uppalam

1) சமஸ்கிருத சிறப்பொலி ருகரம்:

சமஸ்கிருத மொழியில் ருகரம் என்றொரு உயிரெழுத்து உள்ளது. தமிழில் அத்தகைய ஓர் ஒலி இல்லை. அதனை ஆங்கில (R) என்ற எழுத்தால் இங்கு குறிப்பிடுவோம். இவ்வொலியை ரிஷப, ரிஷி, ரிது, ரிண, மிருது அமிர்த, மிருக, ஹ்ருதய போன்ற சமஸ்கிருத சொற்களில் காணலாம். இதற்கு நெருக்கமாக இருக்கும் தமிழ் ஒலி ரகரமாகும். அதனால் சமஸ்கிருத உயிர் (R) வரும் இடங்களில் தமிழ் ரகரம் இட்டு எழுதுகிறோம். ஆனால் பழந்தமிழில் 'இழ்' என்றோ உகரமாகவோ, ழகரமாகவோ, ‘இரு' என்றோ தமிழாக்கப்பட்டது. இது ஏனென்று ஆராயத் தக்கது. மேலும் பிராகிருத மொழியிலும் இவ் சமஸ்கிருத உயிரெழுத்து இல்லை. அவ்வகையில் தமிழும் பிராகிருதமும் ஒற்றுமை கொண்டுள்ளன. முதலில் அமுதம் என்ற சொல்லைக் காண்போம். பாற்கடலைக் கடையும் போது அமிர்தம் தோன்றிற்று என்ற வடமொழித் தொன்மம் ஒருபுறமிருக்க தமிழர் கடலில் விளையும் உப்பினை அமிழ்தம் என்று கூறியுள்ளனர்.

2) அமிர்த்> அமுதம், அமிழ்தம்:

சங்கத் தமிழில் அமிர்த் என்ற சொல் அமிழ்தம் என்று தமிழ்ப்படுத்தப் பட்டுள்ளது. 'இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும்'(புறம்-182) என்ற கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி படைத்த பாடலில் இது வருகிறது. தமிழரின் விருந்தோம்பல் பண்பிற்கு எடுத்துக் காட்டாக இப்பாடல் சுட்டப்படுகிறது. இந்திரர் உலகத்து அமிழ்தம் கிடைத்தாலும் தனியாக உண்ணுவதில்லை;பிறருடன் பகிர்ந்து உண்பர் என்ற சூழலில் அமிழ்தம் வந்துள்ளது. மேலும்,

"அரும் பெறல் அமிழ்தம் அன்ன கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே" என்று ஒளவையார் பாடல் வரியிலும் (புறம்-392) அமிழ்தம் வருகிறது. அமிழ்தம் போன்று சுவை தரும் கரும்பை இந் நாட்டிற்குக் கொண்டு வந்தான். "அமிழ்து பொதி செந்நா" என்று குறுந்தொகையில் காதல் இன்பம் சார்ந்து இனிமையான என்ற பொருளில் வந்தது. இன்னொரு குறுந்தொகைபாடலில் "அரும் பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆக"என்று வருகிறது. தேவர்களின் உணவு அமிழ்தம் என்ற கருத்து பட இங்கு எடுத்தாளப்படுகிறது. மதுரைக்காஞ்சியிலும் "உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்" என்று வருமிடத்தில் பாண்டியனின் பெருமை கூற வந்த மாங்குடி மருதனார் அமிழ்து என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

திருக்குறளில் வான் சிறப்பு அதிகாரத்தில் "தான் அமிழ்தம் என்று உணரற் பாற்று" என்ற குறள் வரியிலும் அமிழ்தம் என்ற சொல்லாட்சி வருகிறது. 'அமிழ்தம் உண்டார் சாவாது நிலைபெறுவார்' என்று பரிமேலழகர் கூறுகிறார். மழை இவ்வுலகை நிலைபெறச் செய்வதால் அமிழ்தம் எனப்பட்டது. நாலடியார் பாடல் வரிகளில் அமிழ்தம் என்ற வடிவம் எடுத்தாளப் பெற்றுள்ளது. "நனி விரும்பு தாளாண்மை நீராயினும் அமிழ்தாய் விடும்"(200).

அமிழ்தம் என்ற வடிவம் சங்கப் பாடல்களில் நற்றிணையிலும் சற்று வித்தியாசமான பொருளில் காண முடிகிறது. "கடல் விளை அமிழ்தம் பெயற்கு ஏற்றாங்கு/உருகி உகுதல் அஞ்சுவல் உதுக்காண்" (நற்றிணை 88;1-5)

அமிழ்தம் என்ற சொல்லுக்கு விலை மதிப்பற்ற பொருள் (உப்பு) என்ற (Meaning change) அர்த்தம் மாற்றம் அடைந்தது. இன்னொரு அகநானூற்றுப் பாடலிலும் உப்பைக் குறிக்க அமிழ்தம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. "அணங்குடை முந்நீர் பரந்த செறுவின்/ உணங்குதிறம் பெயர்த்த வெண்கல் அமிழ்தம்/குடபுல மருங்கின் உய்ம்மார்"(அகம். 207:1-6)

என்று வரும் பாடல் வரிகளில் உப்பளங்களில் விளைந்த அமுதமாகிய உப்பு மேற்றிசை நாடுகளுக்கு அனுப்பப்பட்டது என்ற செய்தி தெரிகிறது. தமிழர் உழைப்பில் விளைந்த உப்பை அமிழ்தம் என்று கொண்டது சிறப்புடைத்து.

பரிபாடலில் அமிர்த என்ற வடிவம் கிடைக்கிறது. "வாயடை அமிர்த நின் மனத்தகத்து அடைதர" என்ற வரியில் இவ்வடிவம் வருகிறது. அமிர்தம் தேவர்களுடைய உணவு என்றும் அது மூப்பின்மையையும் ஒழியாத

வலிமையும் சாவா மரபைத் தரும் என்பதையும் இங்கு அறிகிறோம்.

சிலம்பில் அமுதம் என்ற வடிவம் கிடைக்கிறது. கொலைக் களக் காதையில் கண்ணகி கோவலனுக்கு தலை வாழையில் உணவு பரிமாறிவிட்டு "அமுதம் உண்க அடிகள்" என்று அழைக்கிறாள். அமுதம் இங்கு உணவைக் குறித்தது. அமுதத்திற்குப் புதிய பொருள் வருவதைக் காணமுடிகிறது.

  1. 1) இடைக்காலம்:

அமுது, அமுதுசெய், அமுதுபடி

இடைக்காலப் பக்திப் பனுவல்களில் இச்சொல் திரும்பத் திரும்ப வருகிறது.

"ஆரா அமுதே ஆசைப்பட்டேன்" (திருவா-ஆசைப்பத்து) என்று வரும் திருவாசகத்தில் அமிழ்தம் 'அமுது' ஆனது. அமுது என்ற சொல்லுக்கு அருமருந்து என்று பொருள் சொல்லப்படுகிறது. 'ஆராவமுதே அளவிலாப் பெம்மானே' என்றும் வருகிறது. இவ்விடத்தில் உண்ண உண்ண தெவிட்டாத இன்னமுதம் போன்றவனே என்று பொருள் சொல்லப் படுகிறது. "கடலமுதே கரும்பே விரும்படியார்"(திருவா-திருப்பள்ளியெழுச்சி)என்று வருமிடத்தில் திருப்பாற்கடல் அமுதம் போன்ற வனே என்று இறைவனை வர்ணிக்கிறார் மணிவாசகர். "கண்ணார் அமுதமுமாய் நின்றான்" (திருவா-திருவெம்பாவை) என்ற இடத்தில் பெருமை மிக்க அமுதம் என்று பொருள் தரப் படுகிறது.

நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில்'என் அமுதினை' என்றும் "அமுதூறும் என் நாவுக்கே" என்றும் திருமால் வர்ணிக்கப் படுகிறார்.

இவ்வாறு சிறுசிறு பொருள் வேறுபாட்டுடன் இச்சொல் வருவதைக் காணலாம். கல்வெட்டுகளில் அமுது படி என்பது அரிசியைக் குறித்து நின்றது. அமுது செய்தல் என்பது உணவு உண்ணுதலைக் குறித்தது.

அமிர்தம் (amRtam) என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு வரலாறு இருப்பது போலவே தமிழிலும் நெடிய வரலாறு உள்ளது.

சமஸ்கிருத உயிரொலி (R) தமிழில் சங்க காலத்தில்- இழ்- என்று மாறியது. அமிழ்தம் என்பதில் இதனைக் காணலாம். (R) என்பது-உகரமாகவும் மாறிற்று. அமுதம் என்ற வடிவத்தில் இதனைக் காணலாம். (R) தமிழில் ரகரமாகவும் மாறுகிறது. அமிர்தம் என்பதைக் காண்க. அமுதம் என்பதில் -அம் கெட்டு அமுது என்றும் வழங்குகிறது.

பிராகிருத மொழியில் 'அமிய' என்றும் 'அமய'என்றும் மாற்றும் அடையும். பல் அடைப்பொலி தகரம் கெடுகிறது. தமிழில் தகரம் கெடவில்லை.

3) ரிஷப > இடபம்

காளை அல்லது எருது என்று பொருள் படும் தமிழ்ச் சொல்லை சமஸ்கிருத மொழியில் ரிஷப (Rshabha) என்ற சொல்லால் குறிப்பர். (R) என்பது சமஸ்கிருத மொழியில் உயிரெழுத்து என்று குறிப்பிட்டோம். sha என்பது நாமடி சகரவொலி. இச் சொல் இடபம் என்று தமிழில் வழங்கும். நாமடி(sh) சகர ஒலி தமிழில் டகரமாக மாறும்.

(R) என்ற சமஸ்கிருத உயிர் இகரமாக மாறி இடபம் என்றாகிறது. திருவாசகத்தில் திருச்சாழல் பதிகத்தில்"இடபம் உகந்து ஏறியவாறு எனக்கறிய இயம்பேடி" (பாடல்-4) என்ற இவ்வரியில் ரிஷபம்>இடபம் என்று வந்துள்ளது. சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரையில் இடபம் ராசிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது. முன்பாக, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் கைந்நிலை என்ற நூலில் "தங்கார் வருவர் / இடபம் எனக் கொண்டு தாம்" என்ற பாடல் வரிகளில் இடபம் என்ற சொல் பயின்று வருகின்றனது. தம்மைக் காளை என்று கொண்டு தலைவன் வந்து விடுவான் என்று தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.

ரிஷப என்ற சமஸ்கிருத சொல் உஸஹ (usaha) என்று பிராகிருத மொழியில் மாறுகிறது.

பாலியில் உஸப (usabha) என்று மாறுகிறது. தமிழ் இடபம் வேறுபடுகிறது.

4) ரிஷி > இருடி

ரிஷி என்னும் சமஸ்கிருத சொல் பழந்தமிழில் ‘இருடி' என்றாகிறது.

இங்கு ரி (R) சமஸ்கிருத உயிர் தமிழில் இரு என்று மாறுவதைக் காண்கிறோம். ஷகர நாமடி ஒலி டகரமாக மாறும். நமது மரபிலக்கண ஆசிரியர்கள் இதற்கு விதி தந்துள்ளனர். வளையாபதி காவியத்தில்"நிக்கந்த வேடத்து இருடி கணங்களை"என்ற வரியில் இருடி என்ற சொல் வந்துள்ளது. திருவாசகத்திலும்

"ஏகாசமிட்ட இருடிகள் போகாமல்

ஆகாசங் காவலென் றுந்தீ பற" என்ற பாடல் வரிகளில் இருடி என்பது வானத்திலே போர்வையிட்டுச் செல்லும் ஒருவகை முனிவர்களைக் குறித்து வந்துள்ளது. நாலாயிரதிவ்விய பிரபந்தத்தில் திருப்பல்லாண்டு "இருடி கேசன் தனக்கு" (பாடல்-5) என்று வருகிறது. ரிஷிகேசன் என்பதே இருடி கேசன் என்று தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளது.  இச்சொல்லுக்கு முனிவர்களின் தலைவன் என்பது பொருள். ரிஷி என்ற சொல் இஸி (isi) பாலியிலும் பிற பிராகிருத கிளை மொழியிலும் மாறுகிறது.

5) ரிக் (வேதம்) > இருக்கு

ரிக் (Rg) என்பது நான்கு வேதங்களில் ஒன்று; முதலாவது வருவது. தமிழில் 'இருக்கு' என்று வருகிறது. "இருக்கு எசுச் சாம வேத நாண்மலர் கொண்டு உன் பாதம் நண்ணா நாள் "எனத் திவ்வியப் பிரபந்தத்தில் வருகிறது. இங்கு (R) என்னும் சமஸ்கிருத உயிர் ஒலி 'இரு' என்று தமிழ்ப் படுத்த படுகிறது.

 திருவாசகத்தில் "இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்" (திருப்பள்ளியெழுச்சி-4) என்று வரும் வரிகளில் இருக்கு வந்துள்ளது. இங்கும் இச்சொல் ரிக் வேதத்தையே குறித்தது. ரிக்வேதம் என்று அழைப்பது அண்மைக்கால வழக்கு. இருக்கு (வேதம்) என்பது பழைய வழக்கு.

6) nRtya > நித்தம், நிருத்த

ந்ருத்ய (nRtya) என்ற சமஸ்கிருதச் சொல் நடனம், நாட்டியம், என்று பொருள்படும். இச்சொல் பிராகிருத மொழியில் நச்ச என்று மாற்றம் அடையும் என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். தமிழில் பழந்தமிழில் நித்தம் என்றும் பிற்காலத்தில் நிருத்த என்றும் மாறிற்று. இடைக்காலத்தில் நிருத்தனே என்று சிவனை அழைப்பதைக் காணலாம். அதாவது சமஸ்கிருத உயிர் (R) தமிழில் இரு என்றும் இகரமாகவும் மாறுவதைக் காண்கிறோம்.

7) mRga > விருகம், மிருகம்.

mRga என்ற சமஸ்கிருதச் சொல்லிலும் 'ரு'என்ற உயிரெழுத்து வந்துள்ளது. இது தமிழில்'இரு' என்றே மாறுகிறது.

மிருகம் (mirukam) என்றும் விருகம் என்றும் மாற்றம் அடைந்தது. விருகம் என்பது திருவாசகத்தில் 'பல் விருகமாகி பறவையாய்'என்று வருகிறது. பொதுவாக விலங்கு என்ற பொருளில் தமிழில் வழங்க சமஸ்கிருதத்தில் மான் என்ற பொருளில் வழங்கிற்று. பிராகிருத மொழியில் 'மிஅ, மய' என்று மாற்றம் பெறுகிறது.

8) ஹ்ருதய > இதயம், இருதயம்

ஹ்ருதய (hRdaya)

இச்சொல்லில் வரும் தொண்டை உரசொலி (h) கெட்டு ருகரம் இகரமாக மாறுகிறது. (R>இ). இவ்வாறு தமிழில் இதயம் வந்தது.

இடைக்காலத்தில் இதயம் வந்துவிடக் காண்கிறோம். பிராகிருத மொழியில் (hiaa)என்று வரும்.

9) மிருது (mrdu) > மெது

மெது' என்ற சொல் மென்மையைக்குறிக்கும். இச்சொல் மிருது என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து வந்தது. மெதுவடை போன்ற தற்கால தமிழ்ச் சொற்களிலும் இதனைக் காணலாம். மிருதுவில் வருகிற (R) தமிழில் எகரமாக மாறுவதைக் காண்கிறோம்.

10) ரிது (Ritu) > இருது

ரிது என்ற என்ற சொல் இருது என்று மணிமேகலையில் வருகிறது. "இருது வேனிலில் எரி கதிர் இடபத்து"(மணி-11/40) என்பது அந்த செய்யுள் வரி. 'இரு மாதங்களுக்கு உட்படும் பருவத்தை' இச்சொல் குறித்தது.

(season of two months). ரிதுவாதல் என்பது அனைவரும் தெரிந்ததே.

கிராமப்புறங்களில் ருசுவாதல் என்று கூறுவதை இன்றும் காணலாம். பிராகிருத மொழியில் 'உஉ'என்று வழங்குகிறது.

11) முடிவுரை:

மொழிகள் சொற்களையும் பிற இலக்கணக்கூறுகளையும் கொடுத்தும் கொண்டும் வளர்கின்றன. தம் மொழியின் சொற்கட்டமைப்புக்கு ஏற்ப பிறமொழிச் சொற்களை மாற்றிஏற்றுக் கொள்கின்றன.

அமிர்தம் என்ற சமஸ்கிருதச் சொல் தமிழில் விரிவாகக் காலந்தோறும் பயன்பட்டது; கையாளப்பட்டுள்ளது. இச்சொல்லின் சொற்பொருளில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடல் நீரில் உற்பத்தியாகும் உப்பைப் பழந்தமிழர் 'வெண்கல் அமிழ்தம்' என்றும் 'கடல்விளை அமுதம்' என்றும் புதிய பொருளில் அழைத்தனர். இனிமை, சுவை, உணவு போல பல சொற்பொருளை இச் சொல் குறித்தது.

சமஸ்கிருத உயிரெழுத்து ரு (R) பிராகிருத மொழியில் இகரமாகவோ உகரமாகவோ அகரமாகவோ, ரகரமாகவோ மாறுகிறது. தமிழில் இரு, இழ், உகரம், இகரம், ரகரம் ஆகிய ஒலிகளாக மாற்றம் அடைகிறது. தமிழிலும் பிராகிருதத்திலும் இவ்வொலி இல்லை.

- ஆ. கார்த்திகேயன்

Pin It