ஒன்றிய  அரசு தேவையற்ற துறைகளில் பொதுச் செலவினைப் பெருக்கி, மேலும் அரசுக்கடனை உயர்த்தி வருகிறது. அதிகக் கடன் பெறும் நாடுகளில் இந்தியா ஒன்றாகத் திகழ்கிறது. அண்மையில் வந்த அரசுப் புள்ளிவிவரங்களின்படி, 2014இல் ரூ.55 இலட்சம் கோடியாக இருந்த ஒன்றிய அரசின் கடன் ஜனவரி 2019இல் ரூ.83 இலட்சம் கோடி அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்தியாவினுடைய குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சீரான அடையாள அட்டையை (ஆதார்) வழங்கி, அதற்கென ஒரு தனி அமைப்பைத் தொடங்கிச் செலவிட்ட தொகை ரூ.9 ஆயிரத்து 55 கோடி ஆகும். அதிகஅளவில் செலவிட்ட பிறகும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உட்பட 5 நீதிபதிகள்  கொண்ட அமர்வு ஆதார் தொடர்பான தீர்ப்பினை (2018 செப்டம்பர்) திங்களில் வெளியிட்டது.

இத்தீர்ப்பு ஆதார் அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான காரணங்கள் பலவற்றைச் செயலிழக்கச் செய்து விட்டது. இத்தீர்ப்பினைச் சில புள்ளி விவரங்கள் அடிப்படையில் ஆய்வு செய்தால் இன்னும் புதிய சிக்கல்கள்தான் எழுந்து நிற்கின்றன என்பது புலனாகும். இந்தியாவில் 50 விழுக்காட்டு மக்கள் வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்கின்றனர். தமிழ்நாடு, கேரளா மற்றும் சில மாநிலங்களைத் தவிர்த்துப்பெரும்பாலான மாநிலங்களில் முழுமையான பொது விநியோகத் திட்டம் இன்றளவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதற்குரிய புள்ளிவிவரங்கள் உரிய முறையில் இதுவரை சேகரிக்கப்பட வில்லை. இந்தியாவில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் வருமானவரி செலுத்துவோர் 2.2 விழுக்காட்டு அளவே உள்ளனர்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பில் வருமான வரி செலுத்துவோர் ஆதார் எண்ணை நிரந்தர வருமான கணக்கு எண்ணுடன்  இணைக்க வேண்டும் என்று  வலியுறுத்தியது. 2.2 விழுக்காடு மக்கள் தொகையினருக்காக ஆதார் எண்ணைக் கட்டாயப் படுத்துவது எவ்வகையில் வருமான வரித்துறையினருக்குப்  பயனளிக்கும் என்பது இன்றுவரை புதிராகவே உள்ளது. வணிக வங்கிகள், இணைய பணப்பரிமாற்றத்தில் ஈடுபடும் வங்கி களுக்கு இனிமேல் ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று அறிவித்துள்ளது. இது ஒரு வகையில் கறுப்புப் பணத்தை  வைத்திருப்பவர்களுக்குச்  சாதகமாக அமையும். ஏனென்றால் ஆதார் அட்டையைஆதாரமாக வைத்து வங்கிக்கணக்கை இணையதளம் வழியாக வருமான வரித்துறையினர் வரி ஏய்ப்பாளர்கள் வரி தவிர்ப்பாளர்களை இனம்காண முடியாது.

இந்தியாவில் கைப்பேசியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 82 கோடியாகும். கைப்பேசிகளைப் பயன்படுத்துவதற்குத்  தேவையான தொகுப்பியைப் (சிம் அட்டை) பெற, ஆதார் எண் அவசியமில்லை என்றும் இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை வைத்துக் கைப்பேசி எண்ணைக் கண்டுபிடிப்பதற்கு காவல் துறையினர் மற்றும் பாதுகாப்புத் துறையினருக்கு கைப்பேசி எண்ணை ஆதார் எண்ணோடு இணைத்திருந்தால் குற்றவாளிகளை  எளிதில் கண்டுபிடிக்கலாம் என்று  சொல்லப்பட்ட ஒரு காரணமும் அடிபட்டுவிட்டது. ஒன்றிய அரசின் பல்வேறு நுழைவுத்தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கும் ஆதார் அவசியமில்லை என்றும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக் கும்  ஆதார் தேவையில்லை என்றும் தீர்ப்பில் சுட்டபட்டுள்ளது. இவ்வாறு இந்த ஆதார் அட்டையின் பயன்பாடு பெருமளவில்  பயனற்றதாகித் தோற்றுப் போனது.

அரசின் நலத் திட்டங்களைப் பெறும் பெரும்பாலான ஏழை மக்கள் குடிசைகளிலும் பாதுகாப்பற்ற குடியிருப்புகளிலும் வாழ்ந்து வருகின்றனர். பெரும் மழை புயல் மற்றும் தீ விபத்துகளால் ஏழைகளின்  வாழ்விடங்கள் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகின்றன. அண்மையில் தமிழ்நாட்டில் தஞ்சை புதுக்கோட்டை திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கஜா புயல் தாக்கிய போது மக்களின் வீடுகள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாயின.

ஆதார் அட்டைகளும் காணாமல் போயின. எனவே பாதுகாப்பான குடியிருப்புகளில் வாழும் வருமானப் பிரிவினருக்கு ஆதார் அட்டை தேவையில்லை. அதே நேரத்தில் பாதுகாப்பாற்ற குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு அரசின் நலத் திட்டங்களைப் பெற ஆதார் அட்டை அவசியம் என்பது பல நிர்வாக நடைமுறைச் சிக்கல்களையும் முரண்பாடுகளையும் மாநில அரசுகளுக்கு  ஏற்படுத்துகிறது. மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் இந்த அட்டையால் ஏற்பட்ட பலன்களைவிட பாதிப்புகளே அதிகம் என்பதை நடைமுறையில் நாம் காண்கிறோம்.

இத்தகைய சிக்கல்களுக்கு இடையே தற்போது ஒன்றிய அரசு தேசிய குடிமக்கள் பதிவேடுஎன்ற திட்டத்தை அசாம் மாநிலத்திற்கு மட்டும் தற்போது நடைமுறைப்படுத்த முயலுகிறது. இந்தத் திட்டத்தால் பெரும் எதிர்ப்பு வடகிழக்கு மாநிலங்களில் எழுந் துள்ளது. குறிப்பாக அசாம் மாநிலத்தில் சனநாயக முறையில் இயங்கி வரும் அசாம் கணபரிசத் பாசகவின் கூட்டணியிலிருந்து விலகி உள்ளது. இந்தச் சட்டத்தால் மண்ணின் மைந்தர்களின் நில உரிமையும் மற்ற உரிமைகளும் பெருமளவில் பாதிப் படையும் என்று அனைவரும் குறிப்பிடுகின்றனர்.  இந்தியாவில் பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகும் வங்க தேசம் உருவான பிறகும், அந்த நாடுகளிலிலிருந்து பல இலட்சம் பேர் அகதிகளாக மேற்குவங்கத்திற்கும் அசாமிற்கும் குடியேறினர்.

அகதிகளான இவர்களால் அசாம் மாநிலத்தில் பெரும் தொடர் போராட்டம் 1980இல் வெடித்தது. அசாம் மாநில மக்கள் தொகையைவிட வெளியிலிருந்து வந்து குடியேறிய மக்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்ற சூழ்நிலையில் இந்தப் போராட்டம் மாணவர் களால் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தை நடத்திய மாணவர் கள்தான் பின்பு அசாம் கணபரிசத் என்ற கட்சியை அமைத்து அசாம் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றினர். இந்திய விடுத லைக்குப்பின் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் போல் மற்றொரு மாணவர் புரட்சி என்று உலக அளவில் உள்ள ஏடுகள் அசாம் மாணவர்களைப் பாராட்டின. 

இருப்பினும் உல்பா என்கிற  தீவிரவாத அமைப்பு தனிநாடு கோரிக்கையை முன் வைத்து, நாகாலாந்து போன்று தனி இராணுவத்தை வைத்துக் கொண்டு இந்திய இராணுவத்தையும் பாதுபாப்புப் பணியில் இருந்த காவல் துறையினரையும் தொடர்ந்து தாக்கி வந்தது. அசாம் பிரச்சினை சுமூகமாகத் தீர்க்கப்பட்டதால்  இவர்களது செல்வாக்கு குறையத் தொடங்கியது.  தற்போது தேசியக் குடிமக்கள் பதிவேற்றச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தால் மீண்டும் அசாம் மக்கள் தீவரவாத உல்பா இயக்கத்தை ஆதரிக்கின்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று பல ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பினைத் தற்போது பாசக ஒன்றிய அரசு சந்தித்து வருகிறது.

இந்தச் சட்டத்திருத்தத்தில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வெளியேறிய இந்து மக்களுக்கு மட்டும்தான் இந்த தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெறுகிறார்கள் என்று அறிவித்தவுடன் பெரும் கொதிப்பு உள்ளூர் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் இசுலாமியர் களைத் தவிர்த்து இந்துக்களுக்கு  மட்டும் குடியேற்ற உரிமைகள் அளிப்பதனால் இந்து-இசுலாமியர் பிரிவினையை விரிவாக்கி வாக்குவங்கி அரசியல் நடத்தலாம் என்று பாசகவினர் கனவு கண்டனர். ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பழங்குடியின மக்கள் தங்களின்  பொருளாதார நிலை பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று  எதிர்க்கத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் அசாம் மாநிலத்திற்கு மட்டும் இத்திட்டத்திற்காகச் செலவிடப்பட்ட தொகை 1221 கோடி ஆகும்.

இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைத்து, இந்துக்கள் என்ற ஓர் அடையாளத்தைக் காட்டி அரசியலில் வெற்றி பெறலாம் என நினைக்கும் பாசக அரசிற்கு, இது ஒரு பெருத்த அடியாகும். மேலும் ஆந்திரா, தெலங்கானா உட்பட பல மாநிலங்கள் தங்களுக்குச் சிறப்பு தகுதி வேண்டும் எனத் தற்போது போராடி வருகின்றன. இதுபோன்ற பல மாநில மக்களின் பிரச்சினைகளை அந்தந்த மாநிலங்களில் உள்ள பண்பாடு, மொழி, சமூக அடையாளங்களின் அடிப்படையில் சுமூகத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, ஒரே நாடு ஒரே மதம் ஒரே மொழி என்று பாஜக வெற்று முழுக்கம் செய்து இந்தியாவைச் சீர்குலைவுப் பாதையில் எடுத்துச் செல்கிறது.

2019 பிப்ரவரி 18இல் சென்னை பெருநகரில் அமைந்துள்ள பஷீர் அகமது பெண்கள் கல்லூரியில், அமெரிக்க மனித உரிமைப் போராளி மார்டின் லூதர் கிங் அறக்கட்டளைச் சொற்பொழிவு  நடைபெற்றது. இச்சொற்பொழிவை நிகழ்த்தியவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள்  தலைமைச் செயலாளர் மூசா ரசா காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புத் தகுதியை உறுதிப்படுத்தும் அரசமைப்புச் சட்டப் பிரிவுகளான 370, 35 (ஏ) ஆகியவற்றை மாற்றக்கூடாது என்று வாதிட்டுள்ளார். மூசா ரசா கூறும் காரணங்கள் புதியன. இந்தச் சட்டப்பிரிவுகளை நீக்கிவிட்டால் காஷ்மீர் நிலப்பகுதிகளை  அமெரிக்க சவுதி நாட்டின்  முதலாளிகளும் இந்தியப் பெரு முதலாளி களும் விலைக்கு வாங்குவார்கள். 

5 நட்சத்திர விடுதிகளையும் அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் பயணிகள் விடுதிகளையும் சொகுசு வீடுகளையும் உல்லாச இருப்பிடங்களையும் தங்கள் இலாப நோக்கிற்காகக் கட்டி இயற்கைச் சூழலையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும்  முற்றிலுமாக அழித்துவிடுவார்கள். இந்திய ஆட்சிப் பணியில் தேர்வாகி ஜம்மு-காஷ்மீர் மாநில தலைமைச் செயலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் மூசா ரசா. எல்லாக் கட்சியினராலும் சிறந்த நிர்வாகி என்று பாராட்டப்பட்டவர். அவர் கூறியதற்குப்  பல காரணங்களும் உள்ளன. காஷ்மீரில் இந்திய இராணுவம் குவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் கடந்த காலங்களில் பல உயர் இராணுவ அதிகாரிகள் நில மோசடிகளில் ஈடுபட்டார்கள் என்று ஒன்றிய அரசே பல வழக்குகளைப்  பதிவு செய்துள்ளது என்பதைப்பல செய்திகள் தெரிவிக்கின்றன.

பிப்ரவரி திங்கள் 2019இல் கட்டுரையாசிரியர் தெலங்கானா மாநிலத்திற்கு, மாநில சுயாட்சி பற்றிய ஆங்கில நூலை வெளியிடச் சென்றிருந்தார். இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு காங்கிரசு, பாசக தவிர அனைத்துக் கட்சியினரும் வந்திருந்தனர். ஒரே குரலில் தெலங்கான மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று வலியுறுத்தினர். இந்நூலாசிரியர், வல்லால நாகராஜ் 23 வயது நிரம்பியவர். சட்ட இயலில் பட்டம் பெற்று காக்காத்தியா பல்கலைக்கழகத்தில் உயர் ஆய்வினை மேற்கொண்டு வருகின்றார். பெருமளவில் மாணவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். விழா முடியும் வரை மிகவும் கட்டுப்பாடாகச் செயல்பட்டனர். ஐதராபாத் மற்றும் முக்கிய மாவட்டங்களில் வடநாட்டு முதலாளிகள் வட்டித் தொழிலில் ஈடுபட்டும், வணிகத்தில் ஈடுபட்டும் ரூபாய் கோடி கோடியாகக் கொட்டுகிற பணத்தில் நிலத்தை வாங்குவதில் அக்கறைக் காட்டுகின்றனர்.

ஏழை மக்களின் வாழ்வாதாரங்களைச் சிதைக்கின்றனர். இதை உள்ளூர் மக்கள் எதிர்க்கத் தொடங்கி யுள்ளார்கள். இந்நிலை தொடர்ந்தால் தெலங்கானா மாநிலத்தில் மராட்டிய மாநிலத்தில் செயல்படும் சிவசேனா போன்று உள்ளூர் மக்கள் ஓர் இயக்கம் தொடங்கி, வடநாட்டவர்களுக்கு எதிராகக் களங்கள் அமைத்துவிடுவார்கள். இது பெரும் ஆபத்தினையும், சமூக அமைதியையும் கெடுத்துவிடும் என்று  ஆய்வாளர்களும் மாணவர்களும் குறிப்பிட்டனர்.  வடநாட்டவர்கள் பெரும்பாலா னோர் இந்துத்துவா சங்க பரிவார அமைப்புகளுக்கு நிதியை அளித்து மக்களைப் பிளவுபடுத்தி வருகின்றனர் என்றும் குறிப்பிட்டனர். இதே நிலைதான் தமிழ்நாட்டிலும் உள்ளது. ஊக வணிகத்திற்காக வடநாட்டு முதலாளிகள் நிலங்களை வாங்கு கிறார்கள் என்று நான் குறிப்பிட்டேன். இவ்விதமான மக்கள் விரோத எதிர்மறைப் போக்குகளைக் கட்டுப்படுத்தி மூசா ரசா தனது உரையில் குறிப்பிட்டது போன்று, சுற்றுச்சூழல் இயற்கை வளங்களைப் பாதுகாக்கஒவ்வொரு மாநிலத்திற்கும் காஷ்மீர் போன்று சிறப்பு அந்தஸ்தை அளித்தால் மட்டுமே இப்பிரச்சி னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும்.

மண்ணின் மைந்தர்கள் அந்தந்த மாநிலங்களிலேயே ஏழைகளாக மாற்றப்படுவதைத் தவிர்க்கலாம். இதன் காரணமாகஏற்றத்தாழ்வுகள் பெருகி பிரச்சினைகள் பெருமளவில் உருவெடுத்து இந்திய ஒற்றுமையைச் சீர்குலைத்துவிடும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற முதன்மையான பிரச்சினைகளைப் புறந்தள்ளி பாசக ஒன்றிய அரசு தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் பாகிஸ்தான் ஆப்கானிஸ் தான் ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறும் இந்துக்களை மட்டும் குடிமக்களாக ஏற்றுக்கொள்வது ஓர் அப்பட்டமான ஒரு அநீதியான செயலாகும்.

1980க்குப் பிறகு ஈழத்தில் சிங்களர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டுத் தமிழ் நாட்டில் குடியேறியவர்கள் இன்னும் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுப் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். ஒன்றிய அரசின் இரகசியப் புலனாய்வுத் துறை தொடர்ந்து தமிழர்களைக்கண்காணித்துப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களின் உரிமைகளைப் பறித்து வருவது எவ்வகையில் நீதியாகும்? ஈழத்திலிருந்து வந்த மக்கள் எல்லோரும் இசுலாமியர்களா? கிறித்தவர்களா? தமிழர்கள் இந்துக்கள் இல்லையா? அசாமில் குடிபெயர்வதற்காக இந்துக்கள் என்ற பெயரில் ஒரு சட்டத்திருத்தத்தின் வழியாகத் தீர்வுகாண முற்படுவது அவசர அவசரமாக ரூ.1221 கோடி தாரைவார்ப்பது இந்திய ஒற்றுமைக்கு வழிவகுக்குமா?

ஈழத் தமிழர்களுக்கு இந்தத் தேசியக் குடிமக்கள் பதி வேட்டு திட்டத்தின்படி ஏன் குடியுரிமை இன்றுவரை வழங்கப்படவில்லை? தமிழ்நாட்டுத் தமிழர்களும், ஈழத் தமிழர்களும் ஒன்றிய அரசால் தொடர்ந்து புறந்தள்ளப் படுவதுதான் இந்தியத் தேசிய ஒருமைப்பாடா?

Pin It