தமிழக நிலப்பரப்பில் வாழ்ந்த ஆதிமனிதன் காலத்தில் தொடங்கி, ஆங்கிலேயர் ஆட்சி அகற்றப்பட்ட காலம் வரையிலான வரலாற்றை இந்நூல் சொல்லிச் செல்கிறது. நூலின் தலைப்புக் கேற்றாற் போல் காட்சிகள் பிரமிப்பூட்டும் வாசக அனுபவத்தைத் தருகின்றன. நூலின் பொருளடக்கமே அற்புதமான ஒரு முன்னோட்டம் என்று தான் சொல்ல வேண்டும்.
பேராசிரியர்கள் மூவரும் அறிவியல் பூர்வமான ஒரு முழு வரலாற்றின் தேவையை நன்குணர்ந்தவர் களாதலால் தமிழ் நாட்டு வரலாற்றில் புதுப்புது திசைகளில் பயணித்த பேராசிரியர்கள் நா. வானமாமலை, கைலாசபதி, சிவத்தம்பி, கோ. கேசவன், தொ. பரமசிவன், ஆ. சிவசுப்பிரமணியன். ஏ.ஆர். வேங்கடாசலபதி ஆகியோரின் பங்களிப்பை நினைவு கூரத் தயங்கவில்லை.
இந்நூலில் பழக்கப்பட்ட சமயச் சார்பு இல்லை; பழந்தமிழ் மோகம் இல்லை; நம்மவர் என்ற விருப்போ அயலவர் என்ற வெறுப்போ இல்லை. சாதி, சமய, இனத் தூண்டுதல்களைக் கடந்து, சமூக இயக்கத்தின் உந்து விசையாக பொருளியல் சூழல் இருப்பதை மிகச் சரியாகவே கணித்திருக்கிறார்கள்.
வேட்டைச் சமூகம் மேய்ச்சல் சமூகமாக மாறியது தான் நாகரிகத்தின் முதல் படி என்ற மார்க்சிய கருத்தோட்டத்துடன் தொடங்கும் இந்நூல் எப்படி இரும்பின் பயன்பாடு நெல் வேளாண்மையைச் செழிக்க வைத்தது என்பதையும், அந்த நதி தீர மருததத்திணையில் நில உடமை வேர்பிடித்து வர்க்கமும் சாதியும் தோன்றியதையும் இந்நூல் அற்புதமாக விவரிக்கிறது. இதேபோல் பல்லவ, சோழர் காலத்தில் வேரூன்றிய காணி ஆட்சியும், கோயில் கலாசாரமும் அதன் உடனடி விளைவான வலங்கை - இடங்கை மோதலும் உரிய கவனத்தைப் பெற்றுள்ளன.
இதுவரை நடந்ததெல்லாம் பாலாறு, காவேரி, வைகை மற்றும் தாமிரபரணி ஆகிய நதி தீரத்தின் வரலாறு தான். தமிழகத்தின் சரிபாதியான சமவெளி இனிமேல் தான் ஆர்ப்பரிக்க வேண்டும். விஜயநகரப் பேரரசர்களின் போரியல் மற்றும் பொருளியல் தேவைகள் தமிழக சமவெளிளை உசுப்பி, பாளையங்களை உருவாக்கி, இடப்பெயர்ச்சியை ஊக்கு வித்து புதுப்புது நில உடமையாளர்கள் தோன்றியதை இந்நூல் தெளிவாகவே எடுத்துச் சொல்கிறது. இதற்குப் பின்னரே தமிழக வரலாறு முழுமை பெறுகிறது என்பதைத் தகுந்த மேற்கோள்கள் மூலம் இந்நூல் நிறுவுகிறது.
இந்நூலின் பிரதான களம் ஐரோப்பியரின் வருகையும் காலனி ஆட்சியும் தான். தமிழக நிலப் பரப்பில் நதி தீர நஞ்சை வேளாண் பகுதியும், சமவெளியின் புஞ்சை வேளாண் பகுதியும் இணைந்து உருவாக்கிய பிரச்சனைகளை எவ்வாறு காலனி ஆட்சி எதிர் கொண்டது என்பதுதான் கதையின் உச்சகட்டம்.
துபாஷிகள், பாளையக்காரர், பதக்தார், மிராசுதார், உள்குடி, புறக்குடி மற்றும் பறை அடிமை வரலாற்றின் வரிசையில் நிமிர்ந்தும் குனிந்தும் நிற்கின்றனர். படை எடுப்பும் அலைக் கழிப்பும், பஞ்சமும் இடப்பெயர்ச்சியும், பொருளியல் மந்தமும் தொழில் நசிவும், கள்ளரும் காவலும், மேட்டிமையும் அரசியலும், சீர்திருத்தமும் சனாதனமும் இந்த மகத்தான வரலாற்று தடத்தில் தென்படுகின்றன.
காலனி ஆட்சிக்கு முந்தைய காலத்தைச் சற்று விரிவாகவும், அரசியல் நிகழ்வுகளுக்கு சற்று கூடின இடத்தையும் தந்து, முனைவர்கள் மோகன்ராம், காளிமுத்து மற்றும் மார்த்தாண்ட சேகரன் மீண்டும் ஒரு நூலை எழுதமாட்டார்களா என்ற ஏக்கத்தை இந்நூல் ஏற்படுத்துகிறது. அது நிறைவேறினால் பிரமிப்பு பிரமாண்டமாய் உருமாறும் என்பதில் அய்யமில்லை.
தமிழகம்... பிரமிப்பூட்டும் ஒரு மக்கள் வரலாறு ஜாசிம் பதிப்பகம் திருச்சிராப்பள்ளி - 23
பக்: 306 | ரூ. 250
முனைவர். மோகன்ராம், முனைவர். காளிமுத்து, முனைவர். மார்த்தாண்டசேகரன்