‘ஞானத்தைப் பெறுவதை எந்தக் காலத்திலும் யாராலும் தடுக்க முடியாது என அறிக. தோழர்களே... சமதர்மம் ஒன்றால் தான் உலகம் உய்யும்... நீங்கள் கற்குமாறு உங்களை வேண்டிக் கொள்கிறேன்... தைரியத்துடன் புத்தகங்களை வாசியுங்கள்...’
-_ சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர், 1.5.1933 ( மேதின உரை)
1932ல் வெளிவந்த புரட்சியாளர் தோழர் சிங்காரவேலரின் ‘கடவுளும் பிரபஞ்சமும்’ எனும் 68 பக்கப் புத்தகத்தை வாசிக்கும் இன்றைய வாசகர்களுக்கு (இந்தப் புத்தகத்தை 1970ல் பெரியார் சுயமரியாதை நிறுவனம் மீண்டும் கொண்டுவந்தது) ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருப்பதை பார்க்கிறோம். விஞ்ஞான ரீதியில் கடவுள் இல்லை அது ஒரு கற்ப்பிதமே என்பதை நிரூபித்த முதல் இந்தியப் புத்தகம் அது என்பது ஒரு புறம் இருக்கட்டும்... கடவுளும் பிரபஞ்சமும் புத்தகம் தன் காலத்தின் மூன்று மிக முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புகளை விரிவாக விவாதிக்கிறது. முதலாவது சார்லசு டார்வினின் பரிணாம வளர்ச்சி. இரண்டவாது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்புத் தத்துவம். மூன்றாவது கார்ல் மார்க்சின் வரலாற்று பொருள் முதல் வாதம். இது வரையிலான மனித தத்துவ அறிவின் மீது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய இம்மூன்றையும் கற்று கரை கண்ட ஒருவர் 1930 களில் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறார் என்கிற ஆச்சரியம் தான் அது.
தோழர் சிங்காரவேலரின் இத்தகைய அறிவார்ந்த அணுகுமுறைக்கு அவரே ஒரு இடத்தில் கூறுகிற காரணம் அவருக்கு புத்தகங்களின் மீது இருந்த அளவிடற்கு அறிய காதல். லண்டன் நூலகத்தின் எட்டாம் எண் இருக்கையில் அமர்ந்து புத்தகங்கள் அனைத்தையும் வாசித்தவர்கள் இருவர். ஒருவர் காரல் மார்க்ஸ். மற்றொருவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார். அப்புத்தகங்களை ஏறத்தாழ பலவற்றையும் தன்னிடம் வரவழைத்து வாசித்த பெருமைக்குரியவர் தோழர் சிங்காரவேலர்.
‘தோழர்களே, சமதர்மத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யயுங்கள். தைரியத்துடன் புத்தகங்களை வாசியுங்கள்’ என்கிற ஒற்றை கட்டளையே இந்திய மண்ணின் முதல் மே தின கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசியபோது தனது பாட்டாளிவர்க்க தோழர்களுக்கு அவர் வழங்கியது. புத்தக வாசிப்பு என்பதை இன்று பலர் வெறும் பொழுதுபோக்காக பார்க்கிறார்கள். புத்தகம் என்பது விழிப்புணர்வின் முதல்படியாகவும் மூடநம்பிக்கை ஒழிப்பிற்கான கருவியாகவும் இருப்பதை சரியாக கண்டுணர்ந்து தமிழ் மண்ணில் புத்தகவாசிப்பை ஒரு இயக்கமாக முன் மொழிந்தவர் சிங்கார வேலர்.
ஏழை பாழைகளாக வாழும் சாதிய படி நிலையார் அடித்தட்டில் சிக்கி பிழியப்படும் அவல நிலையில் வாழும் நம்மக்களை மீட்கும் விடுதலைப் பாதை என்பது அவர்களுக்கு எழுத்தறிவது வாசிப்பை அவர்களிடையே ஒரு விழிப்புணர்வு புரட்சி செயல்பாடாக ஆக்குவதே என்பதை தோழர் சிங்காரவேலர் பல இடங்களில் வலியுறுத்துகிறார். இன்றைக்கு நாம் புத்தக சாலை ஒன்றுக்கு சென்று கிடைக்கும் நூலை வசதிக்கும் ஏற்ப வாங்கி வருகிறோம். புத்தகக் கண்காட்சிகள் மாதங்கள் தோறும் நடக்கின்றன. புத்தகங்கள் வெளிவராத துறையே இல்லை எனுமளவுக்கு லட்சக்கணக்கான புத்தகங்கள் வண்ண அட்டைகளுடன் கொட்டிக் கிடக்கின்றன.
இந்தச் சூழலில் புத்தகம் வாசியுங்கள் எனச் சொல்வது பெரிய விஷயமல்ல. அன்று 1920களிலும் முப்பதுகளிலும் நம் நாடு இருந்த சூழலில் தோழர் சிங்கார வேலரின் புத்தக வாசிப்பு குறித்த அறைகூவலை எண்ணிப் பார்த்தால் நமக்கு பல அதிர்ச்சியான செய்திகள் காத்திருக்கின்றன. சென்னை மீனவர் குப்பத்தில் மீனவர் கூரை வீடுகளில் ஒன்றுதான் தோழர் சிங்கார வேலருடையது. அந்த வீடு ஆங்கிலேய ஒடுக்குமுறை அரசால் பலமுறை சோதனை செய்யப்பட்டது. ஒவ்வொருமுறை சோதனை நடைபெறும் போதும் எண்ணிலடங்கா புத்தகங்களை ஆங்கிலேய போலீசார் எடுத்துச் சென்றதாக அவர் துயரத்தோடு குறிப்பிடுவதுண்டு. 1946ல் அவர் காலமான போது அந்த மிகச் சிறிய வீட்டில் சுமார் 26 ஆயிரம் புத்தகங்கள் இருந்ததாக, தமிழ்த் தென்றல் திரு.வி.கவும் நெ.து. சுந்தரவடிவேலுவும் குறிப்பிடுகிறார்கள்.
இத்தனை ஆயிரம் புத்தகங்களை வாங்கிட அப்போது கடையா இருந்திருக்கும்? எல்லாம் எப்படிப்பட்ட புத்தகங்கள்? அறிவியல், வரலாறு, தத்துவம், அரசியல் என நாம் அவற்றை வகைப்படுத்தலாம். சார்லஸ் டார்வினின் ‘உயிர்களின் தோற்றம்’ புத்தகம் உலக அளவில் சுமார் 900 பிரதிகளே அப்போது சென்று சேர்த்தது. அதில் ஒரு பிரதி சிங்கார வேலரிடம் இருந்தது. மாஸ்கோவில் மக்கள் பதிப்பகத்தின் ‘மூலதனம்’ ஆங்கில மொழிபெயர்ப்பு, இந்தியாவிற்குள் வர ஆங்கிலேய அரசு தடைசெய்தது. ஆனால் அந்தப் புத்தகம் சிங்கார வேலரிடம் இருந்தது. 1923ல் லேபர் கிசான் எனும் அரசியல் இதழில் தொடர்ந்து மேலைநாடுகளின் அரசியல் தத்துவ நூல்களை அறிமுகம் செய்து வந்த சிங்காரவேலர், பிற்காலத்தில் தந்தை பெரியாரின் குடியரசு இதழில் அறிவியல் மற்றும் பகுத்தறிவு துறையில் அப்போது உலகளாவிய வாசிப்பை பெற்ற நூற்றுக்கணக்கான புத்தகங்களையும் தமிழ் வாசகர்கனுக்கு அறிமுகம் செய்து புத்தக வாசிப்பை பரவலாக்குவதில் தனியிடம் பிடித்தார்.
கம்யூனிசம் என்பதற்கான தமிழ் சொல்லாடலாக சமதர்மம் எனும் சொல்லிலிருந்து, உலகெங்கும் ‘சமதர்மிகள்’ என்போர் வகிக்கும் நிலை, தம் காலத்தின் உலக அரசியல், உலக அறிவியல் முன்னேற்றம், தத்துவம் சார்த்த செயல்பாடுகள் என எதையும் அவர் விட்டு வைக்க வில்லை. ஹிட்லர் ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் 70,000 சமதர்மிகளை சிறையிட்ட ஹிட்லர் வாய்ப்பு கிடைத்தால் உலகை அழித்து விடும் வெறியோடு இருப்பதை 1933லேயே எழுதியதும் பேசியதும் அன்று மகாத்மா காந்தி முதல் இந்திய அரசியலில் கொடிகட்டி பறந்து வேறு எந்த அரசியல் தலைவரும் அனுமானிக்க முடியாத ஒரு பேரதிசயமாக வரலாற்றில் பதிவாகி இருக்கிறது.
இத்தகைய உலகளாவிய அறிவை பெற்று அறிவியல் ரீதியில் எதையும் விமர்சிக்கும் பக்குவம் பெற்றிருந்த அவரை தந்தை பெரியார் தனது குடியரசு இதழில் எப்படியாவது எழுத வைத்துக் கொண்டிருந்ததை பார்க்கிறோம். குடியரசு, புரட்சி, புதுவைமுரசு, பகுத்தறிவு போன்ற இதழ்களின் சிங்காரவேலனாரின் கட்டுரை வராத இதழ்கள் இல்லை எனுமளவுக்கு அவர் தொடர்ந்து எழுதினார். அந்தக் கட்டுரை ஒவ்வொன்றும் உலகப் புத்தகங்களிலிருந்து அவர்பெற்ற சாரங்களை அடிப்படையாகக் கொண்டவை.
தமிழ் இதழ்கள் அன்றில்லை. தி ஹிண்டு, சுதர்மா, அப்சர்வர், சண்டே அட்வகேட் போன்ற ஆங்கில ஏடுகளில் 15 வருடங்கள் தொடர்ந்து எழுதியவர் சிங்கார வேலர், இந்திய காலனித்துவ அரசு சமதர்மமும், அறிவியல் அறிவும் சார்ந்த அனைத்து புத்தகங்களையும் தடை செய்திருந்த போதிலும் தனது அயல்நாட்டு நண்பர்கள் மூலம் அந்தப் புத்தகங்களை எப்படியோ தமிழகத்திற்குள் வரவைத்து அவர் வாசித்தார். புதுவையில் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியை பயன்படுத்தி கொஞ்சமும் கேரள கடற்கரை பக்கம் மீன் பிடிப்பவர்போல சென்று கொஞ்சமுமாக பல புத்தகங்களை வரவழைத்துக் கொண்டு படித்தவர் சிங்கார வேலர்.
ஒரு புத்தகத்தேடல் என்பது எப்படி இருக்க வேண்டும். ஒரு புத்தகத்தை எதற்காக வாசிக்க வேண்டும். எதை வாசிக்க வேண்டும் அதை எப்படி வாசிக்க வேண்டும் என்பதற்கு தனக்கென ஓர் இலக்கணம் வகுத்துக் கொண்டவர் அவர். வாசித்து முடித்தபின் இன்று பலர் தான் வாசித்த தன் வரையான அகத்தோடு இருந்து விடுவதைப் பார்க்கிறோம். ஆனால் ஒரு புத்தகத்தை வாசித்தபின் அதன் சாரத்தை தன் வாழ்வில் யாருக்காக உழைப்பதை தனது ஆதார லட்சியமாக கருதினாரோ அந்தப் பாட்டாளி வர்க்கத்தினருக்கு புரிகின்ற வகையில் எளிய நடையில் எழுதியும், அவர்களிலும் வாசிக்கத் தெரியாத அவலநிலை இருந்ததை கருத்தில்கொண்டு, அவர்கள் கூடும் இடங்களில் எல்லாம் தனது ஒப்பற்ற பேச்சாற்றல் வழியே அவர்களுக்கு தான் வாசித்த உலகளாவிய புத்தகங்களின் சாரத்தை எடுத்துக் கூறி அறிவு புகட்டிய புரட்சியாளராகவும் அவர் விளங்கினார்.
வறுவல் பொட்டலங்கள், கருவாட்டுக் கூடை, மீன்பிடிவலை என்று காவலர் சந்தேகம் கொள்ள முடியாதவைகளின் இடையே புத்தகங்களை மறைத்து வைத்து தன் வேலைகளின் இடையே வாசித்தவர் அவர். இன்று பலரும்... இயக்க வேலை, ஊர்ஊராக போகும் பிழைப்பு, அன்றாட அலுவல் எங்கே நேரமிருக்கிறது என்று தான் வாசிக்காததற்கு பல காரணங்களை, நொண்டிச் சாக்குகளை உற்பத்தி செய்வதை பார்க்கிறோம். சிங்காரவேலர் புத்தகங்களை வாசிப்பதையும் தான் கற்றறிந்தவற்றை பாமரர் படித்தவர் வித்தியாசம் பாராது அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதையும் ஒரு வாழ்க்கை லட்சியமாகவே கொண்டு வாழ்ந்தவர்.
தமிழகத்திற்கு வருகை புரிந்த மார்க்சிய தோழர்கள் பலரை சந்தித்தவர்களுள் ஒருவராகிய வரலாற்றாளர் அமீர் ஹைதர்கான் சிங்காரவேலரது புத்தக ஆர்வம்குறித்து தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடும் போது, ‘தென் இந்தியாவில் தனிநபர் நூலகங்களில் மிகப்பெரியது தோழர் சிங்காரவேலர் தனது இல்லத்தில் வைத்திருக்கும் நூலகமே’ என்று எழுதினார். மீரட்டிலிருந்தும் கான்பூரிலிருந்தும், அலகாபாத்திலிருந்தும் தோழர்கள் கிடைக்காத புத்தகங்களைத் தேடி நம்பி சிங்காரவேலர் இல்லம் தேடி வருவார்களாம். தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அனைவராலும் அழைக்கப் பட்ட அவரிடம் புத்தகம் இரவலாக பெற்று வாசித்தவர் பலர். யாருக்குமே புத்தகம் என்றால் அவர் தருவதற்கு தயங்கியதே இல்லை என்கிறார்கள்.
தமிழில் அறிவியல் சித்தாந்தத்தைப் பற்றி மட்டுமே பேசும் ஒரு இதழ் இல்லை என்கிற பெரிய குறை இப்போதும் இருப்பதை காண்கிறோம். தமிழில் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுகிற என் போன்ற பலர் அதை வெளியிட இதழின்றி இலக்கிய இதழ்களிலேயே ஒரு சிறு பகுதியில் நுழைய வேண்டி இருக்கிறது. தமிழ் - அறிவியல் இன்று எவ்வளவோ வளர்ந்திருந்தும் கூட தமிழுக்கு என்று ஒரு அறிவியல் இதழ் ஏனோ கைகூடி வரவில்லை. தோழர் சிங்காரவேலனார் தனது 74வது வயதில் அறிவியலுக்கென்றே ‘புதுஉலகம்’ எனும் மாத இதழை தமிழில் தொடங்கி பல விழிப்புணர்வு கட்டுரைகளைத் தந்தார்.
இன்று சனிப்பெயர்ச்சி, ராகுகேது நிவர்த்தி என்று ஏராளமாக பொய் புரட்சிகளால் மக்கள் அச்சமுற்று மூட நம்பிக்கை எனும் கொடும்புயலில் சிக்கி பரிதவிப்பதை பார்க்கிறோம். ஆனால் புது உலகம் இதழில் சிங்காரவேலர் சூரிய, சந்திர கிரகணங்களில் அறிவியல் உண்மையை எழுதி அஞ்சத் தேவையில்லை என அறியாமையை போக்கும் விஞ்ஞான பிரச்சாரம் மேற்கொள்வதை பார்க்கும் போது இன்று ‘புது உலகம்’ போல நூறு இதழ்களின் தேவையை உணரமுடிகிறது.
தான் 1925ல் சென்னை மாநகராட்சி தேர்தலில் யானைக்கவுனி வட்டத் தொகுதியில் சுயராஜ்ய கட்சி சார்பில் வென்று வட்ட உறுப்பினர் ஆனபோது, பள்ளிகளின் எண்ணிக்கையை 78 லிருந்து 90 ஆக உயர்த்தியதோடு 90 பள்ளிகளிலும் நூலகங்களை தாமே முன்னின்று தொடங்கினார். கூட்டுறவு அமைப்புகள், பஞ்சாயத்துகள் நகரசபை அலுவலகங்கள் என தனது வட்டத்தில் 17 புதிய நூலகங்களைத் திறந்தார்.
வானநூல் முதல் நிலநூல் வரை- தத்துவ நூல் முதல் தாவரநூல் வரை, பொதுஉடைமை நூல் முதல்- உடற்பயிற்சி நூல்வரை என குத்தூசி குருசாமி எழுதியதைப் போல பலப்பல நூல்களை தாமே படைத்த சிங்காரவேலர் பற்றிய ஒரு சிறப்பான செய்தி உண்டு
பிரதமர் ஆன பிறகு மாஸ்கோவுக்கு விஜயம் செய்த முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு உலகப் பிரசித்தப் பெற்ற லெனின் நூலகத்திற்கு சென்றார். சோவியத்தின் ஸ்தாபகர் லெனின் தனது பிறந்தநாள் பரிசாக என்ன வேண்டும் என வினவிய போது குழந்தைகள் நாட்டின் தோழர்களிடம் புத்தகம் அனுப்பித் தாருங்கள் எனக் கேட்டதால் குவிந்த நூல்கள் அடுக்கிய பிரம்மாண்டமான அந்த நூலகத்தில், ஒரு குறிப்பிட்ட இடத்தை கடந்த போது நேருவுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே ‘சென்னை சிங்காரவேலர் கலெக்ஷன்ஸ்’ என்று ஒரு தனிஅறை. அதில் நூற்றுக்கணக் கான புத்தகங்களை கண்டு அதிசயித்த நேரு அந்த அறையிலிருந்து வெளியே வர ஒன்னரை மணிநேரம் ஆனதாம்.
தமிழில் அறிவியல் எழுத்துக்கு வித்திட்டதோடு வாசிப்பில் தனக்கென்று ஓர் இடத்தை பிடித்து தமிழ் கூறு நல்லுலகை புத்தகங்களை நோக்கி கவனம் கொள்ள வைத்த தோழர் சிங்கார வேலர் பிறந்த 150 ஆம் ஆண்டை புத்தகங்களின் ஆண்டாக கொண்டாடுவதோடு அவர் வித்திட்ட பாட்டாளி வர்க்க விடுதலையையும் சாதிசமயமற்ற வாழ்வையும் சாதிக்க அவர் வழியில் நின்று மூட நம்பிக்கைகளையும் தீவிர அறிவியல் விழிப்புணர்வுப் புத்தகங்களை வாசிப்பதையும்... வாங்கிப் பகிர்வதையும் ஓர் இயக்கமாக நடத்த வேண்டிய பணி நமக்குள்ளது.
செம்மொழித் தமிழ் மாநாட்டில் அறிவியல் தமிழின் தந்தையாக அவரை பிரகடனம் செய்து அரசு அவரது அறிவியல் விழிப்புணர்வு நூல்களை மக்களுக்கு குறிப்பாக பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கு பெரிய அளவில் எடுத்துச் செல்லும் ஒரு திட்டத்தை முன் மொழிய வேண்டும்.
லெனின் நூலகத்தை இன்றைய ரஷ்ய முதலாளிய அரசு சரிவர பேணிடவில்லை. அங்குள்ள சிங்கார வேலர் தம் கைபட்ட புத்தகங்களை இந்திய அரசு திரும்பப் பெற்று சென்னை ‘சிங்காரவேலர் இல்லத்தில்’ சேர்ப்பிக்க வேண்டும்.
புத்தகங்களை தன் வாழ்நாள் முழுவதும் நேசித்த ஒரு மாபெரும் புரட்சியாளரை அடுத்த சந்ததியினர் மறக்காமல் தக்கவைக்க, வாசிப்பை தமிழ் மக்களிடையே ஓர் இயக்கமாக எடுத்துச் செல்வதும் அவரைப் பற்றி பேசுவததோடும் எழுதுவதோடும் நிறுத்திவிடாமல் - ‘விஞ்ஞானப் பூர்வமான அனுகுமுறை’ என்பதை மக்கள் தங்களது அன்றாட வாழ்முறையாய் ஆக்கிட வீதியில் இறங்கி செயலாற்றுவதுமே நமது கடமை ஆகும்.
குறிப்பு: இந்தக் கட்டுரை ‘சிங்கார வேலர் அறக்கட்டளை’ சார்பில் அவரது 150ஆவது பிறந்த ஆண்டை சிறப்பிக்கும் வகையில் 100 கட்டுரைகள் தாங்கி வெளிவந்துள்ள சிறப்பு மலரில் இடம் பெற்றுள்ள கட்டுரை ஆகும்.
-இரா.நடராசன்