படித்துப் பாருங்களேன்...
Chithra Madhavan, 2005, History and Culture of Tamilnadu D.K.Printworld (P) Ltd, New Delhi
தமிழ்நாட்டின் வரலாற்று வரைவிற்கான முதன்மைச் சான்றுகளாகக் கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் அமைகின்றன. இவையனைத்தும் தமிழ்மொழியில் மட்டுமே அமையவில்லை. சமஸ் கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி மொழிகளிலும், கிரந்த எழுத்துக்களிலும் இவையுள்ளன.
இவற்றையடுத்து ஓலைச்சுவடிகளிலும், காகிதத் திலும் எழுதப்பட்ட ஆவணங்களும் உள்ளன. இவை மேற்கூறிய மொழிகளில் மட்டுமின்றி ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தின், இத்தாலி, போர்ச்சுக்கீஸ், ஸ்பானிஷ், டச்சு, டேனிஷ் ஆகிய அய்ரோப்பிய மொழி களிலும் உள்ளன.
இம்மூல ஆவணங்களைப் பயன்படுத்தும் ஆர்வம் சிறிதுமின்றியே நம் வரலாற்றாய்வுகள் ஒரே தடத்திற்குள் சுழல்கின்றன. தமிழ்ப்பற்று என்பது பிறமொழி வெறுப் பாக மாற்றப்பட்டுவிட்டதும் கூட இந்நிலைக்குக் காரண மாகும்.
கி.மு.மூன்றிலிருந்து கி.பி.மூன்று வரையிலான காலம் தமிழ்நாட்டு வரலாற்றின் தொடக்க காலமாகப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இக்காலத்தில் உருவான சங்க இலக்கியங்களில் வடபுலத்தின் வைதீக நெறியும், அவைதீக நெறியும் குறிப்பிடப்படுகின்றன. வேதம், வேள்வி, வேள்வித்தூண், வேதமோதும் பார்ப்பனர் ஆகியோரைக் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளன.
இதனையடுத்து நிலவுடைமையின் தொடக்க காலமான பல்லவர் ஆட்சிக்காலத்திலும் நிலவுடைமையின் வளர்ச்சிக் காலமான பிற்காலச் சோழர் காலத்திலும் சமஸ்கிருதமும், வேதக்கல்வியும், பிராமணியமும் செழித்து வளர்ந்தன. இவ்விரு அரசமரபினரும் வேள்விகள் நடத்தியும், வேதக்கல்வி கற்பிக்கும் கல்வி நிறுவனங்களை நிறுவியும், பிரம்மதேயம் என்ற பெயரில் பிராமணர்களுக்குப் பெரிய அளவிலான நிலக்கொடைகள் வழங்கியும் தம் வைதீகச் சார்பை வெளிப்படுத்திக் கொண்டனர். இதனால் கல்வெட்டுக்களிலும், செப்புப் பட்டையங்களிலும் சமஸ்கிருதம் இடம்பெறலாயிற்று. இம்மொழியில் அமைந்த எழுத்துப் பதிவுகளும் தம் பங்கிற்கு சில வரலாற்றுச் செய்திகளைத் தம்முள் தாங்கியுள்ளன. எனவே சமஸ்கிருத எதிர்ப்பின் பெயரால் இவற்றை ஒதுக்கிவிட முடியாது. இங்கு அறிமுகம் செய்யும் சித்திரா மாதவனின் நூல் தமிழக மன்னர்கள் வெளியிட்ட கல்வெட்டு மற்றும் செப்புப் பட்டையங் களில் இடம்பெற்றுள்ள சமஸ்கிருதப் பகுதியின் துணை யுடன் தமிழகத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் ஆராய்கிறது.
* * *
சித்திரா மாதவன் தம் முனைவர் பட்ட ஆய்வை 1996-1999 காலகட்டத்தில் வரலாற்றறிஞரும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் தலைவருமான பேராசிரியர் கே.வி.இராமனின் வழிகாட்டுதலில் மேற்கொண்டார். அவ்வாய்வேட்டின் ஒரு பகுதியே இந்நூல். கி.பி. நான்காம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.1310வரையிலான கல்வெட்டு மற்றும் செப்பேடுகளை மட்டுமே இந்நூல் ஆராய்கிறது. இவை ஒரு பகுதி வடமொழியாகவும் மற்றொரு பகுதி தமிழாகவும் உள்ளவை, முற்றிலும் வடமொழியிலேயே எழுதப்பட்டவை என இரு திறத்தன.
மன்னர்களின் குடிவழி மற்றும் அரசியல் வரலாறு குறித்தறியவே இவற்றைப் பயன்படுத்தியுள்ள நிலைக்கு மாறாக சமூகம், பண்பாடு மற்றும் அரசியல் நிர்வாகம் தொடர்பான உண்மைகளைக் கண்டறிவதே தன் ஆய்வின் நோக்கம் என்று நூலின் முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
நூலின் அமைப்பு
ஏழு இயல்களைக் கொண்டுள்ள இந்நூலின் முதலாவது இயல் அரசியல் குறித்ததாகும். ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட கால அளவில் நாடு, வளநாடு, மண்டலம் என ஆட்சிப் பகுதி பகுக்கப்பட்டிருந்ததைக் குறிப்பிட்டுவிட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், மதுரை ஆகிய நகரங்கள் தலை நகராக விளங்கியமை குறித்தும், மாமல்லபுரம், நாகப் பட்டிணம், வாதாபி ஆகிய தமிழக நகரங்கள் துறைமுக நகர்களாகத் திகழ்ந்தமை குறித்தும், கர்நாடகம், கேரளம், உத்கலம், கலிங்கம் ஆகிய இந்தியப் பகுதிகளிலும் ஸ்ரீலங்கா, கம்போடியா, கதா ஆகிய வெளிநாடுகளிலும் செயல்பட்ட துறைமுகங்களுடனான தொடர்பு குறித்தும் குறிப்பிடுகிறது.
சிவில் நிர்வாகம்
ஆட்சியின் மையமாக மன்னன் திகழ்ந்ததும், அவனது தகுதி குறித்தும் தொடக்கத்தில் குறிப்பிட்டு விட்டு மன்னனின் தெய்வீகத் தோற்றம் குறித்த செய்தி களை முன்வைக்கிறது.
மனு ஸ்மிருதியும், அர்த்த சாஸ்திரமும் தெய்வீகத் தன்மை பொருந்தியவையாகச் சித்தரிப்பதைச் சுட்டிக் காட்டிவிட்டு, பல்லவர் கால ஆவணங்களில் பல்லவர் இனத்தின் தெய்வீகப் பிறப்பு தொடர்பாக இடம்பெறும் செய்திகளை முன்வைக்கிறார்.
மகாவிஷ்னு, பிரம்மன், அங்கிராஸ், பிரகஸ்பதி, சம்யு, பரத்வாஜா, துரோணர், அசுவத்தாமன் ஆகியோர் பல்லவர்களின் முன்னோர்களாகக் குறிப்பிடப்படு கின்றனர். அசுவத்தாமனே பல்லவனாகப் பிறந்ததாகவும் அவனிடமிருந்தே பல்லவர் குலம் தோன்றியதாகவும் இவை குறிப்பிடுகின்றன. ஆளும் மன்னனுக்கு இத்தகைய தெய்வீக முற்பிறப்பை வழங்கிய முதல் மன்னனாக ராசசிம்மன் என்ற பல்லவ மன்னன் குறிப்பிடப்படுகிறான்.
பாண்டிய மன்னர்கள் சந்திர வம்சத்தைச் சேர்ந்தவர் களாக தம்மைக் குறிப்பிட்டுள்ளனர். சோழர்கள் தம்மை ஆரிய வம்சத்தினராகக் குறிப்பிட்டுள்ளனர். குடிகளைப் பாதுகாப்பதே மன்னர்களின் கடமையாகக் கருதப் பட்டது. திருவேலங்காட்டுச் செப்பேடு, மனுவே முதலாம் பராந்தகச் சோழனாகப் பிறந்துள்ளான் என்று குறிப்பிடுகிறது. தனது சட்டவிதிகள் கலியுகத்தில் பிறழ்ந்து போனமையால் அதை மீண்டும் நிலை நிறுத்தவே மனு பராந்தகச் சோழனாகப் பிறந்துள்ளான் என்றும் அச்செப்பேடு குறிப்பிடுகிறது. கரந்தைச் செப்பேடு ராஜராஜனை ‘மனுவம்ச கேது’ என்று குறிப்பிடுகிறது. இதே செப்பேடு ‘மனுகுலாபரணம்’ என்று அவன் மகன் முதலாம் ராஜேந்திரனைக் குறிப்பிடுகிறது. தர்ம சாஸ்திரங்களின்படி ஆட்சி புரிபவர்களாக கல்வெட்டுக்கள் மன்னர்களைக் குறிப்பிடுகின்றன. தொடக்க காலப் பல்லவர்களின் செப்பேடுகள் ‘தர்ம மகாராஜா’, ‘தர்ம மகா ராஜாதி ராஜா’ என்று குறிப்பிடுகின்றன. ஏனைய பல்லவ மன்னர்கள் மற்றும் சோழ மன்னர்களின் கல்வெட்டுக் களும் இத்தகைய தொடர்களைக் கொண்டுள்ளன.
மனுஸ்மிருதியின் ஏழாவது இயலில் இடம் பெற்றுள்ள முப்பத்தைந்தாவது சுலோகம் மன்னனின் கடமை குறித்து,
‘தத்தம் நெறி நிற்கும் நால் வருணத்தர், நான்கு ஆசிரமத்தர் இவர்களைக் காக்கும் பொருட்டே அரசன் படைக்கப்பட்டான்’
என்று குறிப்பிடுகிறது. இதே கருத்தை கௌடில்யரின் அர்த்த சாஸ்திரமும் குறிப்பிடுகிறது.
தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் ஆட்சி புரிந்த மன்னர்கள் இவ்விதிமுறைகளைப் பின்பற்றினார்கள் என்று குறிப்பிடும் ஆசிரியர், முதலாம் பரமேஸ்வரன் என்ற பல்லவ மன்னனின் கூரம் செப்பேடும், காசக்குடி செப்பேடும் இதே கருத்தை வெளிப்படுத்துவதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். அடுத்து பரம்பரை அடிப் படையில் மன்னர்கள் பதவியேற்றதையும் குறிப்பிடு கிறார்.
இதன் தொடர்ச்சியாக முடிசூட்டு விழா, இளவரசுபட்டம், பட்டங்கள், அரசமுத்திரைகள், அமைச்சர்கள், ஒற்றர்கள், ஆவணம் எழுதுவோர், யானைகளை மேற்பார்வையிடுவோர், அரச குடும் பத்தினர், குறுநில மன்னர்கள், நீதி நிருவாகம், குற்றங் களுக்கான தண்டனைகள், வருவாய்த்துறை, வரி விலக்குப் பெற்ற நிலங்கள், அரசின் செலவீனம் என்பன குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.
இராணுவ நிர்வாகம்
இராணுவப் பிரிவுகள், தேர்கள் பற்றிய செய்திகள் இத்தலைப்பில் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கியங் களில் பரவலாக இடம்பெறும் தேர் குறித்த செய்திகள், பல்லவர், பாண்டியர், சோழர் ஆட்சிக் காலத்தில் அருகியே காணப்படுகின்றன.
பெருவள நல்லூர் போரைப் பற்றி விரிவாகக் குறிப்பிடும் பல்லவரின் கூரம் செப்பேடு, யானை, குதிரைப் படைகளையும், காலாள் படைகளையும் மட்டுமே குறிப்பிடுகிறது. தேர்ப்படை குறித்து எதுவும் கூறவில்லை. காஞ்சிபுரம் வைகுண்டராசப்பெருமாள் கோவிலில் இடம்பெற்றுள்ள போர் தொடர்பான சிற்பங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது.
சோழர்களின் பெரிய லெய்டன் செப்பேட்டிலும், திருவாலங்காடு கல்வெட்டிலும், யானை, குதிரை, காலாள் படைகள் குறித்த குறிப்பு மட்டுமே இடம் பெற்றுள்ளது. தேர் இடம்பெறவில்லை. சோழர்களின் கரந்தைச் செப்பேட்டில் தேர் இடம்பெற்றாலும் போர்க்களத்துடன் தொடர்புடையதாக அது குறிப்பிடப்படவில்லை.
* * *
தமிழ் மன்னர்களின் படைகளில் யானைகள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. பல்லவ மன்னர்கள் யானைப் படைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். அவர்களது கல்வெட்டுக்களில் கஜம், மதங்கம், நாகா, கரி, இப்றா, வாரணம், குஞ்சரம், சிந்தூரம் என்ற பெயர் களில் யானைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. யானைகள் தொடர்பான அறிவியல் நூலாக ‘கஜ சாஸ்திரம்’ என்ற நூல் இருந்துள்ளது. பல்லவ மன்னர்கள் சிலர் இந்நூலில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்துள்ளனர்.
முதலாம் பரமேஸ்வர வர்மன் சாளுக்கிய மன்னனான விக்கிரமாதித்தியனுடன் நிகழ்த்திய போரில் யானைப் படைகளின் பங்களிப்பை கூரம் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. பல்லவர்களும் அவர்களது பகைவர் களும் யானைப் படைகளைக் கொண்டிருந்தமையை உதயேந்திரம் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. அபராஜிதா பல்லவனின் கல்வெட்டொன்று அவன் சோழ மன்னனுடன் நடத்திய சிற்றாற்றுப் போரில் யானைப் படையின் துணையுடன் வென்றதைக் குறிப்பிடுகிறது. முதலாம் பரமேஸ்வர வர்மனின் பட்டத்து யானை ‘அரிவர்ணா’ என்ற பெயரைக் கொண்டது. அதன்மேல் அவன் அமர்வதற்காக அமைக்கப்பட்ட அம்பாரம் குறித்து கூரம் செப்பேடு குறிப்பிடுகிறது.
பல்லவர்களைப் போன்றே சோழர்களும் யானைப் படையைக் கொண்டிருந்தனர். சுந்தர சோழனின் பட்டத்து யானையின் போர்க்கள ஆற்றலை அன்பில் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. ராஜாதித்யா என்ற சோழ இளவரன் போர்க்களத்தில் யானையில் வீற்றிருந்த நிலையில் கொல்லப்பட்டதை பெரிய லெய்டன் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. முதலாம் ராஜராஜனின் யானைப் படையை கவித்துவமான மொழியில் கரந்தைச் செப்பேடு வருணிக்கிறது.
முதலாம் ராஜேந்திர சோழன் தன் யானைக் கூட்டங்களை ஆற்றில் நிறுத்தி அவற்றைப் பாலம்போல் பயன்படுத்தியதாக திருவாலங்காடு செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.
முதலாம் ராஜேந்திர சோழனின் யானைப் படையை கன்னியாக்குமரிக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. போரில் தோல்வியுற்ற மன்னர்களின் யானைகளை வெற்றி பெற்ற மன்னர்கள் கைப்பற்றிக் கொண்டனர். மன்னர்களுக்கிடையே பறிமாறப்படும் அன்பளிப்புப் பொருட்களில் ஒன்றாக யானை விளங்கியது.
* * *
பல்லவர், சோழர் கல்வெட்டுக்கள் அசுவம், துர்கா, றாயா, வாஜி என்ற பெயர்களில் குதிரைப்படையைக் குறிப்பிடுகின்றன. குதிரையேற்றம் இளவரசர்களுக்குரிய பயிற்சிகளில் ஒன்றாக இருந்தது. யுத்த களத்தில் குதிரையின் பங்களிப்பு குறித்த செய்திகளைக் கூரம் செப்பேடு குறிப்பிடுகிறது. சாளுக்கியர்களுக்கெதிரான போரில் கணக்கற்ற குதிரைப்படையை முதலாம் பரமேஸ்வரவர்மன் பயன்படுத்தியதாக இச்செப்பேடு குறிப்பிடுகிறது.
சோழர்களும் வலிமையான குதிரைப்படையைக் கொண்டிருந்தனர். முதலாம் ராஜராஜனின் படையில் ஏராளமான குதிரைகள் இருந்ததாக, திருவாலங்காட்டுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. தோற்ற மன்னர்களின் குதிரைகளைச் சோழமன்னர்கள் கைப்பற்றிக் கொண்டதை கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் குறிப்பிடுகின்றன. குதிரைப்படை வீரர்கள் வாளும், ஈட்டியும் கொண்டு போரிட்டுள்ளனர். குதிரையின் மீது வீரர்கள் அமர்ந் திருக்கும் காட்சி காஞ்சி வைகுந்தப் பெருமாள் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது. குதிரைகள் அரேபி யாவில் இருந்து இறக்குமதியாகியுள்ளன.
* * *
படைப்பிரிவில் பெரிய அளவில் காலாள் படை இருந்துள்ளது. வில், வாள், ஈட்டி ஆகியவற்றைப் பயன் படுத்தியும், கேடயத்தின் துணையுடன் தற்காத்தும் போரிட்டுள்ளனர். வைகுந்தப் பெருமாள் கோவில் சிற்பங்களில் ஈட்டி, வாள், கேடயம் தாங்கி நிற்கும் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
* * *
போர் தொடர்பான அறங்கள் என்று குறிப்பிடும் அளவுக்குச் சான்றுகள் எவையும் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் இடம்பெறவில்லை.
கங்கைக் கரையோரம் முதலாம் ராஜராஜ சோழன் படையெடுத்து வென்றபின் அப்பகுதியை ஆண்ட மன்னர்கள் தலையில் கங்கை நீர் அடங்கிய பானை களைச் சுமந்து வரும்படிச் செய்ததாக திருவாலங்காட்டுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.
வீரராஜேந்திரனின் கன்னியாகுமரிக் கல்வெட் டொன்று அவனது முன்னோரான கரிகால் சோழன் மேற்கொண்ட செயலைக் குறிப்பிடுகிறது. அதன்படி அவன் காவிரிக்குக் கரை அமைத்தபோது தனக்கு அடிபணியாத மன்னர்களைக் கூடையில் மண்ணெடுத்து வரும்படிச் செய்தான்.
போரில் வென்ற போது பகைநாட்டை அழித்து நெருப்பிட்ட செய்தியைக் கல்வெட்டுக்களும், செப்புப் பட்டயங்களும் குறிப்பிடுகின்றன.
எரியூட்டப்பட்ட மாளிகைகளில் இருந்த பெண்கள் சிறைபிடிக்கப்பட்டனர். இலங்கை மன்னனை முதலாம் ராஜேந்திரன் வென்றபோது அவனது ராணியையும், மகளையும் சிறைபிடித்தான்.
சோழ வீரர்களின் இக்கொடூரச் செயல்களை சோழர்களின் கல்வெட்டுக்கள் மட்டுமின்றி அவனது பகைமன்னர்களின் கல்வெட்டுக்களும் குறிப்பிடுகின்றன. சத்தியசிரராயன் என்ற சாளுக்கிய மன்னனது கி.பி.1007 ஆம் ஆண்டுக் கல்வெட்டொன்று சோழர் படை பெண்களையும், குழந்தைகளையும், பிராமணர்களையும் கொலை செய்ததைப் பதிவு செய்துள்ளது.
* * *
இச்செய்திகள் மட்டுமன்றி போரில் பயன்படுத்தப் பட்ட ஆயுதங்கள், இசைக்கருவிகள், பாசறை அமைத்தல், கோட்டை அமைப்பு, கடற்படை தொடர்பான செய்திகளையும் இவ்வியல் வாயிலாக அறியலாம்.
பொருளாதார வாழ்க்கை
தமிழகத்தில் பரவலாக அறிமுகமாயிருந்த தொழில், வேளாண்மை. பல்லவர்களின் பள்ளன்கோவில் செப் பேடு, நெல், கரும்பு, பனைமரக்காடு, வாழை ஆகியன காவிரியாற்றின் அருகில் வளர்க்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. பாக்கு, தென்னை, மா, பனை ஆகிய மரங்கள் வளர்க்கப்பட்டதை உதயமார்த்தாண்டம் செப்பேடு குறிப்பிடுகிறது.
வேளாண்மையின் அடிப்படை ஆதாரமான நீர் மேலாண்மை குறித்துப் பல்லவர், பாண்டியர், சோழர் கல்வெட்டுக்கள் விரிவாகக் குறிப்பிடுகின்றன.
ஆற்றுநீரையும் தேக்கி வைத்துப் பயன்படுத்தும் நோக்கில் ஏரிகளும் மன்னர்களால் அமைக்கப்பட்டன. இவற்றில் இருந்து நீரை வெளியேற்ற மதகுகளும், வாய்க் கால்களும் இருந்தன. குளங்களில் மீன்பிடிக்கும் உரிமை ஏலம் விடப்பட்டது.
கொல்லர், தச்சர், பொற்கொல்லர், நெசவாளர், நாவிதர் ஆகியோர் இருந்துள்ளதையும், சருமகாரர் (சருமம்-தோல்) என்ற பெயரில் தோல் தொழிலாளர்கள் இருந்துள்ளதையும் கல்வெட்டுக்கள் பட்டயங்கள் வாயிலாக அறியமுடிகிறது.
செப்புப்பட்டயங்களில் அரசனது ஆணையைப் பொறிக்கும் கைவினைஞர்கள் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தனர். கைவினைஞர்கள், வணிகர்கள் அடங்கிய வாணிபக்குழுக்கள் இருந்துள்ளன. இவற்றுள் மணிக்கிராமம், வளஞ்சியர், நானதேச திசை ஆயிரத்து அய்நூற்றுவர் என்பன முக்கிய வணிகக் குழுக்களாகும்.
வேளாண் தொழிலுடன் நேரடியான தொடர் புடையனவாக சித்திரமேழி அல்லது சித்திரமேழி நாட்டார் என்ற பெயரிலான குழுவை சோழர் காலக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. ஆநிரைகளையும் அவற்றின் பாலையும் அடிப்படையாகக் கொண்டு வாழும் குழுவைக் குறித்த செய்தியை திருக்கோவிலூர்க் கல்வெட்டால் அறியமுடிகிறது. இதே செய்தியை திட்டக்குடி பிரான்மலைக் கல்வெட்டுக்களும் பதிவு செய்துள்ளன.
* * *
வழிபடும் இடமாக மட்டுமன்றி மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வில் முக்கியப் பங்காற்றும் நிறுவன மாகவும் கோவில் இருந்துள்ளது. பல்லவர் ஆட்சிக் காலத்தில் கோவில் நிர்வாகமானது ஒரு சிலரால் மட்டுமே நிர்வகிக்கப்படும் அளவுக்கு எளிமையானதாய் இருந்தது. ஆனால் பின்னர் படிப்படியாக வளர்ச்சி பெற்று கிராமத்தின் சமூகப் பொருளாதார வாழ்வில் முக்கிய பங்கு பெற்று மேலும் அதிகப்படியான ஊழியர் களைக் கொண்ட அமைப்பானது.
கோவில் குருக்கள், கணக்கர், கொத்தர், பொற் கொல்லர், கொல்லர், கைவினைஞர், சமையற்காரர், துப்புரவு செய்வோர் போன்றோர் கோவிலின் செயல் பாட்டிற்குத் தேவையானார்கள்.
* * *
நோய் தீர்க்கும் வைத்தியர்களும் இருந்துள்ளனர். இவர்களுக்கு ஊதியத்திற்கு பதில் ‘வைத்திய போகம்’ என்ற பெயரில் நிலம் மானியமாக வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் திருமுக்கூடலில் உள்ள வேங்கடேசப் பெருமாள் கோவில் கல்வெட்டு வைத்திய சாலையன்று அக்கோவிலில் செயல்பட்டதைக் கூறுகிறது. ‘வீரசோழன்’ என்ற பெயரில் செயல்பட்ட இம்மருத்துவமனை ஊர்மக்கள் அனைவரின் பயன் பாட்டுக்குரியதாக விளங்கியதா என்பதில் தெளிவில்லை.
இக்கோவிலில் செயல்பட்டு வந்த வேத பாட சாலையின் விடுதியில் இருந்த ஆசிரியர்கள், மாண வர்கள், கோவில் ஊழியர்கள் ஆகியோருக்கு இங்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இம்மருத்துவ மனையில் மருத்துவர், அறுவை மருத்துவர், மூலிகைச் செடிகளைச் சேகரிக்கும் பணிக்கு இருவர், மருந்து தயாரிக்கும் பணிக்கு மூவர், இரண்டு செவிலியர், சிறு அறுவைச் சிகிச்சைக்கு நாவிதர் ஒருவர் என்போர் பணியாற்றி வந்துள்ளனர்.
வீரராஜேந்திர சோழனின் காலத்திய இந்நீண்ட கல்வெட்டு பல ஆயுர்வேத மருந்துகளைக் குறிப்பிடுகிறது. இவற்றில் பெரும்பாலானவை சாருகா எழுதிய ‘சாரக சம்ஹிதா’ வாகபட்டா எழுதிய ‘அஸ்தாங்க ஹிருதயா’ என்ற நூல்களில் இடம்பெற்றுள்ளன. திருவாடுதுறை ஊரிலுள்ள திருவாடுதுறையுடையார் கோவிலுடன் இணைந்த மடத்தில் ‘அஸ்தாங்க இருதயா’ ‘சாரஹ சம்ஹிதா’ என்ற பெயரிலான வடமொழி மருத்துவ நூல்கள் கற்றுக்கொடுக்கப்பட்ட தகவலை பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த விக்கிரம சோழனின் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
* * *
வழக்கில் இருந்த நில அளவு முறை குறித்தும், எடையளவு குறித்தும் வடமொழிக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.
சமூக வாழ்க்கை
குடிமக்களில் பிராமணர்கள் முதலிடத்தைப் பெற்றிருந்தனர். பிரம்மதேயம் என்ற பெயரில் நிலக் கொடை மன்னர்களால் இவர்களுக்கு வழங்கப்பட்டது. வேதம் அறிந்த பிராமணர்களுக்கு உணவு வழங்கப் பட்டது. சுந்தர சோழனின் நம்பிக்கைக்குரிய அநிருத்தா என்பவனின் தாய் நாள்தோறும் வெள்ளிப் பாத்திரத்தில் கறி வகைகளுடன் சுவையான உணவு வழங்க மானியம் வழங்கியுள்ளான். இதுபோன்ற செய்திகளை ஆங்காங்கே காணமுடிகிறது. சில கல்வெட்டுக்களில் பிராமணர்களின் கோத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. பிராமணர்கள் அரசு நிர்வாகிகளாகவும், போர் வீரர்களாகவும் இருந்துள்ளனர். ‘பிரம்மாதி ராஜா’ என்பது பிராமணர்களுக்கு வழங்கப் பட்ட உயரிய பட்டமாக இருந்துள்ளது.
* * *
பெண்களின் நிலை குறித்த கல்வெட்டுக்கள் சிலவும் உள்ளன. சுந்தர சோழன் இறந்தபோது அவன் மனைவி வாணவன்மாதேவி உடன்கட்டை ஏறியச் செய்தியை திருவாலங்காட்டுச் செப்பேடு குறிப்பிடுகிறது. இதே செய்தியை முதலாம் ராஜராஜனின் தமிழ்க் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
கணவன் இறந்தபின் தம் அணிகலன்களை அவனது மனைவியர் நீக்கும் வழக்கம் இருந்துள்ளது. முதலாம் ராஜராஜன், சாளுக்கிய மன்னன் ஜெய சிம்காவைப் போரில் கொன்றபோது அவன் மனைவியர் அனைத்து அணிகலன்களையும் களைந்தனர்.
ஜடாவர்மன் முதலாம் சுந்தர பாண்டியன் தன் பகை மன்னர்களின் மனைவியரது தாலிகள் அறும்படிச் செய்ததாக சிதம்பரம் நடராசர் கோவில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. பகை மன்னர்களின் பெண்கள் தமிழ்மன்னர்களால் இழிவாக நடத்தப்பட்டனர்.
நாள்தோறும் தேர்வு செய்யப்பட்ட சில கோவில் களில் பிராமணர்களுக்கு உணவு வழங்கவும், நந்தா விளக்கு ஏற்றவும் மகளிர் சிலர் கொடை வழங்கி யுள்ளனர். (இவர்கள் மேட்டுக்குடிப் பெண்களாகவே இருந்திருக்க வேண்டும்) மன்னர்கள் தம் அன்னையின் பெயரால் பிராமணர்களுக்கான சதுர்வேதி மங்கலங்களை உருவாக்கியுள்ளனர்.
கல்வியும் இலக்கியமும்
சமயம் சார்ந்ததாகவே இக்காலத்தில் கல்வி இருந்துள்ளது. தமிழிலும், வடமொழியிலும் எழுதப் பட்ட இறையியல் தத்துவம் தொடர்பான நூல்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன. மன்னர்கள் வேத ஆகமங்கள் கற்றவர்களாக விளங்கியுள்ளனர். சிலர் நாடக நூல்களை எழுதியுள்ளதுடன், தர்க்க நூல் அறிவும் பெற்றிருந்தனர். கல்வியென்பது பெரும்பாலும் வேதக்கல்வியாகவும் பாடசாலையென்பவை பெரும்பாலும் பிராமணர் களுக்குரியதாகவும் விளங்கின. கடிகை, வித்தியசாதனம் என்ற பெயரில் இவையழைக்கப்பட்டன. மடங்கள், கோவில்கள், அக்கிரகாரங்கள், சாலை என்பனவும் இத்தகைய சமயக்கல்வியை வழங்கி வந்தன. இதன் பொருட்டு இவை மன்னர்களிடமிருந்து மானியம் பெற்றன.
* * *
பல்லவரின் தொடக்க காலக் கல்வெட்டுக்கள் பிராகிருத மொழியிலும், பின்னர் சமஸ்கிருத மொழியிலும் எழுதப்பட்டன. பிற்காலத்தில் பல்லவர், பாண்டியர், சோழர்களின் கல்வெட்டுக்களில் தமிழும், வடமொழியும் இடம்பெற்றன. பிரசஸ்தி அல்லது மெய்க்கீர்த்தி என்ற பெயரில் குறிப்பிட்ட மன்னன் மற்றும் அவனது முன்னோர்களைக் குறிப்பிடும் பகுதி வடமொழியில் செய்யுள் வடிவில் இடம்பெற்றன. இக்கல்வெட்டுக்களில் பெரும்பாலானவை நிலம் அல்லது பணம் கோவில்களுக்கும் வேதம் வல்ல பிராமணர்களுக்கும் வழங்கப்பட்ட செய்தியைக் குறிப்பனவே.
வடமொழியில் எழுதப்பட்ட புராணங்கள், காப்பியங்களில் பல்லவர்கள் வடமொழிக் கல்வெட்டுக் களை எழுதியுள்ளனர். பகிரதன், பரசுராமன், ராமன், திருமாலின் தசாவதாரம், ஆதிசேடன், இலக்குமி, பார்வதி, கணேசர், ஹரிகரன், பிரம்மா, சரஸ்வதி, இந்திரன் என்ற பெயரிலான புராண இதிகாசப் பாத்திரங்கள் குறித்த பதிவுகள் இடம்பெற்றுள்ளன. ஓவியம், நடனம், சிற்பம் ஆகிய நுண்கலையறிவுடன், களவு செய்தலும் ஒரு கலையாகக் கருதப்பட்டது.
சமயம்
சைவம், வைணவம், ஆழ்வார்கள், நாயன்மார்கள், நந்தவனங்கள், பாசுபதம், காளமுகம், கபாலகம் என்ற பெயரிலான சமய உட்பிரிவுகள், சமயச் சடங்குகள், தானங்கள், புனித ஆறுகள், பசுமாடு புனித விலங்காகக் கருதப்பட்டமை, ஆன்மிகக் குருக்கள் அல்லது தலைவர்கள் என வைதீகச் சமயம் சார்ந்த செய்திகளை சமஸ்கிருதக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் குறிப்பிடுகின்றன.
இத்துடன் அவைதீக சமயங்களான சமணம், புத்தம் என்பன தொடர்பான செய்திகளும் இடம் பெற்றுள்ளன.
நூலின் பயன்பாடு
எண்ணிக்கையில் அதிகமான தமிழ்க் கல்வெட்டுக் களில் இடம்பெறாத சில செய்திகள் வடமொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுக்களிலும், செப்பேடுகளிலும் இடம்பெற்றுள்ளன. இவ்வுண்மையை நாம் அறியும்படி இந்நூல் செய்கிறது.
ஆசிரியர் எடுத்தாளும் பல்லவர், பாண்டியர் செப்பேடுகளில் இடம்பெற்றுள்ள வடமொழிப்பகுதியின் தமிழ்வடிவம் ஏற்கனவே தமிழில் வெளிவந்துள்ளது. மூத்த கல்வெட்டாய்வாளர் தி.நா.சுப்பிரமணியன் தாம் பதிப்பித்து வெளியிட்ட, பாண்டியர் செப்பேடுகள் பத்து (1967), பல்லவர் செப்பேடுகள் முப்பது (1966) என்ற இரு நூல்களிலும் வடமொழிப் பகுதிகளைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். கே.ஜி.கிருஷ்ணன் கரந்தைச் செப்பேடு குறித்து தமது ஆங்கில நூலில் (1984) இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். என்றாலும் தென்இந்தியக் கல்வெட்டுத் தொகுதிகளில் இடம்பெற்றுள்ள வடமொழிப் பகுதிகள் முறையாகத் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை. இக்குறையை இந்நூல் ஓரளவுக்குப் போக்கியுள்ளது.
வடமொழிக் கல்வெட்டுக்கள், செப்பேடுகளில் இடம்பெற்ற செய்திகளைக் கூறிச்செல்லும் ஆசிரியர் அவற்றின் எதிர்மறைத்தன்மை குறித்து எதுவும் கூறாமலேயே செல்கிறார். இதனால் செய்திகளின் தொகுப்பாக மட்டுமே இந்நூல் அமைந்து விட்டது.
என்றாலும் பல்லவர், பாண்டியர், சோழர் காலத் தமிழகத்தின் பண்பாட்டு வரலாறு குறித்த ஓர் அறிமுக நூலாக இது அமைந்துள்ளதால் பொதுவாசிப்பிற்குரிய நூலாகவும் இதைக் குறிப்பிடலாம்.
இந்நூலைப் படித்து முடித்ததும் சில வினாக்கள் தோன்றின. சாதி, மொழி என்ற இரண்டின் மீதும் கொண்டுள்ள மட்டுமீறிய பற்றினை ஒதுக்கிவிட்டு இவ்வினாக்களுக்கு விடை காண்பது அவசியம்.
I. தமிழ்மன்னர்கள் என்று நாம் போற்றுவோர் தாம் உருவாக்கிய கல்வெட்டுக்களிலும், செப் பேடுகளிலும் வடமொழியைப் பயன் படுத்தியது ஏன்?
II. பிராமணர்களையும் வேதக்கல்வியையும் பேணியது ஏன்?
III. வடமொழி தர்ம சாஸ்திரங்களைப் பின் பற்றியது ஏன்?
IV. வடமொழிப் புராணப் பாத்திரங்கள் மற்றும் காப்பியத் தலைவர்களின் மரபில் வந்தவர் களாகத் தம்மை அழைத்துக் கொண்டது ஏன்?
மூவேந்தர்களுடன் தம் சாதியைத் தொடர்புபடுத்தி புதிய வரலாறு படைப்போர், அவ்வாறு எழுதப்பட்ட வரலாற்றை யானையின் மீது ஏற்றி உலா வருவோர், தமிழர் நீதிமுறையின் அடையாளமாக மனுநீதிச் சோழனைக் காண்போர் இவ்வினாக்களுக்கான விடைகளைத் தேடும் பணியைத் தொடங்க வேண்டும். அத்தேடுதல் பணிக்கு இந்நூல் மறைமுகமாகத் துணை நிற்கும்.