகக் களமிறங்கி இருக்கிறது.

சென்ற வாரம் மீண்டும் ஆப்பிள் நிறுவனம் உலகம் எங்கும் 150 நாடுகளில் உள்ள தங்கள் முகமையான வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிவிக்கையை அனுப்பி உள்ளது. அதில், “அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்பட்ட இணையக் குண்டர்களால் தங்கள் அலைபேசிகள் குறிவைக்கப்படலாம்” எனச்செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ஒரு பத்துப் பேருக்கு மேல் அந்த அறிவிக்கை வரப் பெற்றிருப்பதாக அறிவித்துள்ளார்கள். இ.ந்.தி.யா. கூட்டணியைச் சேர்ந்த சசிதரூர், மஹூவா மொய்த்ரா, சீதாராம் எச்சூரி, அகிலேஷ் யாதவ், பிரியங்கா சதுர்வேதி, ராகவ் சதா, மூத்த பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் உள்ளிட்ட பலருக்கும் அந்த எச்சரிக்கை வந்துள்ளது.

“அலைபேசி ஒட்டுக்கேட்பு நேர்மையானவர்கள் செய்யும் செயல் அல்ல; குற்றவாளிகளின் செயல்” என்று ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறினாலும் அது மேலும் பாதிக்கப் பட்டவர்களையே குடையும் உத்தியைத்தான் கையாளும். ஆப்பிள் நிறுவனம், இணைய குண்டர்களுக்கு எதிர்காலத் திட்டமிடலுக்கு வசதியாகப் போகும் என்ற காரணத்தால், எச்சரிக்கையின் அடிப்படையை வெளியிடமுடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

இது ஆளும் பா.ஜ.க. அரசு பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமைக்கு எதிராக எவ்வளவு மோசமான செயல்பாடுகளில் இறங்கும் என்பதற்கு மேலும் ஒரு சான்றாக அமைந்திருக்கிறது.

- சாரதாதேவி

Pin It