ரொனால்ட் ரீகன் அமெரிக்க அதிபராக இருந்த பொழுது, “நீங்கள் யோசனைகளைச் சொல்வதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்; நான் முடிவெடுக்கிறேன்” என்று அவரது அமைச்சர்களைப் பார்த்துக் கூறினாராம். அதாவது ஒரு தனிப்பட்ட மனிதர், நாட்டின் அதிபர் என்ற முறையில் அவரது அமைச்சர்களின் யோசனைகளைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் குவிந்துள்ள அத்தகைய ஓர் அரசமைப்பைத்தான் “ஜனநாயகம்” என்று முதலாளித்துவ அறிஞர்கள் உரக்கக் கூவிக் கொண்டு திரிகிறார்கள். அப்படி ஒரு மிக, மிக... மிகப் பெரும்பான் மையான மக்களின் அதிமுக்கியமான நலனுக்காக முதலாளிகளின் நலனில் ஒரு சிறு கீறலைக்கூட ஏற்படுத்தி விட முடியாது என்பதைத் தான், மக்கள் மருத்துவ நலம் கருதி, அதிபர் ஒபாமா எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைவதில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

அமெரிக்க நாட்டின் இந்நிகழ்வுகளின் அடிப்படைகள் முதலாளித்துவ நாடுகள் அனைத்திலும் பிரதிபலிக்கவே செய்கின்றன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.

மண்டல் குழு பரிந்துரைகளில் ஒரு சிறுபகுதியை ஏற்றுக்கொண்டு நடுவண் அரசுப் பணிகளில் 27 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்க வேண்டும் என்று வி.பி.சிங் ஆணையிட்டவுடன், அப்படிச் செய்தால் தங்களுக்குத் திறமை இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகிப் போய்விடுமே என்று கதிகலங்கிப் போன பார்ப்பனர்கள் ‘அரசுப் பணி என்று இருந்தால் தானே ஒதுக்கீடு என்று கேட்பார்கள்; அனைத்தையும் தனியார்மயமாக்கிவிட்டால் ஒதுக்கீட்டுப் பிரச்சினையே இல்லாமல் செய்துவிடலாம்’ என்று முடிவெடுத் தார்கள்.

இரண்டாம் உலகப் போருக்கு முன்பிருந்தே ‘தனியார் மயம்’, ‘தாராளமயம்’ என்று கூக்குரலிட்டுக் கொண்டிருந்த அமெரிக்காவை எள்முனையளவும் பொருட்படுத்தாத பார்ப்பன இந்திய அரசு, பிற்படுத்தப்பட்டோருக்கு அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு என்றவுடன், கதிகலங்கிப் போய் தனியார்மயக் கொள்கைகயைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. அவ்வாறு தனியார்மயமாக்கலினால் காவு வாங்கப்பட்ட மக்கள் நலன்களில் மருத்துவச் சேவையும் ஒன்று. இன்று மருத்துவச் சேவையின் அவலமான நிலையை அனைவரும் அறிவர். இது அதிகார வட்டத்தில் இருப்பவர்களைக் கூட மனம் துணுக்குறுமாறு செய்கிறது. அவர்கள் சமூகத்திற்கு மக்களுக்கு விடைகூற வேண்டிய நிர்ப்பந்தம் உடைய மருத்துவக்கல்வி வேண்டும் என்று கூற ஆரம்பித்துள்ளனர்.

அண்மையில் “மருத்துவத் தொழிற்கல்வியின் தேசியக் கருத்தரங்கு-2011 ஒன்றை வேலூரில் கிருத்துவ மருத்துவக் கல்லூரியினர் நடத்தினர். இக்கருத்தரங்கில் கொள்கைகளை உருவாக்கும் அரசியல்வாதிகளும் - அரசு அதிகாரிகளும், மருத்துவக் கல்வியையும் மருத்துவச் சேவையையும் அளிக்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் மற்றும் பலரும் கலந்துகொண்டனர். இக்கருத் தரங்கில் நிறைவேற்றப்பட்ட பரிந்துரைகளைப் பற்றி 29.9.2011 அன்று சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் அவர்கள் விவரித்தார்கள். அவை பின்வருமாறு :

மருத்துவக் கல்லூரிகள் அவ்வப்பகுதியில் உள்ள மாவட்ட மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றுடன் தொடர்பு வைத்துக் கொள்வதோடு மட்டும் அல்லாமல், அவ்வப்பகுதி மக்களின் உடல் ஆரோக்கியத்திற்குப் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.

மருத்துவக் கல்லூரிகள் பல துறைகளிலும் திறமை கொண்ட மருத்துவர்களை உருவாக்க வேண்டும்; நோயின் ஒவ்வொரு கூறுக்காக வேறு வேறு மருத்துவர்களை நாட வேண்டிய அவலத்தை நீக்க வேண்டும்.

ஆரம்ப நிலை மருத்துவமும், அடுத்த நிலை மருத்து வமும், மக்கள் தாங்கள் வாழும் பகுதியிலேயே பெற்றுவிடும் படியாக மருத்துவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும்; அதற்கும் மேல் முடியாத நிலையில் மட்டுமே நகர்ப்புறங்களுக்கோ, சிறப்பு மருத்துவரிடமோ செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட வேண்டும்.

மருத்துவர்கள் குறிப்பிட்ட கால அளவிற்கு, கிராமப் புறங்களில் கட்டாயமாகப் பணியாற்றும் படியான விதிமுறை கள் உருவாக்கப்படவேண்டும்.

மேற்கண்ட பரிந்துரைகளைப் பாருங்கள். இலட்சக் கணக்கிலும், கோடிக்கணக்கிலும் பணத்தை முதலீடு செய்யும் மருத்துவமனைகளால் இவற்றைப் பின்பற்ற முடியுமா? அதேபோல் 20 இலட்சம் முதல் ஒரு கோடி வரை பணத் தைச் செலவிட்டுப் படித்துவிட்டு வரும் மருத்துவர்களால் இது முடியுமா? மேற்கண்ட பரிந்துரைகளின்படி நடப்பது மக்கள் நலனுக்கு உகந்தது தான். ஆனால் மருத்துவத் தொழிலில் பணத்தை முதலீடு செய்யும் முதலாளிகளின் கதி என்ன வாகும்? அவர்களுக்கு இலாபம் கிடைக்காது என்பது மட்டு மல்ல; போட்ட முதலீட்டையே திரும்ப எடுக்க முடியாமல் போய்விடுமே? அப்படி இருக்கையில் இப்பரிந்துரைகள் ஏற்கப்படும் என்பதற்கு என்ன அடிப்படை இருக்கிறது?

“இதே பிரச்சினை அரசின் வசம் மருத்துவம் இருந்தால் எழாதா?” என்று கேட்கலாம். இங்கு அரசு செலவிடுவதற் கும், முதலாளிகள் முதலீடு செய்வதற்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அரசு இயற்கை மூலாதாரங்களையும், பணத்தையும் ஒரு திட்டத்திற்காக ஈடுபடுத்தும் பொழுது அவற்றின் பயன் பாடு உச்சபட்சமாக இருக்க வேண்டும் என்று தான் கண்காணிக்கப்பட வேண்டியிருக்கும். திறமைசாலிகளும், மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களும் உரிய இடங் களில் இருக்கும் பொழுது, இயற்கை மூலாதாரங்கள் மற்றும் பணத்தின் பயன்பாடு உச்சபட்சமாக இருக்கும். திறமைக் குறைவானவர்களும், மக்கள் நலன் பற்றிய அக்கறை இல்லாத வர்களும் உயர் நிலைகளில் அமர்த்தப்பட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும்.

ஆனால் ஒரு திட்டத்தில் தனியார் மூலதனம் ஈடுபடுத் தப்படும் பொழுது முதலாளிக்குக் கிடைக்கும் இலாபம் தான் குறியாகக் கொள்ளப்படுமே ஒழிய, இயற்கை மூலாதாரங் களின் பயன்பாடு உச்சபட்சமாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை இருக்கவே முடியாது. எடுத்துக்காட்டாக மருத்துவ மனைகளில் இன்று நடக்கும் நடைமுறைகளைக் காணலாம். அந்த மருத்துவமனையில் ஒரு கருவி இருக்கிறது என்பதற் காகவே அதைப் பயன்படுத்தி அறிக்கை பெற்று வரும்படி நோயாளிகள் வற்புறுத்தப்படுகின்றனர். பல நேரங்களில் அக்கருவிகள் 5 விழுக்காடு மட்டுமே உண்மையாகப் பயன் பட்டு இருக்கும். 95 விழுக்காடு தேவையற்றுப் பயன்பட்டு, தேய்மானம் அடைந்து தன் ஆயுளை முடித்திருக்கும். முதலாளிகளின் இலாபச் சக்கரம் சரியாகச் சுழன்று இருக்கும். ஆனால் இயற்கை மூலாதாரங்கள் பயனின்றியே செலவழிக் கப்பட்டு இருக்கும். இம்முறையில் திறமையானவர்களும் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களும் வேறுவிதமாகச் செயல்பட்டுவிட முடியாது. யார் எப்படி இருந்தாலும் இயற்கை மூலாதாரங்கள் வீணாவதைத் தடுக்கவே முடியாது.

ஆனால் திட்டங்கள் அரசின் கையில் இருக்கும் பொழுது சரியான ஆட்கள் சரியான இடங்களில் இல்லை என்றால் தான் மூலாதாரங்கள் வீணாகும். அப்படியின்றி சரியான ஆட்களை, சரியான இடங்களில் அமர்த்துவதில் கவனமாக இருந்துவிட்டால் முழு நன்மையை மக்கள் பெறமுடியும்.

அப்படியென்றால் மருத்துவக் கல்வி இலவசமாக இருந்தால்மட்டுமே, வேலூரில் நடந்த கருத்தரங்கில் நிறை வேற்றப்பட்ட பரிந்துரைகளை ஏற்கமுடியும். ஆனால் நம் நாட்டின் ஆதிக்க வர்க்கம் அதற்கு வழிவிடுமா? கல்வியை இலவசமாக அளிக்க வேண்டும்; இலவசமாக மட்டுமே அளிக்க வேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியாசென் கூறிக்கொண்டே இருக்கிறார். அவர் நோபல் பரிசு பெற்றபின், வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக அவருடைய கருத்தை வெளியிடுகின்றனர்.

ஆனால், சேட்டன் பகத் என்ற எழுத்தாளர், 6.10.2011 அன்று கல்வியைத் தனியார் வசமே வைத்து இருக்க வேண்டும் என்றும் கல்வி வணிகமயமாவதுதான் நாட்டில் கல்வியின் தரம் உயர்வதற்கு ஒரே வழி என்றும் புதுடெல்லியில் கூறியிருக்கிறார். இவர் கூறியவற்றை ஊடகங்கள் பிரமாதமாக மக்களிடம் கொண்டு செல்கின்றன. தான் இவ்வளவு விளம்பரத்திற்குத் தகுதியுடைய வர் தானா என்று - சந்தேகம் கொள்ளும் அளவிற்கு அல்ல - அச்சம் கொள்ளும் அளவிற்கு அவரது பெயரையும், கருத்தையும் மக்களிடையே இவை கொண்டு செல்கின்றன.

ரொனால்ட் ரீகனின் ஏதேச்சதிகாரப் போக்கைச் சுதந்தரம் என்று முழங்கிய / முழங்கும் முதலாளித்துவ அறிஞர்களும் ஊடகங்களும், ஒபாமாவின் மக்கள் மருத்துவத் திட்டத்தை மக்களின் பொதுக் கருத்தாக உருவெடுக்கவிடாமல் தடுப்ப தையும் இந்நிகழ்வுகளுடன் ஒப்பிடலாம்.

அப்படியென்றால் மக்கள் மருத்துவம் என்பது கானல் நீர்தானா? இல்லை என்பதற்கான நிகழ்வுகளும் வரலாற்றில் நிகழவே செய்துள்ளன.

1917ஆம் ஆண்டில் சோசலிசப் புரட்சி வெற்றி பெற்று சோவியத் யூனியன் அமைந்த பின், அங்கு மருத்துவம் இலவசமாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சோசலிசத்தைத் தழுவிய பின் பல முதலாளித்துவ நாடுகளுக்குக் கிலி பிடித்துக் கொண்டது. தங்கள் நாட்டு மக்களும் சோசலிசத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் மக்கள் நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தின. அவற்றுள் ஒன்று தான் பிரிட்டனில் 1948ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட தேசியச் சுகாதாரத் திட்டம். இதை அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் அட்லி பிரபு ‘கருவறையிலிருந்து கல்லறை வரை’ என்று அழைத்தார். இத்திட்டத்தின்படி பிரிட்டிஷ் குடிமக்கள் அனைவரும், மற்றும் பிரிட்டனில் ஆறுமாதங்களுக்கு மேல் தங்க அனுமதிக்கப்பட்டிருக்கும் பிற நாட்டவர்களும் உயர்தர மருத்துவச் சிகிச்சையை இலவசமாகப் பெறலாம்.

இத்திட்டத்தைச் செயலற்றதாக ஆக்க, மார்க்ரெட் தாட்சர் பிரதமராக இருந்த பொழுது மிகவும் முயன்றார். ஆனால் மக்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக அவர் தனது முயற்சியைக் கைவிட்டார்.

மக்கள் ஒன்றுகூடி முதலாளித்துவ அறிஞர்களின் மற்றும் முதலாளித்துவ ஊடகங்களின் மாய்மாலங்களுக்கு மயங்காமல், உறுதியாகப் போராடினால், வேலூர் கருத்தரங்கம் பரிந்துரைகள் அனைத்தையும் அரசு ஏற்க வைக்க முடியும். இல்லை எனில் அவை கேலிக் கூத்தாகவே முடியும்.

மக்கள் அணியமாவார்களா?

Pin It