தமிழ் மக்களது கடந்த காலத்தினுடையவும், நிகழ்காலத்தினுடையவும் பல்வேறு அம்சங்களையும் ஆய்வு செய்கிற ஐரோப்பிய வல்லுனர்கள், நமது காலத் தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான திரு.நா.வானமாமலையின் நூல்களில் கவனம் செலுத்தாமல் இருக்க முடியாது. ஆழ்ந்த போக்குக் கொண்ட ஆய்வாளர்களில் ஒருவரான இவரது பணிகள் சுதந்திர இந்தியாவில் மலரத் தொடங்கின.
திரு. நா.வானமாமலை விஞ்ஞான உலகத்துக்கு, தனது மக்களின் வாய்மொழி இலக்கியத்தைச் சேகரிப்பவர் என்ற முறையிலேயே முதற்கண் பிரபலமானவர். தமிழ் மக்களின் நாட்டுப்புற இலக்கியமான மக்கள் பாடல்கள், கவிதைகள், பழமொழிகள், பழக்க வழக்கங்கள், மரபுகள் ஆகிய வற்றை கவனமாக விடாமுயற்சியுடன் சேகரிப்பது, சேகரித்த இலக்கியத்தை முறைப்படுத்துவது, ஆய்வு செய்வது ஆகிய யாவும் பேராசிரியரின் விஞ்ஞானத் தேட்டத்தின் சிரமமிக்க பணியாகும். நமது காலத்து தமிழ் இயலின் வளர்ச்சிக்கு பேராசிரியர் ஆற்றியுள்ள பணிகள் மதிப்பிற்குரியன. வருங்கால தமிழ் ஆய் வாளர்கள், திரு. நா.வானமாமலையின் நூல்களை பன்முறை பயில்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
மக்கள் இலக்கியத்தை (நாட்டுப் பாடல்கள்) ஆய்வு செய்கையில், நா.வா. மக்கள் சேவைக்கு ஆராய்ச்சியை எங்ஙனம் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு ஒரு ஒளிமிக்க உதாரணமாக விளங்கு கிறார்.
தமிழ் மக்களிடையே அறிவைப் பரப்புவதில் திரு. நா.வானமாமலை பெரும் பங்காற்றி வருகிறார். விஞ்ஞானி உருவாக்கிய பத்திரிகையான ஆராய்ச்சி, இந்த அர்த்தத்தில் ஐயத்திற்கிடமற்ற பாத்திரம் வகிக்கிறது.
மிகப் பரவலான பிரச்சினைகள் குறித்து பத்திரிகைக்கான விஷயங்களையும் தகவல்களையும் சுவையாகத் தேர்வு செய்வது அவரது மற்ற விஞ்ஞானப் போக்குகளிலிருந்து லாபகரமான முறையில் மாறு பாடு கொண்டிருக்கிறது. பத்திரிகை ‘ஆராய்ச்சி-யில்’ தமிழ் நாட்டு வல்லுனர்கள், வெளிநாட்டு நிபுணர்களின் கட்டுரைகளை நாம் காணுகிறோம். தமிழ் வரலாறு, தமிழ் மொழி, சமுதாய இயல், புதை பொருள் ஆய்வு, இலக்கியம் போன்ற பிரச்சினை களுக்கு இக்கட்டுரைகள் ஒளியூட்டுகின்றன. இரு மொழிகளில் பத்திரிகை வருவது ஆராய்ச்சியினது வாசகர்களின் எண்ணிக்கை வளர்வதற்கு உதவுகிறது.
நாட்டுப் பாடல், விஞ்ஞானத் - தத்துவம் ஆகியவை பற்றி தமிழ் இயல் தகவல்களை இப் பத்திரிகை நிறையத் தருகிறது. திராவிடவியலாளர் களுக்கு மட்டுமின்றி பரவலான வாசகர் திரளுக்கும் ஆராய்ச்சியின் ஒவ்வொரு இதழும் ஒரு விருந்தாகும் தமிழ்க் கலாசார அறிவையும், இலக்கிய அறிவையும் மக்களிடையே பரப்புகிறவர் என்கிற முறையிலும் பேராசிரியர் நா.வானமாமலை பெயர் பெற்றவரா கிறார். படிப்பு அறைக்குள் அடைந்து கிடப்பவரல்ல பேராசிரியர். மக்கள் திறமையைக் கண்டுபிடித்து, அவற்றை ஆதரித்து, இளம் எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் ஊக்குவிப்பதிலும் அவர் கவனம் செலுத்துகிறார். திரு. வானமாமலை, எஸ்-எம் கார்க்கி வில்லிசைக் குழுவினருக்கு நல்கிய தகுதி வாய்ந்த உதவியும் ஆதரவும் பிரசித்தமானவை. அண்மையில் இளம் எழுத்தாளரான திரு. பொன்னீலனின் புதிய சுவைமிகுந்த நாவலைப் படிக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிட்டியது. “கரிசல்” என்ற இந்த நாவலுக்கு தகவல் நிறைந்த முன்னுரை எழுதியிருக்கிறார்.
திரு. நா.வானமாமலை. ஆய்வாளரும், தமிழ்க் கலாசாரத்தைப் பரப்பு கிறவருமான பேராசிரியர் திரு. நா.வானமாமலையின் அறுபதாம் ஆண்டு விழாவின் போது அவருக்கு உளம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கையில் அவர் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று வாழ்த்து கிறோம். ஆய்வாளர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் பயன்படுகிற தமது ஆய்வுகளை மேலும் சிறப்பாகத் தொடர வேண்டும் என்று விழைகிறேன்.
மாஸ்கோ, டிசம்பர் 1977
(நா.வா. மணிவிழா மலர் தொகுப்பிலிருந்து...)