நவீன இந்தியத் தலைவர்களில் இந்தியாவில் விரிவாகப் பயணம் செய்து, இந்திய மக்களோடு நெருங்கிப் பழகி, அவர்கள் வாழ்வை உள்நுழைந்து அறிந்து நேசித்த பெருமக்களாக இருவரைச் சொல்ல முடியும். முதலாமவர் நவீன இந்தியாவின் புரட்சித்துறவி விவேகானந்தர் தான். இந்தியாவுக்கு அதிகம் அறிமுகமாகாத இளமைக் காலத்தில் பயணஞ் செய்ய வசதிகள் மிகக் குறைவாக உள்ள சூழலில், கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, கிடைத்ததையுண்டு இந்தியாவை சுற்றிவந்த தேசத் துறவி அவர்.
இந்தியா ‘‘கலப்பை யைக் கையிலலேந்திய குடியானவர்களின் குடிசைகளிலிருந்தும், மீனவர்கள், சக்கிலியர், தோட்டிகள் ஆகியோரின் குடிசைகளில் இருந்தும் எழட்டும்’’ என்று ‘‘மளிகைக்கடைகளிலிருந்தும், பலகாரக் கடைகளிலிருந்தும் அவள் புற்ப்படட்டும்’’ என்றும், ‘‘தொழிற்சாலை களிலிருந்து, சந்தைகளிலிருந்து, கடை வீதிகளிலிருந்து..... தோப்புகளிலிந்து, காடுகளிலிருந்து, குன்றுகளிலிருந்து, மலைகளிலிருந்து அவள் புறப்படட்டும்’’ என்ற அவருடைய புரட்சிகரச் சொற்கள் இந்திய தரிசனத்தின் ஆழ்ந்த வெளிப்பாடுகளே...
விவேகானந்தருக்குப் பின் இந்தியாவை இப்படி தரிசித்த அடுத்த மனிதர் அண்ணல் காந்தியடிகளே. ஜீவா நூற்றாண்டு நெருங்கிய போது, அவர் ஆசிரியராகப் பணியாற்றிய சிறாவயல் ஊரைச் சென்று பார்க்க வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டாயிற்று. வள்ளியூர்த் தோழர் சங்கர நாராயணனுடன் அந்த ஊரைப் பார்க்கப் புறப்பட்டேன். காரைக் குடியில் சிலரிடம் கேட்ட போது, அது திருப்பததூரில் அருகே இருக்கிறது என்றார்கள்.
திருப்பத்தூரில் கேட்டபோது, பிள்ளையார்பட்டி அருகே என்றார்கள். பிள்ளையார்பட்டி வந்து விசாரித்தால், அங்கிருந்து தெற்கே மூன்று கல் தொலைவில் இருக்கிறது சிறாவயல், காலையிலும், மாலையிலும் மட்டும் பஸ்போகும் என்றார்கள். ஆட்டோ அமர்த்திக் கொண்டு புறப்பட்டோம். படு மோசமான சாலை. நவீன வசதிகள் பெருகிய 2005 லேயே அது இப்படி இருக்கிறதென்றால், எந்த வளர்ச்சியுமற்ற 1927-ல் அது எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனை எங்களை பயமுறுத்தியது. அவ்வளவு படு மோசமான காட்டுச் சாலையில், மாட்டு வண்டியில் பயணம் செய்து, சிறாவயலுக்குக் காந்தியடிகள் வந்திருக்கிறார் என நினைத்துப் பார்க்கும் போது, நாட்டு மக்களைச் சந்திப்பதில் அவர் காட்டிய பேரார்வத்தை ஒருவராறு யூகிக்க முடிந்தது.
இந்திய மக்கள் அனைவரையும் நேசித்தாலும், காந்தியடிகளுக்குத் தமிழகத்தின் மீது தனிப்பாசம் இருந்தது. தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்திய சமநீதி இயக்கத்துக்குப் பெருமளவில் உதவியர்கள் தமிழர்கள். தில்லையாடி வள்ளியம்மையும், திருக்குறளும் அன்று அவர் உணர்வில் கலந்தவை. 1896-லிருந்து 1946-வரை தமிழ் நாட்டை பலமுறை வலம் வந்திருக்கிறார் காந்தியடிகள். பல கூட்டங்ளில் பேசியிருக்கிறார். பலதரப்பட்ட மனிதர்களைச் சந்தித்து உரையாடியிருக்கிறார்.
இந்தச் செய்திகளைத் தொகுத்து நூலாக உருவாக்கியிருக்கிறார் வி.டி.எஸ். என்று செல்லமாக அழைக்கப்படும் தோழர் வி.டி. சுப்ரமணியன். திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் பொறுப்பாளரான இவர், திருப்பூரின் இன்றைய கலை இலக்கிய வளத்துக்கு உழைப்பாவர்களில் முதன்மையான ஒருவர்.
காந்தியடிகளின் நூற்றாண்டு விழாவையட்டி பல்வேறு உலகநாடுகள் வெளியிட்ட அஞ்சல் தலைகளையும் பதிவு செய்திருக்கிறார். திருப்பூர் தந்த விடுதலைப் போர்த்தியாகிகளின் பட்டியலையும் தந்திருக்கிறார். பல்வேறு தகவல்களை கவனமாகத் திரட்டி நூலாக்கி, அழகுற வெளியிட்டிருக்கும் திருப்பூர் கலை இலக்கியப் பேரவை பாராட்டுக்குரியது. தமிழ் நாட்டு இளைஞர்கள் குழந்தைகள் ஒவ்வொரு கையிலும் இருக்க வேண்டிய சிறந்த நூல் இது.
தமிழ் நாட்டில் அண்ணல் காந்தியடிகள், வி.டி. சுப்ரமணியன், வெளியீடு திருப்பூர் கலை இலக்கியப் பேரவை, திருப்பூர்- 2. பக்:28, ரூ.10.