சோதிடம் பார்க்கும் குடும்பங்கள் அதிகம் இருந்த ஒரு கிராமத்தின் கதை இது. ஜோதிடர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கு எப்போதும் சிம்மராசிதான். அண்டா அண்டாவாய் வசூல்தான். காலமாற்றத்தில் சோதிடம் பார்க்கும் அவர்களின் நிலை, அந்த கிராமப்போக்கு, பல்வேறு மனிதர்களின் வாழ்க்கை நிலை, வியாபாரமான சோதிடம் போன்றவற்றின் மூலம் சோதிடம் பற்றிய ஒரு விமர்சனப் பார்வையாய் இந்த நாவல் அமைந்துள்ளது.
முற்போக்கு சிந்தனைகள் கொண்ட நாவல். அதிலிருக்கும் கருத்துக் களஞ்சியமும் சமூகச் சீர்திருத்த எண்ணங்களைச் சொல்லும் அழகும் மிக நேர்த்தியாக வந்துள்ளன. பூனை முன்னால் குதித்தால் அபசகுனம் பின்னால் குதித்தால் அபசகுனம் இல்லையா போன்ற கேள்விகளை கதாபாத்திரங்கள் உரிய இடங்களில் வெளிப்படுத்துகிறார்கள். சாமியாடி உலுக்குச்சா, இல்லே பேய் வந்து உலுக்குச்சா என்று கேட்டு சாமிபூத நம்பிக்கைக்கு சரியான சாட்டையடி பல இடங்களில் உள்ளன. பகுத்தறிவு சார்ந்த விசயங்கள் வழக்கமான எழுத்துக்கூர்மையைவிடவும் வலிமையாகக் காட்டப்பட்டிருக்கிறது. முடிச்சுப்போட்டிருக்கும் மூடநம்பிக்கையை கட்டை அவிழ்த்து விட்டச் சாதியக்கொடுமைகளை சுரீரென்று சாட்டையால் விளாசியது போலவே பல தளங்கள் அமைந்துள்ளன.
வேலைக்குச் செல்லும் பெண்களின் சமூகப்பாதுகாப்பற்ற அச்சுறுத்தலையும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லையையும் குடியினால் குடும்பம் எப்படியெல்லாம் சீரழியும் என்பதையும் எழுத்தில் வீச்சில் பல கதாபாத்திரங்கள் மூலம் சொல்லப்பட்டிருக்கின்றன. கிராமத்திலிருந்து பக்கத்து தொழில்நகர்களுக்கு இடப்பெயர்வு, வெளிநாட்டு முயற்சிகள் எல்லாம் கிராமவாசிகளை அகதிகளாக்குவதைச் சொல்கிறார்.
சோதிடம் பார்க்கும் தொழில் கொண்ட வள்ளுவ சாதிக்காரர்கள் ஊரில் வள்ளுவருக்கு சிலை வைக்க முடிவதில்லை. வள்ளுவருக்கு கோவில் கட்ட முடிவதில்லை. அதற்கான முயற்சிகள் தோல்வியே அடைகின்றன.
பகுத்தறிவு வாதம் பேசுகிறவன் மாட்டுக்கறி சாப்பிடும் பிரச்சாரம் செய்ததற்காகக் கொல்லப்படுகிறான் எதற்கெடுத்தாலும் சாதகம் பார்ப்பவர்களுக்கு சாட்டையடி கொடுத்து எப்போதும் ரேகை தேய ரேகை பார்ப்பவர்களுக்கும் மூளையைச் சலவை செய்ய வைக்கிறது. உள்ளே கீறல்கீறலாய் ஒரு பக்கம், இரு பக்கம், நான்கு பக்கம் என்று பல கதைகள் பின்னப்பட்டு கதைக்குள் கதை என்று பின்நவீனத்துவம் மிளிர்கிறது. சம்ஸ்கிருத வார்த்தைகள் ஜாதகம், ஜாதி, ஜோசியர், அரைஜாண் என்று தென்படுகின்றன. நவீன கிராமியச் சமூக மாற்றம் பற்றிய பருந்துப் பார்வையோடும் இது மிளிர்கிறது. மிளிர்கல் நாவல் வெளியிட்ட பொன்னுலகம் பதிப்பகத்தின் இன்னொரு மிளிர்கிற கல் இந்நாவல்.
ரேகை - நாவல்
சுப்ரபாரதிமணியன்
பொன்னுலகம் பதிப்பகம்
திருப்பூர்
விலை ரூ.125