ஒரு மக்கள் நாயகச் சமூகத்தை இயக்கும் சட்டங்களை இயற்றுவது மக்கள் பிரதிநிதிகளின் கடமை. சமூகமாற்றத்தைக் கணக்கில் கொண்டு அவ்வப்போது சட்டத்திருத்தங்கள் செய்யவேண்டும் என்றாலும், புதியசட்டங்களை இயற்றவேண்டும் என்றாலும், பழைய சட்டங்களை நீக்கவேண்டும் என்றாலும், அதுமக்களிடம் விரிவாக விவாதிக்கப்பட்ட பிறகு, மக்களின் கருத்துப்படி தான், மக்களின் பிரதிநிதிகள் அதைச் செய்யவேண்டும். இந்தியாவில் இவ்வழிமுறைதான் பின்பற்றப்படுகிறது என்று சொல்லப்பட்டாலும், நடைமுறையில் பரிதாபத் திற்கு உரிய செய்திகள் நிறையவே உள்ளன.
முதலாவதாக மக்கள் பிரதிநிதிகள் பலருக்கு, சட்டம் இயற்றுதல்,சட்டத்திருத்தம் செய்தல், சட்டத்தை நீக்குதல் பற்றிய முழுமையான புரிதல் இருப்பது இல்லை. அதிகாரத்தில் இருக்க ஆசைப்படும் அரசியல் கட்சிகள் அவ்வகையான புரிதல் குறைவானவர்களையே தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற வைக்கின்றன. தவிர்க்க முடியாதபடி விவரம் புரிந்த மக்கள் நலன் விரும்பிகள் இம்மையத்தில் நுழைய நேரிட்டால், அவர்களைத் தங்கள் அதிகார வலிமையால் அடக்கிவிடுகின்றனர். இதன்மூலம் ஒரு சிறு குழுவினர் தங்கள் விருப்பப்படி எல்லாம் சட்டங்களை இயற்றவும், திருத்தவும், நீக்கவும் செய்து கொள்கின்றனர்.
அதன்பின் மக்களுடன் கலந்து ஆலோசித்தல் என்ற அம்சம் இருக்கிறதே? அது இந்தியாவில் கொடூரமாகக் கேலிக்கூத்தாக்கப்படுகிறது. மிகப் பெரும்பான்மை மக்களுக்கு இதைப்பற்றிய செய்தி சென்று அடைவதே இல்லை. அதிகாரத்தைத் தங்களிடமேயே தக்கவைத்துக் கொள்ள விரும்பும் சிறுகுழுவினரின் பிரதிநிதிகள் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் உலவிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் குழுக்களாகப் பிரிந்து கொண்டு சிலர் எதிர்ப்பது போலவும், சிலர் ஆதரிப்பது போலவும் போக்குக்காட்டி, இறுதியில் ஆளும்வர்க்கத்திற்கு ஏற்றபடி அனைத்தும் முடிவதுதான் இங்கு உள்ள நடைமுறை.
இந்தச் சிறு கும்பலே அனைத்து அதிகார வழி முறைகளையும் குவித்து வைத்துக் கொண்டு இருந் தாலும், சில சமயங்களில் சிலசெய்திகள் அவர்களின் கட்டுப்பாட்டை மீறி மக்களின் கவனத்திற்குச் சென்று விடு கின்றன. அப்பொழுது அதிகாரவர்க்கத்தினர் விரும்பியபடி சட்டங்களை இயற்றவும், திருத்தவும், நீக்கவும் தடை களைச் சந்திக்க வேண்டி உள்ளது. இதுபோன்ற தடை களைப் புறங்காண அதிகார வர்க்கத்தினர் ஒருவழியைக் கண்டுபிடித்து உள்ளனர். அதுதான் நீதிமன்றத் தீர்ப்பு.
நீதிமன்றங்களின் பொறுப்பு நாட்டில் நடக்கும் நடவடிக்கைகள் சட்டப்படி நடக்கின்றனவா என்று பார்ப்பதும், சட்டத்தை மீறி யாரேனும் நடந்தால் அவர் களுக்குச் சட்டத்தில் குறித்து உள்ளபடி தண்டனையை விதிப்பதும் தான். இந்த நடைமுறையில் வழக்கு விவாதத்தின் போது நீதிபதிகள் வெளிப்படுத்தும் கருத்து களும், தீர்ப்புகளும் வழிகாட்டுதலாக அமைவது இயற்கை தான். ஆகவே இந்தக் கருத்துகளும், தீர்ப்புகளும் சட்டங்களுக்கு உட்பட்டுத்தான் இருக்கவேண்டும். ஆனால் சில சமயங்களில் அவை சட்டங்களின் நீட்சியாக அமைந்து விடுகின்றன. அப்படி அமையும் போது அதன் பின்னால் வரும் வழக்குகளுக்கு அவை சட்டங்களாகவே ஆகிவிடுகின்றன.
அவ்வாறு நீதிமன்றங்களால் பல சட்டங்கள் உருவாக்கப்பட்டு / திருத்தப்பட்டு / நீக்கப்பட்டு உள்ளன. “தீபாவளி அன்று இரவு எட்டு மணி முதல் பத்து மணி வரை தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்; ஒரு குறிப்பிட்ட ரக டீசல் வண்டியைக் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் விற்கக்கூடாது; மண உறவைத் தாண்டிய ஆண் பெண் உறவைக் கிரிமினல் குற்றமாகக் கருதக்கூடாது;” இன்னும் இவை போல் பல சட்டப்பிரிவுகள் நீதிமன்றங் களால் இயற்றப்பட்டு / திருத்தப்பட்டு / நீக்கப்பட்டு உள்ளன. இவை எல்லாம் நன்மை பயக்குமா என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் இவை மக்கள் நாயக மாண்புக்குப் பொருந்துமா? இவ்வாறு சட்டப் பிரிவுகளை இயற்றிய, திருத்திய, நீக்கிய நீதிமன்றங்களே அவ்வாறு செய்வது நாடாளுமன்றத்தின், சட்டமன்றங்களின் பணி என்றும் பலமுறை தீர்ப்பு அளித்து உள்ளன. அவ்வாறு தாங்கள் அளித்த தீர்ப்புகளைக் கணக்கில் கொள்ளாமல் செயல்படவும் செய்கின்றன.
ஏன் அப்படி நேர்கிறது? சில வழக்குகளை விசாரிக்கும் பொழுது அவற்றின் மீது தீர்ப்பு அளிக்க நடப்பில் உள்ள சட்டங்களில் போதுமான விதிமுறைகள் இல்லாதபோது இவ்வாறு நேர்கிறது என்று சாதாரணமாக விளங்கிக் கொள்ளமுடியும்.
எடுத்துக்காட்டாக, டெல்லி நகரில் காற்று மாசு, அளவு கடந்து உள்ள நிலையில் அது மேலும் மோசமாகிவிடக் கூடாது என்பதற்காக, பட்டாசு வெடிக்கும் கால அளவை நிர்ணயம் செய்தும், அதிகமாகப் புகை உமிழும் வண்டி களின் விற்பனையைத் தடைசெய்தும் நீதிமன்றங்கள் தீர்ப்பை வழங்கி உள்ளன. இத்தீர்ப்புகளினால் பொதுவில் நன்மை விளையும் என்ற வாதம் இருந்தாலும், இந்த வழிறை சரியா? தனிமனிதர்களுக்கு (அதாவது மக்கள் பிரதிநிதிகள் அல்லாத நீதிபதிகளுக்கு) இத்தகைய அதிகாரம் இருப்பது மக்கள் நாயகமுறைக்கு எதிரானது அல்லவா?
அப்படி என்றால் இத்தகைய சூழல்களில் நீதிமன்றங் கள் என்ன செய்யவேண்டும்? சட்டவிதிகளில் உள்ள போதாமையைச் சுட்டிக்காட்டி, நாடாளு மன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் உரிய விதிமுறைகளை இயற்றும் படியோ, திருத்தும்படியோ, நீக்கும்படியோ பரிந்துரைக் கலாம் அல்லது அறிவுறுத்தலாம். அதன் பேரில் நாடாளுமன்றமோ/ சட்டமன்றங்களோ அவ்விதிமுறை களை இயற்றவோ, திருத்தவோ, நீக்கவோ செய்யலாம். அதன்பின் அவ்வழக்குகளில் தீர்ப்பு வழங்கலாம். ஆனால் நீதிமன்றங்கள் அப்படிச் செய்வது இல்லை. அவ்வப்போது தீர்ப்பு என்ற வடிவத்தில் சட்டவிதிமுறை களைஇயற்றவும், திருத்தவும், நீக்கவும் செய்கின்றன. இடைஇடையே "அப்படிச்செய்யக்கூடாது; சட்டவிதிகளை இயற்றும், திருத்தும், நீக்கும் அதிகாரம் நாடாளுமன்றத் திற்கும், சட்டமன்றங்களுக்கும்தான் இருக்கிறது; நீதிமன்றங்கள் வரம்புமீறக் கூடாது" என்றுகருத்துகளைக் கூறியும், தீர்ப்புகளை அளித்தும் தங்கள் பொறுப்பு உணர்வையும் வெளிப்படுத்திக் கொள்கின்றன. ஏன்?
இந்திய, பார்ப்பன அதிகாரவர்க்கம் தான் நினைத் ததைச் சாதித்துக் கொள்வதிலும், அதேசமயம் நியாய மாகவே நடந்து கொள்வதாகக் காட்டிக் கொள்வதிலும் குறியாக இருக்கிறது. அண்ணல் அம்பேத்கர் எழுதிய அரசியல் நிர்ணயச் சட்டத்தில் கல்வியிலும், வேலை யிலும், இடஒதுக்கீட்டுக்கு உச்சவரம்பு விதிக்கப்படவே இல்லை. ஆகவேதான் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் இடஒதுக்கீட்டின் மொத்த அளவை 69க்கு உயர்த்தி விதிமுறைகளைப் புகுத்த முடிந்தது. அதை எதிர்த்து யாரும் வழக்குப்போட முடியவில்லை. ஆனால் மண்டல் குழு அறிக்கையின் சிறுபகுதி வி.பி.சிங் அரசினால் அமலாக்கப்பட்ட பொழுது, அதற்கு எதிராகத் தொடுக்கப் பட்ட வழக்கில் தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம் “இடஒதுக் கீடு 50 விழுக்காட்டுக்கு மேல் இருக்கக்கூடாது” என உச்சவரம்பு விதித்தது. உடனே 69 இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டன. மக்களின் உணர்வுகளுக்கு எதிராகத் தீர்ப்பு அளிக்க முடியாத நிலையில் 19 இடங்களைக் கூடுதலாக உருவாக்க வேண்டும் என்றெல்லாம் ஆணையிட்டன. (அப்படி உயர்த்துவதினால் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களே பயன் அடைவதையும், உயர்சாதிக்கும் பலினரால் பயன் ஈட்டிக் கொள்ளமுடியவில்லை என்பதை யும் கண்ட அவாள் அம்முயற்சியைத் தொடராமல் விட்டுவிட்டனர்). தமிழ்நாடு சட்டமன்றமும் 69 இடஒதுக் கீட்டைப் பாதுகாக்க வேண்டும் என்று சட்டம் இயற்றியது. இதுசரியான முறையில் இயற்றப்பட்டு உள்ளதா; செல்லுமா என்ற ஐயப்பாடு இருக்கிறது. அதுஒருபுறம் இருக்கட்டும்.
நீதிமன்றங்களிடம் இவ்வாறு சட்டவிதிமுறைகளை இயற்றும், திருத்தும், நீக்கும் அதிகாரம் இருப்பது சரியா? காற்று மாசு போன்ற விவகாரங்களில் உடனடித் தீர்வு கிடைக்கிறது என்ற நினைப்பில் சரி என்று நினைத்தால் அதுமக்கள் நாயக மாண்புக்கு எதிரானதாகும். (காற்றின் மாசு குறைவதற்கான உண்மையான தீர்வு / தீர்ப்பு பெரு முதலாளிகளின் கோபத்தைக் கிளறும் என்பதால் நீதிமன்றங்கள் அதை எல்லாம் செய்யாது என்பது ஒருபுறம் இருக்கட்டும்)
இவ்வாறு நீதிபதிகளுக்கு அதிகாரம் இருப்பதானது, இடஒதுக்கீடு போன்ற மக்கள் உரிமை விவகாரங்களில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே சட்டம் இயற்றும் / திருத்தும் / நீக்கும் அதிகாரம் மக்கள் பிரதி நிதிகளுக்குத்தான் இருக்கவேண்டும் என்றும், ஒருவழக் கில் தீர்ப்புக் கூற, அதன் தொடர்பான சட்டங்களில் போதிய விதிமுறைகள் இல்லை என்றால் அதை எடுத்துக்காட்டி மேல் நடவடிக்கை எடுக்கும்படி நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் தாக்கீது அனுப்பவேண்டுமே ஒழிய, நீதிமன்றங்கள் தாமாகவே விதிமுறைகளை உருவாக்கிக் கொள்ளக் கூடாது என்றும் மக்கள்புரிந்து கொள்ளவேண்டும். அதன்படி உடனடியாகச் சட்டத்திருத் தம் செய்ய ஆவன செய்யவேண்டும்.