காசு கண்ணனின் ‘இஸ்லாமிய அடிப்படைவாதம்: ஒரு பார்வை’ (காலச்சுவடு, செப்-அக் 03) கட்டுரையை ஊன்றி வாசித்தேன்.அக்கட்டுரை இஸ்லாத்தையும், முஸ்லிம் சமூகத்தையும் முழுக்க முழுக்கக் குறிவத்துள்ளதால் ஒரு முஸ்லிம் என்ற வகையில், நியாயத்தை சொல்லும் உரிமை, வேறு யாரையும் விட எனக்கு அதிகமாகவே உள்ளது என்பதால் அதை பதிவு செய்ய விரும்புகிறேன்.

இனி விஷயத்திற்கு வருவோம்: ஹிந்துவ இயக்கத்திற்கு எதிர்வினையாக இஸ்லாமிய அடிப்படைவாதம் தோன்றவில்லை எனக் கூறியுள்ளார். அதற்கான எந்தத் தரவுகளையும், சான்றுகளையும் தரவில்லை. அவரது வாதத்திற்கு முரணானதொரு வாதத்தை, அவரது அதே கட்டுரையின், அடுத்த பத்தியின் தொடக்கத்தில் எழுதியுள்ளதைப் பாருங்கள் ‘இஸ்லாமிய அடிப்படைவாதம் இந்தியாவில் இந்துத்துவத்திற்கு எதிரான சக்தியாகவும்’...

அடுத்ததாக உலக அளவில் என்று பார்த்தால் ஹிந்து மதம் சிறுபான்மையாகிவிடும் என்ற புதிய மதிப்பீட்டைத் தந்ததன் மூலம் ஹிந்துத்துவத்தின் நவரட்சகராக பரிணமிக்கிறார் கண்ண(பிரா)ன். இந்த அளவுகோலை எல்லா விஷயங்களுக்கும் பயன்படுத்தலாமே? வீட்டில் நடக்கின்ற கணவன், மனைவி பிரச்சனையிலிருந்து, ஒரு நாட்டின் அரசு சந்திக்கும் சிக்கல் வரை இந்த அளவுகோலை பயன்படுத்தினால் என்னவாகும்?

பல நடுநிலையாளர்கள் உண்மையை நேசிப்பவர்களால் இனங்காணப்பட்டு வரும் ஹிந்து பாஸிசம் தப்பிப் பிழைப்பதற்கான நியாங்களை வலிந்துரைப்பது, கண்ணனது இவ்வாதம் மூலம் தெளிவாகின்றது. பாஸிஸ்டுகளால் உயிரிழந்த, உறுப்பிழந்த, பொருளிழந்த, மானமிழந்த சகோதர, சகோதரிகளிடம் போய் இந்த வாதத்தைச் சொல்லுங்கள். அவர்கள் உங்களுக்குப் புரிய வைப்பார்கள். ஹிந்துத்துவ - யூத இருதலைக் காதல் பற்றிய உங்களின் எதிர்ப்பை என்னவென்று சொல்ல?

உமது வரலாற்றறிவை சற்று வளப்படுத்திக் கொள்வது நலம். அமெரிக்கத் தந்தையின் போஷிப்பில்தான் அதன் கள்ளக் குழந்தை இஸ்ரேல் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. யூத அமெரிக்கக் கூட்டு பல்லாண்டுகளாக பாலஸ்தினீயர்களை வேட்டையாடி வருவது உலகறிந்த உண்மை. உலகிலேயே மிகச்சிறந்த எல்லைப் பாதுகாப்பு, உளவு அமைப்பு கொண்ட ஒரே நாடு இஸ்ரேல். அதன் தந்தை அமெரிக்காவின் கீர்த்தியோ அதனினும் பெரிது. தானியங்கித் துப்பாக்கிகள், கவச வாகனம், டாங், ஏதுகணை, குண்டுவீச்சு விமான சகிதமாய் ஆயுதமற்ற, நிராதரவான குடிமக்களை எதிர்கொள்ளும் ஒரே நாடு உலகில் உண்டென்றால் அது இஸ்ரேல்தான்.

இஸ்ரேல் உருவாக்கி வரும் நீங்கா மரண நிழலில், பால் மணம் மாறாத பச்சிளம் பாலஸ்தீன் குழந்தைகளின் கல்வீச்சும்,கவண்கல்லும் பெரியவர்களின் மனித வெடிகுண்டுகளும் தங்களின் எதிர்ப்பை பறைசாற்றி வருகின்றன. அமெரிக்க இஸ்ரெலின் தகாத உறவினால், பலஸ்தீனர்களின் விடுதலை பெருமூச்சை நிருத்திட இயலவில்லை.

இங்கோ, ஹிந்துத்துவ பாஸிஸ்டுகளின் பெரிய அண்ணன் போக்கினால் நம் அருமைத் தாயகத்தின் உள்ளேயும் வெளியேயும் தீராதச் சிக்கல்(எ.கா..ஆந்திரா, ஒரிஸ்ஸா இன்ன பிற மாநிலங்களின் நக்ஸல் போரட்டம், நாகாலாந்து, மணிப்பூர், கஷ்மீர் தேசிய இனப் போராட்டங்கள்).

இந்நிலையில் ஹிந்துத்துவ சக்திகளையும், ஸியோனிச (யூத)சக்திகளையும் கூட்டு சேர்த்துப் பார்க்கும் போக்கினால், என்னன்ன ஆனர்த்தங்கள் அலைகழிக்கப்போகின்றனவோ? சுந்தரராமசாமி அவர்களின், ‘ஒரு புளியமரத்தின் கதை’ ஹீப்ரு மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது போல், அவரின் தனயனாரின் கட்டுரையும் இஸ்ரேலில் மொழியாக்கி வெளியிடத்தக்க அனைத்துத் தகுதிகளையும் கொண்டுள்ளது. ஸியோனிஸ்டுகளைப் பாஸிஸ்டுகளே காமுறுவர். எனவே கண்ணனுக்கு யூத அமெரிக்கக் கூட்டு இனிப்படைவாதம் பெண்ணுரிமை உட்படப் பல உரிமைகளை நசுக்குகிறது என்ற ஓயாத ஒரு மனக்குறை காசு கண்ணனுக்கு இருக்கின்றது. முஸ்லிம் மகிளிரை, பர்தா இல்லாமல் பிறந்தமேனியாகப் பார்ப்பதில் அப்படி என்ன ஆர்வம்? மேலைப் பண்பாடு, தன்னுடன் கூடவே கொண்டுவரும் வரைமுறையற்ற பாலுறவு, தீரா நுகர்வு வெறி, ஆடம்பரத் திளைப்பு இவற்றின் விளைவே தனிமனித கூட்டு வாழ்வில் தோன்றும் சலிப்பு, பிளவு, விரக்தி, தற்கொலை. இவற்றிலிருந்து மனிதகுலத்தை காக்க, ஒரு சித்தாந்தத்தினால் முடியவில்லையெனில் அது காலாவதியான கையாலாகாத, சித்தாந்தம் என்றே அறியப்படும். ஒரு சித்தாந்தத்தின், அதன் வழிநிற்கும் சமூகத்தின் பாதுகாப்பு அரண்களை அடக்குமுறை என நாமகரணஞ்சூட்டித் தகர்க்க முனைவது எதிரிகளின் செயல்பாடாகவே கணக்கில் கொள்ளப்படும்.

முஸ்லிம்கள் தங்களது பிரச்சனைகளுக்காகத் தாங்கள் போரிட்டால் அது தமிழ்த் தேசியவாதிகளை எதிரிகளாக நிறுத்தும். மதச்சார்பின்மைவாதிகள் முஸ்லிம்களுக்காக நியாயங்கேட்டால், அது ஹிந்துத்துவத்தை வலுப்படுத்தும் எனத் தாங்கள் வம்படியாக வாதிக்கின்றீர்கள். அதாவது முஸ்லிம்கள், தங்கள் பிரச்சனைகளை அவர்களும் பேசக்கூடாது, பிறரும் பேசக்கூடாது. என்ன வகை நீதி இது? கண்ணன் சொல்வதைத்தான், ஹிந்துத்துவாவும் வகுப்புவாதம், போலி மதச்சார்பின்மை எனக் கூப்பாடு போடுகின்றது. முஸ்லிம்களுக்கு நியாத்தின் வாசல்கள் அனைத்தும் இவ்விதமாகத்தான் அநீதியாக மறூக்கப்படுகின்றன. இதன் எதிர்வினையாகத்தான் வன்முறி வழிகளை முஸ்லிம் இளைஞர்கள் தேர்ந்தெடுக்க நிர்பந்திக்கப்படுகின்றனர். சிறுபான்மைத் தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டுமென்றால், அவர்களுக்கு உந்துவிசையாக, ஊற்றுக்கண்ணாக இருக்கும் நியாயம் மறுக்கும் வெறுப்புக் கொள்கைகாரர்களைத் தலைவிக்க முடியாதபடித் தண்டிப்பதுதான் ஒரே வழி.

முற்போக்காளர்கள், மார்க்ஸியவாதிகள், பின் நவினத்துவவாதிகள் இவர்கள் முஸ்லிம்களை போஷிக்கின்றனர் என ஒருபுறம் கண்ணன் குற்றஞ்சாட்டிக் கொண்டே திராவிட, காங்கிரஸ், காம்யூனிச இயக்கச் சார்புகள் புதிய தலைமுறை முஸ்லிம்களிடையே இல்லை எனவும் பரிதாப்படுகின்றார். கண்ணன் சொல்லவருவது எமக்குப் புரியாமலிலை. அது என்னவெனில், மதச்சார்பற்ற, தன்னலங்கருதாப் போரளிகளின் உதவி முஸ்லிம் சமூகத்திற்குக் கிடைக்கக் கூடாது. ஆனால் முஸ்லிம்களோ தங்களது சோந்தத் தலைமையை உருவாக்காமல் ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளின் கைப்பாவையாகத்தான் என்றென்றும் இருக்க வேண்டும் என்று கண்ணன் எதிர்பார்க்கிறார்.

இஸ்லாத்தில் தலித்துகளுக்குக் கிடைத்த சமத்துவம் பற்றி கண்ணனின் மனக்குமைச்சல் ‘இஸ்லாமிய தலித்துகள்’ என்ற சொல்லாடல் மூலம் வெளிப்படுகின்றது. சனதானத்திற்கெதிராகக் கலகக் குரலுயர்த்திய பௌத்த, கிறிஸ்தவத்தை, ‘நவ பௌத்தர்கள், தலித் கிறிஸ்தவர்கள்’ என நாமகரணஞ்சூட்டிச் செரித்த சாணக்கிய தந்திரம் இஸ்லாத்திடம் சொல்லாது. கண்ணனின் ‘இஸ்லாமிய தலித்துகள்’ என்ற சொல்லாடலை இழிந்த சனாதான வழக்காகவும் வசைச் சொல்லாகவும்தான் நாங்கள் பார்க்கின்றோம்.

இந்த சொற்பயன்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம். ‘சனதருமபோதினி’ ‘கருப்பு’ இவ்விரண்டிலும் ஷாஜஹானின் எழுத்துக்ளுக்காகப் பெருங்குறைபட்டுள்ளார் கண்ணன். தனது சொந்தச் சமூகத்தின் பிரச்சனையை ஷாஜஹான்தான் பேச முடியுமே தவிர, முற்போக்கு போர்வையில் முக்காடிட்டு வரும் கண்ணன்கள் அல்ல. ‘தமிழகத்தில் இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமியர் தனிமைப்படுத்தப்படும் போக்கு அதிகரித்து வருகிறது’ என்று தங்களின் கற்பனா வரிகள் மூலம் குஜராத் இன அழித்தொழிப்பு இங்கேயும் அரங்கேறிடாதா? என்ற தங்களின் உள்ளக்கிடக்கை வெளிப்படுகிறது.

கண்ணன் அவர்களே! இந்தியாவில் போர்க்களம் தெளிவாக உள்ளது. முஸ்லிம்களும் ஏனைய சிறுபான்மையினரும் ஓரணியிலும் பாஸிஸ்டுகள் எதிரணியிலும் உள்ளனர். இடைபுகுந்து குழப்பும் அனைவரும் பாஸிஸக் கணக்கிலேயே சேர்வர். பௌத்த, சமண, கிறிஸ்தவ கலக் குரல்களைச் செரித்து, நெரித்து, அழித்தது போல் இஸ்லாமிய விடுதலைச் செய்தியையும் சனாதானம் அழித்திடவியலாது. சனாதனத்தின் தொண்டையில் சிக்கிய முள்ளே இஸ்லாம்.

இஸ்லாம் கலகக் குரல் கோட்பாடு அல்ல. அது ஒரு விடுதலை நெறி. தன்னைப் பின்பற்றியவர்களைச் சகல சிக்கல்களிலிருந்தும் விடுவிப்பதோடு, ஆதிக்க, ஏகாதிபத்திய, சுண்டல் சக்திகளின் பல்முனைத் தாக்குதலிலிருந்து தன்னையும் தன் சீடர்களையும் காப்பற்றும் வலிமை அதற்குண்டு. இது எமது யுத்தம். அதை எப்படி நடத்திச் சொல்வது என்பது பற்றி உம்மைப் பொன்றவர்கள் பாடம் நடத்தத் தேவையில்லை. காலச்சுவட்டின் கசாப்புக் கரிசனமும் முதலைக் கண்ணீரும் எமக்கு அவசியமில்லை. தாங்கள் எந்த அணியில் உள்ளீர்கள் என்பதில் நாங்கள் தெளிவாகவே உள்ளோம். ஹிந்துத்துவ பாஸீஸத்தை யார் எவ்வளவு நியாயப்படுத்ததினாலும் சரியே! அவர்கள் இம்மண்ணினதும், இம்மக்களினதும் எதிரிகளின் பட்டியலேயே சேர்க்கப்படுவர்.

(‘காலச்சுவடின் ஆள்காட்டி அரசியல்’ நூலிலிருந்து)

Pin It