தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்கப்பட்டபோது, ‘புத்தகங்களுடன் மகிழ்ச்சி-யாக வாழ்ந்து விட்டு வருவேன்’ என்று பதிலளித்தார் ஷவஹர்லால் நேரு.

‘என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று’ என்றார் பெட்ரண்ட் ரஸல்.

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் ‘புத்தகம்’ என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

‘கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்’ என்றாராம் தந்தை பெரியார்.

‘வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்’ என்றாராம் நெல்சன் மண்டேலா.

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம். இன்று மாஸ்கோ லெனின் நூலகம்தான் உலகிலேயே மிகப் பெரியது.

குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தூக்கியெறியப்பட்ட போது பேரறிஞர் இங்கர்சால் சென்ற இடம் நூலகம்.

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்.

‘ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்’ என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.

ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ‘ஒரு நூலகம் கட்டுவேன்’ என்று பதிலளித்தாராம் மகாத்மா.

விமானத்தில் போகாமல் பம்பாய்க்கு காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன் என்று வினவியபோது பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது என பதிலளித்தாராம் அறிஞர் அண்ணா.

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர் கிங்.

எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் கேட்டபோது... எது நூலகத்திற்கு அருகில் உள்ளது என கேட்டாராம் டாக்டர் அம்பேத்கர்.

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம் பகத்சிங்.

Pin It