குழந்தை இலக்கியத்தில் இதழ்களின் (Magazines) முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்வது அவசியம்.  புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ‘பத்திரிகை’ என்ற தனது பாடலில் குழந்தைகளுக்கு இதழ்கள் எவ்வளவு முக்கியம் என்பதை இவ்வாறு விளக்குகிறார்,

“கருப் பெற்றுருப் பெற்றிள நடை

                பெற்றுப் பின்னர் ஐந்தே ஆண்டு

வரப்பெற்றார், பத்திரிகை வாசித்தல்

                உண்டென்றால் வாழ்க்கைப் பெற்றார்”

குழந்தைகளின் வாழ்வு வளம் பெற பத்திரிகையே துணை செய்கிறது என்பதை புரட்சிக் கவிஞர் அழுத்தமாகக் கூறியுள்ளார்.

childrens 600‘குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்’ என்று கூறிய இயேசு நாதரிடம் குழந்தைகளை அழைத்துச் செல்ல, கிறிஸ்தவ மதத்தினரே தமிழில் முதல் சிறுவர் இதழை வெளியிட்டனர்.  1840-ஆம் ஆண்டில் வெளி வந்த அவ்விதழின் பெயர் ‘பாலதீபிகை,’ சுமார் 22-ஆண்டுகள் வெளிவந்த அவ்விதழ் நின்று போனது. தமிழில் வெளிவந்த முதல் சிறுவர்

இதழ் என்ற பெருமையைப் பெற்றது. கிறிஸ்தவ குடும்பத்தினரின் குழந்தைகளிடம் செல்வாக்குப் பெற்ற மேலும் இரண்டு பத்திரிகைகள் உண்டு.  ஒன்று ‘பாலியர் நேசன்,’ இன்னொன்று ‘பூக்கூடை’ அழகிய தமிழ்ப் பெயரில் வந்த ‘பூக்கூடை’க்கு கவிஞர் தயானந்தன் பிரான்சிஸ் ஆசிரியராக இருந்தார்.  அதனால் அது குழந்தை இலக்கியத்தின் தாக்கத் தோடு வெளிவந்தது.  பைபிள் கதைகளோடு சிறுவர் களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதை களும் அதில் இருந்தன.

1940 முதல் 1970 வரை தமிழில் நிறைய சிறுவர் இதழ்கள் வந்தன. அக்கால கட்டத்தை குழந்தை இதழ்களின் ‘பொற்காலம்’ என்று குறிப்பிடலாம்.  குழந்தை இதழ்களின் எண்ணிக்கை ஐம்பதுக்கும் மிகும். பாலியர் நேசன், பாலவிநோதினி, பாலர் மலர், பாலர் முரசு, பாப்பா, பாப்பா மலர், அணில்,  அணில் மாமா, சங்கு, டமாரம், டிங் - டாங், கரும்பு, பார்வதி, அம்பி, முத்து, கண்ணன், சின்னக் கண்ணன், முயல், கிளி, அல்வா, பூஞ்சோலை, சிறுவர் உலகம், ரேடியோ, குஞ்சு, ஜில் ஜில், வானர சேனன், மத்தாப்பு, ஜிங்லி, சாக்லெட், மிட்டாய், சந்த மாமா, அம்புலி மாமா, பொம்மை வீடு, சித்திரக் குள்ளன், சித்திரா, சிற்பி, அன்னம், சந்திர ஒளி, கங்கணம், மயில், தமிழ்ச்சிட்டு, கோகுலம், துளிர், ரத்னபாலா, பூந்தளிர், கல்கண்டு, அரும்பு... என்று இன்னும் உண்டு.

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பிறந்த புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து தான் நிறைய குழந்தை இதழ்கள் வெளிவந்தன. ‘பாலர் மலர்’ நடத்திய வெ.சுப.நடேசன் டமாரம், சங்கு என்று மேலும் இரண்டு இதழ்களை நடத்தினார்.  அதற்குக் காரணம், சிறுவர் இதழ் நடத்துவதில் அவர் பெற்ற வெற்றியே, மூன்று இதழ்களுக்கும் ஆசிரியராக அழ.வள்ளியப்பா தான் இருந்தார்.  அழ.வள்ளியப்பா எழுதியவைகளில் பெரும்பான்மை இதழ்களில்தான் வந்தன.

‘டமாரம்’ குழந்தைகளின் படைப்புகளுக்கு அதிக இடமளித்தது.  அதன் விற்பனை 20,000 பிரதி களுக்கு மேலாக இருந்தது.  வாரம் இருமுறை வெளி வந்த டமாரத்தின் விலை காலணா.

குழந்தைகளுக்கு இதழ்கள் நடத்த வேண்டு மென்ற இலட்சிய வேகத்துடன் ‘பால விநோதினி’யை நடத்திய வரகலி அ.சுப்பிரமணியமும் ‘பாப்பா’வை நடத்திய தியாகராஜனும் விளங்கினர்.  வார இதழாக வந்த ‘பாப்பா’ தீபாவளி மலர்களைக் கூட வெளி யிட்டது.

அக்காலத்தில் காலணா, அரையணா, ஒரணா நிலையில் வண்ண ஓவியங்களுடன் குழந்தை இதழ்கள் வந்தன.  ‘அணில்’ எனும் இதழை நடத்திய சக்தி வை.கோவிந்தன் சாதனைகளைப் படைத்தவர்.  அணிலில்தான் தமிழ்வாணன் முதலில் அறிமுக மானார்.  பின்னர் ‘கல்கண்டு’ இதழில் புகழ் பெற்றார்.

‘குழந்தைகள் செய்தி’ என்ற தினப் பத்திரிகை (Daily) யை குழந்தைகளுக்காக முதன் முதலில் நடத்தியவர் சக்தி வை.கோவிந்தன் ஆவார்.  ‘குழந்தைகள் செய்தி’தான் தமிழ்க் குழந்தைக்கான முதல் தினசரி.  கடைசி தினசரியும் அதுதான்.

குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு அடிப்படை குழந்தை இதழ்களின் வளர்ச்சியே என்று கூறினால் அது மிகையான கூற்றல்ல, இதழ்கள் உருவம் என்றால் குழந்தை இலக்கிய வளர்ச்சி அதன் நிழல், குழந்தை இலக்கிய இதழ்கள் நிறைய வந்தால்தான் குழந்தை எழுத்தாளர்கள் நிறைய தோன்றுவார்கள் என்பது திண்ணம்.

ஏனென்றால் குழந்தை இதழ்கள் மூன்று பணிகளைச் செய்கிறது.  ஒன்று, குழந்தைகள் படிக்க வாய்ப்பளிக்கிறது.  இரண்டு, குழந்தை எழுத்தாளர்கள் நிறைய எழுத வாய்ப்பளிக்கிறது.  மூன்று, குழந்தைகள் படைப்புகளுக்கும் இடமளிக்கிறது.  எனவே குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு இதழ்களே ஆதாரம்.

அக்காலத்தில் வந்த சிறுவர் இதழ்களை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். ஒன்று குழந்தை எழுத்தாளர்கள் நடத்தியது. பூவண்ணன் கரும் பையும், அழ.வள்ளியப்பா பூஞ்சோலையையும், மகிழ்ச்சிக் கண்ணன் மத்தாப்பையும், சக்தி கோவிந்தன் அணிலையும், நாரா. நாச்சியப்பன் முத்துவையும், சௌந்தர் ரேடியோவையும், வாண்டு மாமா வானவில், ‘கிங்கிணி,’ என்று இரண்டு இதழ் களையும், எஸ்.வஜ்ரவேலு பூந்தோட்டத்தையும், ரா.கி.ரங்கராஜன் வானர சேனையையும் ஓவியர் சந்தனு சித்திரக் குள்ளனையும், புலிவேந்தன் அணிலையும், நவீனன் யுவனையும், கலைவாணர் மானையும் நடத்தினர்.

குழந்தை இதழ்களின் செல்வாக்கைப் பார்த்த பெரியோர் இதழ்களான கலைமகள், ஆனந்த விகடன், கல்கி தங்கள் இதழ்களில் முதலில் சிறுவர் பகுதியை இடம் பெறச் செய்தன.  பின்னர் கலை மகள் ‘கண்ணன்’ என்ற சிறுவர் இதழை வெளி யிட்டது. இதன் ஆசிரியராக பிரபல எழுத்தாளர் ஆர்.வி. இருந்தார்.  ராஜாஜி, கி.வா.ஜ. கிருபானந்த வாரியார், பெ.தூரன், கி.சந்திரசேகரன் போன்ற பெரியோர்களும் சிறுவர்களுக்கு எழுதினர்.  22 ஆண்டுகள் வெளிவந்த ‘கண்ணன்’ 1971-இல் நின்று போனது.

கல்கி ‘கோகுலம்’ என்ற சிறுவர் இதழைக் கொண்டு வந்தது.  40 ஆண்டுகளுக்கு மேலாக வெளி வந்த கோகுலம் சமீப ஆண்டுகளில் நின்று போனது.  மூத்த குழந்தை ஏழுத்தாளர் ரேவதி ஆசிரியராக இருந்து புதியவர்கள் எழுத ஊக்கமளித்தார்.  கோகுலம் எழுதுவோருக்கு பணமும் அளித்தது.

விகடன் ‘சுட்டி விகடனை’ வெளியிட்டது.  ‘உயிர்த்தமிழ் பயிர் செய்குவோம்’ என்று தலைப்பில் போட்டுக் கொண்டு ஆனந்த விகடனின் ஆங்கிலம் கலந்த தமிழ்நடையை சிறுவர்களுக்கு வழங்கியது.  சுட்டி க்ரியேஷன்ஸ், புக் க்ளப், குறும்புக்காரன் டைரி, எஃப், ஏ பக்கங்கள், ஈஸி ‘டிப்ஸ்’ ஆகியவை சுட்டி பயிர் செய்யும் உயிர்த் தமிழாகும்.  சுட்டி விகடனும் சமீபத்தில் நின்று விட்டது.

‘கண்ணன்’ நிறைய சிறுவர் கதைகளை வெளி யிட்டது.  சிறுவர் நாடகங்களையும் பாடல்களையும் வெளியிட்டது.  ‘கண்ணன் கழகம்’ என்றும் சிறுவர்கள் பங்கேற்கும் கூட்டங்களை நடத்தி, குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு உதவியது.

‘கோகுலம்’ பத்திரிகையும் சிறுவர் சங்கங்களை நடத்தி குழந்தைகளிடம் படைப்பார்வத்தை ஊட்டியது.

கூத்தபிரான், வாண்டுமாமா, மகிழ்ச்சிக் கண்ணன், தமிழ்வாணன் ஆகியோரும் தங்கள் பத்திரிகைகளின் பெயரில் சிறுவர் சந்திப்புகளை நடத்தி குழந்தை களுக்கு ஊக்கமூட்டினர், வழிகாட்டினர்.

1947 முதல் வெளிவந்த ‘அம்புலிமாமா’ என்ற இதழ், சிறுவர்களைக் கட்டிப் போட்ட இதழ்களில் ஒன்று. இந்தியாவிலுள்ள 11 மொழிகளில் வெளி வந்தது. அதில் தமிழும் ஒன்று. 60,000 பிரதிகளுக்கும் மேலாக விற்பனையானது. இரு வண்ணங்களில் வந்தது. இன்று நின்று விட்டது.

சிறுவர் இதழ்களின் வெற்றியைப் பார்த்து அயல்நாட்டு நிறுவனங்களும் தமிழில் ‘பொன் மலர்,’ ‘பால்கன்’ ஆகிய இதழ்களை வெளியிட்டன.  இது அந்தக் காலத்தில்.

சிறுகதை, தொடர்கதை, பாடல், சிரிப்பு, புதிர், படக்கதை, புராண கதை, நாடோடி கதை என்று வெளியிட்டு நிறைய குழந்தை இதழ்கள் ஒரு பொதுவான போக்கை ஏற்படுத்தி இருந்தன.

அதிலிருந்து மாறுபட்டு தனித்துவமான போக்கைக் கொண்ட இதழ்களைப் பற்றியும் குறிப்பிட வேண்டும்.

‘தமிழ்ச்சிட்டு’ எனும் இதழ் தனித்தமிழ் இயக்கத்தின் சார்பில் வந்தது.  இவ்விதழின் ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் குழந்தைகளுக்காக தூய தமிழில் பாடல்கள் எழுதினார்.

‘துளிர்’ எனும் இதழ் தமிழ்நாடு, புதுவை அறிவியல் இயக்கத்தின் சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழாகும்.  தமிழ்க் குழந்தைகளின் அறிவியல் தேவைகளை நிறைவு செய்யும் பத்திரிகை குழந்தைகளின் பார்வையில் அறிவியலைத் தரும் இதழாகவும் இது உள்ளது சிறப்பாகும்.

‘பிக்கிக்கா’ மூட நம்பிக்கைக்கு எதிரான படைப்புகளைக் கொண்ட சிறுவர் இதழ்.  சிறிது காலமே வந்தாலும் முக்கியமான பத்திரிகை.

‘அரும்பு’ இளைஞர்களுக்கான இதழ் என்று கூறிக் கொண்டாலும் குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் பத்திரிகை. தந்தை மரிய சார்லஸின் முயற்சியால் தன்னம்பிக்கை நூல்கள் சிறுவர்களுக்காக நிறைய அரும்பு வெளி யிட்டது.

‘வளர்நிலா’ சிங்கப்பூர் தமிழ்க் குழந்தை களுக்காக தமிழ்நாட்டிலிருந்து நடத்தப்பட்ட சிறுவர் இதழ்.  ‘ஆர்ட்’ தாளில் பல வண்ணத்தில் தரமான தயாரிப்பாக வெளிவந்தது.

தந்தை பெரியாரின் சிந்தனையான பகுத்தறிவை குழந்தைகளிடம் வளர்க்கும் நோக்கத்தில் பளபளப்புத் தாளில் பல வண்ணங்களில் வெளிவரும் இதழ் ‘பெரியார் பிஞ்சு.’ இது திராவிடர் கழகத்தின் வெளியீடு.  இன்றும் வருகிறது.

‘பூவுலகு மின்மினி’ பூவுலகின் நண்பர்கள் என்ற இயக்கம் நடத்தும் சிறாருக்கான சுற்றுச் சூழல் மாத இதழ்.  சுற்றுச் சூழல் பற்றிய அக்கறையை குழந்தை களிடம் ஏற்படுத்தும் பத்திரிகை.

‘தும்பி’ என்ற சிறுவர் மாத இதழ் பிரபலமான அயல்நாட்டு கதை ஒன்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் அழகாக அச்சிட்டுத் தருகிறது.  அதில் சிறுவர் இதழ் ‘மசாலா’க்கள் இடம் பெறுவதில்லை.

இன்று சிறுவர் இதழ்கள் குறைந்து விட்டன.  சிறுவர்களிடம் படிக்கும் பழக்கத்தை வளர்த்த கல்கண்டு இல்லை. கற்பனைச் சிறகைக் கொடுத்த அம்புலிமாமா இல்லை. பெரும் நிறுவனங்கள் நடத்திய கோகுலம், கண்ணன், சுட்டி விகடன்

நீண்ட கைகளால் குழந்தைகளைத் தொட்டன.  அந்தக் கைகள் இன்றில்லை.  தமிழ் நாட்டில் என்ன நேர்ந்தது? தமிழ்க் குழந்தை இலக்கிய வானில் வானவில்போல் தோன்றி இவைகள் மறைந்து விட்டனவே! ‘ஜீபூம்பா’ சொல்லி மறைவது போல் காணாமல்போய் விட்டனவே!! இதற்கான காரணங்களை ஆராய வேண்டும்.

பெரும்பாலான குழந்தை இதழ்கள் குழந்தை எழுத்தாளர்களால் நடத்தப்பட்டவை. அவர்களின் ஆர்வம் மட்டுமே மூலதனம்; அவர்களின் ஆயுளே இதழ்களின் வயது. அதனால் அவைகள் நின்று போயின. பெரும் நிறுவனங்கள் நடத்திய சிறுவர் இதழ்கள் நின்று போனதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.  விற்பனைக் குறைவினால் நின்று போனது என்றால் அது கவலைக்குரிய விஷயந்தான்.  குழந்தைகள் தமிழ் சிறுவர் இதழ்களை படிப்பதை நிறுத்திவிட்டார்கள் என்பதுடன் தொடர்புடையது;

1980-க்குப் பிறகு தமிழ்நாட்டில் ஆங்கில வழிக் கல்வி கோலோச்சத் தொடங்கியது. கல்வி முறை மாறியதால் குழந்தைகளின் வாழ்க்கை முறையும் மாறியது, படிக்கும் பழக்கம் மாறியது.

1990-க்குப் பிறகு நாட்டில் புகுந்த உலகமயம், தாராளமயம், நுகர்வு கலாச்சாரம் பெற்றோர்களின் பார்வையில் மாற்றங்களை ஏற்படுத்தியது.

தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட இம்மாற்றங்கள் குழந்தைகளின் இலக்கிய தேவைகளைப் பாதித்தன.  பாடப் புத்தகங்களின் சிறைக்குள் குழந்தைகள் தள்ளப்பட்டனர். குழந்தைகளுக்கு இதழ்கள் படிப்பது அவசியமற்றுப் போய் விட்டது.

அதனால் சிறுவர் இதழ்களின் எண்ணிக்கையும் சுருங்கி விட்டது.  குழந்தை இலக்கியமும் சுருங்கி விட்டது.

சிறுவர் இதழ்கள் குறைந்து விட்ட நிலையில் பிரபல நாளிதழ்கள் சிறுவர் இதழ்களை இலவச மாகத் தருகின்றன. தினமணி சிறுவர் மணியையும், தினந்தந்தி தங்க மலரையும், தினமலர் சிறுவர் மலரையும் வெளியிடுகின்றன. இவை ஒரு சூத்திரத்தைக் கடைப்பிடிக்கின்றன. தேசபக்தி, கடவுள் பக்தி, தலைவர் மரியாதை, பழமைக்கு மரியாதை, கல்விச் செய்திகள் என்ற சூத்திரங்கள்தான் அவை.

குழந்தை இலக்கியம் பற்றிய பார்வை, தெளிவு, புரிதலுடன் சிறுவர் இதழ்கள் வர வேண்டும்.

விரல் விட்டு எண்ணக் கூடிய எண்ணிக்கையிலே இன்று சிறுவர் இதழ்கள் வருகின்றன.  மின்மினி, பொம்மி, சம்பக், குட்டி ஆகாயம், றெக்கை, பஞ்சு மிட்டாய் ஆகியனவே அவை. இதில் மின்மினி, பொம்மி, சம்பக் தவிர மற்றவை தனிச் சுற்று இதழ்கள்.

‘சம்பக்’ அம்புலி மாமா மாதிரி 8 மொழிகளில் வரும் இதழ். அதில் தமிழும் ஒன்று. அதனால் அதில் மொழிபெயர்ப்பு வாசனையே அதிகம். புராண, இதிகாச, நாடோடிக் கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் இதழ்.

‘பொம்மி’ முந்தைய சிறுவர் இதழ்களின் சூத்திரத்தைக் கடைப் பிடிக்கும் இதழ்.  இதில் சித்திர ராமாயணம் தொடராக வருகிறது.

குட்டி ஆகாயம், றெக்கை, பஞ்சு மிட்டாய் குழந்தை இலக்கிய ஆர்வலர்களால் நடத்தப்படும் இதழ்கள்.  இவ்விதழ்கள் குழந்தைகளின் உலகோடு நெருக்கமானவையாகத் தென்படுகின்றன.

‘றெக்கை’ சிறார் கலகல மாத இதழ் என்று முகப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் படைப்புகள், ஓவியங்கள், கதைகள் றெக்கையில் வருகின்றன.  குழந்தைகளின் பேட்டி என்பது இவ் விதழில் வித்தியாசமானது. கதைகளே குழந்தை களை ‘கல கல’ என்று வைத்திருக்கும் என்ற அடிப் படையில் றெக்கையின் இரண்டு இதழ்கள் சிறுகதை சிறப்பிதழ்களாக வெளிவந்துள்ளன. பளபளப்புத் தாளில் பல வண்ணங்களில் அச்சிடப்பட்டு வரும் றெக்கை, குழந்தைகள் கற்பனை வானில் பறக்க றெக்கைத் தருகிறது.  இதழின் ஆசிரியர் சரா சுப்ரமணியம்.

‘குட்டி ஆகாயம்’ ஒவ்வொரு குழந்தையும் நட்சத்திரம் என்று குழந்தையைக் கொண்டாடுகிறது.  குழந்தைகள் குறித்த உரையாடல், பயிற்சிப் பட்டறைகள், இயற்கைக்கு நெருக்கமானவர்கள் குழந்தைகள் என்று காடறிதல் நிகழ்ச்சி இவை யெல்லாம் ‘குட்டி ஆகாயம்Õ இதழ் ஆசிரியர் டி.எஸ்.வெங்கடேசனை குழந்தைகள் மீது அக்கறை யுள்ளவராகக் காட்டுகிறது. ‘குட்டி ஆகாயத்தின் எழுத்தாளர்கள் குட்டி குழந்தைகள்தான்.Õ அதில் அரசுப் பள்ளிக் குழந்தைகளும் இருக்கிறார்கள் என் மீது நம்பிக்கைத் தரும் விஷயமாக இருக்கிறது,  பளபளப்புத் தாளில் பல வண்ண அச்சில் வரும் ‘குட்டி ஆகாயம்’ அந்த ஆகாயம் போலவே குழந்தைகளுக்கு ஆச்சரியமூட்டுகிறது.

‘பஞ்சுமிட்டாய்’ குழந்தைகளுக்கு உண்ணப் பிடித்தமானது. இதழும் அப்படித்தான். சிறுவர் படைப்புகளையும் ஓவியங்களையும் ‘பஞ்சு மிட்டாய்’ முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகிறது.  பஞ்சு மிட்டாய்க்கு ஆசிரியர் இல்லை. ஆசிரியர் குழுதான். இதுவே கூட்டு உழைப்பைக் காட்டுகிறது.  இதழை வெளியிடுவதும் குழுதான். தமிழ்க் குழந்தை இலக்கிய வளர்ச்சி என்ற குறிக்கோளுடன் இக்குழு செயல்படுவதற்கு ‘பஞ்சுமிட்டாய்’ அத்தாட்சி.  இதழுக்குத் தேவையான கதைகள், ஓவியங்கள், பாடல்களை ‘கதைப் பெட்டி’ வைப்பதின் மூலம் ஆசிரியர் குழு சேகரிக்கிறது.  புத்தகக் காட்சியிலும் பள்ளிகளிலும் ‘கதைப் பெட்டி’ வைக்கப்படுகிறது.  இது ஒரு புதுமையான முயற்சி. குழந்தைகளைத் தேடிப் போகும் செயல். இதுவே இன்றைய தேவை.

குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு குழந்தை இதழ்களின் வளர்ச்சியே அடிப்படை. இன்று குழந்தை இதழ்களின் எண்ணிக்கை சுருங்கிவிட்டது என்பது வெளிப்படையான உண்மை.  இந்நிலையை மாற்ற வேண்டும். நிறைய சிறுவர் இதழ்கள் வர வேண்டும். அப்போது குழந்தைகளின் வாசிக்கும் பழக்கம் அதிகரிக்கும். புதிய குழந்தை எழுத்தாளர்களும் அதிகரிப்பார்கள்.

அரசும் பள்ளிகளும் பெற்றோரும் குழந்தை இதழ்களை வாங்கி குழந்தைகள் படிக்க ஊக்கமளிக்க வேண்டும். அப்போதுதான் குழந்தை இதழ்களின் ‘பொற்காலம்’ திரும்பும்.

Pin It