அன்றாடம் வரும் செய்தித்தாளைப் பிரித்துப் பார்த்தால் கொலை,கொள்ளை,கற்பழிப்பு, பாலியல் வன்கொடுமை,குடியால் நடக்கும் குடும்பக் கொலைகள்,பேருந்தில் கல்லூரி மாணவர்கள் குடித்துவிட்டுத் தகராறு,குடிபோதையில் தகராறு செய்த கணவன் கொலை. குடிக்கப் பணம் தராத காதலி கொலை, குடிமயக்கத்தில் போலீஸ் ஏட்டு தகராறு, குடிக்கப் பணம் கேட்டு மனைவியை அடித்து உதைத்ததால் மனைவி தற்கொலை, சாராயம் குடிக்கப் பணம் தராத தந்தையை வெட்டிக் கொன்றான் மகன் என்பவை முதலான செய்திகளே முக்கிய செய்திகளாகிவிட்டன.
தமிழகத்தில் 4000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளனவாம்.முன்பெல்லாம் மது என்றால் கள், சாராயம் மட்டுமே. இப்போது பீர், பிராந்தி, விஸ்கி, ஒயின் என்று பற்பல மது வகைகள் மலிந்து விட்டன வாம்.முன்பெல்லாம் மறைவு இடங்களில் விற்கப்பட்ட வை, இப்போது ஊருக்கு ஊர்,பொது இடங்களில் அரசு அங்கீகாரம் பெற்ற டாஸ்மாக் என்ற முத்திரையோடு விற்கப்படுகின்றன. சில இடங்களில் ‘ஏசி’யும் உண்டு என்கிறார்கள்.
பள்ளி, கல்லூரிகள் பக்கத்திலேயே இவைகள் இப்போது திறந்து விடப்பட்டிருப்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்களே குடிக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது.குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் தங்கள் உயிரோடு மற்றவர்கள் உயிர் களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றனர்.குடிக்கின்ற இளைஞர்கள் தங்களால் தன் பெற்றோர்கள்,மனைவி,மக்கள் பாதிக்கப்பட்ட பரிதாப நிலைக்கு ஆளாக்கப்படுவார்கள் என்பதை உணர்ந்தால் குடிக்கமாட்டார்கள்.
ஆண்டு ஒன்றுக்கு குடித்துவிட்டு வாகனம் ஓட்டி இறந்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கு எடுத்துப் பார்த்தால் தெரியும்.18வயது முதல் 35வயதுக் குட்பட்டவர்கள் தான் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி இறக்கின்றார்கள்.இதனால் பெண்களும் இளம் வயதிலேயே விதவைகளாக நேரிடும் அவலம் அதிகரித்து வருகிறது.குடிக்கலாம் என்று அரசு அனுமதித்து,பாரைதிறந்து விட்டு,அதனால் பல ஆயிரக்கணக்கான விதவைகள் உருவாக்கப்படுகிறார்கள்.தங்கள் துணையையும் இழந்து தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்து அவர்களை முன்னேற்றவும் முடியாமல் தவிக்கிறார்கள்.
பெண்கள் விதவைகளாகக் காரணமான மதுபானக் கடைகள் இழுத்து மூடப்படவேண்டும். மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசு மது குடிக்கும் பழக்கத்தை ஊக்கு விக்கக்கூடாது. குடிகாரர்கள் தங்களை அழித்துக் கொள்வதுடன் தங்களைச் சார்ந்தவர்களையும் அழித்து வருகின்றனர். மதுவின் தீமையில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டும். பெண்கள் கல்வி கற்றுப் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும்.
மதுவின் தீமைகளை உணர்ந்த தந்தை பெரியார் அவர்கள் தன் சூறாவளிச் சுற்றுப்பயணம் மூலம் மக்களை விழிப்படையச் செய்ததுடன் தன் வீட்டுத் தோட்டத்தில் இருந்த 500 தென்னை மரங்களையும் வெட்டி வீழ்த்தியிருக்கிறார்.இதனால்கள் இறக்குவதைத் தடை செய்துள்ளார்.
மகாத்மா காந்தி,அறிஞர் அண்ணா வலியுறுத்தி வந்த மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். மக்களை மதுவின் பிடியில் இருந்து விடுவிப்பது அவசியம். முழுமையான மது விலக்கை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டின் பண்பாடு காக்கப்படும். மகளிர் அமைப்பினரும் சமூகச் சிந்தனையாளர்களும் மக்களிடையே இதற்கான ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.
பெற்ற தாய்கூட,குடித்துவிட்டு நிலைகுலைந்து கிடக்கும் மகனைப் பார்த்து அருவருப்பு அடைவாளாம்;அப்படிச் சொல்கிறார் திருவள்ளுவர்.அவ்வளவு கொடுமையான குடியைத் தமிழகம் அனுமதிக்கலாமா?
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக்களி. ( குறள் 923)