நட்பின் தாக்கம் அல்லது PEER PRESSURE

குழந்தைகள் சிறுவயதில் இருந்தே மற்றவர்கள் செய்வது போலவே தாங்களும் இமிடேட் செய்துதான் கற்றுக் கொள்ளுகிறார்கள். அதனால் வீட்டில் உள்ளவர்கள் சொல்வதை உடனுக்குடன் செய்து பெற்றோர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைப்பார்கள். குழந்தைகள் வளர வளர பெற்றோர்களின் தாக்கம் குறைந்து, அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வதும் குறைந்து, பதின் பருவத்தில் நுழையும்போது பெற்றோர்களின் இடத்தை நண்பர்கள் ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள்.

குழந்தைகளும் நண்பர்களைச் சரி சமமாக உணர்ந்து அவர்களைப் போலவே இருந்து அவர்கள் சொல்லும் செயல்களைச் செய்து அவர்களுடன் சேர்ந்து பயணிக்க விரும்புவார்கள். றிணிணிஸி என்றால் லத்தீன் மொழியில் சரிசமம் என்று பொருள். நாம் மற்றவர்களுக்குச் சமமாக மனதளவில் உணரும்போது நம்மை அறியாமலேயே அவர்கள் விரும்பும் செயல்களைச் செய்யும் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறோம்.

மெரியம் வெப்ஸ்டர் டிக்ஷனரி “தன் வயது ஒத்தவர்கள் அல்லது தான் சார்ந்துள்ள குழுவில் உள்ளவர்கள் சொல்வதையோ அல்லது அவர்கள் செய்யும் செயலையோ, தானும் செய்தால்தான் தன்னை விரும்புவார்கள், மதிப்பார்கள் என்று எண்ணி அதையே செய்வதை நண்பர்களின் அழுத்தம்' என்று சொல்லுகிறது.girl with friendsநண்பர்களின் அழுத்தம் எப்படி நடக்கிறது?

குழந்தைகள் உணர்வுகளைக் கையாளுவதைக் கற்றுக் கொள்ளவும் வயதுக்கேற்றபடி மன முதிர்ச்சியடையவும் இந்த நட்பு வட்டாரங்கள் அவசியம் தேவைப்படுகிறது. நண்பர்களுடன் சேர்ந்து பழகுவதை குழந்தைகளின் வளர்ச்சியின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. நண்பர்களின் தாக்கம் பெரும்பாலான பதின்பருவத்தினருக்கு அவர்களின் வளர்ச்சிக்கு உதவும் படியாகவே இருக்கும். அவர்களும் முட்டையை உடைத்துக் கொண்டு கோழிக்குஞ்சு வெளிவருவதுபோல, தங்களின் கூச்சத்தைத் தவிர்த்து, வெளிஉலகில் பழகி, வளர்ந்து இந்த சமூகத்திற்கு ஏற்ற குடிமகனாக உயருவதற்கு நட்புகளைப் போல வேறு யாரும் உதவுவதில்லை.

இந்த பதின்பருவம் குழந்தைகள் வளர்ச்சியில் உடலளவிலும், மனதளவிலும் பலவகையான மாற்றங்கள் நடைபெறும் காலம். அடுத்து வரும் அடல்ட் வாழ்க்கைக்கு அவர்களைத் தயார் படுத்தும் பருவம். சேரும் நண்பர்கள் கூட்டம் நல்ல பழக்கமும் பண்பும் இருக்கும் நபர்களால் நிரம்பி இருக்கும்போது அவர்களின் தாக்கத்தால் வளரப்போகும் குழந்தையும் நல்ல பிள்ளையாக வளர்ந்து விடுவான்.

பதின்பருவத்தினர் தாங்கள் முழுதும் வளர்ந்துவிட்டவர்களாக நினைத்துக் கொண்டிருந்தாலும் இன்னும் முடிவெடுக்கும் திறனில் முழு வளர்ச்சியும் பெற்றிருக்க மாட்டார்கள். அதனால் நண்பர்கள் வற்புறுத்தும்போது சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத செயலையும் செய்ய ஆரம்பிப்பார்கள். செய்ய மாட்டேன் என்று சொல்லும் மனத்திண்மை இருக்காது. சகாக்களின் வற்புறுத்தல் முதலில் ஒரு மனதளவிளான அழுத்தமாகத்தான் இருக்கும். சகாக்கள் சொல்வதைச் செய்யும் போது இயல்பாகவே இவர்களும் அந்தக் குழுவில் பங்கெடுத்துக் கொண்டு மகிழ்வார்கள். செய்யாமல் இருந்தால் கேலியும் கிண்டலும் செய்து தன்னை அவமதிப்பார்கள் என்ற பயமும் இருக்கும். இல்லையெனில் உடல் ரீதியாகத் துன்புறுத்தலையும் எதிர் நோக்க வேண்டும். மேலும் சிலர் தாங்களாகவே ஆர்வக்கோளாறு காரணமாக இந்தப் புது அனுபவத்தைப் பெற்றுத்தான் பார்ப்போமே என்று எண்ணியும் சேர்ந்து கொள்வார்கள். நாளடைவில் அவர்களின் வாழ்க்கை திசை மாறிவிடும். சகாக்கள் என்று சொல்லும்போது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், வகுப்புத்தோழர்கள், விளையாட்டு டீமில் உள்ளவர்கள் என யாரை வேண்டுமானாலும் இங்கே எடுத்துக் கொள்ளலாம்.

நண்பர்களின் தாக்கத்தின் நன்மைகளும் தீமைகளும்

நண்பர்களின் அழுத்தம் காரணமாக குழந்தையின் படிப்பில், பழக்கங்களில், பிறருடன் பழகும் தன்மையில், மேனரிசங்களில் வரவேற்கத்தக்க முன்னேற்றம் தெரியும். ஒருத்தருக்கொருத்தர் விவாதித்துக் கற்கும்போது ஆசிரியரிடம் இருந்து கற்பதை விடவும் மிக எளிதாகக் கற்றுக் கொள்ளுவார்கள். அதுபோல தங்களின் அனுபவங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது நிறைய படிப்பினைகளைக் கற்றுக் கொள்வார்கள். சரியாக உபயோகிக்கத் தெரிந்தவர்களுக்கு டிவியும் இண்டர்நெட்டும் கூட ஒரு நல்ல நண்பன் மாதிரி உதவும். நல்ல நண்பனின் தாக்கம் முன்னெச்சரிக்கை உணர்வைக் கொடுக்கும், மேலும் வரப்போகும் ஆபத்திலிருந்தும் காப்பாற்றும்.

'கூடாநட்பு கேடாய் முடியும்' என்பதைப் போல சில நேரங்களில் நல்ல நண்பர்கள் இல்லாமல் வாழ்க்கையில் தடம் மாறி விடுகிறார்கள். இம்மாதிரி நண்பர்களின் அழுத்தம் பல நேரங்களில் தீமையைக் கொண்டு வருகிறது. பள்ளி வகுப்புகளை மறந்து மது, போதை, பாலினச் சீண்டல்கள் என பாதை மாற கூடா நட்புதான் காரணமாக இருக்கிறது.

பெற்றோர்கள் என்ன செய்யலாம்?

பெற்றோர்கள் பத்து வயது முடிவதற்குள் குழந்தைகளிடம் அவ்வப்போது சிறு சிறு பிரச்சினைகள் பற்றி விவாதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகளிடம் எது சரி எது தவறு என்று கேட்டு சரியான முடிவை எடுக்க சொல்லித் தர வேண்டும். இந்த வளர்ப்பு முறை பின்னாளில் மிகவும் உதவும்.

அவர்களுக்குத் தன்னம்பிக்கையும், மனோதிடமும் வருவதற்கு உதவும். நண்பர்களின் மனரீதியிலான அழுத்தத்தை சந்திக்கும் ஒரு டீன் ஏஜ் குழந்தை தனக்கு சரியென்று தோன்றாத காரியத்தை நான் செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு வெளிவந்து விடுவார்கள்.

நல்ல நண்பர்களை எப்படி அடையாளம் கண்டு பழகுவது என்று சொல்லிக் கொடுக்கலாம். நல்ல நண்பனின் சகவாசம் இருக்கும்போது ஒரு கெட்ட செயலைச் செய்ய வேண்டும் என்ற வற்புறுத்தலைத் தைரியத்துடன் நிராகரித்து விடுவார்கள்.

பெற்றோர்களுக்கும் குழந்தைக்கும் நல்ல உறவு வேண்டும், குழந்தைகள் பயமில்லாமல் எதையும் பெற்றோர்களிடம் பேசும் அளவுக்கு அவர்களின் உறவு இருக்க வேண்டும். அதற்கான இடத்தைப் பெற்றோர்கள் கொடுத்திருக்க வேண்டும். எந்த சூழலிலும் குழந்தைகள் பெற்றோர்களை நோக்கி வரத் தயங்கக் கூடாது. இப்படி வளரும் குழந்தைகள் எக்காலத்திலும் கூடா நட்பை நாட மாடார்கள்..

- ப.வைத்திலிங்கம், குழந்தைகள் மருத்துவ நிபுணர்

Pin It