புன்முறுவல்பூத்த முகம், காற்றில் அசைந் தாடும் தலைமுடி, ஆறடிக்கு மேல் உயரம், கால்நடை யாகவும் பேருந்திலும் அலைந்து அலைந்து தொழில்கள் வளர்ச்சிக்கும் பெரி யார் சுயமரியாதைக் கொள்கை வளர்ச்சிக்கும் உரம் சேர்த்த ஓயாத உழைப்பு - இவ்வளவு இயல்புகளுக் கும் இருப்பிடமானவர், அம்பத்தூர் குப்பம் தே.முத்து அவர்கள்.

அன்னார் நம்மிடையே 85 ஆண்டுகள் 7 மாதங் கள் 8 நாள்கள் வாழ்ந்து 11.8.2016 வியாழன் காலை 8 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம்.

தே.முத்து, 3.1.1931இல் திருக்கழுக்குன்றம் அடுத்த மானாமதி ஓட்டேரியில் வேளாண்மைத் தொழிலில் முன்னணியிலிருந்த தேவராசன் - கன்னியம்மாள் இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர். உடன்பிறந்த மூத்தவர் தம்பிரான் சில ஆண்டுகளுக்கு முன் மறைந்தார். தம்பி பார்த்தசாரதி, தங்கை கௌரி நலமாக உள்ளனர்.

2014இல் தே. முத்து அவர்களின் உடல்நலம் கெட்டது. அப்போது முதல் அவருடைய துணைவியார் ஜெயலட்சுமி மனம் நைந்து, ஒரு நொடி கூடப் பிரி யாமல் முத்துவுடன் இருந்தார்.

தோழர் தே. முத்து 1960 முதல் சுயமரியாதைக் கொள்கையாளர். தந்தை பெரியாரிடம் நெருங்கிப் பழகி அன்னாரின் மதிப்பைப் பெற்றவர்; பெரியாரின் கொள்கை நூல்களைத் தம்மோடு இரயல்வே கேரேஜ் தொழிற்சாலையில் பணிபுரிந்த தோழர்களிடையே இடைவிடாது பரப்பியவர்.

தந்தை பெரியார், ஈ.வெ.ரா. மணியம்மை, “விடுதலை” சா. குருசாமி, தே.மு. சண்முகம், திரு வாரூர் கே. தங்கராசு, திருச்சி வே. ஆனைமுத்து, “விடுதலை” கி. வீரமணி ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர்.

தொழிற்சாலையில் பணியில் இருந்தபோதே, சொந்தமாக, பேட்டரிகளுக்கும் தொழிற்சாலைகளுக் கும் தேவையான ஆசிட், டிஸ்டில்டு வாட்டர் இவற்றை உற்பத்தி செய்து விநியோகம் செய்து பெரும் பொருள் ஈட்டியவர்; தம் துணைவியாரையும், ஆறு மகள் களையும், ஒரே மகன் எழில்குமாரையும் பொன்னே போல் போற்றி வளர்த்தவர்; தம் மக்களுக்கு வேண்டிய செல்வத்தைத் தேடி வைத்தவர்; உறவினர்களையும், உதவிநாடி வந்தவர்களையும் மகிழ்ச்சியுடன் ஆதரித்து மனம் பூரித்தவர்.

1993க்குப் பிறகு, வே. ஆனைமுத்து, தம் வழி காட்டி ஆ. கிருஷ்ணசாமி ஆகியோருடன் இணைந்து, அம்பத்தூரில், சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலை யில், “பெரியார் ஈ.வெ. இராமசாமி-நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை” நிறுவப்பட முன்னின்றவர்; அதன் அறங்காவலர் குழுவின் ஆயுள்காலச் செயலாள ராக, 11.8.2016இல் மறையும் வரையில் விளங்கியவர்.

2015 செப்டம்பர் 20 ஞாயிறு அன்று அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்ற “சுயமரியாதை வாழ்வியல் சான்றிதழ்ப் பயிற்சி வகுப்பு” தொடக்க விழாவில் மகிழ்ச்சியுடன் பங்கேற்றார்.

கடந்த 10 மாதங்களாக உடல்நலிவுற்றிருந்த தே. முத்து அவர்கள், 11.8.2016 காலை மறைவுற்றார்.

அன்னாரின் மறைவை ஒட்டி உறவினர்களும், பெரியார் தொண்டர்களும், நண்பர்களும் 11.8.2016, 12.8.2016 இரு நாள்களிலும் வந்து, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

12.8.2016 காலை இறுதி ஊர்வலம் புறப்படுமுன், இல்ல முன்புறப் பந்தலில், வே.ஆனைமுத்து தலைமையில் நடந்த இரங்கல் கூட்டத்தில், தி.க., தி.மு.க., மா.பெ.பொ.க. தோழர்களும் உறவினர்களும் இரங் கல் உரையாற்றினர்.

அன்னாரின் உடல்  அடக்கம் அம்பத்தூர் இடுகாட்டில் 12.8.16 முற்பகல் 11 மணிக்கு நடைபெற்றது.

பெரியாரின் கொள்கை வளர்ச்சியில் நாட்டங் கொண்ட தோழர் தே. முத்து அவர்களின் மறைவு அன்னாரின் குடும்பத்தாருக்கும், பெரியார் இயக் கத்தினர் அனைவர்க்கும், பெரியார் - நாகம்மை அறக்கட்டளையினர்க்கும் பேரிழப்பாகும். புகழ் வடிவில் என்றும் வாழ்வார் - நம் தே. முத்து!

வாழ்க, வளர்க தே.முத்துவின் புகழ்!

Pin It