தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்னர் பெய்த தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை முற்றாகச் சிதைந்தது. குறிப்பாகக் கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்  மாவட்டங்களில் பெய்த மழையின்  அளவு கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாதது என்கிறது வானிலை ஆய்வு மையத் தகவல்கள். ஆண்ட, ஆளும் அரசுகளின் அலட்சியப் போக்கினால் நீர் நிலைகளும், நீர்வழித் தடங்களும் சீரற்றுக் கிடந்தன.

பெருமழையின் வெள்ளத்தை எதிர்கொள்ளத் தகுதியற்ற நீர்நிலைகள் வேகமாக நிரம்பி, நீர்வழித் தடங்களில் செல்லுகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடின. நீர்வழித் தடத்தின் ஆக்கிரமிப்பிலும் அருகிலும் இருந்த மக்களை வெள்ளம் வெளியேற்றியது. சென்னை வெள்ளக் காடாகிப் போனது. பாதுகாப்பான இடத்தில் குடியமர்ந்திருக்கிறோம் என்றிருந்த அடுக்குமாடிவாசிகளையும் அது அலறித் துடிக்கச் செய்தது. நான்கு நாட்கள் மின்சாரம் இன்றிச் சென்னை இருளில் மூழ்கியது. வீட்டைச் சுற்றி, வீட்டிற்குள்ளும் தண்ணீர்.ஆனால் குடிக்க நீரின்றி மக்கள் தவித்துப் போனார்கள்.

நம்மில் ஆக்கிரமித்துக்கொண்டிருந்த நவீன காலத்து அறிவியல் சாதனங்கள் எவையும் அந்தப் பேரிடர்க்குப் பயன்படவில்லை. கையில் கிடைத்ததைக் கொண்டு காலத்தைத் தள்ள வேண்டிய நிலைக்கு மக்கள் ஆளானார்கள். குழந்தையை வயிற்றிலும், கையிலும் சுமந்துகொண்டு எண்ணற்ற மக்கள் அலறித்துடித்தார்கள். பலர் பலியுமானார்கள்.

வரலாற்றில் அழுத்தமாகப் பதிந்துபோன பேரிழப்பிற்குக் காரணமான பெருவெள்ளம், நீர்நிலைகளையும் நீர் வழித் தடங்களையும் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை நம் கன்னத்தில் அறைந்து சொல்லியிருக்கிறது. குறிப்பாக ஆண்ட/ஆளும் அரசுகளுக்குச் சுட்டிக்காட்டியது.

அரசு அதை உணர்ந்தறிந்து செயல்பட வேண்டும். அப்படி உணர்ந்தறிந்து செயல்படவில்லை எனில் உணர்த்தச் செய்து செயல்பட வைக்க வேண்டும். உணர்த்தச் செய்தல் நமது கடமையாகும். நமது புலமையுலக முன்னோர்கள் ஆளும் அரசுகளைப் பார்த்துச் செய்யத்தக்கன அறிவுறுத்தியிருக்கிறார்கள். அவற்றை இப்பொழுது நினைவு கொள்ளச் செய்வது காலப் பொருத்தமாக அமையும்.

பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனைப் பார்த்துச் சங்கப் புலவர் குடபுலவியனார், நாடாளும் மன்னன் என்றும் அஞ்சி ஒதுங்காமல் நாட்டிற்கு நன்மை பயக்கும் கருத்தைச் சுட்டிக்காட்டுகிறார். மன்னனுக்குச் சொல்லிய பாட்டு புறநானூற்றில் (18) வருகின்றது. 

முழங்கும் கடல் முழுவதும் சேர்ந்த பரந்தகன்ற உலகத்தைத் தம் முயற்சியால் கொண்டு, தம் புகழை உலகில் நிலைக்கச் செய்து தாமே ஆண்ட வீர மரபில் வந்தவனே! ஒன்றைப் பத்தின் மடங்குகளாக அடுக்கிய, கோடியைக் கடை எண்ணாக இருத்திய பேரெண்ணிக் கையை உன் வாழ்நாள் கொண்ட பெருமையை அடை யட்டும். நீரில் படியுமாறு தாழ்ந்த குறுகிய காஞ்சி மரத்தின் மலர்களைக் கவ்வும் வாளை மீன்களையும் நிறம் பொருந்திய கெடிற்று மீன்களையும் கொண்டது ஆழமான அகழி; அதனுடன் வானம் அஞ்சுமாறு உயர்ந்த சீரிய நெடிய மதிலையும் கொண்ட வளமுடைய பழைய ஊரினைக் கொண்டு விளங்கும் வலிமையான அரசனே!

நீ செல்கின்ற நாட்டில் நுகரத்தக்க செல்வத்தை வேண்டினாலும் உலகை ஆளும் அரசர் பலருடைய தோள் வலிமையை அழித்து நீ ஒருவனே ஆள விரும்பினாலும் நல்ல, சிறந்த புகழை இவ்வுலகில் நிலைநிறுத்த விரும்பினாலும் அவ்விருப்பங்களுக்குத் தக்க செயல் ஒன்றினைக் கூறுவேன்; பெருமையுடை யவனே! கேட்பாயாக;

வெல்லும் போருடைய மன்னா! நீரின்றி அமையாத உடல், உணவால் அமைவது; உணவையே முதன்மையாகவும் உடையது; உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர். எனவே உணவு எனப்படுவது நிலத் துடன் நீரும் ஆகும். நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர் இவ்வுலகில் உடலையும் உயிரையும் கூட்டிப் படைத்தவர் ஆவர். விதைகளை விதைத்து மழையை நோக்கும் புன்செய் நிலம் அகன்ற இடமுடைய நிலமாயினும் அதனைச் சார்ந்து ஆளும் அரசனின் முயற்சிக்குச் சிறிதும் பயன்படாது. அதனால் நான் கூறும் கருத்துக்களைப் புறந்தள்ளாது கேட்டு விரைந்து கடைபிடிப்பாயாக.

நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலைகள் பெருகச் செய்தல் வேண்டும். அவ்வாறு நிலத்துடன் நீரைக் கட்டியோர் இவ்வுலகில் நிலைக்கு மாறு தன்பெயரை உலகுள்ளவரை நிலைத்த புகழை அடைவர்; அவ்வாறு செய்யாதவர் இவ்வுலகினோடு தம் பெயரைச் சேர்த்த புகழை அடையமாட்டார்.

இவ்வகைப் பொருளமைந்த அந்தப் பாட்டில் ‘நீர் வளம்’ பெருக்குதல் பற்றிய கருத்தமைந்த வரிகள் இவ்வாறு வருகின்றன.

நீர் இன்றி அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

உண்டி முதற்றே உணவின் பிண்டம்

உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே

நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு

உடம்பும் உயிரும் படைத்திசினோரே

வித்திவான் நோக்கும் புன்புலம் கண் அகன்

வைப்பிற்று ஆயினும் நண்ணி ஆளும்

இறைவன் தாட்கு உதவாதே; அதனால்,

அடுப்போர்ச் செழிய! இகழாது வல்லே

நிலன் நெளி மருங்கில் நீர் நிலை பெருகத்

தட்டோர் அம்ம, இவண் தட்டோரே

தள்ளாதோர் இவண் தள்ளாதோரே” (புறம். 18: 18 - 30)

நுகரத்தக்க வகையிலான செல்வம் வேண்டினாலும், உலகை ஆளும் அரசர் பலருடைய படை வலிமையை அழித்து ஒருவனே ஆள விரும்பினாலும், நல்ல, சிறந்த புகழை இவ்வுலகில் நிலைநிறுத்த விரும்பினாலும் அவ்விருப்பங்களுக்கெல்லாம் தக்கச் செயல் ‘நிலத் தையும் நீரையும் ஒன்று சேர்த்தல், நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலைகளைப் பெருகச் செய்தல்’ ஆகும் என்பது புலவர் மன்னனுக்குச் சொல்லிய செய்தி யாகும்.

மோசிகீரனார் என்னும் சங்கப் புலவருக்கு உலகத்தின் உயிர் எது என்ற ஐயம் மனதுள் எழுகிறது. உலகத்தின் உயிர் உணவா? அதைத் தரும் நெல்லா? அந்நெல் விளைய மூலமான நீரா? எது உலகத்தின் உயிர்? என்பது புலவனின் ஐயம். இதற்கு அவரே பதில் சொல்கிறார்.

Òநெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;

மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்

அதனால், யான் உயிர் என்பது அறிகை

வேல் மிகு தானை வேந்தற்குக் கடனேÓ (புறம். 186)

மக்களுக்கு உணவு தரும் நெல்லும் உயிரல்ல; அந்த நெல் விளையக் காரணமான நீரும் உயிரல்ல; அந் நீரைத் தேக்கிக் காத்து மக்களுக்குப் பயன்படும் செயலைச் செய்கின்ற அரசனே உலகத்தின் உயிர் என்கிறார். அதை அறிந்து செயல்படுவது நாடாளும் அரசனின் கடனாகும் என்பது புலவர் சொல்லும் செய்தியாகும்.

நாடாளும் அரசிற்கு ஒரு புலவர், நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்துக் காக்க வேண்டும், நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலைகளைப் பெருகச் செய்தல் வேண்டும், பெருக்குதலோடு நில்லாது அவற்றைப் பேணிக் காக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். மற்றொரு புலவர், உலகத்து உயிர்களுக்கெல்லாம் மூலமான நீரைத் தேக்கிக் காத்து நாடாள்வதே அரசின் கடன் என்று சுட்டிக் காட்டி நெறிப்படுத்துகிறார். எதிர்காலச் சிந்தனையோடு செயல்பட்ட ஆட்சியாளர்களைத்தான் மக்கள் வாழ்த்து கிறார்கள்; வரலாறும் நினைவில் பொதித்து வைத்து வருகிறது.

நம் காலத்து அரசுகளுக்கும் நாம் இதையே நினைவுகொள்ளச் செய்வோம். நீங்கள் எத்தனை ஆண்டுகளானாலும் ஆட்சி செய்ய விரும்பிக்கொள்ளுங்கள். அதிகாரத்தைப் பெற, எதிரியை வீழ்த்த வியூகங்கள் வகுத்துக்கொள்ளுங்கள்; அது உங்களின் தனிப்பட்ட கட்சிக் கொள்கை. ஆட்சிக்கு வந்தபின்னர் மக்களுக்கான அரசாகக் கருதி நீங்கள் செய்தே ஆக வேண்டிய அடிப் படையான பணி, நீர் வளத்தைப் பெருக்கவும், அதைக் கட்டிக்காத்து மக்களுக்குப் பயன்படவும், பராமரிக்கவும் வழிவகை செய்துதர வேண்டியதாகும். இயற்கை இதைச் சுட்டிக்காட்டிப் பலமுறை எச்சரித்திருக்கிறது. அண்மையில் பெய்த மழை தண்டித்து உணர்த்தி யிருக்கிறது. உணர்ந்து செயல்படுவது ஆளும் அரசின் கடனாகும்.

Pin It