உடையார்பாளையம் வட்டம், ஜெமீன் தத்தனூர் பொட்டக் கொல்லைக்கு, நான் முதன்முதலாக 1947 அக்டோ பரில் சென்றேன். அன்று தொட்டு அவ்வூர்ப் பெரிய வர்கள் பலரை அறிவேன்.

1957 நவம்பரில், தந்தை பெரியாரின் கட்டளையை ஏற்று, என்னுடன் சேர்ந்து, பொட்டக்கொல்லை கோவிந்த சாமி, துரைக்கண்ணு, சி. இராமசாமி, தமிழரசன் ஆகிய இளந்தோழர்கள் அரசமைப்புச் சட்டத்தை எரித்து, அதற்கான தண்டனையை ஏற்றனர். அவர்களுள் எஞ்சி இருப்பவர்கள் துரைக்கண்ணுவும், சி. இராமசாமியும் மட்டுமே.

எங்களையெல்லாம் விட, அகவையால் மிக இளையவர் பொட்டக்கொல்லை சி. இராமசாமி என்கிற தமிழ்மணி. அவர் திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில், 1960-1962 இல் படித்த காலம் முதல் நெருக்கமாக அவரை அறிவேன்.

அவர் அடக்கத்தின் உருவம்; ஆழ்ந்த தமிழறிவின் அடை யாளம்; கடமையில் கணந்தோறும் கவலைகொண்ட நல்லா சிரியர்; சுயமரியாதைக் கொள்கைக் காவலர்.

இவ்வளவு தகுதிகளுக்குமேல் தந்தை பெரியாரின் தலை மையில்-தமிழ் மறவர் வை. பொன்னம்பலனார், தமிழறிஞர் பொன். கோதண்டராமன், வே. ஆனைமுத்து ஆகியோரின் அறிவுரைகளுடன், 30.6.1968 முற்பகலில் அன்பே வடிவான கமலம் அவர்களை வாழ்க்கைத் துணைவியாராக ஏற்றார். அவருடைய மன்றல் விழா, ஒரு மாநாடு போல் நடை பெற்றது.

அன்று காலை 6 மணிமுதல் 7.30 மணிவரை மருவத் தூரில் பொன். இராசமாணிக்கம்-பொன். எழிலரசி திருமணத் தைத் தந்தை பெரியார் நடத்தி வைத்தார். மேலேகண்ட நாங்கள் மூவரும் அறிவுரை வழங்கினோம்.

தங்கத்தம்பி பொன். இராசமாணிக்கம் ஏற்கெனவே 2003 இல் மறைந்துவிட்டார். 1.8.2016 அன்று 74ஆம் வயதில் தமிழ்மணியும் மறைந்துவிட்டார். நானும், பொற்கோவும் உள்ளோம்-ஆனால், நம் இளைய தலைமுறையினர் இரு வரைப் பறிகொடுத்துவிட்டோம்.

“வாழுங்காலத்தில் நல்லன செய்வதைத் தள்ளிப்போ டாதே” என்கிற ஒரு நல்ல பாடத்தை இந்த இளைஞர்களை இழந்து துயருறும் நான் உணருகிறேன்.

கணவரை இழந்த கவலையில் மூழ்கியிருக்கும் கமலம் அவர்களை 21.8.2016 பகல் 1 மணிக்கு அரியலூரில் அவரு டைய வீட்டில் காணப்போனேன். ஓடிவந்த அவர் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு குமுறினார். முதுமையிலும் அஞ்சாத நானும் அழுதுவிட்டேன். தமிழ்மணியின் இறப்பை எண்ணியெண்ணி நொந்தேன்.

அவர் பெற்றிருந்த தமிழறிவு ஆழமானது; சுயமரியா தைக் கொள்கையில் அவர் பெற்றிருந்த பிடிப்பு கெட்டியானது; தம் மக்களை முன்னேற்றுவதில் அவர் கொண்டிருந்த அக்கறை போற்றத்தக்கது.

2012இல் தம் ஒரே மகன் அறிவுச்செல்வனைப் பறி கொடுத்தார். தாளமுடியாத - மீளமுடியாத துயரில் 10.7.2012 லேயே தமிழ்மணியும் கமலமும் மூழ்கினர். அறிவுச்செல் வனின் உழைப்பைச் சுரண்டியவர்கள், நம் தமிழ்மணியை ஏறெடுத்தும் பார்க்காதது ஓர் அவலம்!

பல நல்ல நூல்களைத் தமிழர்க்குத் தந்த தமிழ்மணி அவர்கள், இறுதியாக எழுதிய - “திரும்பிப் பார்க்கிறேன்! திகைத்து நிற்கிறேன்!” (தன் வரலாறு) என்ற நூலை, எனக்குக் காணிக்கையாகப் படையலாக்கியுள்ள அறிஞர் சி. தமிழ்மணி அவர்களை, என்றும் நான் மறக்க இயலாது. ஆற்றொணாத் துயரில் மூழ்கியுள்ள அவருடைய துணைவியார், என் அன்புக் குரிய மகள் கமலம் அவர்களும், அன்னாரின் மகள் தமிழரசி, மருமகன் சாமதுரை மற்றும் பெயரக்குழந்தைகளும் உறவி னர்களும் மனந்தேற வேண்டுகிறேன்.

படத்திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, ‘சிந்தனையாளன்’ வளர்ச்சி நிதியாக உருவா 1,000 கமலம் தமிழ்மணி வழங்கினார்.

வெல்க, வெல்க சி. தமிழ்மணியின் புகழ்!

Pin It