ambedkar_562 

குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகள் ஒரு புறமிருக்க, பெண்களைப் பற்றி புத்தரின் பொதுவான கண்ணோட்டம் என்னவாக இருந்தது என்பதை இப்பொழுது நாம் பார்ப்போம். புத்தர், பெண்களைத் தாழ்வாக மதித்தாரா? பவுத்தர்களின் புனித இலக்கியங்களைப் படிப்பவர்கள், பெண்களைப் பற்றி புத்தர் குறிப்பிடும் இடங்களில் எல்லாம், பெண்களை இழிவுபடுத்துவதாகக் கருதப்படும் எதையும் கூறுவதற்கு பதில், பெண்ணை புத்தர் எப்பொழுதும் பெருமைப்படுத்துவதற்கும், உயர்த்திக் கூறுவதற்குமே முயன்றுள்ளார் என்பதை நன்கு உணர்ந்து தெளிவு பெறுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தக் கருத்துக்கு ஆதரவாக, நான் ஒரு சில எடுத்துக்காட்டுகளை கூற விரும்புகிறேன்.

பண்டைக் காலத்திலிருந்து, இந்திய மக்கள் பொதுவாக, பெண் குழந்தை பிறப்பதை ஒரு கெடுவாய்ப்பாகவே கருதி வந்துள்ளனர். இந்த மனோபாவம் புத்தருக்கு இருந்ததா? இப்பிரச்சனை தொடர்பான புத்தரின் கண்ணோட்டம், மரபான கண்ணோட்டத்திற்கு முற்றிலும் எதிரானதாகும். பிரசேனாஜித் மன்னருக்கு அவர் அளித்த அறிவுரையை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். ஒருமுறை மன்னர் பிரசேனாஜித், ஸ்ராவஸ்தியில் ஜேடாவின் தோட்டத்தில் புத்தரை காணச் சென்றிருந்தார். அந்த நேரத்தில் அரண்மனையிலிருந்து ஒரு தூதர், அவருடைய மனைவியான அரசி மல்லிகாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் தெரிவித்தார். இச்செய்தியை கேட்டதும் மன்னருடைய முகம் மாற்றமடைந்து, அவர் சோகமாகவும் விரக்தியடைந்தவராகவும் காணப்பட்டார். அவருடைய முகத்தில் மாற்றத்தைக் கண்ட புத்தர், அதற்கான காரணத்தை வினவினார். இதற்கான காரணம் கூறப்பட்டதும் புத்தர், “ஏன் வருத்தப்படுகிறீர்கள்? ஒரு பெண் குழந்தை, ஓர் ஆண் குழந்தையைக் காட்டிலும் மேம்பட்டதாக இருக்கக்கூடும். ஏனெனில், அவள் விவேகமும் ஒழுக்கமும் நிறைந்தவளாக வளர்வாள். அவள் பெற்றெடுக்கும் மகன் மகத்தான செயல்களைப் புரிந்து, பெரும் ராஜ்ஜியங்களை ஆட்சி புரியக்கூடும்...’ என்று கூறினார்.

சில குடும்பங்கள் ஏன் உயர்வடைகின்றன, சில குடும்பங்கள் ஏன் சீரழிகின்றன என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், புத்தர், பிக்குகளுக்கு இவ்வாறு கூறியதாகத் தெரிகிறது :

“எத்தகைய குடும்பங்கள், துறவிகளாக இருந்தாலும், பெரும் செல்வங்களை அடைந்த போதிலும் அவை நீண்ட காலம் இருப்பதில்லை. ஏனெனில், இழந்தவற்றைத் திரும்பப் பெறுவதற்கு அவர்கள் முயல்வதில்லை. சீரழிந்தவற்றை மேம்படுத்துவதற்கு அவர்கள் முயல்வதில்லை. அவர்கள் மிகையாக உண்கிறார்கள், குடிக்கிறார்கள், ஒழுக்கங்கெட்ட ஒரு பெண்ணையோ அல்லது ஓர் ஆணையோ அவர்கள் அதிகாரத்தில் அமர்த்துகிறார்கள். எத்தகைய குடும்பங்களாயினும் அவையெல்லாம் நீடித்திருக்க முடியாமல் போவதற்கு, இந்த நான்கே காரணங்களாகும் அல்லது இவற்றில் ஏதாவது ஒரு காரணத்தினால் ஆகும்.

“பல குடும்பங்கள், துறவிகள் நீண்டகாலம் நீடித்திருப்பதற்குக் காரணம், அவர்கள் இழந்ததைத் திரும்பப் பெறுவதற்கு முயல்கின்றனர், சீரழிந்ததை மேம்படுத்துவதற்கு முயல்கின்றனர், மிதமாக உண்கின்றனர், குடிக்கின்றனர்; மற்றும் நற்பண்புள்ள ஒரு பெண்ணையோ அல்லது ஆணையோ அதிகாரத்தில் அமர்த்துகின்றனர். எத்தகைய குடும்பங்களாயினும் அவை நீண்ட காலம் நீடித்திருப்பதற்கு, இந்த நான்கும் காரணங்களாகும் அல்லது இவற்றில் ஏதாவது ஒரு காரணத்தினாலாகும்.’

ஒரு மன்னர், சக்கரத்தைச் சுழற்றுபவர், அதாவது ஒரு மாமன்னராக விரும்பும் ஒருவர், இந்த உலகில் தோன்றும் போது என்ன ஏற்படுகிறது என்று பிக்குகளுக்கு விவரித்துக் கூறுகையில், புத்தர் அவர்களிடம் இவ்வாறு கூறியதாகத் தெரிகிறது: “அத்தகைய ஒரு மன்னர் தோன்றும் போது ஏழு செல்வங்களும் தோன்றுகின்றன. சக்கரம், குதிரை, அணிகலன், பெண், வீட்டின் – தந்தை மற்றும் வாரிசு என்ற செல்வமும் தோன்றுகின்றனர்.’

மற்றொரு சந்தர்ப்பத்தில் புத்தர், பெண்ணின் மதிப்பைப் பற்றி உலகிற்கு கூறுகையில் இவ்வாறு குறிப்பிட்டார் : “பெண் மிக உயர்வான பொருளாகும்; அவள் இன்றியமையாத பயன்பாடு கொண்டவள். ஏனெனில், அவள் மூலமாகவே போதி சத்வர்கள் மற்றும் உலக ஆட்சியாளர்கள் (மன்னர்கள்) பிறக்கின்றனர்.’

ஒரு பெண் குழந்தையின் பிறப்பு, துயரமடைவதற்கான சந்தர்ப்பமல்ல, மகிழ்ச்சியடைவதற்கான ஒரு சந்தர்ப்பம் என்று கருதியவரை; தங்களுடைய விவகாரங்களுக்கு ஒரு பெண்ணை அதிகாரத்தில் அமர்த்தி, குடும்பங்கள் வீழ்ச்சியடைவதிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று எண்ணியவரை; பெண்ணை ஏழு செல்வங்களில் ஒருவர் என்று தயக்கமின்றி வர்ணித்தவரை; பெண் ஆக உயர்ந்த மதிப்புடைய பொருள் என்று கூறியவரை – பெண்களை வெறுப்பவர் என்றும் ஏளனமாகக் கருதுபவர் என்றும் எவ்வாறு கூற முடியும்? இந்தக் கூற்றுக்கள் பெண் வர்க்கத்தின்பால் புத்தர் கொண்டிருந்த பொதுவான மனோபாவங்களின் மாதிரிகளாகும். அவை பெண்ணை ஏளனம் செய்வதையும், இழிவு படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு கூறப்பட்டவை என்று எவராவது கூற முடியுமா?

 – தொடரும்

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(2), பக்கம்: 117)