கவிஞர் வாய்மைநாதன் (19.05.1937 - 11.08.2023) நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் வாய்மேட்டில் பிறந்தார். இவரின் இயற்பெயர் மு.இராமநாதன். இளம் பருவத்திலேயே இலக்கிய ஈடுபாடு கொண்டார். பல நூல்களைத் தானே கற்றார். தொடக்கப் பள்ளியில் இளநிலை ஆசிரியராகப் பணியைத் தொடங்கி மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் வரை தன் பணிநிலையை உயர்த்திக் கொண்டார்.

வேதாரண்யம் வட்டாரம் தமிழ் மொழி மீதும் இலக்கியங்கள் மீதும் அதீதப் பிடிப்பு கொண்டவர்கள் வாழும் பகுதி. இங்கு ஏராளம் தமிழ் அமைப்புகள் உண்டு. தமிழறிஞர் இலக்குவனார் தோன்றிய இடமும் வாய்மேடுதான். அவர் திராவிட இயக்கச் சார்புடன் மொழியுரிமைப் போராளியாகவும் அறிஞராகவும் திகழ்ந்தார்.

இச்சூழலில்தான் இராமநாதன் இலக்கிய உலகுக்குள் காலடி வைக்கிறார். ஆழ்ந்த இலக்கண இலக்கியப்புலமை மிக்கவராக உருவாகிறார். தொடக்கத்தில் தமிழார்வலராக இருந்து அவர் எழுதத் தொடங்கியதும் தன் ஊரின் பெயரை முன் ஒட்டாக வைத்து வாய்மைநாதன் ஆனார்.

திராவிடத் தமிழ் இயக்கங்கள் பரவி இருந்த பகுதியில் இவர் பேராசான் ஜீவாவின் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் எனும் பண்பாட்டு அமைப்பில் 1962 லேயே இணைகிறார். மார்க்சிய நூல்களைப் பயின்று பொதுவுடமை இயக்கத்திலும் பயணிக்கத் தொடங்குகிறார். இவரோடு

vaaymainathanபஞ்சநதிக்குளம் புலவர் வை. பழனிச்சாமி, புலவர் கு.வெற்றியழகனார், ஆசிரியர் ஆ.வீராச்சாமி, ஆசிரியர் வை.முத்து போன்றவர்களும் இயக்க, இலக்கியப் பணிகளில் இணைகின்றனர். கருத்தியல் சார்ந்து பொதுவுடமை இயக்கத்துக்கு இவர்கள் வந்தது இப்பகுதியில் புதிய முயற்சி; வளர்ச்சி.

 அடிப்படையில் இவர் ஓர் நல்லாசிரியர். பள்ளியில் மட்டுமல்ல வெளியிலும் நல் வழிகாட்டியாக விளங்கினார். இவர் முத்துப்பேட்டை அரசுப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்த காலம் பொற்காலம். இன்றைய பாரதியியல் அறிஞர் ய.மணிகண்டன், மருத்துவ நிபுணர் ச.மருதுதுரை, அரசியல் தலைவர் டி. லெனின், எஸ்.ஜி.எம்.லெனின், எழுத்தாளர்கள் மோகன்ராஜ், சண்முகசுந்தரம் போன்ற பலர் இவரின் மாணவர்கள்.

வாய்மையார் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் புலமை மிக்கவர். தினமும் தி இந்து ஆங்கில இதழைப் படிப்பார். தனிப்பட்ட முறையில் தன்னிடம் வரும் சிறுவர்களுக்கு ஆங்கிலமும் கற்பிப்பார். மொழி பெயர்க்கவும் செய்வார். நா.வானமாமலை குறித்த ஆய்வுக்காக அவரின்  நூலை தமிழாக்கம் செய்து உதவியது மறக்க முடியாது. குப்பகோணம் பந்தநல்லூரில் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியராக இருந்து ஓய்வு பெற்றார். பணி நிறைவுக் காலத்திலும் அவ்வூரில் உள்ள வெளிநாட்டில் வசிப்பவர்களைக் கொண்டு பல லட்சம் மதிப்பில் கட்டட வசதிகளை ஏற்படுத்தினார். பள்ளிப் பணியை கல்விக் கற்பித்தலோடு சமூகப் பணியாகவும் அவர் கருதினார். மரபுக் கவிதைகளை இசைப் பாடல்கள் போல எழுதும் ஆற்றல் மிக்கவர்.  ‘சிந்துக் கவிஞர்’ என்பது இவருக்கு மிகவும் பொருந்தும்.

இவர் எழுதிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘நேதாஜி காவியம்’ (1986), விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சி. குறித்த ‘கப்பலுக்கொரு காவியம்’ (2008), பகத்சிங் பற்றிய ‘பகத்சிங் புரட்சிக் காப்பியம்’ (2013), வெண்மணித் துயரை மையமிட்ட ‘வெண்மணிக் காப்பியம்’ (2020) ஆகியவை இவரின் அசுர உழைப்பில் விளைந்தவை. தற்காலத்தில் மரபுக் கவிதையில் சமூக நிகழ்வுகளை, வரலாற்று நாயகர்களைப் பற்றி எழுதப்பட்ட இக்காவியங்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டியவை. நேதாஜி காவியம் ஹிந்தியில் ‘வங்க் காசிங்’ எனும் பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாய்மையார் உரைநடையிலும் தடம் பதித்தவர். இவர் 1977 இல் ‘அலைமகள்’ எனும் புதினத்தை எழுதினார். பின்னர் புகையிலை பற்றி ஒரு நாவலைத் தொடராக எழுதி பாதியில் நின்று போனது. 2008 ல் இவர் எழுதிய ‘நாலி’ எனும் புதினம் புதுமையானது. வேதாரண்யம் வட்டாரத்தில் முளைத்து மண்ணை மலடாக்கிச் சுற்றுச் சூழலையும் பாதித்த இறால் பண்ணைகள் குறித்த நாவல் இது. உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண்கள் பொறுப்புக்கு வந்தாலும் அவர்களை ஆணாதிக்கம் படுத்தும் பாட்டையும் நுட்பமாக இந்நூலில் சித்திரித்திருப்பார்.

புதிய மனிதன் (2003), உயிரின் விலை (2013) ஆகிய இரு சிறுகதைத் தொகுதிகளையும் எழுதி உள்ளார். இவர் இலக்கிய நடையில் எழுதக்கூடியவர் என்றாலும் படைப்பில் அது நெருடல் இல்லாமல் பார்த்துக் கொள்வார்.

 ஒடுக்குதலுக்கும் ஒதுக்குதலுக்கும் எதிராகத் தொடர்ந்து தன் எழுத்தாயுதத்தை ஏந்தினார். மதுரை வீரன் கவிதை நாடகம் (2001), நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் பற்றிய ஆய்வு போன்றவை முக்கியமானவை.

கீழத் தஞ்சையின் உழைக்கும் மக்களின் நாயகர்களாக விளங்கிய தியாகி களப்பால் குப்பு (1998) பற்றிய நூலும் தியாகி எஸ். ஜி. முருகையன் நூலுக்கான அடித்தளமும் இவரின் கொள்கைப் பற்றுக்குச் சான்றுகள்.

பேராசிரியர் நா. வானமாமலையுடன் ஏற்பட்ட தொடர்புறவால் நாட்டுப்புறவியலிலும் ஈடுபாடு கொண்டார். இவர் தொகுத்து வெளியிட்ட ‘தஞ்சை நாட்டுப்புறப் பாடல்கள்’ (2009), சின்ன சின்ன திண்ணைக் கதைகள் (2010) ஆகியன இத்தளத்தில் முக்கியமானவை.

வாய்மைநாதன் தொடர்ந்து எழுத்தியக்கமாக விளங்கினார். மூச்சிரைப்பு நோயினால் இளம் வயதிலிருந்தே பாதிக்கப்பட்ட நிலையிலும் இயக்கப் பணியிலும் இலக்கியப் பணியிலும் கல்விப் பணியிலும் தொடர்ந்து பயணித்தார்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் வேதாரண்யம் வட்டம் தொடங்கி, ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத் தலைவர், செயலாளர் எனத் தொடர்ந்து, மாநிலச் செயலாளராகவும் பல்லாண்டுகள் பணி செய்தார். ஜீவா. பாலன், நா.வா., தொ.மு.சி, கே.சி.எஸ், பொன்னீலன், தனுஷ்கோடி ராமசாமி, ஆ.சிவசுப்பிரமணியன், சி.சொக்கலிங்கம், இரவீந்திரபாரதி எனப் பலரிடமும் அன்பும் தோழமையும் கொண்டவராகத் திகழ்ந்தார்.

புலவர் அ.ப.பாலையனும் வாய்மையாரும் இரட்டைப் புலவர்கள் போல இருப்பார்கள். இருவரும் சந்திப்பதும், பேசுவதும், பழகுவதும் குதூகலமிக்கவை. வாய்மைநாதன் சென்ற தலைமுறை கம்யூனிஸ்ட். எதிலும் கறாராக இருப்பார். உண்மையும் நேர்மையும் அவருக்கு முக்கியம். அதீதக் கோபப் படுவார். பொது ஒழுக்கமும், தன் ஒழுங்கும் பேணி நின்றார். இக்குணங்களால் அவருக்கு நட்பு சுருக்கமானதாக ஆனது. அதைப்பற்றி அவர் கவலைப்பட மாட்டார்.

காலம் தவறாமையை மிகத் துல்லியமாகக் கடைபிடிப்பார். தமிழ்நாட்டின் ஒரு மூளையில் எவ்வித வசதியற்ற சிற்றூரில் வசித்தாலும் குறித்த நேரத்துக்கு முன்பாக அவர் இருப்பார். விருந்தோம்பலில் அவருக்கு நிகர் அவரே. அறிவு, கல்வி நிலையில் பலருக்கும் ஊக்கம் தந்து வாழ்வில் உயரச் செய்தார்.

என்னை அவரின் இயக்க, இலக்கிய, கொள்கை வழித் தோன்றலாக உருவாக்கினார். என்னை மட்டுமல்ல கே.பி.அம்பிகாபதி, சி.த.கருணாநிதி, இராம. இளங்கோவன், புயல் குமார், ஞா.பழனி வேலு, ப.பார்த்தசாரதி போன்ற பலருக்கும் அவரே தோழமை ஆசான்!

தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கானப் பரிசு, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது போன்ற அங்கீகாரங்களைப் பெற்றார். என்றாலும் அவரின் உழைப்புக்கு தமிழ்ச் சமூகம் உரிய மரியாதை செய்யாதது குறையாகவே உள்ளது.

அவரின் துணைவியார் காலமாகிவிட்டார். மூத்த மகன் ஜீவானந்தம் வேளாண்மைத் துறையில் பணி செய்கிறார். இளைய மகன் முருகபாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். மகள் தமிழ்க்கோதை நல்ல நிலையில் உள்ளார். வாய்மையார் குடும்பக் கடமையையும் சரிவரச் செய்தவர்.

மக்களுக்காக உழைப்பவர்கள், சிந்திப்பவர்கள், மக்கள் இயக்கத்தைச் சார்ந்தவர்களுக்கு மக்களின் ஏற்பே பெரிய விருது என்பதை அவரின் புகழஞ்சலி நிகழ்வில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையும் உரையாற்றியவர்களின் உணர்வும் மெய்ப்பித்தன.

பெயர் விளங்க வாழ வேண்டும் என்பார்கள். பெயரைப் போலவே வாழ்ந்தவர் அவர்!

- இரா.காமராசு, பேராசிரியர், நாட்டுப்புறவியல் துறைத் தலைவர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்.

Pin It